பத்து வருட காலமாக அனுபவித்த அச்சுறுத்தல்களையும் கொடுமைகளையும் இலகுவில் மறந்தபடி ஊடகங்கள் செயற்படத் தொடங்குவது ஆரோக்கியமான அறிகுறியாகத் தெரியவில்லை.அது ஆபத்தை விலைக்கு வாங்கும் முயற்சிக்கு ஒப்பானது.

389

பத்து வருட காலமாக நீடித்த மஹிந்த ராஜபக்சாக்களின் ஆட்சியை அகற்றி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிங்கள மக்களில் அரைவாசித் தொகையினரும், சிறுபான்மையினரில் சுமார் நூறு சதவீதமானோரும் விரும்பியதற்கான காரணங்களை இங்கு பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.

poster Web

மாற்றத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்ற சுபாவம் பொதுமக்களுக்கு மாத்திரமன்றி ஊடகங்களுக்கும் பொருந்தக் கூடியது. மனித மனம் தனது வாழ்நாளில் ஒவ்வொரு விடயங்களிலும் மாற்றத்தையும் புதுமையையும் விரும்பி நிற்கின்றது.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அவ்வாறானதன் விளைவுகளில் ஒன்றுதான்.  ஆனால் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பியதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.

பத்து வருட காலமாக நீடித்த மஹிந்த ராஜபக்சாக்களின் ஆட்சியை அகற்றி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிங்கள மக்களில் அரைவாசித் தொகையினரும், சிறுபான்மையினரில் சுமார் நூறு சதவீதமானோரும் விரும்பியதற்கான காரணங்களை இங்கு பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.

மாற்றத்தை அவ்வேளையில் விரும்பிய மக்களின் மனோநிலையில் இன்னும் மாறுதல் ஏற்படவில்லை. ஆனாலும் ஊடகங்களின் அன்றைய நிலைப்பாட்டிலும் இன்றைய மனோபாவத்திலும் மாற்றங்கள் தென்படுகின்றன.

ஊடகங்களின் பொறுப்பென்பது உண்மையில் என்ன? அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துக்கு விரோதமாகச் செயற்படுவதும், எதிரணியின் அத்தனை செயற்பாடுகளையும் நியாய தர்மம் பாராமல் எதிர்த்து நிற்பதும் தான் ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணிகளா?

எமது ஊடகங்கள் பலவற்றின் முன்னைய போக்குகளையும் அவற்றின் இன்றைய செயற்பாடுகளையும் அவதானிக்கின்ற போது, இவ்வாறான வினாக்கள் இயல்பாகவே எமக்குள் எழுகின்றன.

உண்மையில் கூறுவதானால் மஹிந்த ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த பத்து வருட காலப் பகுதியே இந்நாட்டு ஊடகத்துறையின் இருண்ட காலமெனக் கொள்ளப்பட வேண்டியதாகும்.

அரசாங்கத்தின் போக்குகளுக்கு முரணாகச் செயற்பட்டார்கள் என்பதற்காக ஊடகவியலாளர்கள் அதிகமானோர் கொலை செய்யப்பட்டதும், உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதும் முன்னைய ஆட்சிக் காலத்திலேயே ஆகும்.

ஊடகத்துறையினருக்கு முன்னைய ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளின் வடுக்கள் இன்னுமே அழியாமல் உள்ளன.

அவ்வாறானதொரு காலப் பகுதியில் சர்வாதிகாரமிக்க ஆட்சியை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டுமென ஊடகத்துறை ஒட்டுமொத்தமாக ஒன்றுபட்டு நின்றமைக்கான காரணமும் அதுதான்.

கொடுங்கோன்மைத் தன்மை மிகுந்த அன்றைய அராஜக ஆட்சியை அகற்றுவதில் நாட்டின் ஊடகத்துறை வழங்கிய ஒத்துழைப்பை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. தமிழ், சிங்கள,ஆங்கில ஊடகங்களுக்கு இதில் பங்குண்டு.

அராஜகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததற்காக தங்களது உயிரை அர்ப்பணித்த ஊடகவியலாளர்கள் இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்களாவர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இப்போதுதான் ஒரு வருடம் கடந்திருக்கிறது. அரசாங்கம் தனது கொள்கைத் திட்டங்களை முன்னெடுப்பதில் பாதி வழியைக் கூட இன்னும் கடந்து விடவில்லை.

அரசாங்கம் தனது பாதையில் தாமதமாகப் பயணம் செய்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன; தடங்கல்களும் பெருமளவில் உள்ளன. அவற்றையெல்லாம் பெரும் சவால்களாக முறியடித்தபடியே அரசாங்கம் தொடர்ந்தும் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.

இன்றைய அரசாங்கம் தனியொரு கட்சியினால் உருவானதல்ல என்பது முக்கிய விடயம். சுமார் அரை நூற்றாண்டு காலமாக எதிரும் புதிருமாக இருந்த இரண்டு தேசியக் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டரசாங்கம் இது.

‘நலன்களுக்காக ஐக்கியப்படுதல்’ என்பது அரசியலுக்கும் பொருந்தும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.

அதாவது ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, அராஜகம் தலைவிரித்தாடிய நாடொன்றை ஆபத்திலிருந்து மீட்டெடுக்கும் நலனை நோக்கமாகக் கொண்டு ஐ.தே.க.வும் சுகவும் புரிந்துணர்வுடன் ஐக்கியப்பட்டதன் விளைவாக இன்றைய கூட்டரசாங்கம் உருவாகியிருக்கிறது.

என்னதான் கூட்டரசாங்கமாக இருப்பினும் இரு வேறு துருவங்களாகப் பிரிந்து நின்றோருக்கிடையில் முரண்பாடுகளும் சந்தேகங்களும் தவிர்க்க முடியாதவை.

இவ்வாறான முரண்பாடுகள் அரசின் செயற்பாடுகளில் தாமதத்தை ஏற்படுத்துவது புரியாத விடயமல்ல. இருந்த போதிலும் அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்படும்படியாக எதுவித அறிகுறிகளும் இதுவரை இருந்ததில்லை.

அரசின் பயணத்தின் தாமதத்துக்குரிய மற்றைய முக்கிய காரணியாக மஹிந்த தரப்பினர் வகுத்து வரும் வியூகங்களைக் கூறலாம்.

எவ்வாறாயினும் அதிகாரத்துக்கு வர வேண்டிய தேவையை மஹிந்த ராஜபக்சாக்கள் கொண்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அதிகார கவசம் ஒன்றே அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.

ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்துடனேயே தற்போது மஹிந்த அணியினர் மாபெரும் நாடகங்களையெல்லாம் அரங்கேற்றி வருகின்றனர்.

இங்கேதான் ஊடகங்கள் தவறிழைப்பது தென்படுகிறது.

மஹிந்த தரப்பினருக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் விதத்திலும், அவர்களது கருத்துகளை நியாயப்படுத்தும் வகையிலும் சில ஊடகங்கள் செயற்படத் தொடங்கியிருப்பதை சமீப காலமாக அவதானிக்க முடிகிறது.

சிங்கள, ஆங்கில ஊடகங்கள் மாத்திரமன்றி சில தமிழ் ஊடகங்களிலும் இவ்வாறான மாற்றமான போக்கு ஒன்றை அவதானிக்க முடிகிறது.

மக்கள் தமது முடிவுகளைத் தீர்மானிப்பதில் ஊடகங்கள் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதிலும் தேசிய ஊடகங்களாகக் குறிப்பிடக் கூடிய ஊடகங்கள் இவ்விடயத்தில் கூடுதல் செல்வாக்கைக் கொண்டுள்ளன.

இவ்வாறான ஊடகங்களின் போக்கை வைத்தே மக்கள் அனைத்தையும் தீர்மானிக்கின்றனர்.

இவ்வாறிருக்கையில் ஊடகங்கள் தவறான நியாயங்களை மக்களுக்குக் கற்பிக்க முற்படக் கூடாது.

பத்து வருட காலமாக அனுபவித்த அச்சுறுத்தல்களையும் கொடுமைகளையும் இலகுவில் மறந்தபடி ஊடகங்கள் செயற்படத் தொடங்குவது ஆரோக்கியமான அறிகுறியாகத் தெரியவில்லை.அது ஆபத்தை விலைக்கு வாங்கும் முயற்சிக்கு ஒப்பானது.

ஊடக சுதந்திரம் என்பதற்கு உண்மையான அர்த்தம் புரிந்ததே கடந்த வருடம் ஜனவரிக்குப் பின்னர்தான் என்பதை மறந்து விடலாகாது.

SHARE