பப்புவா நியூகினியாவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற 7.2 ரிச்டர் அளவிலாள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
பசிபிக் தீவின் பப்புவா நியூகினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் இன்று செவ்வாய்கிழமை காலை 7.20 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புலோலோ நகரத்தின் தென்கிழக்கில் இருந்து 33 கிலோ மீற்றர் தூரத்திலும், நாட்டின் கிழக்கே கடலுக்கு 127 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
பப்புவா நியூகினியாவின் கடல்பகுதியை அண்டிய சாலமன் கடல் பகுதிக்கும் மிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பசிபிக் தீவின் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பப்புவா நியூகினியாவில் இடம்பெற்ற 7.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், 125 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.