பயங்கரமாகும் எதிர்ப்புச் சட்டம் – செல்வரட்னம் சிறிதரன்

1000

 

தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றிருந்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, மற்றுமொரு தமிழ்த் தலைவராகிய இராசவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காலப்பகுதியில், அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுகின்றது.

இறுதி யுத்­தத்­தின்­போது மிக மோச­மான முறையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டி­ருந்­தன, போர்க்­குற்­றங்கள் புரி­யப்­பட்­டி­ருந்­தன என்ற சர்­வ­தேச குற்­றச்­சாட்டின் பின்­ன­ணியில், யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் மனித உரிமை நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­மாறு இலங்கை அரசு மீது அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வந்­துள்­ளன. இந்த அழுத்­தங்­களைச் சமா­ளிப்­ப­தற்­காக அவ்­வப்­போது சில நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. ஆனால் அந்த நட­வ­டிக்­கைகள் உண்­மை­யி­லேயே மனித உரி­மைகள் நிலை­மை­களை சீர் செய்­வ­தற்­கா­னவை அல்ல என்­பதை மனித உரிமை அமைப்­புக்­களும், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும் சுட்­டிக்­காட்டி வந்­துள்­ளார்கள்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், ஜன­நா­யக உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தாக உறு­தி­ய­ளித்து, அதற்­கான ஆணையை மக்­க­ளிடம் இருந்து தேர்தல் மூல­மாகப் பெற்­றுள்ள நல்­லாட்­சிக்­கான அர­சாங்­கமும் ஒரு கண்­து­டைப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது.

முன்­னைய அர­சாங்கம் நாட்டில் மனித உரி­மைகள் மீறப்­ப­டவே இல்லை. மனித உரிமை நிலை­மைகள் எப்­போ­தும்­போ­லவே நன்­றாக இருக்­கின்­றது என்று பகி­ரங்­க­மாகக் கூறி வந்­தது. அது மட்­டு­மல்­லாமல், மனித உரி­மைகள் மீறப்­பட்­ட­மைக்கும், இழைக்­கப்­பட்ட போர்க்­குற்றச் செயல்­க­ளுக்கும் பொறுப்பு சுற வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யினால் பிரே­ர­ணை­களின் மூல­மாக அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­ட­போது, அதனைச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு பகி­ரங்­க­மா­கவே மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் மறுப்பு தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனால், நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்ற பின்னர், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் பொறுப்பு கூறு­வ­தற்­காக 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட 30/1 பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்கி, அந்தப் பிரே­ர­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

அந்த உறு­தி­மொ­ழியில் மனித உரி­மைகள் நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்ற உத்­த­ர­வாதம் முக்­கி­ய­மா­ன­தாகும். மனித உரி­மை­களை மீறு­வ­தற்கும், அடிப்­படை உரி­மை­களைக் காலில் போட்டு நசுக்­கு­வ­தற்கும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் துணை போயுள்­ளது என்று சுட்­டிக்­காட்டி, உரி­மைகள் பேணப்­ப­டு­வ­தற்கு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேர­வையும் சர்­வ­தேச நாடு­களும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் ஒருங்­கி­ணைந்து குரல் கொடுத்­தி­ருந்­தன.

இந்தக் கோரிக்­கைக்கு செவி­சாய்த்த அரசு, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­பட்டு, அதற்குப் பதி­லாக சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டையில் சர்­வ­தேச பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் இலங்­கையை ஒரு தள­மாகப் பயன்­ப­டுத்­து­வதைத் தடுக்கும் வகையில் ஒரு சட்­டத்தைக் கொண்டு வரப் போவ­தாகத் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்த வகையில் கடந்த 1979 ஆம் ஆண்டு முதல், கிட்­டத்­தட்ட நான்கு தசாப்­தங்­க­ளாகத் தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்ற பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திற்குப் (Prevention of Terrorism Act – PTA) பதி­லாக, பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தை (Counter Terrorism Act – CTA) அர­சாங்கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இந்தப் புதிய சட்­ட­மா­கிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தைக் கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­ப­டு­வ­தாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

இந்தப் புதிய சட்­டத்­திற்­கான வரைவு கடந்த வருடம் கொண்டு வரப்­பட்­டி­ருந்த போது, அது இர­க­சி­ய­மாகக் கசிந்து ஊட­கங்­களில் பகி­ரங்­க­மா­கி­யி­ருந்­தது. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் சில மோச­மான அம்­சங்கள் இந்தப் புதிய சட்­டத்தில் வேறு வடி­வங்­களில் புகுத்­தப்­பட்­டி­ருந்­ததும், அவைகள் முன்­னைய சட்டச் சரத்­துக்­க­ளிலும் பார்க்க மோச­மா­னவை என்­பதும் வெளிச்­சத்­திற்கு வந்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து, அந்த வரைவு மீளாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, கிட்­டத்­தட்ட ஒரு வருட காலத்தின் பின்னர் ஏப்ரல் மாத இறு­திப்­ப­கு­தியில் அமைச்­ச­ரவை அதற்­கான அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றது.

ஆயினும் புதிய வரை­வும்­கூட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திலும் பார்க்க மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தத் தக்க அம்­சங்­களைக் கொண்­டி­ருப்­ப­தாகச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டிருக்கின்­றது.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம்
(Prevention of Terrorism Act – PTA)

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­ட­மா­னது மிகவும் பயங்­க­ர­மா­ன­தாக வர்­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பொலி­ஸா­ருக்கும் அள­வுக்கு அதி­க­மான அதி­கா­ரங்­களை வழங்­கிய இந்தச் சட்­டத்தின் மூலம் வெறும் சந்­தே­கத்­தின்­பேரில் பலர் கைது செய்­யப்­பட்­டனர். சாதா­ரண குற்­ற­வியல் சட்­டத்தைப் போலல்­லாமல், இந்தச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் விசா­ரணை என்ற போர்­வையில் நீண்­ட­கா­லத்­திற்குத் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

விசா­ர­ணை­க­ளின்­போது கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் அளிக்­கின்ற வாக்­கு­மூ­லங்­க­ளையே அவர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­ய­மாகப் பயன்­ப­டுத்தி வழக்கு விசா­ரணை நடத்­து­வ­தற்கும் இந்தச் சட்டம் வழி செய்­தி­ருந்­தது. ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் பலர் செய்­யாத குற்­றங்­க­ளுக்­காகத் தண்­டனை அனு­ப­வித்­தி­ருக்­கின்­றனர். விசா­ர­ணை­க­ளின்­போது புல­னாய்­வா­ளர்­க­ளினால் கையா­ளப்­ப­டு­கின்ற விசா­ரணை உத்­தி­களின் மூலம் அவர்கள் விரும்­பி­ய­வாறு உண்­மைக்குப் புறம்­பான வாக்­கு­மூ­லங்­களைப் பெற்று அவற்றை ஒப்­புதல் வாக்­கு­மூல சாட்­சி­யங்­க­ளாகப் பயன்­ப­டுத்தி வழக்­குகள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வாறு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட தமிழ் அர­சியல் கைதிகள் பலர் பல வரு­டங்­க­ளாக இன்னும் சிறைச்­சா­லை­களில் வாடு­கின்­றார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் எவ­ரையும் மறித்து சோத­னை­யி­டவும், விசா­ரணை செய்­யவும், சந்­தேகம் ஏற்­பட்டால், அவர்­களைக் கைது செய்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பொலி­சா­ருக்கும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த விசா­ர­ணை­க­ளின்­போது பிர­யோ­கிக்­கப்­பட்ட சித்­தி­ர­வதைச் செயற்­பா­டு­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான நிவா­ர­ணமும் பெறக் கூடி­ய­தாக அந்தச் சட்­டத்தில் அம்­சங்கள் சேர்க்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அது மட்­டு­மல்­லாமல், சந்­தே­கத்­தின்­பேரில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­ப­டு­கின்ற ஒருவர் விசா­ரணை என்ற போர்­வையில் சட்­ட­ரீ­தி­யாக தடுத்து வைக்­கப்­பட்­டதன் பின்னர், அவர் மீது வழக்கு தாக்கல் செய்­வ­தற்குத் தேவை­யான சாட்­சி­யங்கள் இல்லை என விடு­தலை செய்­யப்­பட்­டா­லும்­கூட, அவர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததன் மூலம் செய்­யாத குற்­றத்­திற்­காக அனு­ப­வித்த தண்­ட­னைக்கு எந்­த­வி­த­மான நிவா­ர­ணமும் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. அவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டதன் கார­ண­மாக அவ­ருக்கு ஏற்­பட்ட பாதிப்­புக்கு நீதி வழங்­கப்­ப­டு­வ­து­மில்லை.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் பேச்­சு­ரிமை, நட­மாடும் உரிமை, கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­திரம், ஒன்று கூடும் சுதந்­திரம் போன்ற பல அடிப்­படை உரி­மைகள் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. அதி­காரப் பலம் கொண்­ட­வர்கள் இந்தச் சட்­டத்தின் துணை­யோடு தமது அர­சியல் எதி­ரி­க­ளையும், சாதா­ரண எதி­ரி­க­ளையும் பழி­வாங்­கிய சம்­ப­வங்­களும் தாரா­ள­மாக இடம்­பெற்­றி­ருந்­தன.

தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மட்­டு­மல்­லாமல் சிங்­கள, ஆங்­கில மொழி ஊட­க­வி­ய­லா­ளர்­களும் சமூக அந்­தஸ்து மிக்க முக்­கி­யஸ்­தர்­களும் கைது செய்­யப்­பட்டு தண்­ட­னைக்கு உள்­ளா­வ­தற்கு இந்தச் சட்டம் கடந்த காலங்­களில் பேரு­தவி புரிந்­தி­ருந்­தது. ஊட­க­வி­ய­லாளர் திஸ்­ஸ­நா­யகம் 2008 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்டு இந்தச் சட்­டத்தின் கீழ் 6 மாதங்கள் எந்­த­வித குற்­றச்­சாட்டும் இல்­லாமல் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். அதன் பின்னர் அவர் இனங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் வகையில் தனது எழுத்­துக்­களைப் பயன்­ப­டுத்­தினார் என்றும், அதன் மூலம் கிடைத்த வரு­மா­னத்தை பயங்­க­ர­வாதச் செயற்­பாட்­டுக்கு நிதி உதவி செய்தார் என்றும் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்தார். இத­னை­ய­டுத்து கொழும்பு மேல் நீதி­மன்­றத்­தினால் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி அவ­ருக்கு 20 வருட கடூ­ழியச் சிறைத்­தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

அவ­ருக்கு அளிக்­கப்­பட்ட இந்தத் தண்­டனை உல­க­ளா­விய ரீதியில் பெரும் கண்­ட­னங்­களும் விமர்­ச­னங்­களும் எழுந்­தி­ருந்­தன. அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவும் இந்தத் தண்­டனை குறித்து கண்­டனம் வெளி­யிட்­டிருந்தார். இத­னை­ய­டுத்து, 2010 ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி சர்­வ­தேச ஊடக தினத்­தன்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அவ­ருக்கு பொது மன்­னிப்பின் கீழ் விடு­த­லை­ய­ளித்தார். விடு­த­லை­யா­கிய திஸ்­ஸ­நா­யகம் நாட்­டை­விட்டு வெளி­யே­றினார்.

அதே­போன்று முன்னாள் கொழும்பு மாந­கர சபையின் துணை மேயர் அசாத் சாலியும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு பின்னர் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்தார். இவரைக் கைது செய்­ததன் மூலம் அர­சாங்கம் தனது அர­சியல் எதி­ரி­களைப் பழி­வாங்­கு­வ­தற்­காக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது­போன்ற பல சம்­பவங்­களின் பின்­ன­ணி­யி­லேயே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் பல அம்­சங்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும், மிகவும் பரந்த அள­வி­லான கருத்துச் செறி­வு­மிக்க சொற்­பி­ர­யோ­கத்தின் மூலம் அந்தச் சட்­டத்­தை­யும்­விட மோச­மான விளை­வு­களைக் கொண்­ட­தாக புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்டம் உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக பல அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன.

பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம்
(Counter Terrorism Act – CTA)

மனித உரி­மைகள் மதிக்­கப்­படும், மனித உரிமை நிலை­மைகள் மேம்­ப­டுத்­தப்­படும் என்று சர்­வ­தே­சத்­திற்கு வழங்­கி­யுள்ள உத்­த­­ர­வா­தத்தை நிறை­வேற்­று­வ­தற்கு விருப்­ப­மில்­லாத தன்­மையை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லேயே அரசு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திற்குப் பதி­லாகக் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­டத்தைக் கொண்டு வரு­கின்­றது என்று பல­த­ரப்­பட்ட மனித உரிமை அமைப்­புக்­களும் பொது அமைப்­புக்­களும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன.

அர­சுக்கு எதி­ரான கருத்­துக்­களைக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளையும், அவ்­வாறு வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற கருத்­துக்­க­ளையும் முறி­ய­டித்து அவர்­களைத் தண்­டிப்­ப­தற்­கா­கவே பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தை அரசு கொண்டு வரு­கின்­றது என்று பல அமைப்­புக்கள் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றன.

யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த கொள்கை ஆய்வு அடை­யாளம் மையம், தென்­னா­பி­ரிக்­காவைச் சேர்ந்த உண்­மைக்கும் நீதிக்­கு­மான சர்­வ­தேச திட்டம், இலங்கை மக்­களின் சமத்­துவம் மற்றும் நிவா­ர­ணத்­திற்­கான அமெ­ரிக்­காவைச் சேர்ந்த அமைப்பு, ஐக்­கிய இராச்­சி­யத்தைச் சேர்ந்த இலங்­கைக்­கான பிர­சார அமைப்பு, வட­கி­ழக்கைச் சேர்ந்த தமிழ் சிவில் அமைப்­புக்­களின் ஒன்­றியம் போன்ற அமைப்­புக்கள் இணைந்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் கடந்த காலங்­களில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி அரச தரப்­பினர் தமது அர­சியல் எதி­ரி­க­ளை­யும் அரச எதிர்ப்புக் கருத்­துக்­க­ளையும் முறி­ய­டித்­தார்கள் என்­பதை நினைவு கூரப்­பட்­டுள்­ளது.

எனவே, பயங்­க­ர­வாதம் நாட்டில் இருந்து ஒழிக்­கப்­பட்டு, பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­தாகக் கூறப்­ப­டு­கின்ற விடு­த­லைப்­பு­லிகள் முற்­றாக ஒழிக்­கப்­பட்­டதன் பின்னர். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் அம்­சங்­களை மறை­வாக உள்­ள­டக்­கிய வகையில் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­டத்தை அர­சாங்கம் உள்­நோக்­கத்­து­ட­னேயே கொண்டு வரு­கின்­றது என்ற சந்­தேகம் பர­வ­லாக எழுத்­துள்­ளது.

இந்­தச்­சட்­டத்தின் அம்­சங்கள் பல சாதா­ரண பொது­மக்­களின் பேச்­சு­ரிமை, தக­வல்­களை அறிந்து கொள்ளும் உரிமை, தக­வல்­களை சுதந்­தி­ர­மாகப் பரி­மா­றிக்­கொள்­வ­தற்­கான கருத்­து­வெ­ளிப்­பாட்டுச் சுதந்­திரம் என்­ப­வற்றை, தேசிய பாது­காப்பு, பொது­மக்கள் பாது­காப்பு என்ற அம்­சங்­க­ளுக்­குள்ளே மறை­வான முறையில் பறிக்கும் வகையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

தகவல் அறியும் சட்­டத்தை நடை­மு­றைக்குக் கொண்டு வந்­துள்ள அர­சாங்கம், தேசிய பாது­காப்­புக்கும் பொது­மக்­களின் பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்தல் விடுக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­க­ளுக்குப் பயன்­ப­டுத்தத் தக்க வகையில் தக­வல்­களைப் பெறுதல் அவற்றை பரி­மா­றுதல் என்­பன பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தின் கீழ் குற்றச் செயல்­க­ளாகக் குறிப்­பிட்­டி­ருப்­பது தொடர்பில் விமர்­ச­னங்­களும் கண்­ட­னங்­களும் எழுந்­தி­ருக்­கின்­றன.

மனித உரி­மைகள் மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும், ஜன­நா­யக உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­வற்­றுடன் நாட்டில் நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டமும் நீக்­கப்­பட வேண்டும் என்று ஜிஎஸ்பி சலு­கையை வழங்­கு­வ­தற்­காக ஐரோப்­பிய ஒன்­றியம் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு நிபந்­தனை விதித்­தி­ருந்­தது.

இலங்­கைக்கு ஜீ.எஸ்.பீ. சலு­கையை வழங்­கு­வ­தற்­கான முடிவை மேற்­கொள்­வ­தற்­காக ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட சந்­தர்ப்­பத்­தி­லேயே அமைச்­ச­ரவை அவ­சர அவ­ச­ர­மாக கடந்த மாதம் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திற்குப் பதி­லாகக் கொண்டு வரப்­ப­டு­கின்ற பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்­திற்கு அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது.

இந்த அங்­கீ­கா­ரத்தின் மூலம் நாட்டில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் இல்­லாமற் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அதற்குப் பதி­லாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமை­வா­கவே பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்­ப­டு­வ­தா­கவும் அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஆயி­ரத்துத் தொளா­யி­ரத்து எழு­பத்­தேழும், இரண்­டா­யி­ரத்து பதி­னேழும் (1977 உம் 2017 உம்) ஆனால் இந்தப் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தின் மூலம், உண்­மை­யா­கவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் அகற்­றப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் பல­ராலும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

கடந்த 1977 ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் வெற்­றி­பெற்ற தமி­ழர்­வி­டு­தலைக் கூட்­டணி நாட்டின் எதிர்க்­கட்­சி­யாகத் திகழ்ந்த காலப்­ப­கு­தி­யி­லேயே 1978 ஆம் ஆண்டு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் தற்­கா­லிக சட்­ட­மாகக் கொண்டு வரப்­பட்டு 1979 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

இவ்­வாறு தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராகப் பத­வி­யேற்­றி­ருந்த காலப்­ப­கு­தியில் கொண்டு வரப்­பட்ட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­பட்டு, மற்­று­மொரு தமிழ்த் தலை­வ­ரா­கிய இரா­ச­வ­ரோ­தயம் சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக உள்ள காலப்­ப­கு­தியில், அதற்குப் பதி­லாக பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்­ப­டு­கின்­றது.

அப்­போ­தைய சூழலில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு,எதிர்­க் கட்சித் தலை­வ­ரா­கிய அமிர்­த­லிங்­கத்­தினால் முடி­யாமற் போயி­ருந்­தது. அன்­றைய சூழல் அதற்கு ஏற்­ற­தாக இருக்­க­வில்லை.

ஆனால் இப்­போது பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திற்கு இணை­யான அம்­சங்­களைக் கொண்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்­திற்கு, தங்­க­ளு­டைய பரிந்­து­ரை­களைக் கவ­னத்திற் கொள்­ளா­ம­லேயே அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளதைக் கண்டு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அதிர்ச்­சி­யையும் கண்­ட­னத்­தையும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றது.ஆனால் தமிழ் மக்கள் மட்­டு­மல்­லாமல் சாதா­ரண பொது­மக்கள் அத்­துடன், அர­சுக்கு எதி­ரான மாற்று கருத்­துக்­களைக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளையும் இல­குவில் தண்­டிக்­கத்­தக்க வகையில் இந்தச் சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற அம்­சங்­களை நீக்­கு­வதில் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் வெற்­றி­பெ­று­வாரா இல்­லையா என்­பது தெரி­ய­வில்லை.

இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குப் பல்­வேறு வழி­க­ளிலும் ஒத்­து­ழைத்து, அதன் செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர், அதன் மூலம் அர­சாங்­கத்­துடன் கொண்­டுள்ள நல்லுறவைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கும் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் நன்மை கிடைக்கச் செய்வாரா என்பதும் தெரியவில்லை.

 

SHARE