தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றிருந்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, மற்றுமொரு தமிழ்த் தலைவராகிய இராசவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காலப்பகுதியில், அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுகின்றது.
இறுதி யுத்தத்தின்போது மிக மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன, போர்க்குற்றங்கள் புரியப்பட்டிருந்தன என்ற சர்வதேச குற்றச்சாட்டின் பின்னணியில், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான காலப்பகுதியில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு இலங்கை அரசு மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக அவ்வப்போது சில நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் அந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே மனித உரிமைகள் நிலைமைகளை சீர் செய்வதற்கானவை அல்ல என்பதை மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டி வந்துள்ளார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில்தான், ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதாக உறுதியளித்து, அதற்கான ஆணையை மக்களிடம் இருந்து தேர்தல் மூலமாகப் பெற்றுள்ள நல்லாட்சிக்கான அரசாங்கமும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது.
முன்னைய அரசாங்கம் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படவே இல்லை. மனித உரிமை நிலைமைகள் எப்போதும்போலவே நன்றாக இருக்கின்றது என்று பகிரங்கமாகக் கூறி வந்தது. அது மட்டுமல்லாமல், மனித உரிமைகள் மீறப்பட்டமைக்கும், இழைக்கப்பட்ட போர்க்குற்றச் செயல்களுக்கும் பொறுப்பு சுற வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் பிரேரணைகளின் மூலமாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டபோது, அதனைச் செயற்படுத்துவதற்கு பகிரங்கமாகவே மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது.
ஆனால், நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற பின்னர், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பொறுப்பு கூறுவதற்காக 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி, அந்தப் பிரேரணையை முழுமையாக நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தது.
அந்த உறுதிமொழியில் மனித உரிமைகள் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதம் முக்கியமானதாகும். மனித உரிமைகளை மீறுவதற்கும், அடிப்படை உரிமைகளைக் காலில் போட்டு நசுக்குவதற்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் துணை போயுள்ளது என்று சுட்டிக்காட்டி, உரிமைகள் பேணப்படுவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையும் சர்வதேச நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்திருந்தன.
இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்த்த அரசு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களின் அடிப்படையில் சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகள் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ஒரு சட்டத்தைக் கொண்டு வரப் போவதாகத் தெரிவித்திருந்தது.
இந்த வகையில் கடந்த 1979 ஆம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாகத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் (Prevention of Terrorism Act – PTA) பதிலாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (Counter Terrorism Act – CTA) அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
இந்தப் புதிய சட்டமாகிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுவதாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
இந்தப் புதிய சட்டத்திற்கான வரைவு கடந்த வருடம் கொண்டு வரப்பட்டிருந்த போது, அது இரகசியமாகக் கசிந்து ஊடகங்களில் பகிரங்கமாகியிருந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சில மோசமான அம்சங்கள் இந்தப் புதிய சட்டத்தில் வேறு வடிவங்களில் புகுத்தப்பட்டிருந்ததும், அவைகள் முன்னைய சட்டச் சரத்துக்களிலும் பார்க்க மோசமானவை என்பதும் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.
இதனையடுத்து, அந்த வரைவு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தின் பின்னர் ஏப்ரல் மாத இறுதிப்பகுதியில் அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றது.
ஆயினும் புதிய வரைவும்கூட பயங்கரவாதத் தடைச்சட்டத்திலும் பார்க்க மோசமான விளைவுகளை ஏற்படுத்தத் தக்க அம்சங்களைக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டம்
(Prevention of Terrorism Act – PTA)
பயங்கரவாதத் தடைச்சட்டமானது மிகவும் பயங்கரமானதாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கிய இந்தச் சட்டத்தின் மூலம் வெறும் சந்தேகத்தின்பேரில் பலர் கைது செய்யப்பட்டனர். சாதாரண குற்றவியல் சட்டத்தைப் போலல்லாமல், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை என்ற போர்வையில் நீண்டகாலத்திற்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணைகளின்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அளிக்கின்ற வாக்குமூலங்களையே அவர்களுக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தி வழக்கு விசாரணை நடத்துவதற்கும் இந்தச் சட்டம் வழி செய்திருந்தது. ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பலர் செய்யாத குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவித்திருக்கின்றனர். விசாரணைகளின்போது புலனாய்வாளர்களினால் கையாளப்படுகின்ற விசாரணை உத்திகளின் மூலம் அவர்கள் விரும்பியவாறு உண்மைக்குப் புறம்பான வாக்குமூலங்களைப் பெற்று அவற்றை ஒப்புதல் வாக்குமூல சாட்சியங்களாகப் பயன்படுத்தி வழக்குகள் நடத்தப்பட்டிருந்தன.
இவ்வாறு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பலர் பல வருடங்களாக இன்னும் சிறைச்சாலைகளில் வாடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எவரையும் மறித்து சோதனையிடவும், விசாரணை செய்யவும், சந்தேகம் ஏற்பட்டால், அவர்களைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த விசாரணைகளின்போது பிரயோகிக்கப்பட்ட சித்திரவதைச் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் பெறக் கூடியதாக அந்தச் சட்டத்தில் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல், சந்தேகத்தின்பேரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்ற ஒருவர் விசாரணை என்ற போர்வையில் சட்டரீதியாக தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர், அவர் மீது வழக்கு தாக்கல் செய்வதற்குத் தேவையான சாட்சியங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டாலும்கூட, அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததன் மூலம் செய்யாத குற்றத்திற்காக அனுபவித்த தண்டனைக்கு எந்தவிதமான நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதன் காரணமாக அவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நீதி வழங்கப்படுவதுமில்லை.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பேச்சுரிமை, நடமாடும் உரிமை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம் போன்ற பல அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தன. அதிகாரப் பலம் கொண்டவர்கள் இந்தச் சட்டத்தின் துணையோடு தமது அரசியல் எதிரிகளையும், சாதாரண எதிரிகளையும் பழிவாங்கிய சம்பவங்களும் தாராளமாக இடம்பெற்றிருந்தன.
தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாமல் சிங்கள, ஆங்கில மொழி ஊடகவியலாளர்களும் சமூக அந்தஸ்து மிக்க முக்கியஸ்தர்களும் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாவதற்கு இந்தச் சட்டம் கடந்த காலங்களில் பேருதவி புரிந்திருந்தது. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இந்தச் சட்டத்தின் கீழ் 6 மாதங்கள் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர் இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தனது எழுத்துக்களைப் பயன்படுத்தினார் என்றும், அதன் மூலம் கிடைத்த வருமானத்தை பயங்கரவாதச் செயற்பாட்டுக்கு நிதி உதவி செய்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி அவருக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
அவருக்கு அளிக்கப்பட்ட இந்தத் தண்டனை உலகளாவிய ரீதியில் பெரும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்திருந்தன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இந்தத் தண்டனை குறித்து கண்டனம் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, 2010 ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி சர்வதேச ஊடக தினத்தன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவருக்கு பொது மன்னிப்பின் கீழ் விடுதலையளித்தார். விடுதலையாகிய திஸ்ஸநாயகம் நாட்டைவிட்டு வெளியேறினார்.
அதேபோன்று முன்னாள் கொழும்பு மாநகர சபையின் துணை மேயர் அசாத் சாலியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவரைக் கைது செய்ததன் மூலம் அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தியிருந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற பல சம்பவங்களின் பின்னணியிலேயே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பல அம்சங்களை உள்ளடக்கியதாகவும், மிகவும் பரந்த அளவிலான கருத்துச் செறிவுமிக்க சொற்பிரயோகத்தின் மூலம் அந்தச் சட்டத்தையும்விட மோசமான விளைவுகளைக் கொண்டதாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
(Counter Terrorism Act – CTA)
மனித உரிமைகள் மதிக்கப்படும், மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்படும் என்று சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கு விருப்பமில்லாத தன்மையை வெளிப்படுத்தும் வகையிலேயே அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகக் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டு வருகின்றது என்று பலதரப்பட்ட மனித உரிமை அமைப்புக்களும் பொது அமைப்புக்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களையும், அவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்களையும் முறியடித்து அவர்களைத் தண்டிப்பதற்காகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அரசு கொண்டு வருகின்றது என்று பல அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொள்கை ஆய்வு அடையாளம் மையம், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டம், இலங்கை மக்களின் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமெரிக்காவைச் சேர்ந்த அமைப்பு, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த இலங்கைக்கான பிரசார அமைப்பு, வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் போன்ற அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி அரச தரப்பினர் தமது அரசியல் எதிரிகளையும் அரச எதிர்ப்புக் கருத்துக்களையும் முறியடித்தார்கள் என்பதை நினைவு கூரப்பட்டுள்ளது.
எனவே, பயங்கரவாதம் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டு, பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுத்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதன் பின்னர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அம்சங்களை மறைவாக உள்ளடக்கிய வகையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை அரசாங்கம் உள்நோக்கத்துடனேயே கொண்டு வருகின்றது என்ற சந்தேகம் பரவலாக எழுத்துள்ளது.
இந்தச்சட்டத்தின் அம்சங்கள் பல சாதாரண பொதுமக்களின் பேச்சுரிமை, தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை, தகவல்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்வதற்கான கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றை, தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு என்ற அம்சங்களுக்குள்ளே மறைவான முறையில் பறிக்கும் வகையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள அரசாங்கம், தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தத் தக்க வகையில் தகவல்களைப் பெறுதல் அவற்றை பரிமாறுதல் என்பன பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றச் செயல்களாகக் குறிப்பிட்டிருப்பது தொடர்பில் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்திருக்கின்றன.
மனித உரிமைகள் மேம்படுத்தப்பட வேண்டும், ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றுடன் நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும் என்று ஜிஎஸ்பி சலுகையை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனை விதித்திருந்தது.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பீ. சலுகையை வழங்குவதற்கான முடிவை மேற்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அமைச்சரவை அவசர அவசரமாக கடந்த மாதம் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டு வரப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்த அங்கீகாரத்தின் மூலம் நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லாமற் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்தது.
ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தேழும், இரண்டாயிரத்து பதினேழும் (1977 உம் 2017 உம்) ஆனால் இந்தப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம், உண்மையாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் அகற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பலராலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர்விடுதலைக் கூட்டணி நாட்டின் எதிர்க்கட்சியாகத் திகழ்ந்த காலப்பகுதியிலேயே 1978 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தற்காலிக சட்டமாகக் கொண்டு வரப்பட்டு 1979 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
இவ்வாறு தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றிருந்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, மற்றுமொரு தமிழ்த் தலைவராகிய இராசவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காலப்பகுதியில், அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுகின்றது.
அப்போதைய சூழலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு,எதிர்க் கட்சித் தலைவராகிய அமிர்தலிங்கத்தினால் முடியாமற் போயிருந்தது. அன்றைய சூழல் அதற்கு ஏற்றதாக இருக்கவில்லை.
ஆனால் இப்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு இணையான அம்சங்களைக் கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு, தங்களுடைய பரிந்துரைகளைக் கவனத்திற் கொள்ளாமலேயே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதைக் கண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அதிர்ச்சியையும் கண்டனத்தையும் வெளியிட்டிருக்கின்றது.ஆனால் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்கள் அத்துடன், அரசுக்கு எதிரான மாற்று கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களையும் இலகுவில் தண்டிக்கத்தக்க வகையில் இந்தச் சட்டத்தில் காணப்படுகின்ற அம்சங்களை நீக்குவதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் வெற்றிபெறுவாரா இல்லையா என்பது தெரியவில்லை.
இந்த அரசாங்கத்திற்குப் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைத்து, அதன் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர், அதன் மூலம் அரசாங்கத்துடன் கொண்டுள்ள நல்லுறவைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கும் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் நன்மை கிடைக்கச் செய்வாரா என்பதும் தெரியவில்லை.