பயங்கரவாதத்துக்கு எதிராகவே முஸ்லிம் மக்கள் எப்போதும் செயற்பட்டு வந்துள்ளனர். தொடர்ந்தும் அந்த நிலைப்பாட்டிலே இருக்கின்றனர் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று சில தினங்களிலே அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எமது பாதுகாப்பு பிரிவுக்கு முடியுமாகியுள்ளது. அதனையிட்டு படையினருக்கு எனது பாராட்டை தெரிவிக்கின்றேன்.
முஸ்லிம் மக்கள் இதற்கு எதிராக எழுந்திருக்கின்றனர். உலமாசபை குறிப்பிட்ட தெளஹீத் அமைப்பு தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டு பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவித்திருக்கின்றது. அத்துடன் முஸ்லிம் இளைஞர்கள் இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு பிரிவுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர் என்றார்.