விடுதலைப்புலிகள் அமைப்பினரின் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது இலங்கை அரசானது அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசோடும் ஏனைய உலக வல்லாதிக்க சக்திகளோடும் இணைந்து அவ்வமைப்பைப் பயங்கரவாத அமைப்பென முத்திரைகுத்தி நின்றதோடு அதை நசுக்குவதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அமுல்படுத்தியது.
யுத்தத்தின் முற்கூற்றில் விடுதலைப் புலிகளின் பலம் மேலோங்கி நின்றதில் இத்தடைச்சட்டத்தின் மூலம் இலங்கையரசினால் எண்ணிக்கொண்ட தற்கியைபாகப் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.
இவ்வாறே யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிக்குள் இத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி விடுதலைப்புலி உறுப்பினர்களை இலங்கையரசினால் பெரிதாகக் கைதுசெய்யமுடியவில்லை.
எனினும் யுத்தம் முடிவுற்ற பின் விடுதலைப்புலிகளென்னும் சந்தேகத்தின் பேரில் பெருமளவானோர் கைது செய்யப்பட்டதோடு சிறைச்சாலைக்குள்ளும் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையிடப்பட்டோரில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அல்லாதவரும் பலர் உள்ளனர் என்பதுந் தெரிந்ததே. மேலும் இப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் யுத்தத்தின் இறுதிக் காலத்தில் புலிகள் அமைப்பினர் சார்பில் வேலை செய்த சில சிங்களவரும் சிங்களப் புலிகள் என்னும் பெயரோடு கைதுசெய்யப்பட்டிருந்தமையுந் தெரிந்ததே.
சிங்களப் புலிகள் என்னும் நிலை யில் இருந்தாலுஞ் சரி அல்லது வேறு எந்நிலைகளில் இருந்தாலுஞ் சரி கைது செய்யப்பட்ட சிங்களவர் இதுவரையில் விடுதலை செய்யப்படாமலிருப்பாரென்பது ஐயமே.
ஆனால் புலிகள் அமைப்பில் அங்கம் வகிக்காத தமிழர்கள் இயக்கத்தோடு எவ்வித சம்பந்தமும் இல்லாத நிலையிலுங்கூட கைது செய்யப்பட்டிருக்கலாமென எண்ணுவதில் நியாயமுண்டு. அத்தோடு புலிகள் அமைப்பினருக்கு உதவி ஒத்தாசைகள் வழங்கிய பலருங்கூடக் கைதுசெய்யப்பட்டுமுள்ளார்கள். மேலும் இயக்கத்திற்கு உணவு கொடுத்தமை போன்ற காரணிகளினால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருசாரார் உண் மையில் அக்காரணிகளுக்காட்படாதவர்களாயுமிருந்திருப்பார்களெனவும் நம்பலாம்.
எது எப்படியிருந்தபோதுங்கூடத் தமிழர் என்னும் ஒரே காரணத்தினால் மட்டும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்ட பலர் இன்னமும் (பல வருடங்கள் கடந்து சென்ற நிலையிலுங் கூட) எவ்வித நீதி விசாரணையுமின்றித் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இக்கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த (01-02) ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் தமிழர் தரப்பினர் கொடுத்த அழுத்தத்தினால் ஒரு சிலர் விடுதலை செய்யப்பட்டபோதுங்கூட அவர்கள் மீண்டுங்கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளமையுந் தெரிந்ததே.
இக்கைதிகள் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக வாடிக்கொண்டிருப்பதால் அவர்களுக்குள் சிலர் உடல் ரீதியாக நோய்வாய்ப்பட்டிருப்பதோடு இன்னுஞ் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் வேறும் ஒரு சாரார் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டவர்களாக விளங்குவார்கள் என்பதும் வெள்ளிடைமலையே.
மேலும் வெலிக்கடைச் சிறையி லுள்ள தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் அச்சிறைச் சாலையின் முன்பாக எதிர்வரும் 08ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தமிழ் அரசியல்கைதிகளை உடன் விடுவிக்குமாறு கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வலியுறுத்தியுமே இப்போராட்டம் நடக்கவுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம் இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
2012ஆம் ஆண்டு சிறைச்சாலையில் மிக மோசமாகத் தாக்கப்பட்டதன் காரண மாகத் தமிழ் அரசியல் கைதி ‘டில்ருக்சன்’ உயிரிழந்த தினத்தில் இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதென அரசியல்கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது ‘முன்னைய அரசைப்போன்றே இந்த அரசும் அரசியல்கைதிகள் விடயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலைப்பாட்டையே பின்பற்றுகின்றது. இலங்கையில் அரசியல்கைதிகள் என்று எவருமில்லை. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சிறைச்சாலைகளிலுள்ளனர் என நல்லாட்சி அரசிலுள்ள அனைவருந் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இதையே தெரிவித்து வந்தார். தற்போதுந் தெரிவித்து வருகின்றார். தமிழ் அரசியற் கட்சிகளும் இவ்விடயத்தைக் காத்திரமான விதத்தில் கையாளவில்லை.தமிழ் சிவில் அமைப்புக்களும் இதே நிலையிலேயே உள்ளன. வடக்கு கிழக்கிலுள்ள சிவில் சமூக அமைப்புக்கள் அன்றாட நெருக்கடிகள் குறித்துக் கவனம் செலுத்தவேண்டிய நிலையிலுள்ளன. கண்ணுக்கு முன்னாலுள்ள நெருக் கடிகளைக் கையாளவேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.
1983ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரை இலங்கைச் சிறை களில் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 100இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 2012 ஜூலை மாதம் வவுனியாச் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல்கைதிகளைக் கொழும்பிலிருந்து சென்ற இராணுவத்தினர் தாக்கினர். அதிலேயே நிமலரூபன் கொல்லப்பட்டார். அவர் மிக மோசமாகத் தாக்கப்பட்டதை அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்கள் காண்பித்தன. அவருடன் சேர்ந்து தாக்குதலுக்குள்ளான டில்ருக்ஷன் ஒருமாத காலம் கோமா நிலையிலிருந்த பின்னர் ‘ராகம’ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இவ்வாறாகக் கருத்துக்களை வெளியிட்ட அரசியல்கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அவர்கள் டில்ருக்ஷன் உயிரிழந்த நாளை நினைவுகூர்ந்தே 08.08.2016 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்ததோடு அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி யும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வேண்டியும் ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகிறது.
மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் நிலவரம் மிக மோசமான நிலையையடைந்து வருவதால், அக் கைதிகளின் உறவினர்கள் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை பற்றிக் கருத்தறியும் நல்லிணக்கச் செயலணி அமர்வுகளில் பங்குபற்றி விபரங்களைப் பதிவு செய்யவேண்டுமெனத் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலைக்கான சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்க் கைதிகளின் விடுதலை யென்பது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அவசிய மானவொன்றெனவும் அச்சமூகம் தெரிவித்துள்ளமையோடு அதனால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வரும் விடயங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
நல்லிணக்கப் பொறிமுறை உருவாக்கம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்தறியும் வலய மட்டச் செயலணியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் செயற்பாடானது போரி னால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதிலிருந்து எவ்வாறு மீள முடியும்? என்று அவர்களிடமே கருத்துக்களைக் கேட்டறிந்து அறிக்கையிடுவதாகும். எனவே நாடெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இச்செயலணி அமர்வுகளில் பங்குபற்றி விபரங்களைப் பதிவு செய்து தமது நேசத்துக்குரியவர்களின் விடுதலையின் அவசியத்தைத் தெரிவிக்க முடியும். எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் இப்பணி முடிவடையவிருப்பதால் அதற்கு முதல் இச்செயலணியின் பயனை அரசியல்கைதிகளின் உறவினர்கள் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.
ஆனால் இக்குழுவில் அரசியல்கைதிகளின் உறவுகள் அக்கைதிகள் தொடர்பில் பதிவு செய்வது மூலம் பெறக்கூடிய பயன்களைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேற்றரப்பட்ட செயலணி யானது அவ்வணிக்குக் கிடைக்கும் பதிவுகளுக்கு இயைபாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னரே நாட்டின் பல சிறைச்சாலைகளிலும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட நிலை யில் நீண்டகாலமாக எந்தவிதமான நீதி விசாரணையுமின்றி வாடி வதங்கிக்கொண்டும் உளப்பாதிப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கும் கைதிகளின் எதிர்காலம் எவ்வாறாக அமையுமென்பதை இவ்விடத்தில் மிகுந்த ஜீவகாருண்யத்தோடு அணுகுவதே முறையானது.
கைதிகளின் வயது வருடமொன்று நகரும்போது மேலும் ஒரு வயதை எட்டிப்பிடிக்கின்றது.
எனவே நீண்டகாலமாகச் சிறைவைக்கப்பட்டுள்ள இக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான அறிகுறி யெதுவுமே தென்படாத இன்றைய நிலையில் வலய மட்டச் செயலணியின் தகவல் பெறும் விடயமும் தகவல் பெறும் செயற்பாட்டோடேயே முடிவுறக்கூடிய இயல்புநிலையும் காணப்படுவதால் இக்கைதிகளின் எதிர்காலம் சிறைச்சாலைகளோடேயே முடிந்துவிடக்கூடிய பூச்சிய நிலையுள்ளதெனவும் ஊகிக்கக் கூடியதாகவுமுள்ளது.
அவ்வாறில்லாமல் இச்செயலணியின் நெறிமுறைகளின் பாற்பட்டோ அல்லது வேறு வழிகளிலோ கைதிகளில் ஒரு சாரார் விடுவிக்கப்பட்டாலுங்கூட அவ்விடுவிப்பானது இன்றோ நாளையோ நடைபெறக்கூடியவொன்றாகவும் இருக்க மாட்டாது.
இவ்வாறாகச் சிறைச்சாலைகளுக்குள்ளேயே தமது எதிர்காலத்தை முழுமையாகத் தொலைத்துவிடக்கூடிய மிகு பரிதாப நிலையில் கைதிகளின் நிலை அமைந்திருப்பதோடு அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டாலுங்கூட அவர்களது சுயாதீனமான வாழ்வுக்குப் பங்கம் விளைவிக்கும்விதமாக விடுதலையாகி அவர்கள் தமது பிரதேசங்களுக்குள் வந்து வதியும்போதுங்கூடப் பொலி ஸாரினதும், இராணுவத்தினரினதும், புலனாய்வினரினதும் கெடுபிடிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படவேண்டியே யிருக்கும்.
ஆகையால் இக்கைதிகள் சிறைச் சாலைகளிலிருந்து விடுவிக்கப் பட்டாலென்ன அல்லது விடுவிக்கப் படாவிட்டாலென்ன பொதுவாக அவர்கள் தமது வாழ்க்கையைத் தொலைத்தவர்களான நடைப்பிணங்களாகவே வாழ வேண்டிவரும்.
ஆதலால் இக்கைதிகள் தாமும் இயல்பான சமூக நகர்வோடு இயைந்து சென்று புது மனிதர்களாக நவ ஜீவனத்தை மேற்கொள்ளவேண்டுமெனில் தற்போதே அவர்கள் மீதான நீதி விசாரணை நடு நிலை நின்று முன்னெடுக்கப்பட்டுக் காலதாமதமின்றி அவர்கள் சட்டத்தின் முன் நிரபராதிகள் எனப் பறைசாற்றப்பட்டு விடுதலை செய்யப்படுவதன் மூலம் மட்டுமே விடுதலையாகும் அவர்கள் மீதான காவற்றுறையினர், படையினர், புலனாய்வினர் ஆகிய பிரிவினரின் கெடுபிடிகள் அமையாத நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டு அவர்கள் தமக்கும் தமது குடும்பத்தவர்களுக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள பிரஜைகளாகத் தமது வாழ்வை இட்டுச் செல்லமுடியும்.
இவ்வாறான ஓர் ஆரோக்கியமான கள அமைவு தோற்றுவிக்கப்படுவதற்கு வெறுமனே செயலணிகள் தகவல்களைச் சேகரித்துக் கோவைப்படுத்தி வைப்பதனாலோ அல்லது அவற்றை வெகுஜன ஊடகங்களில் அம்பலப்படுத்துவதனாலோ முடியாதவொன்றாகவேயிருக்கும். எனவே பயங்கரவாதிகள் என்னும் நாமத்துடன் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல்கைதிகள் தொடர்பில் செயலணிகளாகவிருந்தாலுஞ் சரி, அரசி யல் கட்சிகளாகவிருந்தாலுஞ் சரி வெறுமனே உத்தியோகபூர்வமான முறையின்பாற்பட்டோ கட்சி அரசியல் நலனின்பாற்பட்டோ அல்லது தனி நபர் அரசியல் நலனின் பாற்பட்டோ சிறைக்கைதிகள் பிரச்சினையை அணுகாமல் மனிதாபிமானத்தோடு அவர்களுடைய பிரகாசமான எதிர்காலத்தைக் குறியாகக்கொண்ட கருத்துக்களை முன்வைத்து இலங்கையரசுக்கு நெருக்குவாரத்தை ஏற்படுத்துவதோடு அவ்வரசானது அக்கைதிகளின் ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடக்கூடியதான நிலையில் அவர்களை விடுதலை செய்வதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கும் முன்வரவேண்டும்.
இவ்விடயங்களில் சோர்வான நிலை அமையுமானால் கைதிகளில் ஒரு சாரார் சிறைச்சாலைகளில் இறக்கும் நிலை யும் தோன்றலாம். நோய்வாய்ப்பட்டு நிரந்தரப் பிணியாளர்களாகும் அவலமும் அமையலாம். மனநிலை பாதிக்கப்பட்டு இறக்கும்வரை தமது வாழ்வு தொடர்பில் எவ்விதமான செயலாற்றலையும் வெளிப்படுத்த முடியாத துர்ப்பாக்கியசாலிகளாகும் துயரம் மிகுந்த எதிர்காலத்தையும் அவர்கள் எதிர்நோக்கவேண்டிவரும்.
மேலும் நாட்டில் இனக்குரோதங்களைத் தூண்டக்கூடிய நிகழ்வுகள் இடம் பெறும்போதும் சிறைச்சாலைகளுக்குள் இக்கைதிகள் சிங்களக் கைதிகளினால் தாக்கப்படுவதும் அவ்வினத்தைச் சேர்ந்த சிறைச்சாலை அதிகாரிகளினாலும் தாக்கப்படுவதும் வழக்கமானவொன்றாக அமைந்துமுள்ளது.
இந்நிலை தொடர்ந்தும் நீடிக்குமென்பது இயல்பாகவுள்ளதால் இவ்விடயத்திலும் அக்கைதிகளின் நிலை பரிதாபமாகவே அமைந்துள்ளது.
இதன்போது கைதிகள் அகாலச் சாவை யடையலாம். அங்கங்களையும் இழக்கலாம். முடிவாகக் கைதிகளின் நிலை மனிதாபிமானத்தோடு அணுகப்பட்டு உடன் விடுதலை செய்யப்படுவதால் மட்டுமே அவர்களும் சாமான்ய சீவனோ பாய நகர்வுக்குள் தம்மை உட்புகுத்தி மனிதர்களாக வாழ முடியுமென இடித்துரைக்க வேண்டியதாகவுள்ளது.
ஆண்டவர்