மட்டக்களப்பு சென்றல் கல்லூரியில் பாடசாலையில் படித்த கருணா ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்காது தில் சாகசங்களில் விருப்புக் கொண்ட கருணா சிறு வயதிலேயே ஆயுதக் கலாச்சாரத்தில் இணைந்து கொண்டார். இவர் பிரபாகரனின் நன்மதிப்பை பெறுவதற்காக எல்ரிரிஈ க்குள் குள்ளநரி வேலைகளையும்; துதி பாடுதல்களையும் காட்டிக் கொடுப்புக்களையும் ஈவிரக்கமற்ற கொலைகளையும் புரிந்தே பெற்றுக் கொண்டார்.
இவர் மட்டு தளபதியாக உருமாறிய பின் தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நாட்டுவதற்கு மட்டக்களப்பில் இருந்த கல்விமான்களையும் முற்போக்கு சிந்தனையாளர்களையும் சுட்டு பொசுக்கி மட்டக்களப்பு மக்களை ஒரு அடிமைத்தனத்திற்குள் தள்ளினார்.
பாலங்கள் அரச கட்டடங்கள் வருவாய ஏற்படுத்திக் கொடுக்கும் அரிசியாலைகள் முதல் ஏனைய நிறுவனங்களையும் குண்டு வைத்து தகர்த்ததில் தளபதிகளில் முதன்மையானார். அது மட்டுமல்ல எந்த மாவட்டத்திலும் நிகழாத அளவிற்கு ஏழை முதல் பணக்காரர் வரை கடத்தி கப்பம் பெறுவதில் முன்னோடியானார். ஏழை மீன்பிடி தொழிலாளர்களிடம் இருந்து மீனகளைப் பறிக்கும் அளவிற்கே இவரது கொடுங்கோல் ஆட்சி நிலவியது.
முஸ்லிம் தமிழர்களுக்கு இடையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளையும் கலகங்களையும் இவர் காத்தான் குடி பள்ளிவாசல் படு கொலை மூலமும் ஏறாவூர் படுகொலை மூலமும் நிரந்தர இனப்பகையை ஏற்படுத்தினார். இவர் இந்த படுகொலைகளை தானே முன்னின்று உத்தரவிட்டு கொலை செய்ய கட்டளை இட்டதற்கான ஆதாரங்களும் அதை நியாயப்படுத்த சொன்ன கதைகளும் ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கு இன்றும் சாடசிகள் உள்ளன.
மட்டக்களப்பில் தனக்கென்றே ஒரு படையணியை உருவாக்குவதற்கு பலவந்தமாக பள்ளிச் சிறுவர்களில் இருந்து வறியகுடும்பங்களின் வருமானத்தை ஏற்படுத்தி கொண்டிருந்த உழைப்பாளர்கள் வரை கடத்திச் சென்று ஆயுதப்பயிற்சி கொடுத்தவர் இதை எதிர்த்த பெற்றோர்கள் முதல் கல்வியாளர் வரை அடித்து நையப்புடைத்தார். தாய்மார் என்றும் பாராது அவமானப்படுத்தினார். பாடசாலை முதல் கோயில் திருவிழா வரை சுற்றி வளைத்து சிறுவர் சிறுமியரை கடத்தி சென்றவர். இவரது கட்டாய ஆயுதப் பயிற்சியில் இருந்து தப்பி வந்தவர்களை சுட்டு கொன்று மற்றவர்களை பயமுறுத்தியவர். இந்த பிள்ளை பிடிப்பில் இருந்து தப்பிச் செல்வதற்காக பிறமாவட்டங்களுக்கு செல்ல முயன்றவர்களை வழிமறித்து நடு வீதியிலேயே அவர்களுக்கு சிறுமிகள் என்றும் பார்க்காது தலைமுடியை வெட்டியதை மட்டக்களப்பு மக்கள் மறக்க மாட்டார்கள்.
தன்னை ஒரு ராணுவ திட்டமிடுதலில் திறமையானவர் என தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் கருணா வவுணதீவு ராணுவ முகாமை தான்தோன்றித்தனமாக தாக்கியதில் பல நூறுக்கணக்கான அப்பாவி போராளிகளை பலி கொடுத்ததுடன் முழு தோல்வியை தழுவிக் கொண்ட கருணாவின் ராணுவ அறிவு சம்மந்தமாக இன்றைய பிதற்றல்களை புரிந்து கொள்ளுங்கள். இவரது முழு பலமும் கல்வியறிவற்ற கிராமப்புற பின்தங்கிய இளைஞர்களையும் யுவதிகளையும் பயிற்சி கொடுத்து விட்டில் பூச்சிகள் போல் ராணுவ முகாங்களுக்கு அனுப்பியதே ஆகும். இதனாலேயே இவர் புலிகளுக்குள் முன்னோடியாகவும் பிரபாகரனிடம் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டார். மொத்தத்தில் இவர் மட்டக்களப்பு சின்னஞசிறுசுகளை அழியவிட்டு மட்டு அம்பாறை மக்களை மடையர்களாக்கி தனது சுய பெயரை பொறித்துக் கொண்டார்.
சமாதான உடனபடிக்கையின் காலத்தில் கூட கட்டாய ஆட்சேர்ப்பை நிறுத்தாது அரசியல் எதிரிகளை சுட்டு கொன்று சமாதான உடன்படிக்கையை முதன்முதலில் மீறியவர் இவரே. இவரது மாமனார் (மனைவியின் தந்தையார்) ஒரு சாதாரண கூலி தொழிலாளியாக இருந்தும் இவர்களது பெயரில் ஏராளமான சொத்துக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதையும் இவரது தனிப்பட்ட ராணுவ கட்டமைப்பின் பெருக்கத்தையும் விசாரிக்க முற்பட்டபோதே முரண்டு பிடித்தார். இவருக்கு எதிராக குற்றம் கூறியவர்ளை தவறு என சொல்லி தான் பிரபாகரனுக்கு நேரடி பார்வையில் இயங்க தயாராக இருப்பதாகவும் பிரபாகனை தனது கடவுள் போல் மதிக்கின்றேன் எனவும் தனது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறு பத்திரிகை துண்டுப்பிரசுரம் மூலம் மன்றாடி கேட்டார். ஆனால் இவர் எல்ரிரி யில் இருந்து நீக்கப்பட்டவுடன் தனது விசுவாசிகளை கொண்டு ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்தி குறிப்பாக மாமாங்க பிள்ளையார் கோவில் முன் ஒரு மாபெரும் கூட்டம் நடத்தி தனது ஆதரவாளர்கள் மூலம் மீண்டும் மட்டு அம்பாறை தளபதியாக நியமிக்குமாறு மன்றாடி கேட்டு கொண்டார். இவை அனைத்தும் சரிவராத பட்சத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுகிறது என பிரதேச அரசியல் செய்யத் தொடங்கினார்.
தான் தப்பி ஓடும் வரை பலாத்காரமாக பிடிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை ராணுவத்தின் முன்னரங்குகளில் முன்நிறுத்தி வைத்திருந்தார். சில மனிதாபிமானிகள் இவ்வாறான சிறார்களை யுனிசெப் இல் இந்த சந்தர்ப்பத்திலாவது கையளிக்குமாறு மன்றாடி கேட்டனர். அதை மறுத்து தனது சுயநல, சுய பாதுகாப்பிற்காக புலிகளால் கொலை செய்யப்படுவதற்கு காரணமானார்.
உலகத்தின் எந்த நாட்டிற்கு சென்றாலும் வாழ முடியாததை உணர்ந்த கருணா ராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பு வேலை செய்வதற்கு முன் வந்தார். அத்துடன் புலிகளில் இருந்த போது கையாண்ட அதே பாணியில் கையாண்டு 2000ற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி தமக்கு என ஒரு படையணியை வெலிகந்தை காட்டுப் பகுதியில் நிறுவினார். ராணுவத்துடன் சேர்ந்து கிழக்கு மாகாண புலியழிப்பில் ஈடுபட்டார். ஆட்கடத்தல் கப்பம் அரசியல் எதிரிகளை கொல்லுதல் போன்றவற்றை செய்து கொண்டு இருக்கும் இவர் இன்று ஓரு அரசியல் கொமடியன் போல பல புதினமான கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றார். கிழக்கின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி வழங்க போகின்றாராம். போதாக்குறைக்கு இதை வடக்கிற்கும் விஸ்தரிப்பாராம்.
அபிவிருத்தி தந்த வழங்களை அழித்த இவர் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப் போவதாகப் பிதற்றினார்.என்ன நடந்திருக்கின்றது,
பள்ளி வாசல் முதல் முஸ்லிம் கிராமம் வரை நரமாமிச வேட்டையாடிய கருணா தமிழ் முஸ்லிம் உறவு பற்றி பிதற்றுகிறார்.
மட்டு நகர் அபிவிருத்திக்காக உழைத்த முன்னாள் அமைச்சர் தேவநாயகத்துடன் சேர்ந்தியங்கிய காரணத்தால் சித்தாண்டி சிவலிங்கம் ஆசிரியரை மின்கம்ப மரண தண்டனை கொடுத்ததுடன் வாசுதேவாவையும் (புளொட்) அவரது சகாக்களையும் பேச்சு வார்த்தைக்கென அழைத்து கபடமாக கொன்று குவித்ததையும் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்; நிமலன் சவுந்திர நாயகத்தை அழைத்து பேசிய பின் அவர் வீடு சென்று அவரை வழி மறித்து கபடத்தனமாக கொன்றதையும மட்டு மாநகர் முதல்வர் செழியன் பேரின்ப நாயகத்தை கொன்றதையும் மட்டுநகர் முனன்னாள் அமைச்சர் கணேச மூர்த்தி (சந்திரிகா அரசில்) யின் சகோதரரை கொலை செய்ததையும் ரெலோ உப தலைவரான மட்டுநகர் ரொபேட்டை (பிரதேச சபை தலைவராக சிறப்புடன் பணியாற்றிய) கொலை செய்ததையும் மறந்து இன்று தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்றும் மட்டு – அம்பாறையில் உள்ள பிரதேசங்கள் பின்தங்கியுள்ளதாக கருணா பிதற்றி திரிகின்றார்.
ஏனைய போராளி அமைப்புக்களையும் போராளிகளையும் கொன்று குவித்ததை எதிர்த்த புலி உறுப்பினர் கல்லாறு கடவுள் (தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கின்றார்) வெளியேறிய போதும் தொடர்ந்து இக்கொலைகளையும் கொலைக் கலாச்சரத்தையும் முன்னின்று எடுத்து நடத்திய எமனுடைய தூதன் கருணா இன்று போதனை புரிகின்றார்.
இந்திய ராணுவத்தின் வருகையின் பின் பலாத்காரமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தை இந்திய ராணுவம் கைவிட்டு சென்ற பின் அவர்களை கொன்று குவித்தது அன்று இவருக்கு தவறாகப் படவில்லை என இன்று மட்டு – அம்பாறை மக்களின் காதில் இன்று இவர் பூச்சூடுகிறார்.
புத்திஜீவிகள் முதல் சமூக முன்னோடிகள் பாடசாலை ஆசிரியர்கள் வரை சுட்டுக் கொன்ற இவர் நம் சமூகத்தில் (மட்டு -அம்பாறை) கல்விமான்கள் இல்லை என கதறுகிறார்.
புலியால் நீக்கப்பட்ட பின் பிரபாகரனை கடவுள் என கடிதம் கொடுத்து மீண்டும் தன்னை சேர்த்துக் கொள்ளச் சொன்னவர் இன்று பிரபாகரனுக்கு அரசியல் தீர்வுக்கு செல்லுமாறு அறிவுறுத்தயதாகவும் அதை அவர் கேட்காததாலேயே தாம் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகியதாக கயிறு விடுகிறார். கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக ஆரம்பத்தில் புரளி கிளப்பிய இவர் தனது முன்சொன்ன கருத்துக்களில் முரண்படுகின்றார். பிரபாகரனின் உதவியுடன் மட்டு – அம்பாறை மக்களையும் அப்பாவி இளைஞர் யுவதிகளையும் அடிமைத்தனத்திற்குள் வைத்திருந்த இவர் இன்று ராஜபக்ஸ சகோதரர்களுடன் இணைந்து அதே நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றார். இவர் மட்டு – அம்பாறை மக்களை மீண்டும் மீண்டும் தனது அதிகார பசிக்காக பலி கொடுக்கிறார். ஆனால் மட்டு-அம்பாறை மக்கள் இதை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். துரதிஸ்டவசமாக புலம்பெயர்ந்த சிலர் இவரின் கடந்த காலத்தை கருத்திற்கெடாது கிழக்கின் விடிவெள்ளியாக உருவாக்க முனைகின்றனர்.
அது மட்டுமல்ல சில இணையத்தளங்கள் இவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தம் நலன்களில் (மட்டு – அம்பாறை மக்கள்) காட்டாது இருப்பதை இட்டு மட்டு – அம்பாறை விசனம் அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்தி ஏற்படுத்தி தந்த ராஜன் செல்வநாயகம், தேவநாயகம் போன்ற மூத்த அரசியல்வாதிகளையே அரசியல் உரிமைகளே முக்கியம் என புறந்தள்ளி விட்ட மக்களுக்கு அபிவிருத்தி பற்றி பிதற்றுகிறார். இவர் போன்ற அரசியல் சமூக அறிவற்றவர்கள் போராடச் சென்றதாலேயே எம்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டது என்பதை மட்டு அம்பாறை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். எமது சமூகத்தில் இன முரண்பாட்டால் ஏற்பட்ட ஆயுதகலாச்சாரம் முனைப்பு பெற்றதால் சமூக நற்சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும், சாதாரண மனிதர்களும், அரசியலுக்கு வருவதை தவிர்த்தனர். சமூகத்தில் நன்மதிப்பை பெறாதவர்களும் சமூக விரோதிகளும், சுயநலவாதிகளும், ஊதுகுழல்களும் அரசியல் அதிகாரம் பெற்று பாராளுமன்றம் சென்றனர். இது பல தமிழ் தேசியகூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
புலிகளைக் காட்டி சட்டத்தையும ஒழுங்கையும் நிலை நிறுத்துவதற்கு தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தவறியமையே இதற்கு ஒரு காரணமாகும். புலிகளின் அழிவுடன் மீண்டும் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும் சந்தர்ப்பத்தில் ஆயுத கலாச்சாரம் இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தமக்கான சரியான அரசியல் தலைமையை தேர்ந்தெடுக்க முன்வருவார்கள். புலம்பெயர் மக்கள் ஆயுத வன்முறைகளற்ற சட்டமும் ஒழுங்கும் நிலவுகின்ற ஒரு நிலையை இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் கொண்டு வருவதே அவர்கள் முன் உள்ள தலையாய கடமையாகும். இதை விடுத்து கொலைக் கலாச்சாரத்திலும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை போற்றுவதையும் – முன்னிலைப் படுத்துவதையும் நிறுத்த வேண்டும். புலம் பெயர்ந்தவர்கள் எப்படி புலிகளை வளர்த்து மக்களை அழிவுக் உள்ளாக்கினார்களோ அதே போன்ற செயலை சில கிழக்கின் விடிவெள்ளிகளும், பல இணையத்தளங்களும்; சுயநலவாதிகளும் செய்வதை தவிர்ப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
இவரின் பின்னால் அணிசேரும் சிலர் பிரதேச வாதத்தை கூறிக் கொண்டு மட்டக்களப்பு மக்களை ஏமாற்றி சூறையாடியதுடன், பல பெண்களின் கற்பை அதிகாரத்தை பயன்படுத்தி பறித்த சில மௌனமான (ஆ)சாமிகளும் மட்டு நகர் மக்களால் நன்கு அறியப்பட்டுள்ளனர்.
இனத்திற்குள்ளேயான விரிசல்களையும், இயக்கத்திற்குள்ளேயான விரிசல்களையும் பல கொலைகளைப் புரிந்ததன் மூலம் ஏற்படுத்திய கருணா இன்று தேசிய நல்லிணக்க அமைச்சராக உள்ளது நகைப்பிற்கிடமாக உள்ளது!!
பிரபாகரனை அண்ணே அண்ணே என உச்சாடனம் செய்து கொண்டு திரிந்த கருணா இன்று ராஜபக்சவை விநாடிக்கு விநாடி உச்சாடனம் செய்வதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். தலைவர் (கருணாவிற்கு) தமிழ்ஈழம்பெற்றுத் தருவார் என போதித்த கருணா அதை ஏற்க மறுத்தவர்களுக்கு அடியும் உதையும் கொடுத்து பங்கருக்குள் தள்ளி சித்திரவதை செய்தார். இன்று ராஜபக்ச சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு எல்லாம் பெற்று தருவார்கள் என்று பிரச்சாரம் இந்த போதனைகளை ஏற்க மறுப்பவர்களை அவர் அதே புலிப்பாணியில் கையாள்கிறார்.
காத்தான்குடி நசீர்