பாகிஸ்தானுக்கு இலவசமாக ஒரு கோடி டோஸ் சொட்டு மருந்து: சவுதி வழங்கியது

501
உலக நாடுகள் அனைத்திலும் போலியோ நோயை ஒழிக்க உலக சுகாதார கழகமான ‘யூனிசெப்’ தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இருப்பினும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய மூன்று நாடுகளிலும் இவர்களின் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த முடியவில்லை. பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம் திட்டத்தினை இஸ்லாமியப் போராளிகள் எதிர்த்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் பணியாற்ற வரும் சுகாதார ஊழியர்களைக் கடத்திச் செல்வதும், தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வரும் செவிலியர்களைத் தாக்கி விரட்டுவதுமாக இருக்கும் இவர்களின் நடவடிக்கையினால் பாகிஸ்தானில் போலியோ நோயைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாக உள்ளது.

இதனால், உலக நாடுகளிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் குழந்தைகள் தான் போலியோ நோயின் தாக்கத்துக்கு அதிகமாக ஆளாகின்றன. பாகிஸ்தானில் இந்த ஆண்டில் இதுவரை 82 குழந்தைகள் போலியோ நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

இந்நிலையில், இந்த சாபக்கேட்டில் இருந்து பாகிஸ்தான் குழந்தைகளை விடுவிக்கும் வகையில் சவுதி அரேபிய அரசாங்கம் ஒரு கோடிக்கும் அதிகமான போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளை பாகிஸ்தானுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

சவுதியில் இருந்து விமானம் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இஸ்லாமாபாத் வந்து சேர்ந்த இந்த சொட்டு மருந்துகளை பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபியா நாட்டின் உயர் தூதரக அதிகாரிகள் அந்நாட்டின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

குழந்தைகளுகு மட்டுமின்றி, உலக சுகாதார கழகத்தின் அறிவுரைப்படி, பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த சொட்டு மருந்து இலவசமாக அளிக்கப்படும் என தெரிகிறது.

SHARE