பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளமும் சேறு பூசும் இணை­யத்­த­ளமா?- கோத்தபாயவிடம் சட்டத்தரணி சுமந்திரன்

431
பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளமும் சேறு பூசும் இணை­யத்­த­ளமா?- கோத்தபாயவிடம் சட்டத்தரணி சுமந்திரன்
நீண்ட அர­சியல் வர­லாறு கொண்ட தனது குடும்­பத்­தி­ன­ருக்கு எவ்­வித ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களும் இருக்­க­வில்லை எனவும் சில இணை­யத்­த­ளங்கள் தம்மீது சேற்றை வாரி இறைக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரி­வித்தார்.

அத்துடன்,  பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளத்தில் தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட அவ­தூ­றுக்கு மன்னிப்பு கேட்­கப்­பட்­ட­தா­கவும், ஜெய­ல­லிதா தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட செய்தி தவ­றா­னது என்­பதை தான் ஒப்­புக்­கொள்­வ­தா­கவும் தெரி­வித்தார்.

மிக் 27 ரக விமானக் கொள்­வ­னவு தொடர்பில் சண்டே லீடர் பத்­தி­ரிகை வெளி­யிட்­டி­ருந்த கட்­டுரை ஒன்று தொடர்பில் அந்த பத்­தி­ரி­கைக்கும் அதன் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்கவுக்கு எதி­ராக கல்­கிஸை மாவட்ட நீதி­மன்றில் பாது­காப்பு அமைச்­சினால் தாக்கல் செய்­யப்­பட்ட மான நஷ்ட ஈட்டு கோரிக்கை வழக்கில் சாட்­சியம் மீதான குறுக்கு விசா­ர­ணை­களின் போதே பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜபக்ச  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

குறித்த வழக்கின் சாட்­சியம் மீதான குறுக்கு விசா­ர­ணைகள் தொடர்ந்து வரும் நிலையில் நேற்­றைய தினமும் அது தொடர்­பி­லான விசா­ரணை மாவட்ட நீதிவான் கிஹான் ரண­வக்க முன்­னி­லையில் நடைபெற்றது.

முன்­ன­தாக பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜ­பக்ச இது தொடர்பில் பிர­தான சாட்­சி­யத்தை கடந்த மே மாதம் 22ம் திகதி வழங்­கி­யி­ருந்த நிலையில் அந்த சாட்­சியம் மீதான குறுக்கு விசா­ர­ணைகள் கடந்த மே மாதம் 27ம் திகதி முதல் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.  இதன் தொடர்ச்­சி­யா­கவே நேற்றும் சாட்சி மீதான குறுக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

இதன் போது பிர­தான சாட்­சி­யான பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்சவை சண்டே லீடர் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் குறுக்கு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தினார்.

இதன் போது ஊழல் தொடர்பில் சட்­டத்­த­ரணி சுமந்­திரன் கோத்­தபாய ராஜ­ப­க்ச­விடம் கேள்வி எழுப்­பிய போது,

நீண்­ட­கால அர­சி­யலில் உள்ள தனது குடும்­பத்­தி­ன­ருக்கு ஊழல்கள் தொடர்பில் எவ்­வித குற்­றச்­சாட்­டுக்­களும் இருக்­க­வில்லை என தெரி­வித்தார்.

இதனை அடுத்து தற்­போ­தைய ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சட்­டத்­த­ரணி சுமந்­திரன் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜ­ப­க்சவை கேட்டார். அதற்கு பதி­ல­ளித்த அவர் தற்­போ­தைய குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் முறை­கே­டான அர­சியல் கலா­சாரம் சார்ந்­தது எனவும் தம் மீது சேற்றை வாரி இறைக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்கும் சில இணை­யத்­த­ளங்­களே இதனை முன்­னெ­டுப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

இதனை அடுத்து மற்­றொரு கேள்­வியை தொடுத்த சட்­டத்­த­ரணி சுமந்­திரன், பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளமும் அவ்­வாறு சேறு பூசும் இணை­யத்­த­ளமா?- என கேள்வி எழுப்­பி­ய­துடன் அதற்­கான உதா­ர­ணங்­க­ளையும் முன்வைத்தார்.

தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா தொடர்பில் பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட அவ­தூறு கருத்து மற்றும் நடை­பெற்­றுக்­ கொண்டி­ருக்கும் குறித்த வழக்கில் ஆஜ­ரா­கி­ய­தற்­காக தன்னை குறித்த இணை­யத்­தளம் கறுப்பு கோட் அணிந்த தேசத் துரோகி என குறிப்­பிட்­டி­ருந்­தமை ஆகி­ய­வற்றை சட்­டத்­த­ரணி சுமந்­திரன் இதன் போது சுட்­டிக்­காட்­டினார்.

இதற்கு பதி­ல­ளித்த கோத்­தபாய ராஜ­பக்ச ஜெய­ல­லிதா தொடர்பில் வெளி­யான தகவல் தவ­றா­னது தான் என்­பதை ஏற்­றுக்கொண்­ட­துடன், அதற்கு தாம் மன்னிப்பு கோரி­ய­தா­கவும் அந்த பதி­வினை இணை­யத்­தி­லி­ருந்து நீக்­கி­ய­தா­கவும் தெரி­வித்தார். எனினும் சட்­டத்­தரனி சுமந்­திரன் தொடர்­பி­லான பதிவு தொடர்பில் அவர் பதி­ல­ளிக்­க­வில்லை.

இதனை தொடர்ந்து மிக் 27 ரக விமானம் தொடர்­பி­லான கொள்­வ­னவின் போது முறை­கேடு இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­வது தொடர்பில் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரை சட்­டத்­த­ரணி சுமந்­திரன் வின­வினார்.

இதற்கு உக்ரைன் இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­கா­ரமே கொள்­வ­ன­வுகள் இடம்­பெற்­ற­தாக பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் பதி­ல­ளித்த நிலையில் அந்த கொள்­வ­னவின் போது மூன்றாம் தரப்பு அல்­லது பிறிதொரு கம்­பனி ஊடாக பணப் பறி­மாற்றம் இடம்­பெற்­றுள்­ளமை தொடர்பில் சட்­டத்­த­ரணி சுமந்­தி­ரனால் கேள்வி எழுப்­ப­பட்­டது.

இதற்கு பதி­ல­ளித்த பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­தபாய ராஜ­பக்ச, உக்ரைன் அரசு நிய­மித்த மூன்றாம் தரப்­புக்கு அல்­லது கம்­ப­னி­யி­டமே பணம் செலுத்­தப்­பட்­ட­தாக பதிலளித்தார்.

எவ்வாறாயினும் நேற்று சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த சாட்சி மீதான குறுக்கு விசாரணைகள் நிறைவுக்கு வராத நிலையில் வழக்கானது மீண்டும் ஒக்டோபர் 31ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் சார்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி மன்றில் பிரசன்னமாகியிருந்ததுடன், சண்டே லீடர் பத்திரிகை சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.

 

SHARE