பாம்பின் தலையில் நாகமணி எடுக்கும் காட்சி… இதற்குள் புதைந்திருக்கும் ரகசியம் தெரியுமா?

812

பாம்பின் தலையிலிருந்து நாகமணி எடுக்கப்படுகிறது என்ற காட்சி சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது…. இக்காட்சியில் ஒருவர் நாகப்பாம்பைப் பிடித்து அதன் கழுத்தை அறுத்து அதன் கழுத்திலிருந்து சீதாப்பழ கொட்டை வடிவிலான ஒன்றை வெளியே எடுக்கிறார், அதை நாகமணியாம். உண்மையில் நாகமணி, நாக ரத்தினங்கள் எல்லாம் உலகத்தில் இருக்கிறதா? என்பதற்கு விளக்கம் இதோ…

30 வருடங்களுக்கும் மேலாக விஷப்பாம்புகளைப் பிடித்து விஷம் எடுக்கும் வடநெமிலிப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனிடம் நாகமணி குறித்து உரையாடிய போது “பாம்பு பிடிக்கிற எங்க ஆட்கள் மொத்தம் 372 பேர் இருக்கிறோம். எல்லாரும் சேர்ந்து வருஷத்துக்கு 8300 பாம்பு பிடிக்கிறோம், அதுல 2500 நாக பாம்புகள் பிடிக்கிறோம்.

ஒரு நல்லப்பாம்பைக் கூட விடாமல் நாகமணியை நாங்கள் எடுத்திருந்தால் இன்றைய திகதியில் ஊருக்குள்ள பாம்புப் பிடிக்குற நாங்கதான் மிகப் பெரிய பணக்காரராக இருந்திருப்போம். நாகமணி, நாக ரத்தினம் எல்லாமே சுத்தப் பொய். நல்லபாம்புல இருந்து விஷம் மட்டும் தான் எடுக்க முடியும், நல்ல பாம்புன்னு இல்ல, எல்லா பாம்புகளிலும் விஷம் மட்டும் தான் எடுக்க முடியும். விலங்குகளை வைத்து பிழைப்பு நடத்துவதில் இதுவும் ஒரு வழி’’ என்கிறார்.

மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஆறுவருடங்களாகப் பாம்பு பிடிக்கும் வேலையே சேவையாகச் செய்து வரும் ஜெஸ்வின் அவர்கள் கூறும் போது “பாம்புகள் சம்பந்தமாக அதிகமான புத்தகம் படிச்சிருக்கேன். பாம்புகள் தொடர்பான எல்லா நிகழ்வுகளுக்கும் போய் வந்துருக்கேன். நாகமணி பற்றிய செய்திகள் மொத்தமாக பாம்புகள் பற்றிய தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. உண்மையாக நாகமணிக்குப் பின்னாடி நடக்குற விஷயம் இதுதான். காடுகளிலிருந்து பிடித்துக் கொண்டு வரப்படுகிற நாகப்பாம்பை அதன் தலையை அறுத்து, அதற்குள் மணி மாதிரியான ஒரு பொருளை உள்ளே வைத்து விடுகிறார்கள்.

பின்னர் மக்கள் நடமாட்டம் இருக்கிற பகுதியில் கொண்டு வந்து தலையை அறுப்பது போல அறுத்து உள்ளே வைத்த மணியை எடுக்கிறார்கள். பின்பு அதை மக்களிடம் நாக மணி எனக் கூறி விற்பனை செய்கின்றனர். நாகமணி தங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் என நினைக்கும் சிலர் எவ்வளவு பணம் கொடுத்தும் அதை வாங்கிச் செல்கிறார்கள். நம்ம மக்கள் அறிவியல் கூடவே பயங்கரமாக விளையாடுவாங்க.

இதில் வேடிக்கை என்னவென்றால் நாகமணியின் ஒளியில் வேட்டையாடுகிற பாம்பு வேட்டை முடிந்ததும் மீண்டும் நாகமணியை விழுங்கிவிடுவதாகச் சொல்கிறார்கள். அப்படியெனில் நாகமணி வயிற்றுக்குள் தானே போகவேண்டும் எப்படி பாம்பின் தலைப்பகுதிக்குச் செல்கிறது” எனவும் கேட்கிறார்.

பத்திலிருந்து முப்பது ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கிற பாம்பின் விஷம் தான் ஒரு கட்டத்தில் இறுகி நாகமணியாக மாறுவதாகச் சொல்கிறார்கள். சிலர் நாக ரத்தினம் எனவும் சொல்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் எந்த வகை பாம்பும் 20 முதல் 30 வருடங்கள் உயிர்வாழ்வது என்பது சாத்தியமில்லாதது.

அப்படியே உயிர்வாழ்வது சாத்தியமென்றாலும் இன்னொரு இரை மீது விஷம் பாய்ச்சாமல் உயிர் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை. மேலும், இணையதளங்களில் நாகரத்தினத்தின் ஒளியில் பாம்பு வேட்டையாடுகிறது எனச் சில காணொளிகள் காணக்கிடைக்கின்றன. அவையெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படுகிற பொய் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நாக பாம்புகள் நாகமணியின் வெளிச்சத்தில் இரையைப் பிடிப்பதற்காகத் தனது விஷத்தை 20 வருடங்கள் சேமிக்குமானால் அவை 20 ஆண்டுகள் உயிர் வாழ்வது எப்படி சாத்தியம் எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

உணவிற்காக, மருந்திற்காக என்று எல்லா நாடுகளிலும் பாம்புகளை மையமாக வைத்து பல கறுப்புச் சந்தைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மட்டும் தான் பாம்பில் நாகமணி இருக்கிறது, நாகரத்தினம் இருக்கிறது என்று கூறி சிலர் மூடநம்பிக்கையைக் காசாக்கி கொண்டிருக்கிறார்கள், சிலர் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

SHARE