பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற விடுதலைப்புலிகளை பயன்படுத்த ஆரம்பிக்கும் தென்னிலங்கை தலைமைகள்

531

1970களின் பின்னர் அரசியல் ரீதியான தமிழர்களின் உரிமை போராட்டமான ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற்றது. 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டு ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் பதவியேற்றத்தை தொடர்ந்து ஆயுதப் போராட்டம் வீறு பெற்று வந்த நிலையில் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று தென்னிலங்கையில் இருந்தவாறு தனது சிங்கள இனவெறியை காட்டி அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று தமிழினத்தை அடக்கி ஒடுக்க இராணுவ வல்லமையை பயன்படுத்தினார்கள். அன்று தொடக்கம் வந்த தென்னிலங்கை தலைமைகள் புலிகள் என சிங்கள மக்களுக்கு பயம்காட்டி புலிகள் கொழும்புக்கு வந்துவிட்டார்கள் எங்களுடைய மக்களை கொல்லப்போகின்றார்கள். நாங்கள் எல்லோரும் காலிக் கடலுக்குள் தான் ஓடி விழ வேண்டும் என்று சிங்கள மக்களிடம் தமது சுயலாப அரசியல் சித்தாந்தத்துக்காக ஓலமிட்டு சிங்கள மக்களை தமிழர் பால் வெறுப்புணர்வை தூண்டி அதில் குளிர் காய்ந்த வரலாறுகள் கடந்த காலங்களில் மட்டுமல்ல அது இப்பொழுதும் தொடர்கின்றது. தென்னிலங்கை அரசியல் தலைமைகள் மட்டுமல்ல அகிம்சை அன்பு அறநெறி உயிர்களை கொல்வது பாவம் என போதித்த புத்த பகவானின் சிந்தனைகளை கைக்கொண்டு அவர் போதித்த தர்ம நெறிகளை மக்களுக்கு சொல்லும் புனித பௌத்த துறவிகளும் இனவாதம் கொண்டு மதவாதம் கொண்டு இனவெறியை தூண்டிவிடுவதில் முன்னிலையில் உள்ளனர். போரின் அகோரம் கொழும்பிலும் சிங்களப் பகுதிகளிலும் அதன் தாக்கம் அதிகரிக்கும் பொழுது சில சிங்களத் தலைமைகள் போராளித் தலைமைகளுடனும் தமிழ் அரசியல் தலைமைகளுடனும் சில விட்டுக் கொடுப்புக்களை செய்ய முன்வரும் பொழுதெல்லாம் இந்த பௌத்த துறவிகள் தமிழினத்துக்கு முழு நாட்டையும் தாரை வார்த்துவிட்டதாக கொக்கரித்து அப்பாவி சிங்கள மக்களுக்கு அதனை புகுத்தி அவர்களை ஒட்டு மொத்தமாக இன வெறியர்களாக்கும் கைங்காரியத்தை இன்றளவும் செய்து வருகின்றார்கள். இது ஒரு பௌத்த நாடு பௌத்த சிந்தனை பௌத்தத்துக்கே முதலிடம் என்று சொல்லும் பௌத்த துறவிகள் அரசனாக சுகபோக வாழ்க்கை வாழ்ந்து அது பிடிக்காமல் அதைவெறுத்து சுகபோகங்களையெல்லாம் தூக்கியெறிந்து அரசமரத்தின் கீழ் ஞானம் பெற்று புத்த மதத்தின் முழுமுதல் தெய்வமாக போற்றப்படும் புத்தபகவான் சொன்ன தர்மங்களை எல்லாம் மறந்து அதனை தூக்கியெறிந்து விட்டு இன்று பௌத்த மதத்தை மக்களுக்கு போதிக்கும் புதிய நிலையை பெற்ற பௌத்த துறவிகள் அரச தேர்தல்களில் போட்டியிட்டு சுகபோக வாழ்க்கை வாழ ஆசைப்படுவது ஏன் உயிர்களை கொல்வது பாவம் எனக் கூறிய புத்தபகவானின் சிந்தனையை அடியோடு மாற்றி அப்பாவி தமிழ் மக்களை இரத்த வெறி கொண்டு கொன்றது ஏன்? அன்பு பரிவு என போதித்த புத்தபகவானின் சீரிய சிந்தனையை குழி தோண்டி புதைத்து விட்டு அடாவடித்தனமும் ஆக்ரோசமும் சிறுபான்மை இனங்கள் மீது வன்முறைகளும் தூண்டி அப்பாவி மக்களின் இரத்தத்தை குடிப்பது ஏன்? இதற்கெல்லாம்; இன மத மேலாதிக்க நிலை தான் காரணம் 1978 க்கு பின்னர் இடம் பெற்ற அனைத்து தேர்தல்களிலும் பயங்கரவாதிகளை ஒழிப்போம் இது சிங்கள நாடு இது ஒரு பௌத்த நாடு இங்கு தமிழர்களுக்கு இடமில்லை. பௌத்த மதம் தான் இங்கு முழுமையானது என மேடைகளில் கூச்சலிட்டு பெரும்பான்மை சிங்கள மக்களை முட்டாளாக்கி தேர்தல்களில் வெற்றி பெற்றனர். அது மட்டுமன்றி பட்ஜெட் வாக்கெடுப்புகளிலும் அக்காலம் முதல் புலிகளை ஒழிப்பதற்கு ஆயுத தளபாடங்கள் வாங்க வேண்டும். இராணுவ ஆளணியை உயர்த்த வேண்டும் என பாதுகாப்பு செலவீனம் என்ற போர்வையில் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டுக்கும் புலிப் பயங்கரவாதம் என்ற மாயை பயன்படுத்தினர். இதனூடாக பாதுகாப்பு செலவீனத்துக்கு என ஒதுக்கப்படும் நிதியில் பலகோடி பணத்தை ஊழல் மோசடிகள் மூலம் அரச தலைமைகள் உட்பட பாதுகாப்பு பிரதானிகள் வரை கையாள்படுத்தி கொள்வார்கள் இது யாருடைய பணம் இதன் தாக்கத்தால் யார் பாதிக்கப்பட போகின்றார்கள் தமிழ் மக்கள் மட்டுமா அல்லது முஸ்லீம் மக்கள் மட்டுமா இல்லை ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இன்று நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்தநிலையிலும் கடந்த 10 ஆண்டு காலமாக பாதுகாப்பு செலவினம் என்று காட்டி பலகோடி பணம் கொள்ளையிடப்படுகின்றது. புலிகள் இல்லையென்றாலும் ஏதோ ஒரு வகையில் அவர்களின் பெயரை பயன்படுத்தி இந்தக் கொள்ளை இடம் பெறுகின்றது.
யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகளில் தென்பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்திகளோடு ஒப்பிடும் போது வடகிழக்கு தமிழர் பிரதேசங்களில் பெரியளவிலான அபிவிருத்திகள் இடம்பெறவில்லை. அப்படி அபிவிருத்திகள் இடம்பெற்று இருந்தாலும் அதில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. சிங்களப் பிரதேசங்களில் மிகவும் பின் தங்கிய கிராமப்புறங்கள் கூட அபிவிருத்தியடைந்த நிலையில் வடகிழக்கு பகுதிகளில் மாவட்ட நகரப் பகுதிகளை அபிவிருத்தி செய்துகாட்டி இதோ தமிழர்களின் பகுதிகள் அபிவிருத்தி அடைந்துள்ளதாக ஒட்டுமொத்த தமிழினத்தையும் முட்டாளாக்கி செல்லுகின்றது. இந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் அதற்கு முட்டுக்கொடுக்க சில தமிழ் அரசியல் தலைமைகளும் ஆனால் தமிழ் கிராமப் புறங்கள் மிகவும் பின்தங்கி சோமாலியா உகாண்டா போன்ற பகுதிகள் போன்று காட்சியளிக்கின்றது. வடகிழக்கு பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை தென்னிலங்கை அரசியல் தலைமை தொடங்கும் போதெல்லாம் புலிகளின் பகுதிகளில் அபிவிருத்திகளை புலிகள் மீளுருவாக்கம் செய்யப் போகின்றார்கள் தமிழர்களுக்கு பணத்தை அள்ளியிறைக்கிறார்கள் என்று சிங்கள மக்களுக்கு எதிர்க்கட்சிகளும் பௌத்த துறவிகளும் சிங்கள பௌத்த கட்சிகளும் விசப் பிரச்சாரத்தை மேற்கொண்டு சிங்கள மக்களை தூண்டிவிட்டு அவ் அபிவிருத்திகளை இடை நடுவில் நிறுத்தி வைக்கும் குள்ள நரி செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள்.
இப்பொழுது 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் சிங்கள பேரினவாத தலைமைகளும் பௌத்த மத துறவிகளும் பௌத்த மத இனவெறி கட்சிகளும் மீண்டும் புலிப் புராணம் பாடத் தொடங்கியுள்ளனர். அதற்கு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினத்துக்கான போரை முற்றுபெற வைக்க எவ்வாறு புலிகளின் தளபதியாக இருந்து பின்னாளில் அரசுடன் இணைந்த கருணா அம்மானை பயன்படுத்தினார்களோ அதே போல் 2020 பாராளுமன்ற தேர்தலில் கருணா அம்மானை பகடைக்காயாக பயன்படுத்துவதும் சிங்கள அப்பாவி மக்களை புலிகள் என்ற பயங்கரவாத எண்ணத்தில் அவர்களை கொதிநிலையில் வைத்து தேர்தலை சூட்சுமமாக வெற்றிபெற பெரும்பான்மை சிங்கள கட்சிகள் இரண்டும் முயல்வதை கண்கூடாக தெரிகின்றது.
கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலில் அதே ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஐஎஸ் ஐஎஸ் தாக்குதலை காரணம் காட்டி முஸ்லீம் பயங்கரவாதம் வந்து விட்டது என்று கூறி அதை ஒடுக்க கூடிய வல்லமை தமக்கே என தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் பன்னி புலிகளை ஒழித்த எமக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்குவது சுலபம் எனக் கூறி அத் தேர்தலிலும் புலிகளை காட்டி வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கோட்டபாய ராஜபக்ச அவர்கள் இப்பொழுது 2020 பாராளுமன்ற தேர்தலில் கருணா அம்மான் வழங்கிய ஒரு செவ்வியில் ஒரே இரவில் 3000 படையினரை ஆணையிறவில் கொன்றதாக கூறிய விடயம் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் தேர்தல் ஆயுதம் கையிலெடுத்து அதை தென்பகுதி சிங்கள மக்களுக்கு காட்டி தேர்தலில் வெற்றி பெற முயல்கின்றனர். ஆணையிறவு தாக்குதலில் 3000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது. உண்மையாக இருந்தால் கருணா அம்மானை விசாரிக்க வேண்டும் என்று கூறும் சிங்கள பௌத்த கட்சிகள் மற்றும் பௌத்த துறவிகள் எதிர்க்கட்சி அரசியல் தலைமைகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொளித்த பொழுது ஐ.நா சபையிலும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு யுத்தம் இடம்பெறும் பொழுது இடையில் சிக்கி மக்கள் இறப்பது சகயம் எனக்கூறி அப்பாவி மக்கள் பலியானதையே ஒரு யுத்த குற்றமாக ஏற்றுக்கொள்ளாத அரச தலைமையும் எதிர்க்கட்சிகளும் பௌத்த துறவிகளும் ஆணையிறவு என்ற படைத்தளத்தில் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருதரப்புக்கும் இழப்புகள் ஏற்பட்டது. இதில் அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்படவில்லை. அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை. அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்லப்படவில்லை. இறந்தது அனைவரும் பாதுகாப்பு படையினரே.
ஆகவே யுத்தம் ஒன்று இடம் பெறும் பொழுது இரு தரப்பு படை வீரர்களும் கொல்லப்படுவது சகயமே. இங்கு கருணா அம்மான் செய்த செயல் சரி என்று இங்கு வாதாட வரவில்லை. அவர் எப்பொழுதும் தமிழ் மக்கள் மனங்களில் துரோகி தான் இங்கு சொல்ல வந்த விடயம் என்னவெனில் தேர்தல் வெற்றி நாடகத்துக்காக இவ்வாறான செயற்பாடுகளை செய்து புனர்வாழ்வழிக்கப்பட்ட போராளிகளை மீண்டும் சந்தேகக் கண்ணுடன் பார்த்து அவர்களை மீளவும் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் ஆதங்கத்தில் குறிப்பிடுகின்றனர் மக்கள். தேர்தலில் அபிவிருத்தி அரசியல் தீர்வு என்ற விஞ்ஞாபனத்தை விட்டு இப்பொழுது புலிகள் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை கையிலெடுத்துள்ளார்கள். தென்னிலங்கை அரசியல் வாதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் மறு உருவமே என தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆசனம் அண்மையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இத் தேர்தலில் ஆதரவளிக்க முன்வந்துள்ளமையே இக்கூற்றுக்கு காரணமாகும். வடகிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் கட்சி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற புலிகளின் அனுதாபிகள் அவர்களின் ஏகபிரதி நிதிகள் தாங்கள் என்று மேடைகளில் வீர வசனங்களை அள்ளி வீசி வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர். எல்லோரும் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும் ஒருவனை ஒரு தரம் முட்டாளாக்கலாம் தொடர்ந்து முட்டாளாக்க முடியாது.
எனவே பெரும்பான்மை சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இவ்வாறானா புலிச்சாயம் பூசி இனவெறியை கக்கும் சிங்கள தமிழ்த் தலைமைகளை இனங்கண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

SHARE