மிகச் சமீப காலமாக ஊடகங்கள் மூலமாகவும் பிரத்தியேகத் தகவல்கள் மூலமாகவும் கொடுமையான பாலியல் வல்லுறவுகளும் முறைகேடான பாலியல் நடத்தைகளைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
உறவு முறையை மீறியும் வயது எல்லைகளை கடந்தும் இக்குற்றங்கள் நடைபெறுகின்றன. இது இலங்கையில் மட்டுமல்ல வேறு பல நாடுகளிலும் இடம்பெறுகின்றன.
இப்பாலியல் வல்லுறவு அரசன் முதல் ஆண்டியையும் விட்டு வைக்கவில்லை.
பாலியல் குற்றம் என்பது என்ன?
பாலியல் குற்றங்கள் என நாம் கருதுவது என்னவெனில் பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளுடன் பாலியல் உறவை வைப்பதாகும்.
பிறர் ஒருவரின் மனைவியுடன் அல்லது கணவனுடன் சம்மதத்தோடு பாலியல் உறவை வைத்தால் அதனை சமூகம் தடுப்பதில்லை. அதனை குற்றமாக கருதுவதில்லை.
ஆகவே பாலியல் வல்லுறவு என்பது சமூகத்தின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் ஒரு குற்றமென்றே கூறவேண்டும்.
பாலியல் குற்றங்கள் தகுதிக்கு ஏற்பவே தண்டிக்கப்பட சட்டங்கள் உள்ளன. உதாரணமாக, புத்தி சுவாதீனமற்ற ஒருவரால் செய்யப்படும் வல்லுறவும் வயது வராத ஒருவரால் செய்யப்படும் வல்லுறவும் தகுதியான வயது வந்தவனால் (Competent adults) செய்யப்படும்.
பாலியல் வல்லுறவில் இருந்து வேறுபடுகிறது. 18 வயதிற்குக் குறைந்த ஒருவனுக்கு வழங்கப்படும் தண்டனை குறைவானதாகவே இருக்கும்.
உதாரணமாக, இந்தியாவில் மும்பாய் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த 16 வயதிற்கு குறைந்த மாணவனை சட்டம் எதிர்பார்க்கும் பார்வையும் ஏனையவர்களை எதிர்பார்க்கும் பார்வையும் வேறுபட்டது என்பதை நாம் காணலாம்.
பாலியல் வல்லுறவில் ஆண் ஒருவனே குற்றவாளியாவான். பாதிக்கப்பட்டவர் ஆணாக இருக்கலாம் அல்லது பெண்ணாக இருக்கலாம்.
பிரித்தானியாவில் sexual offences act 2003 என்ற சட்டத்தைப் பற்றி H.Allen “one law for all reasonable persons?” என்ற கட்டுரையை வாசித்தால் மிகத் தெளிவான அறிவைப் பெறலாம்.
பாலியல் வல்லுறவு (Rape)
இசைவுடன் ஒரு ஆடவனுடன் ஒரு பெண் புணர்ந்தால் அது பாலியல் வல்லுறவு இல்லை. இசைவு இன்றி புணர்ந்தால் அது பாலியல் வல்லுறவு என்று கருதப்படுகிறது.
ஆகவே இசைவு என்ற தன்மை இருந்தும் அது மறைக்கப்பட்டால் அங்கு வல்லுறவு என்ற தண்டனையே கிடைக்கிறது.
இதனால் பல நீதிமன்றங்கள் பாலியல் வல்லுறவுக்கு தண்டனை விதிப்பதை மிக அவதானமாக செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றன.
பின்வரும் வழக்குகளின் சாராம்சத்தை படிப்பவர்கள் பாலியல் வல்லுறவு என்பது எல்லாச் சந்தர்பபத்திலும் ஏற்கலாமா? என்று கேட்க முற்படுபவர்.
வழக்கு
K.W.N. குமாரஜெயலத் எதிர் இலங்கை
குடியரசு
இந்த வழக்கு இல.C.A. 128/2006
தீர்க்கப்பட்ட திகதி – 16.10.2009
சட்ட அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
தீர்ப்பு
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரி கந்தஉடகெதர ராசிகா மனோ நந்தினிகுமாரி அபேரத்ன என்னும் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதால் 10 வருட கடுங்காவல் தண்டனையும் 5000 ரூபா தண்டப்பணமும் தண்டப்பணம் செலுத்த தவறின் மேலும் 6மாத மறியலும் விதிக்கப்பட்டதுடன் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு 25000 ரூபா இழப்பீடும் கொடுக்க வேண்டும் என குருணாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து எதிரி மேன்முறையீடு செய்தார். மேன் முறையீட்டில் அவரது முக்கிய வாதம் என்னவெனில் தனக்கும் பெண்ணுக்குமிடையே தொடர்பு இருந்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட தினத்தன்று நடந்த பாலியல் உறவு அவளது பரிபூரண சம்மதத்துடனேயே நடந்தது என்றாகும்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இம்மேன் முறையீட்டை விசாரித்த போது பின்வரும் உண்மைகள் வெளிவந்தன.
பாலியல் உறவு நடந்த திகதியன்று பிற்பகல் 2.30 மணியளவில் பெண்ணானவள் அவளது வீட்டில் இருந்து வெளியே வீதி வழியாக சென்றுகொண்டிருந்தாள்.
இவளை கண்ட எதிரி அவளை நிற்குமாறு கேட்டான். அவள் நிற்காமல் கற்குன்று ஒன்றின் மீது ஏறி ஓடத்தொடங்கினாள். அதன் பின்னர் கீழே விழுந்தாள்.
பின்னால் துரத்திச்சென்ற எதிரி அவள் விழுந்த இடத்திற்கு அருகில் இருந்த கிணற்றுக்கு மறைவில் இவளுடன் பாலியல் உறவு வைத்தான்.
இச்சந்தர்ப்பத்தில் இப்பெண்ணின் தாயார் தற்செயலாக அவ்வழியால் வந்தபோது முணுமுணுப்பு (Groan) சத்தம் ஒன்று வருவதைக்கேட்டு அவ்விடத்தை பார்த்த போது எதிரியானவன் தனது மகளின் மேல் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றாள்.
பின்னர் இது சம்பந்தமாக பொலிஸில் புகார் செய்யப்பட்டு வழக்கு நடத்தது.
வழக்கில் பின்வரும் சாட்சிகள் இருந்தன. பாலியலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்ணை அன்றைய தினம் 8.30 மணியளவில் அரச வைத்திய அதிகாரி பரீட்சித்துப் பார்த்தபோது அவளது உடம்பின் எந்த இடத்திலும் காயங்கள் இருக்கவில்லை.
இவளது வாக்குமூலத்தின்படி அவள் ஓடும்போது தடுக்கி விழுந்த தாகவும் எனது உடலில் இரத்தம் வந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது.
ஆனால் அவளை இன்னுமொரு வைத்தியசாலை டாக்டர் மறுநாள் 10 மணியளவில் பரீட்சித்துப் பார்த்தபோது அவள் கூறியதுபோல் அவளது உடம்பில் எந்த காயமும் காணப்படவில்லை.
மேலும் இவள் கொடுத்த சாட்சியத்தில் எதிரியானவன் அவனது பிரத்தியேக உறுப்பை தனது பிரத்தியேக உறுப்புக்குள் திணித்தபோது தனக்கு வலிப்பு (PAIN) ஏற்பட்டதாகவும் பின்னர் தனது உட்சட்டையில் (Under skirt) இரத்தம்பட்டு இருந்ததாகவும் கூறியிருந்தார்.
இது உண்மையாயின் அதாவது அவளது விருப்பத்திற்கு மாறாக இது நடந்திருப்பின் அவளது பிரத்தியேக உறுப்பில் காயங்கள் இருந்திருக்க வேண்டும். அப்படி ஒன்றும் இல்லை என வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.
ஆகவே இவளது சாட்சியமும் வைத்திய அதிகாரியின் சாட்சியமும் முரண்பாடாக இருந்தது.
வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி இவளது பெண்குறியில் நுழைவாயில் முகப்பில் காணப்படும் சவ்வு (Hymen) மென்மையான தோலால் (Fimbriated one) ஆனது என்றும் ஆகவே எதிரி தனது பிரத்தியேக உறுப்பை நுழைக்கும் போது வருத்தம் ஏற்பட்டு இருந்தால் கட்டாயம் இரத்தத் துளிகள் பாவாடையில் பட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி எந்த இரத்தத்துளியும் தன்னால் அடையாளம் காண முடியாமல் இருந்தது என்றும் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தின்படி அவளது நிஜார் (panty) முழங்காலுக்கு கீழ் கொண்டுவரப்பட்டே வன்புணர்வு நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால், தாயாரின் சாட்சியப்படி அந்த நிஜார் கிணற்றுக்கு அருகாகக் கிடந்ததாகக் கூறியிருந்தார்.
ஆகவே பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் அளித்த சாட்சியம் சுயாதீனமான சாட்சியாளர்களான வைத்தியர்களின் வைத்திய அறிக்கைக்கு மாறாக இருந்தது.
இவ்வாறு முரண்பட்ட சாட்சியங்கள் இருக்கும்போது பாலியலுக்கு வழங்கப்படும் கடும் தண்டனை வழங்கப்படக்கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்த்ததுடன் பின்வரும் வழக்குகளின் தீர்ப்புககளையும் எடுத்துக்காட்டியது.
GLANVILLE WILLIAMS THE PROOF OF GUILT என்றும் நூலில் பின்வருமாறு கூறியியுள்ளார்:
சமூக அமைப்பில் பாலியல் தொடர்பு முறையற்ற விதத்தில் நடந்தால் அசிங்கமானது என்ற கருத்து நிலைத்திருக்கிறது.
ஆகவே விருப்பத்துடன் நடந்த பாலியல் உறவை ஏற்றுக்கொண்டதால் தன்னை சமூகம் தூற்றும் என்பதால் உண்மையை அவள் மறைப்பதுண்டு.
இதனால் பாலியல் வழக்குகளில் வேண்டுமென்று பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது வழக்கம்.
SIMPLY A GIRL’S REFUSAL TO ADMIT THAT SHE CONSENTED TO AN ACT OF WHICH SHE IS NOW ASHAMED என்று கூறியது கவனிக்கத்தக்கது.
இந்தியன் வழக்குகளில் பாதிப்புக்கு உட்பட்ட பெண் விருப்பமின்றி பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு இருந்தாலும் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவளது குடும்பம், சமூகம் மற்றும் ஊரார், உறவினர் யாரும் அவளை மதிப்பதில்லை.
பலாத்காரமாக நடந்ததையே மன்னிக்காத மக்கள் நான் விருப்பத்துடன் தான் பாலியல் நடத்தப்பட்டது என்று கூறுவாளா? என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை வழக்குகளான கமலத்தர ஆராச்சி எதிர் இனோகா என்ற வழக்கையும் சுனில் எதிர் சட்டமா அதிபர் என்ற வழக்கையும் வாசித்துப் பார்த்தால் பாலியல் வல்லுறவு வழக்குகள் விருப்பத்துடன் நடந்த போதும் பின்னர் சமூகத்திற்குப் பயந்து ஒருவனை எதிரியாக்குவது வழக்கம் என்பதை கண்டுகொள்ளலாம்.
ஆகவே, பாலியல் வழக்குகளை பரிதாபத்துடனும் பச்சாதாபமின்றியும் பார்க்க வேண்டும். சாட்சிகளை சோடித்து தண்டனை பெற்றுக்கொடுக்கவும் இடமுண்டு என்பதை மறுக்கக்கூடாது.
இந்நிலையில் பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுவதை எவ்வளவு தூரம் செயல்படுத்தலாம் என்பதையும் யோசித்து பார்க்க வேண்டும்.
இவ்விடத்தில் இன்னுமொரு உண்மையையும் கூறலாம். பாலியல் விருப்பத்துடன் நடந்து பின்னர் பலாத்காரமாக நடந்தது என்று கூறுவது தனி நபர் பாலியல் உறவில் மட்டும் தான் கூற முடியும்.
கூட்டாக அல்லது குழுவாக பாலியல் உறவு நடந்தால் அது கட்டாயம் பாலியல் வல்லுறவாகவே இருக்க முடியும்.
அதற்கு அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு வித அபிப்பிராயத்திற்கு இடமில்லை.
அதேபோல் பாலியல் உறவிற்குப் பின்னர் அவளை கொலை செய்வதற்கு சாட்சியம் இருப்பின் அவருக்கு மரண தண்டனை விதிப்பதில் தவறில்லை. இதனை நான் எழுதிய செவ்வந்தி வழக்கை படித்தால் நன்கு புரியும்.
மேலேயுள்ள விபரங்களில் இருந்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், பாலியலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
ஆனால் இலகுவில் அந்த உறவை மென்மையான உறவில் இருந்து வன்மையான உறவு எனக் காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.
ஆகவே ஒருவர் அநியாயமாக தண்டிக்கப்பட்ட பிறகு அதனை மீளப்பெற முடியாமலுள்ளதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பாலியல் குற்றத்தை சமூகம் அங்கீகரிப்பதில்லை. இதனால் இளம் பிராயத்தினர் தாம் குற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி விட்டு பின்னர் மற்றவரை குற்றம் சாட்டுவது வழக்கமாக மாறுகிறது.
இதனால் நீதிமன்றங்கள் இக் குற்றத்தின் நிரூபணத்தை மிகக்கடினமாக பார்க்கின்றன. சிறு சந்தேகம் ஏற்படினும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
ஆகவே இக்குற்றத்தை புரிகின்றவர்கள் கூட இலகுவில் தப்பிவருகின்றனர். இதனால் சமூகம் தனது கட்டுப்பாட்டில் தளர்ந்து வருகிறது.
ஆயினும் குழுமப்பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் தப்புவதற்கு இடமில்லை எனலாம்.
இலங்கையில் பாலியல் குற்றவாளிகள் அதிகரிப்பதற்கு போதைப்பொருள் பாவனையும் ஒரு காரணம் எனவும் வறுமையும் ஒரு காரணம் எனவும் சட்டத்தை மதிக்கும் பழக்கம் குறைந்து வருவதும் ஒரு காரணம் எனவும் கூறப்படுவதால் அவற்றை திருத்த எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.
♦ ♦ ♦ ♦ ♦