பப்புவா நியூ கினியா நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் பிரதமர் மோடியை பார்த்த அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே, சட்டென பிரதமர் மோடி காலில் விழ முயன்றார். அவரை தடுத்த பிரதமர் மோடி, மராபேவின் முதுகில் தட்டியப்படி அவரை எழுப்பினார்.
வரவேற்புக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நயூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவை சந்தித்தார். சந்திப்பின் போது பப்புவா நியூ கினியாவில் பேசப்பட்டு வரும் டோக் பிசின் மொழிக்கு மாற்றப்பட்ட திருக்குறள் பதிப்பை நரேந்திர மோடி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இரு நாடுகள் இடையே வர்த்தகம், முதலீடு, ஆரோக்கியம், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் என்று பல்வேறு பிரிவுகளில் உறவை பலப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேசினர்.
பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் பதிவிட்டார்.
2014 ஆண்டு ஃபிஜிக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய பசிபிக் பகுதிகளில் சீனா தனது ராணுவ பலத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் பப்புவா நியூ கினியாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
maalaimalar