பிரபாகரன் ஏன் போராட நிர்பந்திக்கப்பட்டார்? வரலாறுகளை மூடிமறைக்கிறது அரசு

720

சிங்களத் தலைவர்கள் பழைய தேசியக்கொடியையே புதிய தேசியக்கொடியாக வடிவமைத்தனர். இந்தக் கொடியை எதிர்த்து தமிழ்மக்கள் மஞ்சள் நிறத்திலான கொடியை தமது இடங்களில் ஏற்றினர். எஸ்.ஜே.வி செல்வநாயகம் என்ற தமிழ்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் தாயக கொடியினை ஏற்றி தனது காரில் பாராளுமன்றத்திற்கு சென்றார். பின் சிங்கள அரசு தேசியக்கொடியில் இரண்டு வர்ணங்களைச் சேர்த்து. பச்சை வர்ணம் முஸ்லிம்களையும், செம்மஞ்சள் தமிழர்களையும் குறிப்பதாக அமைந்தது.

இப்படியாக இனவாதப்போராட்டம் சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே ஆரம்பமானது. இலங்கையில் உள்ள முக்கிய கட்சிகளும் பாரம்பரிய சிங்கள குடும்பங்களிலிருந்தே வந்தவையாகும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில், பண்டாரநாயக்க குடும்பம். ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் னு.ளு சேனநாயக்க குடும்பம். அதிகாரம்மிக்க பணக்காரர் குடும்ப வர்க்கத்தினை உடையவர்கள். அரசியலில் ஆளுமையை நிலைநிறுத்த குடும்பங்களுக்கிடையே மோதல்கள் ஏற்படும்.

தமிழர் பிரச்சினை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தப்படுகிறது. 1948ம் ஆண்டு பிரதமர் னு.ளு சேனநாயக்க, இந்திய – பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் இந்திய வம்சாவழி தோட்டத்தொழிலாளர் குடியுரிமையை பறிக்கநினைத்தார். டிசம்பர் 10 பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. 19 தமிழ் உறுப்பினர் எதிர்த்ததால் இச்சட்டத்தை தடுக்கமுடியவில்லை. ஒரேநாளில் 10இலட்சம் தமிழ்மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தினை உயர்த்த பல தலைமுறைகளாக உழைத்த தமிழர்களை தொடர்ந்தும் ஆட்சிக்குவந்த அரசாங்கங்கள் வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றின. 1949ல் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை, வாக்குரிமை இல்லை என்றனர். பல தமிழர்கள் சிலோன் காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழரசுக்கட்சியில் எஸ்.ஜே.வி செல்வநாயகம் தலைமையில் ஆரம்பித்தனர். 1953ல் அரசியல் ரீதியாக சேனநாயக்கவை புறந்தள்ள சிங்களவரும், தமிழர்களும் சமமானவர்கள் என கூறிய பண்டாரநாயக்கா தான் வெற்றிபெற்றால் 24மணித்தியாலயத்திற்குள் சிலோனை பௌத்த நாடாக மாற்றுவேன் என்றும், சிங்களம் மட்டுமே அரச மொழி யாக இருக்கும் என்றும் சிங்களவர் அல்லாதோரின் ஆளுமைகள் ஒடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

1956ல் பண்டாரநாயக்கவின் ஓட்டுவங்கி அரசு வெற்றிபெற்றது. தன்னை சிங்கள இன பாதுகாவலன் என அறிவித்தார். அவரின் ஆட்சி இரு உறவுகளுக்குமிடையில் பெரிதும் பாதித்தது. சிங்களம் மட்டுமே அரச மொழி என சட்டம் இயற்றி, தமிழர் பகுதிகளுக்கும் இது பொருந்தும் என்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் சு.டீ சில்வா பாராளுமன்றத்தில் ஒரு மொழி என்றால் இரு நாடுகள் மலரும் என்று அழுதுகொண்டே கூறினார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிங்கள இனவாதிகள் அவரைத் தாக்கினர். பின்னாளில் அரங்கேரப்போகும் இரத்தச்சரித்திரம் அன்றுதான் ஆரம்பமாகியது. தமிழ் சிங்கள சட்டத்தினை எதிர்த்த கம்யூனிஸ்ட் கட்சியின் வீடுகள் தாக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மக்களுக்காக குரல்கொடுப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்டது. ஜூன் 5,6ம் திகதி களில் தமிழர் மீது முதற்தாக்குதல் ஆரம்பித்தது. பின்னர் தொடர்ச்சியாக கிழக்குமாகாணத்திற்கும் பரவியது. 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல சொத்துக்களும் சூறையாடப்பட்டது. தமிழர்கள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். பின்னர் இலங்கையரசு மக்கள் தொகை விகிதாசாரத்தினை மாற்ற தீவிரமாக செயற்பட்டது.

படிப்படியாகத் திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இப்பகுதிகளில் சிங்களவரின் விகிதாசாரங்கள் அவர்களுக்குச் சாதகமாக அமையக்கூடியது. விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் 44 புதிய சிங்களக் கிராமங்கள் கிழக்குமாகாணத்தில் உருவாக்கப்பட்டது. அதில் 06 கிராமங்கள் மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்பட்டு நீர்ப்பாசண வசதிகள் உருவாக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் அமர்த்தப்பட்டது. தென்பகுதியில் மீனவர்களை சிங்கள அரசு இடையி டையே குடியமர்த்தியது.

இத்தகைய குடியமர்த்தல்களே மோதல்களுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. மெதுமெதுவாய் உருவாக்கப்பட்ட கலவரங்கள், கோவிலில் உறங்கிக்கொண்டிருந்த குருக்களை தீமூட்டிக்கொழுத்திய சம்பவமும், தமிழர்களை உலுக்கிய மற்றுமொரு சம்பவமாக, ஒரு குழந்தையை கொதிக்கின்ற தாரில் போட்ட சம்பவமுமாகும். தமிழ் இளைஞர்கள், சிங்கள மக்களை ஏன் எதிர்த்து தாக்கக்கூடாது என்ற கேள்வியை எழுப்பினர். செல்வா தமிழர் மாநாடு ஒன்றினைக் கூட்டினார். தங்கள் கோரிக்கைகைள நிறைவேற்ற இலங்கையரசிற்கு ஓராண்டு கால அவ காசம் வழங்கினார்.

ஜூலை 26,1957 அரசு ஒரு சமாதானத்திற்கு வந்து, பண்டாரநாயக்க செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் அரசின் சில வாக்குறுதிகளாக, தமி ழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை அரசு கைவிடும், தமிழ் மொழியும் அரச மொழியாக சட்டம் நிறைவேற்றப்படும், வடகிழக்கு மாகாணங்களில் பிராந்திய மொழியாக இருக்கும். பிராந்திய சபைச் சட்டங்கள் மூலம் பிராந்திய சட்ட உரிமைகள் வழங்கப்படும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன இதனை எதிர்த்து கொழும்பிலிருந்து கண்டியிலுள்ள பண்டாரநாயக்கவின் இல்லத்திற்கு நடை பயணம் மேற்கொண்டார்.
இதன் விளைவாக தமிழ் ஆட்சிமொழியானதே தவிர மற்ற எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 1958ல் தமிழர் பகுதிகளிலும் வாகனப் பதிவேட்டில் சிங்கள எழுத்துக்கள் பயன்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டது அரசு. தமிழர்கள் இதனை தார்கொண்டு மறைத்தனர். இதனால் மே 25ல் தமிர்களுக்கெதிரான கலவரம் மீண்டும் ஆரம்பமாகியது. பொலநறுவையில் ஆரம்பித்து கொழும்பு, அநுராதபுரம், யாழ்ப்பாணம் என பரவி 400 தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பண்டாரநாயக்கா தமிழர் பகுதிகளில் தமிழை மட்டும் பயன்படுத்த ஒப்புக்கொண்டார்.

இதனை எதிர்த்து பௌத்த துறவி கள் அவரின் இல்லத்தின் முன்னால் போராட்டங்களை நடத்தி, அவரை சிங்கள எதிரி என வர்ணித்து பண்டாரநாயக்கா செல்வா ஒப்பந்தத்தை கைவிடவும் வலியுறுத்தினர். இதனை எதிர்த்த தமிழர்களை இனவாதிகள் தாக்கினர். எங்கும் கலவரங்கள் இடம்பெற்றது. 1959ல் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போக, எதிர்ப்புக்களை மீறி ஒப்பந்தத்தை அமுல்படுத்த முயன்றார். செப்டெம்பர் 25ல் சோமராம தேரர் என்ற பௌத்த துறவியி னால் பண்டாரநாயக்கா அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். 1960ல் பண்டாரநாயக்காவின் மனைவி சிறி மாவோ பண்டாரநாயக்கா அவர்கள் பிரதமரானார். ஜனவரி 01ல் தமிழர் பகுதிகளிலும் சிங்கள மொழியே அரச கரும மொழி என அறிவித்தார்.

ஜனவரி 02ல் செல்வா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு நாள் கடை அடைப்புக்கும் அழைப்புவிடுத்தார். இந்தப் போராட்டம் பல இடங்களுக்கும் பரவி யது. அரச அலுவலகங்களுக்கு வெளி யில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போராட்டங்களை நடத்தினர். 50 நாட்களுக்கும் மேலாக இது தொடர்ந்தது. தமிழ்மக்கள் மீது பொருளாதாரத் தடை யை ஏற்படுத்த, இலவச அரிசியினை வழங்க மறுத்தது அரசு. தந்தை செல்வா சட்ட எதிர்ப்பு போராட்டத்தினை அறிவித்தார்.

1961ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பன்று, தமிழர் பகுதிகளுக்கான தபால் சேவை களை அறிவித்து தமிழீழ தபால் தலையை வெளியிட்டார் தந்தை செல்வா. பத்தாயிரத்திற்கும் மேலானோர் வரிசையில் நின்று அதனைப் பெற்றுக்கொண்டனர். ஏப்ரல் 17அன்று அவசரகாலநிலையை பிர கடனம் செய்து, அனைத்து தமிழ்த் தலைவர்களையும் கைது செய்து, 03 ஆண்டுகள் தடைசெய்தது இலங்கையரசு. 1965ல் இரண்டு கட்சிகளும் அரசமைக்க ஆசனங்கள் போதுமானதாக இல்லை. டட்லி சேனாநாயக்க தமிழரசின் ஆதரவினைக் கேட்க, செல்வாவிற்கு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக டட்லி உறுதியளித்து ஆதரவினைப் பெற்றார். சில கட்சிகளின் தமிழீழ கோரிக்கைகளை செல்வா நிராகரித்தார். ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மாநிலம் போதும் என்றார்.

பம்பலபிட்டி பௌத்த விகாரையில் உள்ள பௌத்த பிக்குவின் அறிக்கையில், அரசு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு படை களை அனுப்பி தமிழர்களை வெளியேற்றி சிங்களவர்களை குடியேற்றவேண்;டும் என்றார். அரசும் அவரின் கோரிக்கைகளை அமுல்படுத்த முனைந்தது. செல்வா அரசிற்கு வழங்கிவந்த ஆதரவினை திரும்பப்பெறமுற்பட்டார். டட்லி உடனே ஒரு சமாதானத்திற்கு வந்து இரண்டாவது முக்கிய ஒப்பந்தமான டட்லி செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

முந்தைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன் தமி ழர் பகுதிகளில் மாகாணசபைகள் உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அரசு வெள்ளையறிக்கையிலும் இதனை வெளியிட்டது. மீண்டும் பௌத்த மதத்தினர் இதனை தடுத்தனர். 1968ல் ஒப்பந்தம் அமுலாக்கப்படாததை கண்டித்த செல்வா, அரசிற்கு கொடுத்துவந்த ஆதரவினை திரும்பப்பெற்றார். தமிழ் இளைஞர்கள் மிதமான போராட்டங்கள் இனி பயன்பெறாது, ஆயுதப்போராட்டமே பயனளிக்கும் என நினைக்கஆரம்பித்தனர். இந்த எண்ணவோட்டத்திற்கு சிவகுமாரன் என்கின்ற இளைஞனே முக்கிய காரண மாக இருந்தார்.

1969ல் தமிழ் விடுதலை இயக்கம் குட்டிமணி, தங்கதுரை என்ற இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 1970ல் சிறிமாவோ ஆட்சியமைத்தார். இந்தத்தேர்தலில் பிரிவினைவாதத்தை முன்வைத்த தமிழ்க்கட்சிகள் வெற்றிபெறமுடியாமல்போயின. 1970-77 வரை தமிழர்கள் கலவரங்களுக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டனர். சிறிமாவோ தமிழ் பத்திரிகைகளுக்கும், தமிழ் புத்தக வெளியீடுகளுக்கும் தடைவிதித்ததோடு தமிழ்நாட்டிலிருந்து வரும் தமிழ்த் திரைப்படங்களுக்கும் தடைவிதித்ததோடு இந்தியாவினுடைய கலாசார இணைப்பைத் துண்டித்தார்.

தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவ திலுள்ள எண்ணிக்கையைக் குறைத்தார். ஒரே நுழைவுத்தேர்வு ஆனால் தமிழ் மாணவர்கள் 30வீத மதிப்பெண்களை அதிகம் பெறவேண்டும் என்ற இச்சட்டமே தமிழ் மாணவர் பேரவை ஆரம்பிக்க காரண மாக அமைந்தது. தமிழ் பகுதிகளுக்கும் இம்மாணவப் பேரவைகள் உதயமாகின. பின் நாட்களில் அரசியல் தலைவர்கள் இம்மாணவப்பேரவைகளில் இருந்து வரத்தொடங்கினர்.

சிலோனுக்கு புதிய அரசியற் சட்டம் அமைக்கும் குழுவில் செல்வாவும் அங்கம் வகித்தார். அரசியற் சட்டம் சிங்களவர்களுக்கு சாதகமாக உருவாக்கப்படுவதை அறிந்த அவர் அக்குழுவிலிருந்து விலகினார். மே14 1972ல் முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து தமிழர் கூட்டணியை அமைத்து இலங்கை அரசியலுக்குள் சுயமாகநிலம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

மே22 சிறிமாவோ புதிய அரசியற் சட்டத்தினை அறிமுகப்படுத்தினார். சிலோன் சிறிலங்கா என பெயர் மாற்றம்பெற்று பௌத்த சிங்கள தேசம் என அறிவிக்கப்பட்டதுடன் சிங்கள மொழி மட்டுமே அரச மொழியாக அறிவிக்கப்பட்டு, பௌத்தத்திற்கு தனி அந்தஸ்து வழங்கப்பட்டு சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்ட அரசியல் சட்ட பாதுகாப்பினை விளக்கினார். இதனை எதிர்த்த செல்வா உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்து அடுத்த தேர்தலில் நிற்கப்போவதாகவும், சுய ஆட்சி கொண்ட தமிழ் மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைக்கப்போவதாகவும், மக்கள் அவரை வெற்றிபெறச்செய்தால் சுயாட்சிதான் அவருடைய கோரிக்கை எனக்கொண்டு புதிய அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்றார். 1972-74 வரை நிலச்சீர்திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழர்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இதன் காரணமாக திரு கோணமலை, அம்பாறை, மட்டக்களப்பில் சிங்கள மக்களின் தொகை அதிகரித்தது.

1973ல் அடுத்த திருப்புமுனையாக உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாட்டிற்காக அரசினை நாடி னர். அரசு ஒத்துழைக்க மறுத்தது. இதனை சவாலாக ஏற்று தாங்களே நடத்துவது என முடிவெடுத்தனர். 1974ல் மாநாட்டின் கடைசி நாளில் சிங்களவர்கள் கூட்டத்தினுள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கலவரத்தில் 09பேர் மின்சாரம் தாக்கி இறக்க, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். தமிழர் தம் தாய்மொழிக்கு எதிராக நடந்த அவமானம் என கருதினர். தமிழர் கூட்டணி அரசின் அடக்குமுறைகளுக்கும், விரைவான தீர்வுகளை எதிர்பாக்கும் அரசியல் சினங்கொண்ட இளைஞர்களுக்கும் நடுவில் நின்று தவித்தது.

இம்மாநாட்டிற்கு காரணமாகவிருந்த சிவகுமாரனும் அவரின் சகாக்களும் சந்திரசேகராவையும் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவையும் கொலை செய்யத் திட்டமிட்டனர். இரண்டு கொலை முயற்சிகளில் சந்திரசேகரா தப்பிவிட்டார். பொலிசார் சிவகுமாரனை துரத்திவர கரும்புதோட்டத்தினுள்ளே ஓடியவரை துரத்திப்பிடித்த சயனைட் உட்கொண்டார். தேசத்திற்காக செய் அல்லது செத்துமடி என்ற கோட்பாட்டிற்கு முதலில் வித்திட்டார்.

யாழ் மேயரைக் கொல்ல பல தமிழ் இளைஞர்கள் முயற்சித்த போதிலும் ஒரு தமிழ் இளைஞன் சுட்டுக்கொன்றார். அந்த இளைஞனே பின்நாளில் போர்வீரனாக வளர்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாவார். 1975ல் மூன்றாண்டுகள் காத்திருந்த செல்வா நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றார். இவ்வெற்றியை தமிழ்மக்களின் சுயஆட்சிக் கோரிக்கையாக ஏற்க அரசு மறுத்தது. மே 22 1976ல் வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் முன்னணி, தமிழர் விடுதலை முன்னணி என உருமாறியது.

முதன் முறையாக இலங்கையரசின் கீழ் சுயஆட்சி என்ற கோரிக்கையை கைவிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கி சுதந்திர தமிழீழம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். நவம்பர் 19ல் பாராளுமன்றத்தில் உருக்கமாக தந்தை செல்வா உரையாற்றினார். தமிழீழம என்ற கோரிக்கையை கைவிடுகின்றோம். ஒரு நாள் சுதந்திர தமிழீழம் மலரும் என்றார். ஏப்ரல் 29ல் தந்தை செல்வா அவர்கள் மாரடைப்பால் இறந்தார். அடுத்த பொதுத்தேர்தலில் சுதந்திர தமிழீழம் என்ற கோரிக்கைகைய தமிழர் விடுதலை முன்னணி மக்கள் முன் வைத்தது. சுதந்திர தமிழீழம என்ற கோரிக்கை 1972ல் புறந்தள்ளி மக்கள் இப்போது அதனை ஏற்று 82சதவீத வாக்குகளுடன் வெற்றிபெறச்செய்தனர்.

செல்வாவின் மறைவிற்கு பின் மிதவாத அரசியல் மெதுவாக பின்னடைவாக ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் தமிழ்த்தேசியக்கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்றனர். அடக்குமுறைச் சிங்கள இனவாதம் அதை விட அதிகாரமிக்க தமிழினத்தினை வளர்த்துவிட்டது. பாகுபாடுகளை வளர்த்த சிங்கள அரசுகள் சிறுபான்மையினரை விளிம்பிற்குள் தள்ள 1980களில் உள்நாட்டுப் போர் தொடங்க காரணமாகவிருந்தது.                                                                        தொடரும்…

– இரணியன் –

 

 

 

 

SHARE