பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படமான’ பாகுபலி’படப்பிடிப்பில் தீ விபத்து!

378

‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படம் ‘பாகுபலி’. இப்படம் தமிழில் ‘மகாபலி’ என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது குண்டு வெடிப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். அந்த சமயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பபட்டுள்ளனர்.

தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே ‘பாகுபலி’ படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இப்படி எந்த ஒரு பிரச்னையும் ஏற்பட்டதில்லை. முதன் முறையாக ஒரு விபத்து ஏற்பட்டது படக் குழுவினரைக் கொஞ்சம் பாதித்துள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்து ஆண்டு துவக்கம் வரை நடைபெற உள்ளது. படப்பிடிப்பு நடக்கும் போதே பிற தொழில்நுட்ப வேலைகளும் நடந்து வருகிறது. கோடை விடுமுறையிலோ அதற்குப் பிறகோ படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்குத் திரையுலகில் இதுவரை யாருமே செலவு செய்யாத அளவிற்கு பல கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக சண்டைக் காட்சிகள் என்றாலே விபத்துக்கள் நடப்பது சகஜம்தான். இந்தப் படத்தில் எண்ணற்ற துணை நடிகர்களுடன், சண்டைக் கலைஞர்களுடன் பல நாட்கள் படப்பிடிப்பு நடந்திருந்தாலும், சமீபத்திய விபத்து எதிர்பாராமல் நடந்ததாகவே படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE