உலகிலேயே மிகவும் எடை குறைவான பெண் குழந்தை: தற்போது நல்ல உடல் நலத்துடன்

402

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்த உலகிலேயே மிகவும் எடை குறைவான பெண் குழந்தை தற்போது நல்ல உடல் நலத்துடன், ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ நகரிலுள்ள மகப்பேற்று மருத்துவமனை உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், கர்ப்பிணி ஒருவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக, அவர் பாதிக்கப்பட்டு இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர். அவர் வயிற்றில் உள்ள, 23 வாரங்களே ஆன குழந்தையை, அறுவை சிகிச்சை மூலம் உடனடியாக வெளியே எடுத்தால் மட்டுமே, அந்த பெண் உயிர் பிழைப்பார் என்ற நிலை உருவானது.

இதையடுத்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. 23 வாரங்களேயான  அந்த பெண் குழந்தை, ஒரு பெரிய ஆப்பிள் பழத்தின் அளவில், 245 கிராம் எடையுடன், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவில் இருந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை பிறந்து ஒரு மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும் என, வைத்தியர்கள் தெரிவித்தனர். ஆனால், ஒரு மணி நேரம் என்ற காலகட்டம், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என, நீண்டு கொண்டே போனது. வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில், ஐந்து மாதங்கள் இருந்த அந்த அதிசய குழந்தை, தற்போது 2.2 கிலோ எடையுடன், ஆரோக்கியமாக இருப்பதாக, வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்த குழந்தைக்கு, வைத்தியசாலை நிர்வாகம், ‘சேபீ’ என, செல்லப் பெயர் வைத்துள்ளது. இந்த குழந்தையை, உலகின் மிகச் சிறிய குழந்தையாக, அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஜேர்மனியில், 252 கிராம் எடையுடன், 2015 இல் பிறந்த குழந்தையே இதுவரை உலகின் சிறிய குழந்தையாக கருதப்பட்டது. அந்த சாதனையை, சேபீ முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE