பிரதான லுசான் தீவு வழியே இந்தப் புயல் கடந்தபோது அங்கிருந்த பெரும்பான்மையான மரங்கள் சாய்ந்து, மின்சாரம் தடைப்பட்டு சில இடங்களில் மின்சாரக் கசிவையும் ஏற்படுத்தியது. இதன் விளைவாக அரசு அலுவலகங்கள், நிதி சந்தைகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்டன. புயல் கடந்த, லுசான் தீவின் பாதைகள் முழுவதும் குப்பைகளும், மரங்கள் விழுந்தும், எலக்ட்ரிக் கம்பங்கள் சாய்ந்தும், பறந்துவந்த தகர கூரைகளுமாகக் கிடந்தன.
பாதைகளின் இருபுறங்களும் காணப்பட்ட பனை மரங்கள் அனைத்தும் வளைந்தும், விளம்பரத் தட்டிகள் அனைத்தும் உடைந்தும் கிடந்தன. குறைந்தது 10 பேர் இந்தப் புயலில் பலியானதாகக் கூறப்படுகின்றது. தலைநகர் மணிலாவில் இந்தப் புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறைவாகவே இருந்தன என்று பிலிப்பைன்ஸ் தேசிய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் கோர்டன் தெரிவித்தார்.
இருப்பினும் தெற்கில் உள்ள படங்கஸ் நகரத்தில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட மக்களை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்பட்டது. இங்கு மின்சாரம் தாக்கியதில் இருவர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
மழையில்லாமல் காற்று மட்டுமே பலமாக வீசியதால் வெள்ள சேத அறிக்கைகள் எதுவும் பெறவில்லை என்றும் கோர்டன் குறிப்பிட்டார். புயல் முதலில் தாக்கிய கிழக்கு மாகாணமான அல்பேயிலிருந்து வெளியேற்றப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அனைவரும் பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள், நகர அரங்குகள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அரசுகளின் நிவாரண நிதிகளை விரைந்து பெறும்பொருட்டு லுசானின் தென்கிழக்கில் உள்ள நான்கு மாகாணங்கள் பேரிடர் பிரகடனம் அறிவிப்பினை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.