பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லைகளில் அத்துமீறலில் ஈடுபட்டால், அதை அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. எல்லை விவகாரங்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது,” என, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, நம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளை, சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசம் மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீரின் பனிசூழ்ந்த மலைப் பகுதிகளில் சிலவற்றையும், சொந்தம் கொண்டாடும் சீனா, அந்த இடங்களுக்குள் நுழைந்து, அவ்வப்போது பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. அது போலவே, அந்த நாடு, தன், பிற அண்டை நாடுகள் பலவற்றுடனும் மோதலில் ஈடுபட்டு வருகிறது. வட கொரியா, ரஷ்யா, மங்கோலியா, கசகஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான் போன்ற, 14 நாடுகளுடன் நில எல்லைகளை கொண்டுள்ள சீனா, அந்த நாடுகளுடன் எல்லை பிரச்னை செய்து வருகிறது.
அது போல், சீன கடல் தெற்கு பகுதியில், பிலிப்பைன்ஸ் நாட்டுடனும், கிழக்கு பகுதியில், ஜப்பானுடனும் மோதலில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக, பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் உள்ள, எண்ணெய் மற்றும் கனிம வளம் மிக்க, பல தீவுகளையும், மணல் திட்டுகளையும், தனது என கூறும் சீனா, அந்த பகுதிகளில் தன் கொடியை நாட்டி, அவ்வப்போது முகாமிட்டு, உரிமை கொண்டாடி வருகிறது. ராணுவ பலம் பொருந்திய சீனாவை, குட்டி நாடான பிலிப்பைன்சால் எதிர்க்க முடியாததால், அமெரிக்காவின் உதவியை பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் அமலில் உள்ளன. இந்நிலையில், ஆசிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, கடைசி நாள் பயணமாக நேற்று, பிலிப்பைன்ஸ் சென்றார். அந்த நாட்டு அதிபருடன், ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்ட அவர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களை சந்தித்து பேசினார். பின் அவர், பிலிப்பைன்ஸ் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
இதற்கான நிகழ்ச்சியில், ஒபாமா பேசியதாவது:
சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் இடையே நீண்ட காலமாக, கடல் எல்லை பிரச்னை உள்ளது. எளிதில் வரையறுக்க முடியாத வகையில் உள்ள கடல் எல்லை பிரச்னையை, அமைதியான வழிகளில் தான் அணுக வேண்டும்; பேச்சு மூலம் தான் தீர்க்க முயற்சிக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் ஆயுதங்களை தூக்குவது சரிப்பட்டு வராது. எந்த நாட்டின் அச்சுறுத்தலுக்கும், பிலிப்பைன்ஸ் அஞ்சத் தேவையில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லைகளில் சீனா, அத்துமீறலில் ஈடுபட்டால், அதை, அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. இவ்வாறு, ஒபாமா உறுதியளித்தார். அது போலவே, மூன்று நாட்களுக்கு முன் ஜப்பான் சென்றிருந்த போது, ஒபாமாவிடம், சீனாவின் அத்துமீறல்கள் குறித்து, ஜப்பான் அரசு புகார் தெரிவித்தது. அப்போதும், இதே கருத்தையே ஒபாமா வலியுறுத்தினார்.