தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில்இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது
தமிழீழ பொது வாக்கெடுப்புக்கான பரப்புரை வி.ருத்ரகுமாரன்,
தமிழீழ பொது வாக்கெடுப்புக்கான பரப்புரை ஈழத் தாயகப்பகுதிகளிலும்,ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும், பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியற் பரப்புரை இயக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில்இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்தும் ஜனநாயக வழிமுறையாகவே இப் பொதுவாக்கெடுப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற்தீர்வாகத் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுத்திட்டமுன்மொழிவுகள் தமிழீழ மக்களின்முன்வைக்கப்பட்டு, அவற்றினிடையே பொதுவாக்கெடுப்பின் மூலம் மக்கள் வெளிப்படுத்தும் ஜனநாயக முடிவுக்கு ஏற்ப அரசியற்தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை இவ் அரசியற்பரப்புரை இயக்கம் மேற்கொள்ளும்.
அண்மையில் நடைபெற்று முடிந்த குர்திஸ்தான், கத்தலோனியா பொதுமக்கள் வாக்கெடுப்புகள் நமக்கு ஒரு தெளிவான செய்தியினைத் தெரிவிக்கின்றன. விடுதலைக்கு அவாவும் மக்களே அதற்கான பொறிமுறையையும் கையிலெடுத்து தமது சுதந்திர வேட்கையினை முன்னோக்கித் தள்ளவேண்டும் என்பதே அச் செய்தியாகும்.
தமிழீழ மக்களும் பொதுவாக்கெடுப்பு என்ற பொறிமுறையினைத் தமது கையில் எடுத்தாக வேண்டும். பொதுவாக்கெடுப்பு நடாத்துவதற்கான ஒரு சூழல் கனியும்வரை ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் அழுத்தமாக வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
இவ் அரசியற்பரப்புரை வேலைத்திட்டத்துக்கான முன்னெடுப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ள போதும் இதனை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இணைந்தவகையில் மேற்கொள்வதற்கான அழைப்பையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இத் தருணத்தில் வெளியிடுகிறது.
இவ் விடயம் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகளுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேரடியான தொடர்புகளை மேற்கொள்ளும்.
இவ் அரசியல் பரப்புரை இயக்கத்தில் ஈழத்தாயகமும் தமிழகமும் இணைந்து கொள்ளுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையில் அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்துக்கு முரணானது அல்ல. இதனால் சட்டவரையறை என்ற அச்சம் தவிர்த்து ஈழத்தாயகத்தில் இப் பரப்புரை இயக்கத்தினை மேற்கொள்வது சாத்தியமானதே.
இத்தகைய ஒரு பொதுவாக்கெடுப்பினை நடாத்துவதின் நடைமுறைச்சாத்தியம் குறித்த கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதனையும் நாம் அறிவோம். இவ் விடயத்தில் எமது கருத்து இதுதான்.
ஈழத் தமிழ்மக்கள் ஒரு தேசம் என்ற தகுதியினை அனைத்துலகச்சட்டங்களின் அடிப்படையில் கொண்டுள்ளனர். இத் தகுதிக்கான அங்கீகாரத்தை நாம் அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றோம்.
இதனை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் இப் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கான அரசியற்பரப்புரை இயக்கம். உலக அரசியல் நீதியின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது. ஈழத் தமிழ் மக்களுக்கு வாய்ப்பான ஒரு அரசியற்சூழல் வரும்போது ஒரு பொதுசனவாக்கெடுப்பினை நடாத்துவதற்கான வாய்ப்பும் நமக்குக் கிடைக்கும். அதுவரை எமது சுதந்திரவேட்கையினை உலகுக்கு முரசறைந்து கொண்டிருப்பது அவசியமானதாகும்.
இப் பரப்புரை இயக்கத்துக்கான ஆதரவினை வழங்குமாறு உலகத்தமிழ் மக்களைக் கோருவதுடன் இப் பரப்புரை இயக்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.”
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் தீர்வை ஏற்போம் சம்பந்தன்,
இலங்கை மக்கள் இன, மத வேறுபாடுகளற்ற வகையில் ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத இலங்கை தமது சொந்த நாடெனவும் இலங்கையர் என்ற அடையாளத்துடனும் தாம் இலங்கை தேசத்தில் உள்ளடங்கிய ஒரு பகுதியினர் என்பதையும் விரும்பி ஏற்பார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆவது ஆண்டின் நிறைவு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் பேசுகையில்;
இந்தப் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பிரதமருடன் இணைந்து இப்பிரேரணையை முன்வைக்கும் இந்த வாய்ப்பு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதமாகக் கருதுகின்றேன்.
முன்னர் சிலோன் என அறியப்பட்ட இலங்கையின் காலனித்துவ ஆட்சியாளரில் இறுதி ஆட்சியாளராகவும் எமக்கு சுதந்திரத்தை வழங்கி, வெளிநாட்டார் ஆட்சியிலிருந்து எம்மை விடுவித்தவர்களுமாகிய ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்ட இளவரசர் குளோசெஸ்டரின் பங்குபற்றுதலுடன் சுதந்திர பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. நாங்கள் 400 ஆண்டுகளுக்கு மேலாக, அதைச் சரியாகக் கூறுவதானால் 443 ஆண்டுகளாக வெளிநாட்டார் ஆட்சியின் கீழ் இருந்தோம்.
இங்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு இலங்கை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றபோது ஓர் இளம் சிறுவனாக நான் அந்நிகழ்வை நேரடியாக அங்கே பிரசன்னமாயிருந்து மிகவும் பெருமையுடன் அவதானித்தேன். எமது முதலாவது பிரதம மந்திரி டீ.எஸ்.சேனாநாயக்க, சுதந்திரம் வழங்கும் அந்த ஆவணத்தை இலங்கை மக்களின் சார்பில் பெற்றுக் கொண்டார்.
அன்று நாங்கள் ஐக்கியமான மக்களாக இருந்தோம். இலங்கையின் எல்லா மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி வெளிநாட்டு ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறவே விரும்பியிருந்தோம். உண்மையில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸானது டொமினியன் அந்தஸ்தை விரும்பாது முழுமையான சுதந்திரம், அதாவது “பூரண சுவராஜ்“ ஜே வேண்டுமென்று தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது.
கடந்த 70 வருட காலமாக நாங்கள் தேர்தல் முறையூடாக ஜனநாயக ஆட்சியைக் காப்பாற்றி வந்திருக்கின்றோம் என்றாலும், அது குறை காணப்படாத, பூரணமானதாக இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் வழிமுறை மட்டும் ஜனநாயக ஆட்சி முறையை உறுதிப்படுத்த மாட்டாது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பான்மைவாதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு சேவை செய்வதையே பெரும்பாலும் தேர்தல் முறைமை தன்னகத்தே கொண்டுள்ளது.
பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் அதற்கு மதிப்பளிப்பதுமே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டும் அதற்கு மதிப்பளிக்கும் பொருட்டும் மேற்கொள்ளப்பட்ட அனேக முயற்சிகளின் விளைவாக இந்த நாட்டின் மதிப்பு வாய்ந்த தலைவர்களுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் துரதிர்ஷ்டவசமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
உள்நாட்டு உருவாக்கம் என உரிமை கோரப்பட்ட அரசியலமைப்புகள் சுயசேவைக்கு அப்பால் பன்முகத்தன்மையின் தேவைகளை நிறைவு செய்வதற்கு சேவையாற்ற முடியாதவைகளாகவும் மாறாக பெரும்பான்மைவாதத்தை மேலும் உறுதிப்படுத்துபவையாகவுமே அமைந்திருந்தன.
முழு நாட்டினையும் அதன் மக்களையும் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கிய நீண்டகால ஆயுதப் போராட்டத்தையும் கிளர்ச்சிகளையும் நாம் கண்டிருக்கிறோம். அவற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் தமது அடையாளத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நீண்டகாலப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்களாக அமைந்த விடயங்கள் இன்னமும் நீடிப்பதனால் அவற்றிற்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
எமது நாட்டில் நிலவிய மிகவும் ஆபத்தான நிலைமைகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். நாட்டுப்பற்று என்ற பெயரில், சரியாகச் சொன்னால் போலி நாட்டுப் பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைமைகளை மேலும் தொடர முயற்சிப்பார்களாயின், அது பெரும் சோகமாகவே முடியும். முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடும்போது தற்போதைய நிலையில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், கூடுதலான அமைதியும் சுமுக நிலைமையும் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கணிசமான தேசிய ஒருங்கிசைவின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டு, வன்முறைகளும் மோதல்களும் அற்ற எதிர்காலத்தை நாட்டில் உருவாக்கும் பொருட்டு பல்வேறு செயல்முறைகளில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளது.
இதன் அர்த்தம் யாதெனில், இலங்கை மக்கள் தமது இன, மத வேறுபாடுகள் அற்ற வகையில் ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத இலங்கை தமது சொந்த நாடு எனவும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் தாம் இலங்கைத் தேசத்தில் உள்ளடங்கிய ஒரு பகுதியினர் என்பதையும் விரும்பி ஏற்பார்கள் என்பதே.
இதுவே, எமது பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இலங்கையில் சட்டவாட்சித் தத்துவங்களையும் ஜனநாயக மரபுகளையும் மேலும் பலப்படுத்தி, சுபிட்சம் மிகுந்த அபிவிருத்தியை அடையும் எமது விருப்பத்தை நிறைவேற்றும்.
ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டில் ஐக்கியப்பட்ட மக்களாக முன்னோக்கிச் செல்லவே நாம் முயற்சிக்கிறோம். இந்த விடயத்தில் ஏற்காமை எதுவும் இருக்கும் என நான் எண்ணவில்லை. இலங்கை வெற்றியடைய வேண்டும் என்ற எமது விருப்பம் நிறைவேற வேண்டுமாயின், அந்தக் குறிக்கோளை அடைய நாம் அனைவரும் ஐக்கியமாகச் செயற்பட வேண்டியதே அவசியமாகும்.