பிளாஸ்டிக் கழிவுகள் டீசல் போன்ற எரிபொருளாக மாறுகிறது?

208

பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு சிறந்த எரிபொருளாக மாற்றும் ரசாயனமுறையை அறிவியலாளர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

குவிந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்த வேண்டும் என்பதைவிட, அழிக்க வேண்டும் என்பதற்காகவே பல நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன.

டீசலை போல ஒரு எரிபொருளாக அவற்றை மாற்றும் எதிர்பாராத ஆராய்ச்சியின் இந்த நல்ல முடிவு, எல்லோர் மனதிலும் பாலை வார்த்துள்ளது.

அறிவியலாளர்கள் குழு:

உலக ஆர்வம் மிக்க இந்த ஆராய்ச்சி திட்டத்தினை நிறைவேற்றி இருப்பது, இர்வின், கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் குழு மற்றும் சைனா, ஷாங்காய் கரிம வேதியியல் நிறுவனத்தின் அறிவியலாளர்கள் குழுவும் தான்.

பிளாஸ்டிக் கழிவுகளை வேறு பொருளாக மாற்ற முடிந்தாலும் அதற்காக ஆகும் செலவு கட்டுபடியாகமல் முயற்சி கைவிடப்படுவது உண்டு. ஆனால், இந்த செயலாக்க முறையில் உற்பத்திப் பொருள் மிகவும் விலை மலிவாக இருக்கும் என்றும் பொருளாதார வணிகரீதியிலும் இந்த திட்டம் வெற்றியடையும் என கூறுகின்றனர்.

பிளாஸ்டிக், பாலியெத்திலின் போன்ற பாலிமர் பொருள்களில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பது ஹைட்ரோ கார்பன்களே, அனைத்து இயற்கை எரிபொருள்களின் மூலமான கச்சா எண்ணெயிலும் ஹைட்ரோ கார்பன்களே நிறைந்துள்ளன.

பாலிமரை மூலக்கூறு அளவுக்கு சிதைத்து அதை பயனுள்ள இன்னொரு சேர்மமாக மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் அறிவியலாளர்கள் இந்த ஆராய்ச்சியில் இறங்கினார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

பாலியெத்திலின் என்றால் என்ன?

பாலியெத்திலின் தான் உலகம் முழுதும் உருவாகும் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருள்களின் அடிப்படை. இது பைகள், பாட்டில்கள் போன்ற மென்மை மற்றும் கடினமான பொருள் தயாரிக்க பயன்படுகிறது.

இது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவில் உருவான பொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது வாயுவாக ஆரம்பித்து, துகள்களாக மாற்றப்படுகிறது. அதன்பிறகு, அவை உருக்கி விரும்புகிற வடிவங்களில் பொருள்களாக மாற்றப்படுகிறது.

இந்த பொருள்கள் நுண்ணுயிர்களால் மக்குவதில்லை மெதுவாக ஒளிச்சிதையுறலாம் ஆனாலும், நெடுங்காலம் ஆகும். இதனால், கடல் மற்றும் நீர்நிலைகளுக்கு தீங்காக மாறுகிறது. மீன்கள், பறவைகள் இறப்பு உட்பட்ட இயற்கை சீரழிவுக்கு காரணமாகிறது.

இதனால், அமெரிக்கா 2015 ல் பாலிமர் துகள் உற்பத்திக்கு தடைவிதித்துள்ளது.

நவீன வழ்க்கையின் அத்தியாவசிய பொருளானது:

நவீன வாழ்க்கை முறையில் உணவுகள் உட்பட்ட திட மற்றும் திரவ பொருள்களின் பேக்கிங் வசதிக்காக பாலித்தின் பைகளும் பாட்டில்களும் பெட்டிகளுமாக, அனைத்து நாடுகளிலும் உள்ள நகர மற்றும் கிராம மக்களால் பயன்படுத்திவிட்டு வீசப்படும் பிளஸ்டிக் கழிவுகள், பூமியின் நிலம் மற்றும் நீர்நிலைகளை கணிசமான அளவுக்கு ஆக்கிரமித்துவிட்டன.

இட ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல் இயற்கை பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. இதை ஒழிக்க என்ன செய்வது என்று ஒவ்வொருவரும் கையை பிசைந்து கொண்டும் கட்டுரைகள் எழுதிக்கொண்டும் இருந்த நிலையில் கிடைத்திருக்கும் இந்த செய்தி, உலக எதிர்கால நலத்தின் மீது நம்பிக்கை ஒளி ஏற்றுவதாகும்.

இந்த திட்டத்திற்கான மூலப்பொருள்களான பிளாஸ்டிக் மற்றும் பாலியெத்திலின். 2018 ல் இந்த திட்டத்திற்கு உலகளாவிய அளவில் ஆண்டுக்கு தேவை 100 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தும் பகுதியில் 95 சதவீதம் ஒரே சுழற்சிமுறையிலே மாறுகிறது.

அதனால், தீவுக்கணக்காக குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் இன்னும் சில ஆண்டுகளில் திடீரென மறையலாம்.

வேதிவினை எப்படி நிகழ்கிறது?

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வாளர்களில் ஒருவரான ஸிபின் கான் கூறும்போது, ’இந்த வேதிவினை மாற்றத்தில் தீங்கான ரசாயனங்களோ, வீணான விளைபொருட்களோ ஏற்படவில்லை’ என்கிறார்.

மேலும் சுருக்கமாக சொன்னால், இந்த முறையில், பழைய பிளாஸ்டிக்குகள் உருகி, திரவ எரிபொருளாகவும் மெழுகாகவும் (Wax) மாற்றமடைகிறது.

பிளாஸ்டிக் முதலில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளாக சிதைக்கப்படுகிறது. பிறகு, அதே மூலக்கூறுகள் பயனுள்ள வேறுவடிவத்துக்கு மாற்றப்படுகின்றன.

இதற்கு தேவையான பொருள்கள்:

மெருகேற்றும் எண்ணெய்யாக (oil Refinment) அல்கேன் மற்ற இரண்டு வினையூக்கிகள் (Catalyst) அல்லது வேதிவினையை எளிதாக்கும் ரசாயனங்கள் இதன் அடிப்படை பொருள்கள்.

இதில் விலை மலிவான அல்கேன் குறைவாகவே பயன்படுத்துகிறோம் அது எரிபொருளாகவோ வாயுவாக மாறுவதில்லை.

அதேசமயம், இதில் பயன்படுத்தப்படுகிற வினையூக்கிகளான இரிடியமும் ரினியமும் அதிக விலையுடையது. இப்போது, வினையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் வினையூக்கிகள் விகிதம் 30 :1 ஆகும்.

இது 10,000 :1 அளவில் அல்லது அதற்குமேலாக வினையூக்கியின் அளவை குறைக்க, இந்த வினையை மேம்படுத்த வேண்டும்.

மேலும், வினையூக்கிகள் பண்பு இறுதிநிலையில் விளைபொருளில் இருந்து பிரிந்துவிடுவது என்பதால், அதை மீண்டும் புதுப்பித்து சுழற்சிமுறையில் பயன்படுத்தினால் இந்த வினை பொருளாதார சிக்கனமுடையதாகும். அது சாத்தியமானதுதான் என்கிறார் ஆய்வாளர் ஹாங்.

அதனால், பிளாஸ்டிக் பொருள்களிடமிருந்து பூமிக்கு விடுதலையும், பயனுள்ள மலிவான எரிபொருளும் நிச்சயம் உண்டு.

SHARE