தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப் பற்றி நேற்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பேசியிருக்கிறார். இதன்போது நாட்டில் இனவாதம், மதவாதம் மீளெழுச்சியடைய அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

இனவாதம், மதவாதம், சாதிவாதம் உள்ளிட்ட மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரான எதையும் ஏற்க முடியாது என்பது சரியே. அதற்கு நாமும் ஆதரவே. ஆனால், இனவாதம், மதவாதம் போன்றவற்றுக்கான மூலவிதைகள் அரசின் கொள்கையிலும் நடைமுறையிலும் இருந்தால் என்ன செய்ய முடியும்?
அதை முதலில் அகற்ற வேண்டும். அரசியலமைப்பு அதில் முதன்மையானது. பிழையான அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொண்டு, அதை வைத்துக் கொண்டு, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிக்க முடியாது. இந்த எளிய உண்மையை ஜனாதிபதியும் அவருடைய அணியினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே தவறைத்தான் முந்திய ஆட்சியாளர்களும் செய்தனர். NPP அதிலிருந்து மாறுபடுகிறது. புத்தாக்கத்தை விரும்புகிறது என்றால், அதை அது நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும்.
மேலும் அரசாங்கத்தின் கொள்கையிலும் நடவடிக்கையிலும் ஒன்று, யுத்த காலத்திலிருந்து மக்களை அமைதிக்காலத்துக்கு, நம்பிக்கையான சூழலுக்கு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருதலாகும்.
அப்படியிருக்கும்போது, அதற்கு மாறாக மக்களின் காணிகளில் படைவலயங்கள் தொடருமாக இருந்தால் அமைதியும் சந்தேகமும் நம்பிக்கையீனமும் பகையுணர்ச்சியுமே மேலோங்கும். அதுவே இங்கே நிகழ்கிறது. அதனுடைய அடையாளமே இந்தப் போராட்டமும் இப்போது உருவாகியுள்ள நெருக்கடிச் சூழலுமாகும்.
இதைக் கவனப்படுத்த வேண்டிய பொறுப்பு சமாதான விரும்பிகள் அனைவருக்கும் உரியது. கூடவே தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அனைத்துக்கும் அனைத்து அரசியற் கட்சிகளுக்கும் உண்டு.