புதினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸே நவால்னி சிறையில் மர்ம மரணம்

102

 

மாஸ்கோ, ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரும், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினின் எதிர்ப்பாளருமான அலெக்சி நாவல்னி, 47, சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி ஆட்சி செய்கிறது. இங்கு, எதிர்கால ரஷ்யா என்ற கட்சியை நடத்தி வந்த அலெக்சி நாவல்னி, அதிபர் புடினுக்கு எதிராக ஊழல் புகார்களை தொடர்ச்சியாகசுமத்தி வந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான இவருக்கு, அந்நாட்டு மக்களிடையே, ஆதரவு பெருகியது.

விசாரணை
தொடர்ந்து புடினை எதிர்த்து வந்த அலெக்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ரஷ்ய அரசு, 2021ல் அவரை சிறையில் அடைத்தது.

பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவருக்கு, கடந்த ஆகஸ்டில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அங்குள்ள ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்சி, சிறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அந்நாட்டு சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு குறித்து காரணம் எதுவும் தெரியாத நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக 2020ல், மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்சி மயங்கி விழுந்தார்.

அப்போது அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது, அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஜெர்மனியில் ஐந்து மாத சிகிச்சைக்கு பின் ரஷ்யா திரும்பிய அவர் கைது செய்யப்பட்டார்.

அப்போது, ‘என்னை கொல்ல நடந்த முயற்சிக்கு அதிபர் புடினதான் காரணம்’ என, அலெக்சி குற்றஞ்சாட்டிய நிலையில், தற்போது சிறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE