இந்திய குடும்ப பெண்கள் தங்களின் குடும்பத்தை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி தங்களை பற்றி அதிகமாக கவனிப்பது இல்லை. இந்தியாவில் இருபத்தி இரண்டு பெண்களுக்கு ஒருவர் என மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுவதாக அகில இந்திய மருத்துவ விஞ்ஞானம் நிறுவன நோய் கட்டிகள் பற்றிய ஆய்வு பேராசிரியர் ஜுல்க தெரிவித்தார். இதே எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் எட்டுக்கு ஒரு பெண்மணி விதம் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை விட தற்பொழுது மார்பக புற்றுநோய் அதிகமான அளவில் உள்ளதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1,15,000 புதிய மார்பக புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். 2015 ஆம் ஆண்டு 250,000 புதிய மார்பக புற்றுநோய் நோயாளிகள் உயர வாய்ப்பு உள்ளது. மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் பிறகு சாத்தியமான கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் உலகின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10.9 மில்லியன் மக்கள் மார்பக புற்றுநோயால் உலகளவில் பாதிக்கப்படுகின்றனர். 6.7 மில்லியன் மக்கள் மார்பக புற்றுநோயால் உலகளவில் இறக்கின்றனர்.
ஆபத்து காரணிகள் :-
பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கே மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளது.
முப்பது வயதை கடந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர சாத்தியக்கூறு உள்ளது.
- கருப்பு நிற பெண்களை விட சிகப்பான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகம் வர சாத்தியம் உள்ளது.
- தாய்,சகோதரி, மகள் என்று அறியப்படும் நெருங்கிய உறவுகள் மற்றும் பாட்டி, சித்தி இரண்டாம் நிலை உறவினர்கள் எவருக்கேனும் மார்பக புற்றுநோய் இருந்தால் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
- 12 வயதிலேயே வயதுக்கு வந்த பெண்கள் அல்லது 55 வயது கடந்து மெனோபாஸ் ஆகும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து உள்ளது.
- கொழுப்பு நிறைந்த அதிக உணவு உட்கொள்ளும் பெண்களிடமும்,மற்றும் அதிக எடை அல்லது உடல்பருமன் கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து உள்ளது.
- மது உட்கொள்ளும் பெண்களுக்கு இந்த மார்பக புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது.
மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:-
- மார்பகம் உணர்ச்சியற்று இருத்தல் அல்லது மார்பகத்தில் கட்டி உருவாகுவது.
- அக்குள்களில் அல்லது அதற்க்கு அருகில் கட்டி உருவானால் புற்றுநோய்க்கான ஒரு அடையாளம் இருக்காலாம்.
- பெரும்பாலான மார்பக கட்டிகள் புற்றுநோய் இல்லை எனினும் ஒருமருத்துவர் மதிப்பீடு வேண்டும்.
- மார்பகத்தில் இருந்து இரத்தம் வருவது.
- முலைக்காம்பில் மாறுபாடுகள்.
- மார்பக தோலில் ஏற்படும் மாற்றங்கள் சிவத்தல், அமைப்பு மாற்றங்கள் போன்றவை அடங்கும். இந்த மாற்றங்கள் பொதுவாக தோல் நோய்கள் அறிகுறிகளாக இருக்கலாம், ஆனாலும் சில நேரங்களில் மார்பக புற்றுநோய் தொடர்பில் முடியும்.
இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு அறிந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.
மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை:-
மார்பக புற்றுநோய் கண்டறிதல் வழக்கமாக மார்பக பயாப்ஸி, மேம்மோகிராஃபி,அல்ட்ராசோனோகிராபி அல்லது MRI பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மூலம் கண்டறியப்படும். மார்பக கட்டியின் அடிப்படையில் மார்பக புற்றுநோய் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தப்படும். மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்படுக்கிறது, அதற்க்கு பிறகு நோயின் தீவிரத்தின் அடிப்படையில் கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி அல்லது ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாதவிடாய் நின்ற பின்னர் அணைத்து பெண்களும் ஒரு தடவை மார்பக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. நம் இந்திய பெண்கள் பெரும்பாலும் பாலியல் நோயாக இருந்தாலும் மார்பக நோய் இருந்தாலும் வெளியே சொல்ல தயங்குகின்றனர். சிகிச்சை பெற முன்வருவது கிடையாது. இத்தகைய சூழல் மாற வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
அன்புடன்
ஆயிஷாபாரூக்