புனர்வாழ்வு முகாம்களிலிருந்த பெண் போராளிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படவில்லை – முன்னாள் போராளி தமிழ்கவி

412

தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டத்தினைநோக்கி தமிழினத்தின் அரசியல் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இக் காலத்தில் இலங்கையரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டது இனப்படுகொலையா? அல்லது போர்க்குற்றமா? சர்வதேசத் தீர்ப்பு எவ்வாறு அமையப்போகிறது? மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மின்சாரக் கதிரையில் ஏற்றப்படுவாரா? தொடர்ந்தும் அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் திட்டமிட்ட வகை யில் செயற்படுகிறதா? என்றெல்லாம் பல கேள்விகள் இருக்கின்ற இந்நிலையில் யுத்த காலப்பகுதியில் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள், வன்முறைகள் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றதா? அவ்வாறெனில் அவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் திட்டமிட்ட முறையில் இலங்கையரசு தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையினை நடாத்தியது என்பது நிரூபணமாகும். இனப்படுகொலை என்ற பதத்திற்குள் 01.கட்டாய மதத்திணிப்பு, 02. குழுவாக ஒரு இனத்தை திட்டமிட்ட வகையில் அழித்தல், 03. விஷ வாயு பயன்பாடு, 04. இனவிருத்தியினை அழித்தல் அதாவது கருத்தடை, பகுதியாகவோ அல்லது தொகுதி யாகவோ ஒரு இனத்தை அழித்தல் போன்றன இதில் உள்ளடக்கப்படும் விடயங்கள் அகும்.

some-tamil-prisoners-to-get-bail-2710201512030146

இவைகளில் ஏதோவொன்று நிரூபிக்கப்பட்டால் இனப்படுகொலை என்பதற்குள் அரசு சிக்கிக்கொள்ளும். போர்க்குற்றம் என்பது போர்க்களத்தில் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது குறிப்பாக ஒருசாரார் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் பட்சத்தில் அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவது போர்க்குற்றங்களில் ஒன்று. சரணடையும் எந்தவொரு போரா ளியையும் அல்லது பொதுமகனையும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அவருக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யாதுவிடில் அது போர்க்குற்றமாகும். சரணடைந்த போராளிகளுக்கு உளவியல் ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துவதும் போர்க்குற்றமாகும். ஒரு போராட்டக்குழு அல்லது இராணுவ அமைப்பு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தால் அவர்கள் மீது வன்முறைகளைத் தோற்றுவிப்பது போர்க்குற்றமாகும். போர்க்குற்றம் என்று கூறும்போது இலங்கையில் தாரளமாகவே இடம்பெற்றுள்ளது. ஆகவே யுத்தகளத்தில் பங்குபற்றிய படைப்பிரிவே அதற்கு பொறுப்புக்கூறவேண்டும். குறிப்பாக ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் அரசின் கஜபாகு ரெஜிமண்ட் படைப்பிரிவுகள் யுத்த களத்தில் செயற்பட்டனர்.

இது இவ்வாறிருக்க, ஈழப்போரின் இறுதி யில் கைதுசெய்யப்பட்ட போராளிகள் 11000பேருக்கும் விஷ ஊசி ஏற்றப்பட்டி ருக்கலாம் எனத் த.தே.கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறெனினும் இக்கருத்துக்கள் ஒட்டுமொத்த போராளிகளின் மனநிலை யையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதேவேளை முன்னாள் பெண் போராளிகள் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து அழைத்துச்செல்லப்பட்டு பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்;பட்டார்கள் என்ற தகவல் முற்றிலும் பொய்யாகும் என முன்னாள் போராளியான தமிழ்கவி குறிப்பிட்டுள்ளார். வவுனியா பிரதேசசெயலகத்தில் கடந்த 17.08.2016 அன்று நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்கேட்கும் செயலமர்வில் முன்னாள் போராளி திருமதி.தமிழ்கவி கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் புனர்வாழ்வு பெற்ற பின் எந்தவிதமான உதவிகளும் அர சால் எங்களுக்கு வழங்கப்படவில்லை. யுத்தத்தின் காரணமாக வட்டுவாகலிலிருந்து வரும்போது ஒரு சொப்பின் பையு டன் வவுனியாவிற்கு வந்திருந்தோம், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சி.ஐ.டி. விசாரணைக்கு வருவார்கள். கூட்டங்கள் வைக்கப்படும். ஆனால் உதவித்திட்டங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை. நான் ஒரு எழுத்தாளராக சர்வதேச மட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் போர் நடைபெறக்கூடாது என்பதுடன் நல்லிணக்கம் என்பது மனங்களில் ஏற்படவேண்டும் என சுட்டிக்காட்டிய அவர் அரசியல்வாதிகளால் ஒருபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிடமுடியாது எனக் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள் குறிப்பிடுவது போல் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. விடுதலைப்புலிகள் உரிமைக்காக மாத்திரமே போராடினார்கள். ஆனால் இந்த நாட்டில் மட்டும்தான் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் எனச் சொல்கிறார்கள். இன்று வரையில் அரசாங்கத்தின் அறிக்கைகளில் பயங்கரவாதம் என்ற சொல் பாவிக்கப் படுகிறது எனச் சுட்டிக்காட்டினார். போர் முடிந்தபின் புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நேரத்தில் பெண் போராளிகள் இராணுவத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லையெனக் குறிப்பிட்டார். ஊடகங்கள் நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் குற்றஞ்சுமத்தினார்.

பெண்களைத் தலைமையாகக்கொண்ட குடும்பங்கள் மற்றும் கை, கால்களை இழந்தவர்கள் கவனிக்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். அத்துடன் தமி ழினி மற்றும் சில பெண் போராளிகளுக்கு இறுதியுத்தத்தின் முன்னரே புற்றுநோய் இருந்ததாகத் தெரிவித்தார். விச ஊசி விவகாரத்தில் வதந்திகளைப் பரப்பாதீர்கள் எனத் தமிழ்கவி மேலும் தெரிவித்தார்.

தமிழ்கவியின் கருத்தில் உண்மைகள் இருந்தாலும் சிங்களவர் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வரமாட்டார்கள் என்பதை இவர் புரிந்துகொள்ளவேண்டும். ஒருவேளை புனர்வாழ்வளிக்கப்பட்ட பெண் போராளி களைக் காப்பாற்றும் நோக்கில் அவர் இவ்வாறான கருத்துக்களைக் கூறியிருந்தால் உண்மையில் அது வரவேற்கப்படவேண்டியவொன்று. பெண் ஒருவரைக் காதலித்தாலே அப்பெண்ணைக் குறைகூறும் வழக்கம் சமுதாயத்தில் உண்டு. இது நடைமுறையிலுள்ளது. ஆகவே புனர்வாழ்வளிக்கப்பட்ட பெண் போராளிகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் உண்மையில் இச்சமுதாயம் அவர்களை எவ்வாறு பார்க்கும் என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்கவேண்டியவர்களாகவிருக்கிறோம்.

ஒரு விடயம் குறித்து நாம் பேசும்போது இடம், பொருள், ஏவல் அறிந்துபேசவேண்டும். அரச படைகளால் பல பெண் போராளிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு காணொளிகள் வாயிலாகவே ஆதாரங்கள் உண்டு. புனர்வாழ்வு முகாம்களில் இதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை எனக் கூறினா லும் இவ்விடயத்தின் உண்மைத்தன்மை குறித்தும் ஆழமாக ஆராயவேண்டியுள்ளது. ஊடகப்போராளியான இசைப்பிரியா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை ஐ.நாவரை பார்த்திருக்கிறது. இவ்வாறான நிலையில் புனர்வாழ்வு முகாம்களில் பாலியல் வன்முறைகள் நடாத்தப்படவில்லை என்று கூறுவது எவ்வளவு தூரத்திற்கு உண்மையானது என்பது கேள்விக்குறியே. இவ்விடயங்கள் குறித்துத் தமிழ்த்தரப்பினர் பாலியல் சம்பவங்கள் நடைபெற்றது என்றே கருத்துக்களையே ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளனர். இது அவர்களது சுயநல அரசியலைக் கொண்டுசெல்வதாகவும் இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த பெண் போராளிகளுக்கும் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாகக் கூறமுடியாது.
சமுதாயத்தில் இந்த போராளிகள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதில் தமிழ்கவி எடுத்திருக்கும் அக்கறைக்கு உண்மையில் நன்றி தெரிவித்தாகவேண்டும். ஆனாலும் இசைப்பிரியா உட்பட 250இற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இராணுவத்தின் விருந்துக்கு இரையாக்கப்பட்டது மனதை உருக்கும் சம்பவம். வரிசையாகப் போராளி களை அழைத்துச் சுட்டுக்கொன்ற சம்பவம் ஊடகங்களில் வெளியானது. பாதுகாப்பு கருதியே இவ்வாறான பல சம்பவங்களை ஊடக நிறுவனங்கள் வெளியிட முடியாத சூழ்நிலையும் இருக்கிறது.

சனல் 4 தொலைக்காட்சி ஈழப்போரின் இறுதிக்கட்ட சம்பவங்களை ஒளிபரப்பியது. இவை உண்மைக்குப் புறம்பானவையல்ல. பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு உட்படுத்தலில் வித்தியாசம் இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது வன்புணர்வுகளை தைரி யமாக ஒரு பாதிக்கப்பட்ட பெண் வெளியில் கூறினால் இச்சமுதாயம் அப்பெண்ணை ஏற்றுக்கொள்ளுமா? அது அவள் இறப்பதற்குச் சமனானது. சமுதாயத்திலிருந்து புறந்தள்ளப்பட்டுவிடுவாள். இதுதான் உண்மை.

வெலிக்கட, போஹம்பர, மகசின், ஊசுP போன்றவற்றில் பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அதேவேளை பூசா, திருகோணமலை, யோசப் முகாம் போன்றவற்றில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றது. இதற்கான ஆதாரங்கள் இராணுவத்தி னராலேயே சர்வதேச ஊடகங்களுக்கு விற்கப்பட்டுள்ளது. அவற்றைத்தான் இன்று ஆதாரங்களாக காணொளிகளின் மூலம் காணமுடிகிறது. இக்கொடுமைகளைப் பார்த்து இராணுவத்தினர் இரசித்தனர். பெண் போராளிகளுக்கு நடந்த கொடு மைகளை நேரில் பார்த்த சாட்சியங்கள் இருக்கின்றன. எழுதக்கூட முடியாத பல கொடுமைகள் யுத்தகாலத்திலும், முகாம்களிலும் பெண் போராளிகள் விசாரணை என்கிற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவேளை இடம் பெற்றிருக்கிறது. எனினும் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இவற்றை வெளியில் கூறமுடியுமா?

புனர்வாழ்வு முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்ட பெண் போராளிகளில் ஒருசிலர் தமிழ்கவி கூறியதைப்போல நன்றாகப் பரா மரிக்கப்பட்டிருக்கலாம். தமிழ் அரசியல் வாதிகளும், ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் இவ்விடயத்தைக் கவனத்திற்கொள்ளவேண்டும். உங்களது சுயலாப அரசியலைத் தேடுவதற்காகவும், முந்திக்கொண்டு செய்திகளை வெளி யிடுவதற்காகவும், தமிழினத்தை இழிவு படுத்தும் செய்திகளை வெளியிடு வதைக் குறைத்துக்கொள்ளவேண்டும். தமிழ்கவி இராணுவப் புலனாய்வினரால் உள்வாங்கப்பட்ட நிலையில் இவ்வாறு பகிரங்கமாக பெண் போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இவரது கருத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்காக, இவரை அச்சுறுத்தி கூறவும்சொல்லியிருக்கலாம். இவரை ஒரு துரோகி எனப்பலர் இப்போது கூறுகிறார்கள்.
பாலியல் வன்புணர்வுகள் அரச படைகளால் நடத்தப்பட்டிருப்பின் அது இனப்படுகொலைதான் என்பது நிரூபிக்கப்படும். சர்வதேச நீதி மன்றிலிருந்தது இலங்கையைக் காப்பாற்றும் நடவடிக்கையில் தமிழ்கவி ஈடுபட்டுள்ளாரா? என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்படுகிறது. முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கிறது என்பதான அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டாம் எனவும் தமிழ்கவி குறிப்பிட்டுள்ளார். விஷ ஊசி ஏற்றப்பட்ட விடயம் ஒருசிலருககு நடந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இதன்மூலம் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. சமூக மயமாக்கலில் அவர்களும் இணைந்து செயற்படவேண்டும். இதிலிருந்து அவர்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளில் பலர் ஈடுபட்டுள்ளார்கள். திருமணப்பேச்சுக்களின்போது நீங்கள் தடுப்பிலிருந்து வந்தவரா? எனக் கேட்கிறார்கள். இதன்மூலம் மனதள விலான பாதிப்புக்களைப் பெண் போரா ளிகள் எதிர்கொண்டுள்ளார்கள். இவற்றை ஆதாரமாக நிரூபிப்பதைவிடுத்து வெறும் கருத்தளவில் பேசுவதென்பது முட்டாள்த்தனம். பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதை நேரில் கண்டதுபோல் சிலர் பேசுகிறார்கள்.

இந்த மண்ணுக்காகப் போராடிய ஒவ்வொரு போராளிக்கும் அதனது வேதனை புரியும். ஒருசில ஊடகங்கள் தாம் பிரசித்திபெறுவதற்காக ஒருசிலப் போராளி களை அழைத்து நேர்காணலுக்கு உட்படுத்துகின்றார்கள். இதனால் அவர்கள் மேலும் அதிகமாக மனரீதியா னத் தாக்கத்திற்குட்படுத்தப்படுகிறார்கள். ஒருவேளை உணவிற்கும், மருத்துவத் தேவைகளுக்கும் கஷ்டப்படும் இவர்களது பிரச்சினைகளுக்கானத் தீர்வுகளை நாசுக்காகச் செய்யக்கூடிய வேளைகளில் நாம் ஒவ்வொருவரும் இறங்கவேண்டும். போராளிகளது வயிற்றில் புளியைக் கரைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது. த.தே.கூட்டமைப்பைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளை வைத்தே அரசியல் பிழைப்பை நடாத்திவருகிறார்கள். தேர்தல் காலங்களில் பிரபாகரனின் போராட்டம் குறித்துப்பேசுவார்கள். ஆனால் த.தே.கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் தேசியம், சுயநிர்ணய கோட்பாட்டில் பயணிக்கத் தயாராகவில்லை. தமது அரசி யல் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாத்திரமே விடுதலைப்புலிகள் குறித்த பேச்சுக்கள். சம்பந்தன் அவர்கள் தான் ஜனநாயக வழி யில் வந்தவன் என்கிறார். ஆனால் த.தே.கூட்டமைப்பை உருவாக்கியதே விடுதலைப்புலிகள் தான். முன்னாள் போரா ளிகள், அரசியல்கைதிகளின் பிரச்சினைகள் குறித்து தமிழ்த்தரப்பினர் அதிக கவனம் எடுக்கவேண்டும். ஒரு விடயத்திற்குத் தீர்வுகாணவேண்டுமாகவிருந்தால் இறுதி வரை செல்லவேண்டும். இவர்களுக்குப் பதவிகள் முக்கியம். அரசியல்கைதிகளின் விடயத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று கூறிய செல்வம் அடைக்கலநாதன் தற்போது மௌனித்திருக்கிறார். இவரைப்பற்றி எழாத விமர்சனங்களே இல்லை. இவற்றை அவர் பொருட்படுத்துவதுமில்லை. ஈ.பி.ஆர். எல்.எப் கட்சியின் சுரேஸ் பிரேமச்சந்திரன் இதுபோன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டியதன் விளைவாக திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டார். பாராளுமன்றில் அனுபவமிக்க சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தேசியப்பட்டியல் வழங்காது அரசியலில் அனுபவமற்ற சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா அவர்களுக்கு வழங்கப்பட்டமையானது தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. சுரேஸ் அவர்களை இணைத்துக் கொண்டிருந்தால் தமிழ் மக்கள் பேரவை யும் உருவாகியிருக்காது. சுமந்திரனைக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக சுரேஸ் அவர்கள் தமிழரசுக்கட்சியினால் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டார்.

தமிழ் மக்களது அல்லது போரா ளிகளது பிரச்சினையில் இவர்களுக்கு அக்கறையில்லை. தமிழ் அரசியல் கைதி களின் விடுதலைக்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது சாகும்வரையிலான உண்ணாவிரதத்தினை மேற்கொள்ளாதது கவலையளிக்கிறது. ஆனால் முன்னாள் போராளிகளையும், விடுதலைப் புலிகளையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவார்கள் இவர்கள். தமிழனாக விருந்தால் பத்துப்போராளிகளை எடுத்துப் பராமரிக்கவேண்டும். அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவேண்டும். ஒருசிலர் மறை முகமாகச் செய்கிறார்கள். எழுந்தமானத்தில் கருத்துக்கள் கூறுவதை நிறுத்திவிட்டு நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி, தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமிழ்த்தரப்பார் செயற்பட்டால் அது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும். தமிழ்கவி அவர்களே! உங்களைச் சந்தித்துப்பேசியதில் அந்த சிங்களவர் பாக்கியம் செய்தவர் எனக் கருதியதாகக் குறிப்பிட்டிருந்தீர்களே! இது உங்களுக்கு சந்தோஷமாகவிருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தில் அரசும், இனவாதக் கட்சிகளும் இணைந்து உங்களுக்கு எதனையும் அள்ளித்தரப்போவதில்லை என்பதை மன தில் வைத்துக்கொள்ளுங்கள்.

நெற்றிப்பொறியன்

SHARE