வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தின் வெடிவைத்தகல் காட்டுப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் விமானிகளில் ஒருவரும் அந்த அமைப்பை மீன்டும் இலங்கையில் உருவாக்க முன்னின்றவர் எனவும் பாதுகாப்பு தரப்பால் அடையாளப்படுத்தப்பட்ட தேவியன் பயன்படுத்தியதாக கூறப்படும் வேன் வண்டியை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ். நல்லூர் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வேனானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட குறித்த வேனானது தற்போது கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன , அது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ள ஆரம்ப கட்ட விசாரணைகளில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களால் வழங்கப்பட்ட நிதி ஊடாக தேவியனால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இராணுவத்தினரால் கொல்லப்படுவதற்கு முன்னர் இந்த வேனை தேவியன் பயன்படுத்தியதாக நம்பும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பிலான விரிவான விசாரணைகளையும் தொடர்கின்றனர்.