இந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய போது ‘கர்னல்’ கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் கட்சியில் (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) சேர்ந்து அமைச்சராகப் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்ளும் செய்தி வெளி வந்துள்ளது. எனது கணக்குப்படி அவர் 106வது அமைச்சர் என நினைக்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டுத் துறைக்கு அவர் பொறுப்பேற்றுள்ளார்.
அவரது திறமையை மெச்சிப் பேசிய ஜனாதிபதி ராஜபக்சே அபிவிருத்தி மற்றும் சமூகநலம் என்கிற அம்சங்களில் கருணாவின் கொள்கை
தமது சுதந்திரக் கட்சியின் கொள்கையுடன் பொருந்தி வருகிறது என்று சொல்லியுள்ளார். சில தசாப்தங்களுக்கு முன் மட்டகளப்பு தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் செ.இராஜதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தபோது ‘கிழக்கு மாகாணத் தமிழரின் அபிவிருத்திக்காக’ இப்படிச் செள்வதாகக் கூறியது நினைவுக்கு வருகிறது.
முல்லைத் தீவுப் பகுதியில் மேலும் மேலும் புலிகளின் ஆடற்களம் சுருங்கிவிட்டது. வெகு விரைவில் அவர்களின் கதை முடிக்கப்படலாம் எனப் பத்திரிகைகள் ஆருடங் கள் எழுதுகின்றன. கெரில்லாப் போர்முறைக்குத் தாவலாம் அல்லது வேறு நாடுகளுக்குத் தப்பி ஓடலாம் என்கிற ஊகங்களும் சொல்லப்படுகின்றன. அப்படியெல்லாம் ஆகாமல் போய் இதே வடிவில் இன்னும் கொஞ்சம் தொடரும்
வாளிணிப்பையும் மறுத்துவிட முடியாது. ஸ்ரீலங்காவிலுள்ள ஐ.நா. அவை ஒருங்கிணைப்பாளர் (Resident Humanitarian Coordinator) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி சுமார் 2,00,000 சிவிலியன்கள் போர்ப் பகுதியில் சிக்கிக்கொண்டுள்ளனர். பெரிய அளவில் பெண்கள், குழந்தைகள் இதில் அடக்கம். உணவு, மருந்து, தண்ணீர்ப் பற்றாக்குறைகளால் அவதியுறும் இம் மக்கள் ஒரு பக்கம் இராணுவத் தாக்குதலால் சாகிறார்கள் என்றால் இன்னொரு பக்கம் தப்பி ஓடுபவர்களைப் புலிகள் சுட்டுக் கொல்வதாகவும் அவ்வறிக்கை சொல்கிறது.
ராஜபக்சேவைப் பொருத்தமட்டில் குறைந்தபட்ச சிவிலியன் இழப்புக்களுடனே யுத்தத்தை நடத்துவதாக இந்தியாவின் காதில் விழுமாறு அடிக்கடி உரக்கக் குரல் கொடுத்த போதிலும், அவருக்கு எல்லாத் தமிழர்களும் ‘பயங்கரவாதிகள்’ அல்லது ‘பயங்கரவாத ஆதரவாளர்கள்’
தான். தமிழ் சிவிலியன்கள் போரின் விளைவாகவே கொல்லப்பட்ட போதிலும், புலிகள் அவர்களைப் பிடித்து வைத்திருப்பதன் விளைவாகவே அது நடக்கிறது எனக் காரணம் சொல்லி இதை “இனப்படுகொலை” (Genocide) என வரையறுக்க மறுக்கின்றன ஐ.நா. நிறுவனங்கள்.
ஆக, இத்தனை இழப்புகளுக்கும் மத்தியில் இங்கு உடனடியாகவோ, இல்லை சற்றுத் தாமதமாகவோ ஏற்படப் போகிற போர் நிறுத்தம் இருதரப்பு உடன்பாட்டின் அடிப்படையில் ஏற்படப்போகிற ஒன்றல்ல. மாறாக ஒரு தரப்பு வெற்றியின் மீது கட்டுப்படுகிற போர்நிறுத்தம். இதன் விளைவுகள் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இன்னும் பல சிறுபான்மையினர் ஆகியோர் மனநிலையில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்? இன்று நாம் கரிசனம் கொள்ள வேண்டிய அம்சம் இதுவே. போர் நிறுத்தம் உடனடி சாத்திய
மாகாமல் போர் தொடரும் பட்சத்திலும் கூட இந்த விளைவுகள் ஏற்படவே செய்யும்.
இந்தக் கால் நூற்றாண்டுப் போரில் தமிழர்கள் கிட்டத்தட்ட 70,000க்கும் மேற்பட்ட உயிர்கள், உடைமைகள், எல்லாவற்றையும் தொலைத்து
விட்டு நிற்கிறார்கள். உள்நாட்டு இடப்பெயர்வுகள், வெளிநாட்டுப் புலப் பெயர்வுகள், குடும்பச் சிதைவுகள் எல்லாவற்றோடும் ஒரு போரையும் தோற்றுவிட்டு வெறுங்கையோடு நிற்கிறார்கள். வெற்றிபெற்றவர்களின் நிழலில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அழிந்துபோன கிராமங்கள், இடிந்துபோன பள்ளிகள், மருத்துவ மனைகள் எல்லாம் இனி புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும். இன்னொரு பக்கம் வெற்றிப் பெருமிதம் இனவாத உணர்வை அதன் உச்சத்திற்குக் கொண்டு நிறுத்தியுள்ளது “கொழும்பு முதல் திருகோணமலை வரை, பாய்ன்ட் பெட்ரோ முதல் டோன்ட்ரா ஹெட் வரை ஒவ்வொரு வீட்டு உச்சியிலும் சிங்கக் கொடி பறக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் கொக்கரிக்கிறார்.
ராஜபக்சே (ஜன 17, 2009). இராணுவ தளபதி சரத் பொன்சேகா இரண்டாண்டுகட்குமுன்பே கனடா இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இது சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும் என அறிவுரை பகர்ந்தார். அதிகாரப் பரவல் தொடர்பாக 2006ல் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் முன் கருத்துரை வழங்கும் போது ‘ஜாதீய ஹெல உருமய’ எனப்படும் பிக்குகளின் கட்சி சார்பாக, “தமிழர்களின் தாளிணிநாடு (இந்தியாவிலுள்ள) தமிழ்நாடு தான் இங்கே அவர்கள் சிறுபான்மையினர் மட்டுமே” என அக்கட்சி பிரதிநிதி சம்பிக்கா ரணவகே கூறினார்.
“சிங்களவர்கள் மட்டுமே இந்நாட்டின் குடிமக்கள். மற்றவர்கள் எல்லோரும் இங்கே வருகை புரிந்தவர்களே (Visitors). பவுத்தத்தின் அடிப்படை
யான கருணையின் விளைவாக அவர்களின் வருகையை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தக் கருணையை அவர்கள் என்றென்றைக்குமானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எங்கள் மன்னர்கள் வணிகம் செய்வதற்கு அனுமதி அளித்ததாலேயே இங்கே முஸ்லிம்கள் வந்தனர். மொகலாயப் படையெடுப்புக்கு அஞ்சி இங்கே தமிழர்கள் தஞ்சமடைந்தனர். இவர்கள் எல்லோரும் இன்று நன்றி மறந்து நிற்கின்றனர்” என மிகச் சமீபத்தில் ஒரு முறையும் அவர் குறிப்பிட்டார் (Daily Mirror 16, அக் 2008).
சென்ற வாரத்தில் இணைய தளத்தில் இப்படி யொரு வாசகத்தைப் பார்த்தேன்: “சிங்களவர்கள் இன்று தமிழ்ச் சமூகத்திடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ஒற்றை ஸ்ரீலங்கா என்கிற கொள்கைக்கு மனப்பூர்வமாக விசுவாசம் காட்டுவதைத்தான், இந்தத் தீவு எல்லா மக்களுக்குமான இனத் தாயகம் (ethnic homeland) எனச் சொல்லி ‘ஒற்றை இன நிலப்பகுதிகளை’ (mono ethnic regions) யாரும் கோரக்கூடாது”. அரசியல் தீர்வு பற்றி
எழுதப்படும் கட்டுரைகள் எல்லாம் இந்தியா வைப் போல ஒரு கடுமையான பிரிவினை எதிர்ப்பு தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றுதான் தொடங்குகின்றன. சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் இலங்கையில் இன்று யாரும் வாய் திறக்க முடியாது.
இப்படி நிறையச் சொல்லலாம். வெகுவிரைவில் பொதுத் தேர்தலும் அதற்குப் பின் ஜனாதிபதி தேர்தலும் வர உள்ளன. இந்த இராணுவ வெற்றியை இன வாதப் பெருமையாக்கி வாக்குகளாகக் குவித்துக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயங்காது. ஜாதிய ஹெல உருமய, ஜனதா விமுக்தி பெரமுனே முதலான இனவாதக் கட்சிகளும் அதைத் தான் செய்யப் போகின்றன. ஆக ஸ்ரீலங்காவின் ஒவ்வொரு மக்கட் பிரிவுகளும் மற்றவைகளிலிருந்து முற்றாக விலகி (Polarisation) ஒதுங்கி நிற்கும் நிலைக்கு இன்று வந்துள்ளன. இந்தச் சூழல் தமிழ்
மக்களுக்கு மட்டுமின்றி சிங்களப் பெரும் பான்மையினருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் ஜனநாயகத்தையும் அடிப்படை மனித உரிமை களையும் மறுப்பதற்கே கொண்டுவிடும்.
1948ல் ஸ்ரீலங்கா சுதந்திரமடைந்தபோது இந்தியாவைப் போலன்றி பெரும் போராட்டங்கள், பிளவுகள், இனப் படுகொலைகள், மதக் கலவரங்கள் என்றெல்லாம் இல்லாமல் ஒப்பீட்ட ளவில் அமைதியாக அது நடந்தேறியது. மனித வளர்ச்சி நிலை, பொருளாதாரம் ஆகிய அம்சங்களிலும் கூட அன்று சிங்கப்பூர், தென் கொரியா முதலான நாடுகளுக்கு அது ஒரு ‘மாடலாக’ இருந்தது. பிற ஆசிய, ஆப்ரிக்க நாடுகளைக் காட்டிலும் வளர்ச்சி நிலையில் உயர்ந்திருந்தது.
ஆனால் இன்று ஸ்ரீலங்கா தனது 60ம் சுதந்திர நாளைக் கொண்டாடியபோது அது போரினால் சீரழிந்த ஒரு நாடு. 25 ஆண்டு கால சிவில் யுத்தம் அதன் பொருளாதாரத்தையும் அகக் கட்டுமானங்களையும் மட்டும் அழித்துவிடவில்லை. வீங்கிப் போன ஒரு அதிகார வர்க்கம், ஊதிப்போன ஒரு அமைச்சரவை (106 பேர்!) ஒப்பிட்டுச் சொல்ல இயலாத ஊழல், குடும்ப ஆட்சி, இராணுவத்தின் ஆசியுடன் வெளிப்படையாக இயங்கும் கொலைப் படைகள், ஆள் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள்… இதுதான் இன்றைய ஸ்ரீலங்கா.
நாட்டெல்லைகள் இல்லாப் பத்திரிகையாளர்கள் (Reporters Without Berders) என்னும் அமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை (BBC News, 2008) உலகிலுள்ள ஜனநாயக நாடுகளிலேயே பத்திரிகைச் சுதந்திரத்தில் ஆகக்கடைசியாக உள்ளநாடு ஸ்ரீலங்கா. ‘Fund for Peace’ என்னும் அமைப்பும் ‘Forign Policy’என்னும் இதழும் நடத்திய கணக்கெடுப்பில் ‘தோல்வியுற்ற அரசுக்கான குறியெண்ணில் (Failed
State Index) ஸ்ரீலங்காவின் இடம் 20 எனக் கண்டறி யப்பட்டுள்ளது (2008). சுமார் 12 தரவுக்குறி (Indicates) களின் அடிப்படையில் கணக்கிடப்படும் குறியெண் இது. ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஆயுதம் தாங்கிய 20 குண்டர்களால் வெடிவைத்துத் தகர்த்து 2 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுத்தப்பட்டதுடன் 2009ம் ஆண்டு தொடங்கியது. அடுத்த இரண்டு நாட்களில் ‘மோட்டார் சைக்கிள் ஸ்குவாட்’ எனச் சொல்லப்படும்
கொலைப்படையினரால் பலரின் கண்முன் லசந்தா விக்ரமதுங்கா என்கிற ஸ்ரீலங்காவின் தலைசிறந்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப் பட்டார். ராஜபக்சே ஆட்சிக்கு வந்தபின் தமிழர் தேசிய கூட்டணியின் TNA மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளர். பத்திரிகையாளர்களுக்கு ஈராக்கைக் காட்டிலும் ஆபத்தான நாடு இலங்கை என இன்று கூறப்படுகிறது. ஒரு சிறு கும்பலிடம் அனைத்து அதிகாரங்களும், முடிவெடுக்கும் உரிமைகளும் குவிந்துள்ளன. ஜனாதிபதியின் இரு இளைய சகோதரர் கள் பேசிலும் கோட்டபயாவும் இன்று இலங்கை யின் மிகமுக்கியமான அதிகார மையங்கள். பாராளுமன்ற உறுப்பினரான பேசில் ஜனாதிபதி யின் எண்ணற்ற ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர். பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான கோட்டபயா இன்று இராணுவத் தீர்வைத் தவிர வேறு வழிமுறைகளுக்கே இடமில்லை என முனைப்புடன் இயங்குபவர். மூத்த சகோதரர் சமல் ஒரு அமைச்சர். அப்புறம் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பிரதமர் ரத்னசிரீ விக்ரமநாயகா, ஜாதிய ஹெல உருமயாவின் சம்பில்கா ரணவகே ஆகியோரோடு ஹாரி ஜெயவர்தனே, சஜின் வாஸ் குணவர்தனே முதலான கார்ப்பரேட் முதலாளிகள்- இவர்கள் தான் இன்று இலங்கை அரசைக்கையில் வைத்திருப்பவர்கள்.
இவர்கள் வைத்ததுதான் அங்கே சட்டம். போர் மிகப்பெரிய அழிவுகளுக்கு மட்டு மல்ல, ஊழல்களுக்கும் வழிவகுத்துள்ளது. புலிகளின் மிக எளிய தயாரிப்பான, ஒப்பீட்ட ளவில் மெதுவாகச் செல்லக்கூடிய ‘செஸ்னார்’ விமானம் கொழும்பில் தாக்குதல் நடத்தியதை காரணம்காட்டி உலகின் மிக நவீனமான, அதிவேக ‘மிக் 29’ரக விமானங்கள் ஐந்து வாங்கப்பட்டதில் 8 மில்லியன் இலங்கை ரூபாய்கள் அளவு ஊழல் நடந்துள்ளது. முன்னாள் கப்பற்படைத் தளபதி தயா சாந்தகிரி மீது இன்று ஊழல் விசாரணை நடந்து கொண்டுள்ளது. இஸ்ரேலிலிருந்து ‘ஆர்டிலெரி’ துப்பாக்கிகள் வாங்குவதில் 400 மில்லியன் இலங்கை ரூபாள்கள் ‘இழப்பு’ ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுஷீமீளது. தற்போதைய தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கனங்கோடா மீதும் இராணுவ ‘சோனார்’ கருவி வாங்கிய வகையில் 56 மில்லியன் இலங்கை ரூபாளிணிகள் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
அரசு வசம் இருந்த ஓய்வூதிய நிதி, ‘பாங்க் ஆஃப் சிலோன்’ எனப்படும் அரசு வங்கி ஆகியவற்றிலிருந்து 3 மில்லியன் ரூபாள்கள் கடன் பெற்று ஜனாதிபதியின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள ‘மிகின் ஏர்வேளிணிஸ்’ என்னும் அரசு விமான நிறுவனம் சற்று முன் குறிப்பிட்ட இரு கார்ப்பரேட் முதலாளிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. லஞ்ச ஊழல் விசாரணையில் முனைப்பாக இருந்ததற்காக விசாரணை ஆணையத் தலைவர் பியசேனா ரணசிங்கேவை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளார் ராஜபக்சே. வெறுப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அடையாள உணர்வுகளுக்கு நிலையான எதிரி என்று ஒன்று கிடையாது. வெறுப்பதற்கு அதற்கு ஏதேனும் ஒரு எதிரி வேண்டும் என்பது மட்டுமே அடிப்படை.
இனவாத உணர்வில் கட்டமைக்கப்பட்டுள்ள இன்றைய இலங்கை அரசை அரசியல் ஆளிணிவாளர் கஷீமீ ‘இனவாத ஆட்சி’ (Ethnocracy)
என்கின்றனர். Ethnocentric Democracy, Illiberal Democracy என்கிற கருத்தாக்கங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சியில் பௌத்த பிக்குகளின் (தேரர்) செல்வாக்கை முன்னிட்டு இதை ஒரு ‘தேரராட்சி’ என்றும் சொல்வதுண்டு. (பார்க்க: Neil Devotta, Srilanka at Sixty, EPW, Jan 31.2009). ஆக ஜனநாயகமும், மனித உரிமைகளும் மறுக்கப்படுவது தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம், சிங்களப் பொது மக்களுக்கும் தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளான மதச்சார்பின்மை, தாராளவாதம், பன்மைத்துவம், நல்லாளுகை, இன ஒருமைப்பாடு எதுவும் செயல்படாத ஒரு அரசின் கீழ்தான் இன்று எல்லா இலங்கை மக்களும் வாழ்கின்றனர். சேனநாயகா முதல் ராஜபக்சே வரை அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் அவ்வளவு பேரும் இனவாதத்தை முன் வைத்தே அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். 1948ல் உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பின் 29ம் பிரிவு தமிழர் களின் அடையாளத்தை ஏற்று ‘குழு உரிமைகளை’ (Groups Rights) அளித்தது. 1972ல் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறையில் ‘குழு உரிமை’ மறுக்கப்பட்டு தனிநபர் உரிமைகள்மட்டுமே
வழங்கப்பட்டது. இடையில் உருவான 13வது திருத்தம் ஒரு ஒற்றை அரசின் கீழ் அதிகாரப்பரவலுக்கு வழிவகுத்தது.
2006ல் உருவாக்கப்பட்ட ‘அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு’வில் சிறுபான்மை அறிக்கை, பெரும்பான்மை அறிக்கை என இரண்டு அறிக்கைகள்உருவாயின. 11 உறுப்பினர்கள் (மொத்த உறுப்பினர் 17) கையெழுத்திட்ட பெரும்பான்மை அறிக்கை ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகாரப்பரவல், குழு உரிமை என்கிற வகையில் தமிழர்களின் அடையாளத்தை ஏற்பது முதலான பரிந்துரைகளைச் செய்துள்ளதாக அறிகிறோம். இத்தோடு சிங்களத்துடன் தமிழுக்குச் சம உரிமை, பௌத்தத்திற்கான சிறப்புரிமை நீக்கப்பட்டு மதச்சார்பற்ற அரசு அமைய வழிவகுக்கும் திருத்தங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கு இன்று உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிகாரப் பரவல் என்பது ஜனநாயகத் துடன் இணைந்ததாக இருத்தல் அவசியம். எந்த ஒரு இன அடிப்படையிலான அடையாளமும் பல உள் அடையாளங்களை ஒடுக்குவதாகவே அமையும். இலங்கையின் கடந்த கால் நூற்றாண் டாக நடைபெறும் சிவில் யுத்தம் இரண்டு ஒன்றையாட்சிக் கோரிக்கைகளுக்கு இடையேயான போராகவே இருந்து வந்துள்ளது. வெறுமனே ஒற்றையாட்சி அமைதல் மட்டுமே ஜனநாயத்திற் கான உத்தரவாதமாக முடியாது.
வடக்கு – கிழக்கு மாநில ஒருங்கிணைவு என்கிற 80-களின் கோரிக்கையை இன்று தமிழ் பேசும் மக்கள் எந்த அளவு ஏற்கிறார்கள் என்கிற மதிப்பீடும் இன்று தேவையாகிறது. முஸ்லிம்கள், கிழக்குப் பகுதியினர், தலித்துகள் ஆகியோரின் கருத்துக்களை அறிய பொது வாக்கெடுப்பு ஒன்றும் தேவையாகிறது. இதெல்லாம் இன்று எந்த அளவு உடனடிச் சாத்தியம் என்கிற ஐயம் இயல்புதான். ஆனால் இது குறித்த விவாதம் ஒன்று தேவை. இந்த விவாதத்திற்கான தேவையை இரு இன மக்களும் உணர வைப்பதில் இரு இனங்களையும் சேர்ந்த அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள், இடதுசாரிகளின் பங்கு இன்று முக்கிய மாகிறது. துருவங்களாக ஒதுங்கி நிற்கும் இனங்களிடையே ஒரு ‘பகை மறப்பு’ (Reconcilation) தேவைப்படுகிறது.
புலிகள் ஒழிக்கப்படுவதோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. ஆனால் அப்படித் தான் ராஜபக்சே அரசு சொல்லிவருகிறது. இனவாத அரசுக்கு எந்தவகையிலும் குறையாத படுகொலைகள், மனித குண்டு வெடிப்புகள், சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள் ஆகியவற்றுக்கும் காரணமாகிற புலிகளின் இத்தகைய நடவடிக்கைகளில் அடிப்படையில் அவர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என ராஜபக்சே அரசு வரையறுப்பதை இன்று உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படியே பார்த்தாலும் கூட புலிகளின் மறைவோடு ‘பயங்கரவாதம்’ தான் மறையுமே ஒழிய இனப்பிரச்சினை ஒழிந்துவிடப் போவதில்லை. தமிழர்களின் சில அடிப்படை யான உரிமைகள் நிலை நாட்டப்படும் வரை பிரச்சினை தொடரவே செய்யும். பிரச்சினை தொடரும் வரை தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் ஜனநாயக மும், மனித உரிமைகளும் வழங்கப்படப் போவதில்லை.
வெற்றிப் பெருமிதத்துடன் இன்று உருவாக்கப்பட்டுள்ள பேரினவாதம் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என மதச் சிறுபான்மையினருக்கும் எதிராக உருப்பெற்றுள்ளது. இந்தியாவில் இன்று உருவாகியுள்ள இந்துத்துவப் பாசிசத்திற்கு இணையான சில நடவடிக்கைகள் இன்று இலங்கையிலும் மேற்கொள்ளப்படுகின்றன. கிறிஸ்தவ வழிபாட்டு இல்லங்கள் தாக்கப்படுகின்றன. தொண்டு நிறுவனங்கள் இலக்காக்கப்படுகின்றன. சமீபத்தில் சுற்றுக்கு விடப்பட்டுள்ள ஒரு ‘ஈ-மெயில்’ கடிதம் முஸ்லிம்கள் மீது வெறுப்பைக் கக்குகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனவும் பவுத்தத்திற்கு எதிரானவர்களுடன் இணைந்து ‘நாசரிஸ்தான்’ ஒன்றை கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப் போகிறார்கள் எனவும் அது எச்சரிக்கிறது. முஸ்லிம்களுக்கு நிலங்களை விற்க வேண்டாமெனவும், சிங்களப் பெண்களை முஸ்லிம்களுடன் பழகவிடவேண்டாம் எனவும் அது சிங்கள பவுத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.
இந்த முயற்சிகள் இன்று சிறிய அளவில் இருக்கலாம். ஆனால் போர் முடிவுக்குப் பின் இது விசுவரூபம் எடுக்க வாய்ப்பு உண்டு. வெறுப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அடையாள உணர்வுகளுக்கு நிலையான எதிரி என்று ஒன்று கிடையாது. வெறுப்பதற்கு அதற்கு ஏதேனும் ஒரு எதிரி வேண்டும் என்பது மட்டுமே அடிப்படை. மீண்டும் இந்திய எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்லலாம்.
மகாராஷ்டிரத்தின் வலுவான பாசிச அமைப்பான சிவசேனா தொடக்கத்தில் கம்யூனிஸ்டுகளைத்தான் இலக்காக்கியது. பின் அது தமிழர்கள், முஸ்லிம்கள், இன்று வட இந்தியர்கள் எனத் தன் இலக்கை மாற்றிக் கொண்டே போகிறது. “அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடிவந்தார்கள். நான் பேசவில்லை. ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் இல்லை…” என்று தொடங்குமே அந்தப் புகழ்பெற்ற பாஸ்டர் மார்டின் நிமோலரின் கவிதை அது இன்றைக்கும் பொருத்தமானதுதான்.
ஜனநாயகத்துடன் கூடிய அதிகாரப் பரவல், பகை மறுப்பு, மனித உரிமைகளுக்கான போராட்டம், உயர் பாதுகாப்பு வலயங்கள் ஒழிக்கப்படுதல், இடம்பெயர்க்கப்பட்டோர் மீண்டும் தம் பகுதிகளில் குடியமர்த்தப்படுதல், உடனடிப் புனர் நிர்மாணச் செயற்பாடுகள் ஆகிய மனிதாபிமானக் கோரிக்கைகளுடன் உலக அளவில் நாம் இயங்க வேண்டிய காலம் இது. சமீபத்தில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இந்தக் கருத்துக்களைப் பேசிச் சென்ற இலங்கை ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதுங்க ஜெயசூர்யா அவர்களின் பேச்சுக்கள் இந்த வகையில் இங்கே குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.