புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு -ரொபட் அன்டனி!! (கட்டுரை)

326

புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு -ரொபட் அன்டனி!!  (கட்டுரை)

“பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இந்தப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு காணப்படின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இதற்கு அரசியல் தலைமையிடம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு இருக்கவேண்டும்”

– மூத்த ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான அபிலாஷைகள் மற்றும் நியாயமான அதிகாரங்கள் அது தொடர்பான எதிர்பார்ப்புகள் என்பன மீண்டுமொருமுறை புஷ்வாணமாகிவிடும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தும் கூட அந்த சந்தர்ப்பத்தில் பயனை பெற்றுக்கொள்ள முடியாததொரு துர்ப்பாக்கிய நிலைமைக்கு இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல் நகர்வுகளும் அரசியல் பதிவுகளும் வரலாறு முழுவதுமே ஒன்றையொன்று மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றித்தான் வரும்போல் தெரிகின்றது.

வரலாற்று நிகழ்வுகள், பதிவுகள், தொகுப்புக்கள் என்பன மீண்டும் மீண்டும் நிகழ்காலத்திற்குள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் அரசியலை விசித்திரமானது என்று அவ்வப்போது ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் போலும்.

சில சந்தர்ப்பங்களில் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் அவர்களது அரசியல்சார் உரிமைகளும் இந்த விசித்திரமான அரசியல் என்ற குழிக்குள் புதைக்கப்பட்டுவிடுகின்றன.

இறுதியில் யாருக்கும் வெற்றி கிடைக்காவிடினும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒருசிலருக்கு மட்டும் தோல்வி என்பது நிச்சயமாகி போய்விடுகின்றது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்கள் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்காக நீண்டகாலமாக போராடி வருகின்றனர். சுதந்திரம் கிடைத்ததிலிருந்து தமிழ் பேசும் மக்கள் தமக்கொரு நியாயமான தீர்வை வழங்கக்கோரி போராடி வருகின்றனர்.

கடந்த காலங்களில் சாத்வீகப் போராட்டங்கள், ஆயுதப்போராட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டாலும் அதன் நோக்கங்கள் ஒரு தீர்வை நோக்கியதாகவே அமைந்திருந்தன.

ஆனாலும் தென்னிலங்கையில் இணக்கப்பாடு ஏற்படாமை அரசியல் தீர்வை வழங்குவதற்கான ஒரு அர்ப்பணிப்பின்மை போன்ற காரணங்களினால் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வுத்திட்டமானது ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.

கடந்த காலங்களில் தீர்வை முன்வைக்கும் நோக்கில் அரசாங்கங்கள் எவ்வளவுதான் முயற்சிகளை முன்னெடுத்தாலும் அவை வெற்றியை நோக்கி நகரமுடியாமல்போயின.

அரசாங்கங்கள் இதயசுத்தியுடன் தீர்வு காண முயற்சிகளை முன்னெடுத்தாலும் தீர்வுத்திட்டங்களை குழப்புவதற்கென்றே அவ்வப்போது சக்திகள் உருவாகிவிடும்.

அந்த சக்திகள் தீர்வுத்திட்டத்தை குழப்பி அனைத்தையும் ஆரம்பகட்டத்திற்கே கொண்டுவந்து விடும். ஒவ்வொரு முறையும் தீர்வுத்திட்டத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது வரலாற்றில் இடம் பெற்ற இந்த குழப்பகர செயற்பாடுகள் மீண்டும் இடம்பெற்று விடும்.

அதனால்தான் வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் சுற்றிவருவதாக இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஒரு நியாயமான தீர்வைக் காண்பதற்கு வழிபிறந்துள்ளதாக அனைவரும் நம்பினர்.

ஆனால் யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் இதுவரை ஒரு தீர்வுத்திட்டத்தை நோக்கி எந்தத் தரப்பும் நகரவில்லை.

தீர்வுத்திட்டம் என்ற பேச்சை எடுத்தாலே தென்னிலங்கையில் எதிர்ப்புகள் அதிகமாகிவிடும் என்பதுடன் இனவாத சக்திகளின் கைகள் ஓங்கிவிடும்.

அதனாலேயே பதவியில் இருக்கும் அரசாங்கங்கள் அதனை ஒரு பக்கத்தில் போட்டுவிடும். இதுவே யதார்த்தமானதாக கடந்தகாலம் முழுவதும் இடம்பெற்று வந்துள்ளது.

அந்தவகையில் தற்போதுகூட இவ்வாறான அரசியல்தீர்வு மற்றும் அரசியல் அமைப்பு போன்ற முயற்சிகளுக்கான எதிர்ப்புகள் மேலோங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அனைத்து விடயங்களும் ஒன்று சேர்ந்து ஒரு தீர்வுத்திட்டம் என்ற இடத்திற்கு செல்லும்போது வரலாற்றில் இடம்பெற்றதைப் போன்றே தற்போது ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விசேடமாக அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நாட்டின் பிரதான சங்கபீடங்கள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளன.

இது நாட்டில் தற்போதைய நிலைமையில் பரபரப்பு நிலையை தோற்றுவித்துள்ளது. சங்க பீடங்களின் இந்த அறிவிப்பானது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கே தீர்வுத்திட்டம் உள்ளடங்கிய புதிய அரசியலமைப்பு என்ற கனவு கனவாகவே இருந்துவிடுமோ என்ற சந்தேகம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் பேசும் மக்கள் தாம் எங்கே நம்பிக்கை வைத்திருந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுவிடப்போகின்றோமோ என்ற உணர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

அதாவது ”வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக” தமிழ் பேசும் மக்களின் தீர்வும் அந்தத் தீர்வு உள்ளடக்கப்பட்ட அரசியலமைப்பும் அமைந்துவிடுமா என்ற கேள்வியே தற்போது எழுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமானது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணயசபையாக மாற்றப்பட்டு பிரதான வழிநடத்தல் குழுவும் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெகுவிரைவில் பிரதான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ள நிலையில் அதுதொடர்பான கருத்துக்கள் வெளியிடப்படுகின்ற சூழலில் சங்கப்பீடங்களின் எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில் உடனடியாகவே மகாநாயக்க தேரர்களை சந்தித்து உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் தொடர்பில் சங்க பீடங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் வரைவு தொடர்பில் ஆராய ஆணைக்குழு நியமிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தற்போது அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் மிகப்பெரியதொரு இடைவெளி உருவாகிவிடுமா? என்ற கருத்து மேலோங்க ஆரம்பித்துள்ளது.

இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரசாங்கத்தின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன இந்த நாட்டின் 64 இலட்சம் மக்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆணையை வழங்கியுள்ளதாகவும் அந்த ஆணைக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

அதாவது எந்த தடைகள் வந்தாலும் புதிய அரசியலமைப்பு வரைவு கொண்டுவரப்படும் என்றும் அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென்றும் அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுடன் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாக அரசாங்கம் உறுதிப்படத் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

ஆனால் இது எந்தளவு தூரம் சாத்தியமாகும் என்பதே இங்கு முன்வைக்கப்படுகின்ற பிரதான தர்க்கமாக அமைந்திருக்கின்றது. உண்மையில் அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினையைத் தீர்த்து அதற்குரிய தீர்வுத்திட்டத்தை உள்ளடக்கி அரசியலமைப்பை கொண்டுவரவேண்டுமென்ற இதயசுத்தியுடனான எதிர்பார்ப்பு காணப்படின் இதனை முன்னெடுக்கலாம்.

ஆனால், அரசாங்கம் இந்த விடயத்தில் இதயசுத்தியுடன் இல்லாமல் இதனை இழுத்தடிக்கும் நோக்கத்துடன் செயற்படுமாயின் ஒருபோதும் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது.

colb37a8646164519303_4050103_29022016_kaa_cmy  புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு -ரொபட் அன்டனி!!  (கட்டுரை) colb37a8646164519303 4050103 29022016 kaa cmyஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்கள் மீது பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியே ஆட்சிக்கு வந்தனர்.

அதுமட்டுமன்றி புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் அதிக செல்வாக்கு செலுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் நம்பியே தமிழ் பேசும் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வெளியிட்டனர்.

தோற்கடிக்கவே முடியாது எனக்கூறப்பட்ட முன்னைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது.

அதாவது புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்னெடுப்பதுடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைத்தனர். அதனூடாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்குகளை அள்ளிவழங்கி புதிய அரசாங்கத்தை உருவாக்கினர்.

ஆனால், வரலாற்றில் இடம்பெற்றதைப் போன்றே புதிய அரசாங்கமும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தையும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளையும் இழுத்தடித்துக்கொண்டுவருவதையே காணமுடிகின்றது.

தற்போது எழுந்துள்ள அரசியலமைப்பு எதிர்ப்பு கோஷங்களினால் அரசாங்கம் இந்த செயற்பாட்டிலிருந்து பின்வாங்கிவிடுமா என்ற அச்சம் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

காரணம் வரலாறுகள் இதற்கு சிறந்த உதாரணங்களை கூறியுள்ளன. எனவே அரசாங்கமானது இந்த விடயத்தில் பின்வாங்காமல் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

இல்லாவிடின் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தையும் இழந்துவிட்டதாகவே வரலாற்றில் பதியப்படும். அதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கக்கூடாது.

வரலாற்றில் எப்போதுமில்லாதவாறு இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.

எனவே இந்த சந்தர்ப்பத்திலும் தீர்வைக் காண முடியாவிடின் அது வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. அரசாங்கத்தின் அரசியல் ரீதியிலான தீர்மானத்திலேயே அனைத்து விடயங்களும் தங்கியிருக்கின்றன.

அதேபோன்று என்றுமில்லாதவாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தீர்வைப் பெறவேண்டும் என்பதற்காக அரசாங்கத்தை எதிர்பார்க்காத ஒரு போக்கை கடைப்பிடித்து வருகின்றது. அந்த சந்தர்ப்பத்தையும் வீணாக்கிவிடும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

இது தொடர்பில் மூத்த சர்வதேச ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க இவ்வாறு விபரிக்கிறார். அதாவது இனப்பிரச்சினையை தீர்க்க முற்படும்போது வரலாறு முழுவதும் இவ்வாறான பிரச்சினைகளும் தடங்கல்களும் ஏற்பட்டே வந்துள்ளன.

ஆனால் பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இந்தப்பிரச்சினைய தீர்க்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு காணப்படின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

இதற்கு அரசியல் தலைமையிடம் இந்த அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு இருக்கவேண்டும். இதற்கு சில உதாரணங்களை கூறலாம். அதாவது 1987 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன மாகாண சபை முறைமையை கொண்டுவந்தபோது அதனை பிக்குகள் கடுமையாக எதிர்த்தனர்.

ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. பிக்குகள் மத விடயங்களை பார்த்துக்கொள்ளட்டும். அரசாங்கம் நாட்டை பார்த்துக்கொள்ளும் என்று கூறிவிட்டார்.

அவ்வாறானதொரு அரசியல் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் காணப்படின் பிரச்சினையை தீர்ப்பதில் சிக்கல் இல்லை. எடுக்கப்படும் நடவடிக்கைகள் சரியா பிழையா என்பது வேறு விடயம்.

20540098716645603122  புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு -ரொபட் அன்டனி!!  (கட்டுரை) 20540098716645603122ஆனால் ஒரு விடயத்தை அரசியல் ரீதியில் மேற்கொள்ளவேண்டும். அதேபோன்று சரத் பொன்சேகாவை கைது செய்தபோது தேரர்கள் எதிர்த்தனர்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதனை கவனத்திற்கொள்ளவில்லை.

நான் மீண்டும் கூறுகின்றேன். முன்னெடுக்கப்படும் கொள்கை அல்லது செயற்றிட்டம் சரியா பிழையா என்பது வேறு விடயம். ஆனால் அதனை முன்னெடுப்பதற்கான தீர்மானமே இங்கு முக்கியமானதாகும்.

எனவே எவ்வாறான தடைகள் வந்தாலும் அரசாங்கத்துக்கு நேர்மையான எதிர்பார்ப்பு இருப்பின் ஒரு அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்ற நோக்கம் காணப்படின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதில் எந்த சிக்கலும் இல்லை. வரலாற்றில் இதற்கு நாம் உதாரணங்களைக் கூட பெறலாம் என்று அவர் கூறுகிறார்.

அந்த வகையில் பார்க்கும்போது அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினையைத் தீர்த்து நியாயமான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்ற நோக்கம் காணப்பட்டால் தீர்வை அடைவதில் எந்த சிக்கலும் இல்லை என்பது தெளிவாகின்றது. அதனை நோக்கி அரசாங்கம் பயணிக்குமா என்பதே தற்போது விவாதப்பொருளாக உள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்தஎதிர்பார்ப்புக்கள் மீண்டுமொருமுறை புஷ்வாணமாகிவிடும் சூழல் மீண்டும் உருவாகியுள்ளது.

அதிலிருந்து மீண்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வழங்கிய அமோக ஆதரவைக் கருத்தில் கொண்டு இந்த வரலாற்றுக்கடமையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

-ரொபட் அன்டனி-

SHARE