பூனைக்கு மணி கட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் – துரோகிகளை இனங்காணவேண்டும்

647

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டதொன்று. அதற்கு மாற்றுக்கருத்தில்லை. குறிப்பாக அப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அங்கத்துவக் கட்சிகள் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை முன்னணி, தமிழரசுக்கட்சி ஒன்றினைந்ததுதான் இந்தக் கூட்டு. அரசியலில் போட்டி பொறாமை. இது பொறாமையின் நிமித்தம், செய்த துரோகத்தின் நிமித்தம் தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் நோக்கோடு மூன்று கட்சிகள் விலகிச் சென்றுள்ளன. இது தமிழினத்தின் பலவீனமாகக் கருதப்படுகின்றது. தேசியத் தலைவர் பிரபாகரன் என்ன நோக்கத்தோடு உருவாக்கினாரோ அதனைச் சீர்குலைக்கும் வகையில் கடந்த கால அரசாங்கமும் சரி இந்த அரசாங்கமும் சரி அதனைக் கச்சிதமாகச் செய்து முடித்துள்ளது.

ஒற்றுமையே பலம் என்று மக்கள் முன் வாக்கு கேட்க வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் முடிந்த கையோடு அந்தக் கோசங்களை நிறுத்தி வருகின்றனர். அதன் பின் கட்சிகளுக்குள் முறுகல்கள். இவ்வாறு தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் ஒற்றுமை தொடர்ந்து செல்கின்றது. இதிலிருந்து மாற்றத்தைக் கொண்டு வந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். அதி தீவிரமாகச் செயற்பட்டு இருந்தார். அதனொரு கட்டமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற கூட்டிலிருந்து விலகிச் செல்வதாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் முக்கியத் தீர்மானம் எடுத்துக்கொண்டனர். ஊடகங்களில் மிரட்டல்களும் விடுத்திருந்தனர். ஆனால் இறுதி நேரத்தில் ஈ.பி.ஆர்எல்.எவ் மட்டும் கூட்டிலிருந்து வெளியேறியது. இதனைச் சந்தர்ப்பமாக பயன்படுத்திய ரெலோவும், புளொட்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டிலிருந்து பிரியும் வரை கைகட்டிச் சிரித்துக்கொண்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகள் சூரியன் சின்னத்தில் போட்டியிட முன்வந்தார்கள். வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் இணைத்துக்கொண்டு. ஆனால் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் துரோகி என்று கூறப்பட்டு அச்சின்னத்தில் போட்டியிடமுடியாது எனத் தீர்மானித்து சைக்கிள் சின்னத்தில் போட்டியிட மறுத்ததன் அடிப்படையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தவிர ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலைக்கூட்டணி இன்னும் இதிர கட்சிகளை இணைத்துப் போட்டியிடுவதாக அறிவித்தன. இதனோடு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் செக்மேட் வைக்கப்பட்டது.

அதன் பின்னர் உள்ளுராட்சி மன்றத்திற்கான தேர்தல் வைக்கப்பட்டது. வடக்கு, கிழக்கில் பாரிய பின்னடைவை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சந்தித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ்; கட்சிக்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் துரோகிகள் என்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்தவர்கள் என்றும் வழமையான பிரச்சாரப் பாணியில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் சொல்லைக் கேட்டு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் பாரிய பின்னடைவை இவர்கள் சந்தித்திருப்பார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசெல்ல அரசாங்கத்தின் இரகசிய திட்டங்களும் ஏனைய தமிழ்க்கட்சிகளின் உண்மையற்ற தன்மையுமே காரணமாகும். இந்த விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே சிவசக்தி ஆனந்தனை துரோகி எனக் குற்றஞ்சாட்டுவது பொருத்தமற்றது. ஒன்றாக இணைந்து முடிவுகளை எடுத்துவிட்டு பின்பு அதனை மறுப்பவர்களை துரோகிகள் என்று குற்றஞ்சாட்டிவிட முடியாது.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பு எல்லாளன், குளக்கோட்டன், மக்கள் படை, வன்னி மைந்தன் என்று பல இணைப் பெயர்களில் எம்.பி சிவசக்தி ஆனந்தனின் அரசியல் நகர்வு நகர்த்தப்பட்டது. அக்காலகட்டத்தில் எம்.பி சிவசக்தி ஆனந்தனுடன் 15க்கும் மேற்பட்ட நபர்கள் போராட்டங்களை அவரின் நெறிப்படுத்தலின் கீழ் செய்துகொண்டிருந்தனர். ஆனால் தற்போது குறித்த 15பேரும் தமக்கு ஒரு என கட்சியையும் அல்லது அமைப்புக்களையும் உருவாக்கி எம்.பி சிவசக்தி ஆனந்தனை ஏணியாகப் பயன்படுத்திவிட்டு இன்று போராட்டத்தை நடாத்தி பணம் சம்பாதிக்கும் இவர்கள் அவருக்கு எதிராக தமது செயற்பாட்டை முடுக்கிவிட்டுள்ளனர்.

 

எம்.பி சிவசக்தி ஆனந்தன் என்னவென்றால், இவ்வாறு பல பேர் தனக்கு எதிராக துரோகத்தை மேற்கொண்டாலும் மீண்டும் மீண்டும் புதியவர்களை இணைத்துக்கொண்டு தமது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகின்றார். இந்த நிலை மாற்றப்படவேண்டும். ஏற்கனவே ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்கு துரோகம் செய்த எம்.பி சிவமோகன், எம்.பி சிறிதரன், வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வ.மா.சபை உறுப்பினர் ரவிகரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் நடராஜா இதுபோன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் அங்கத்தவர்கள் எனப் பலர் துரோகத்தைச் செய்துள்ளனர். அக்கட்சியில் இருந்து வென்றவுடன் பின்பு மாறிச்செல்வது துரோகத்தின் மேல் துரோகம். ஏன் இவர்களை துரோகிகள் எனக் குறிப்பிடுகிறோம் என்றால் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் வேட்பாளர்களை நிறுத்தி அதில் வெற்றிபெற வைக்க எத்தனையோ சிரமத்தை எதிர்கொண்டு (பணரீதியாகவும், கட்சி ரீதியாகவும்) மேற்குறிப்பிடப்பட்ட சில அரசியல்வாதிகள் தமது பதவியை இராஜினாமா செய்துவிட்டு வேறு ஒரு கட்சிக்கு தாவியிருந்தால் அவர்களை உத்தமபுத்திரர்கள் எனக்கூறியிருக்கலாம். பிழையை பிழை எனவே பதிவுசெய்யவேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட அரசியல்வாதிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ்; கட்சியில் இருந்து விலகுவதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். ஒரு கட்சியின் கொள்கையின் அடிப்படையில் அங்கத்தவர்கள் நடந்திருக்கவேண்டும்.
இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து அக்கட்சியினை பலவீனப்படுத்தி பலவீனப்படுத்தி தமிழ் மக்களிடமிருந்தும் இவர்களை பலவீனப்படுத்தி அரசியல் அரங்கிலிருந்து இவர்களை ஓரங்கட்டுவதற்கு இந்த அரசு விரித்த வலையில் சிக்கிக்கொண்டது இந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி. தமிழர்களுடைய தேசியம், சுயநிர்ணயம் சார்ந்த விடயத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணையவேண்டிய நிலையில் தற்போதைய அரசியல் காலத்தின் தேவையாகவுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ்; கட்சிக்கு வழிப்போக்கர்களாக வந்திருந்தவர்கள் தான் அக்கட்சிக்கு துரோகத்தை விளைவித்துச் சென்றுள்ளனர்.
ஈ.பி.ஆர்.எல்.எவ்; கட்சியில் எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை தேர்தல் களத்தில் நிறுத்தியிருந்தால் அவர்கள் இவ்வாறான துரோகத்தை செய்திருக்கமாட்டார்கள். எம்.பி சிவசக்தி ஆனந்தனைப் பொறுத்தவரையில் நல்ல உள்ளம் கொண்டவர். அவர் மக்களோடு பழகுவதில் அவர் கையாளும் உத்திகள் சிறந்ததாகும். ஆனால் இவரை வைத்து இவரோடு இணைந்து செயற்படும் ஒவ்வொருவரும் இவரிடம் வரும்போது சாதாரண மனிதர்களாக வருகின்றனர். பின்னர் அவரோடு இணைந்து அரசியல் நுட்பங்களைப் பயின்று ஆளுக்கு ஒரு அரசியல் கட்சியினைத் தொடங்கி கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா என்ற பழமொழிக்கமைய இந்தக் காகங்கள் எம்.பி சிவசக்தி ஆனந்தனின் இடத்தைக் கைப்பற்ற முயலும் போதுதான் ஏன் இவரை கொண்டுவந்தோம் என்று எண்ணத்தோன்றுகின்றது.

இதில் எழுதப்படும் ஏதாவதொரு விடயம் பிழையென மறுத்துவிடமுடியாது. உள்விவகாரங்கள் தொடர்பில் எம்மிடம் சில ஆதாரங்கள் இருக்கின்றன. ஊடக தர்மம் கருதி சில விடயங்களை வெளியிட முடியாது. இருப்பினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் பயணிக்கவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். அப்போதுதான் ஈ.பி.ஆர்.எல்.எவ்; கட்சிக்கு துரோகம் செய்த பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் அடுத்தகட்ட அரசியல் நகர்வில் மண்ணைக் கௌவுவார்கள். எதிர்க்கட்சித் தலைவர், பா.உ. சம்பந்தன், பா.உ சுமந்திரன் பிழை விடுகிறார்கள் என்பதை ஈ.பி.ஆர்.எல்.எவ்; மட்டும்தான் சுட்டிக்காட்டுகின்றது. ஏனைய கட்சிகள் பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக்காட்டும் அரசியலைச் செய்து வருகின்றன. ஈ.பி.ஆர்.எல்.எவ்; கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச்சென்றதை நினைத்து நாம் சந்தோசப்படக்கூடாது. ஒவ்வொரு கட்சியாக பிளவுபட்டிருந்தவேளையில் தேசியத் தலைவர் பிரபாகரன் அனைத்துக் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். அப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 25 ஆசனங்களைக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது 17 ஆசனங்களையே வைத்துக்கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமை மாற்றப்பட்டு மீண்டும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 25 ஆசனங்களை கைப்பற்றும் நிலைமைகள் ஏற்படுத்தப்படவேண்டும். காலத்திற்குக்காலம் அரசியலில் மாற்றம் வழமையானதொன்று. எந்தவொரு விடயமாகவிருந்தாலும் பூனைக்கு மணி கட்டும் ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திகழ்ந்து வருகின்றார். இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது. ஏனைய அரசியல்வாதிகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பயந்தவர்கள். ஒற்றுமை என்றால் ஈ.பி.ஆர்.எல்.எவ்; கட்சியை தமிழ்த்தேசியக்கூட்டமைபை;பில் இருந்து வெளியில் செல்ல விட்டிருக்கக்கூடாது. இராஜதந்திரம் என்பது மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். மீண்டும் மீண்டும் எம்.பி சிவசக்தி ஆனந்தன் அரசியலுக்கு பின்கதவால் வந்தவர்களை இணைத்துக்கொள்வதாகவிருந்தால், தற்போதிருக்கும் நிலையில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி பாதாளத்தைத் நோக்கித்தான் பயணிக்கும்; என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை.

இரணியன்

SHARE