உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மனிப் பேரழிவு நிழத்தப்பட்டு வருகின்ற நிலையில் நாளுக்கு நாள் வைரஸ் தாக்கம் தீவிரமான அதிகரிப்பையே ஏற்படுத்தி வருகின்றது.
இந்த வைரஸ், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் அதி தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில் உலக அளவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 3 ஆயிரத்து 273 பேரின் உயிரை மாய்த்துள்ளது.
இந்த வைரசுக்கு இதுவரை 5 இலட்சத்து 97 ஆயிரத்து 267 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 27 ஆயிரத்து 365 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு பாதிக்கப்பட்டோரில் 17 வீதமாகக் காணப்படுகிறது. மேலும், ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 363 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்துள்ளனர்.
ஏனைய நாடுகளை விடவும் அமெரிக்காவில் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. அத்துடன் நேற்று மட்டும் அங்கு 401 உயிரிழப்பு பதிவாகிய நிலையில் இன்றும் 5 உயிரிழப்புக்கள் பதிவாகி மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 701 ஆக உள்ளது. மேலும் ஒரேநாளில் 18 ஆயிரத்து 691 புதிய நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை இதுவே முதல் தடவை என்கின்ற நிலையில் எதிர்வரும் நாட்களில் அங்கு கடும் பாதிப்பை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான காலத்தில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது. கொரோனா நோய்த் தடுப்புக்காக இரண்டு இலட்சம் கோடி டொலர் மதிப்புடைய மீட்புத் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதேவேளை, ஒரே நாளில் அதிக உயிரிழப்பு இத்தாலியில் நேற்றுப் பதிவாகியுள்ள நிலையில் அங்கு 919 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக 9 ஆயிரத்து 134 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமாக 86 ஆயிரத்து 498 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஸ்பெயினில் நேற்று மட்டும் 773 உயிரிழப்பு பதிவாகி மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது. அங்கு நேற்று 7 ஆயிரத்து 933 பேர் புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டு மொத்தமாக 65 ஆயிரத்து 719 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.
இதையடுத்து, பிரான்ஸிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அங்கு நேற்று மட்டும் 299 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, ஈரானிலும் தொடர்ந்து நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்ற நிலையில நேற்று மட்டும் 144 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 378ஆக பதிவாகியுள்ளது.
மேலும், நெதர்லாந்தில் 112 பேரும், சுவிற்சர்லாந்தில் 39 பேரும், ஜேர்மனியில் 84 பேரும் பெல்ஜியத்தில் 69 பேரும் நேற்று ஒரேநாளில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, ஆசிய நாடுகளில் ஓரளவுக்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரவலால் கணிசமான உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றது.