பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பூசணி விதைகள்

300
பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பூசணி விதைகள்

பூசணி விதைகள்
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) எனப்படும் கருப்பை நீர்க்கட்டி நோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டீன் ஏஜ் வயது பெண்கள் மற்றும் இளம் பெண்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

கர்ப்பப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் நீர்க்கட்டிகள் தோன்றும் நிலைதான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படுகிறது. இந்த பாதிப்பால் சினைப்பையின் சுவர்கள் தடி மனாகி விடும். நீர்க்கட்டிகளின் பெருக்கத்தால் கருமுட்டைகள் உருவாக முடியாத நிலையும் ஏற்படும்.

ஹார்மோன் சம நிலையின்மையையும் எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு சிறந்த உணவுப்பொருளாக பூசணி விதை கருதப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் மிகுந்த இந்த விதைகள் நீண்ட காலமாக இயற்கை வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகிறது. பல நோய்களை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. பெண்கள் பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

1. முடி உதிர்வை குறைக்கும்

பூசணி விதைகளில் குக்குர்பிடாசின் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவும் தனித்துவமான அமினோ அமிலமாகும். மேலும் பூசணி விதைகளில் இருக்கும் வைட்டமின் சி, முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பூசணி விதை எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்தும் வரலாம்.

2. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்

பூசணி விதைகளில் பல அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை இதய செயல்பாட்டையும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை. இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சிறுநீர் பாதை அமைப்பின் சீரான செயல்பாட்டுக்கு உதவக் கூடியவை.

3. கொழுப்பை குறைக்கும்

பெண்கள் உடலில் கொழுப்பு அளவு அதிகரித்தால் கர்ப்பப்பை நீர்க்கட்டி பாதிப்பு ஏற்படக்கூடும். பூசணி விதை, கொழுப்பு அளவை குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் உதவும்.

4. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும்

பூசணி விதையில் உள்ள மெக்னீசியம், உடலில் உள்ள மெக்னீசியத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டால் அது கர்ப்பப்பை நீர்க்கட்டி பாதிப்புக்கு வித்திடக்கூடும். பூசணி விதை ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த உதவும்.

5. ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும்

உடலில் கால்சியம் சத்து குறையும்போது எலும்புகள் தேய்ந்து, பலவீனமடையும் நிலை ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும். மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் இருக்கிறது. பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தலாம். ஏனெனில் பூசணி விதைகள் எலும்பு உருவாகுவதற்கு உதவக்கூடியது. எலும்புகளை வலுப்படுத்தக்கூடியது. மேலும் பூசணி விதைகளில் இருக்கும் டிரிப்டோபன் ஆழ்ந்த துக்கத்தை வரவழைக்கக்கூடியது.

SHARE