பெண்கள் விரும்பும் பிளாட்டினம் நகைகள்…

209
பெண்கள் விரும்பும் வெண்மையாய், பரிசுத்தமாய்... பிளாட்டினம் நகைகள்...

சமுதாயத்தில் வசதி படைத்தவர்களால் மட்டுமல்லாமல் நடுத்தரவர்க்க மக்களாலும் விரும்பி வாங்கப்படும் நகைகள் என்றால் அது பிளாட்டினமாகத்தான் இருக்கும். அதிலும் குறிப்பாகத் திருமணம் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்வுகளில் மணமக்கள் பிளாட்டினத்தால் செய்த மோதிரங்களை மணமகன் மணமகளுக்கும், மணமகள் மணமகனுக்கும் மாற்றி அணிந்து கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். பிளாட்டினத்தில் உள்ள வகை வகையான ஆபரணங்களை இனி பார்க்கலாமா?

மோதிரங்கள்:- பெண்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் மோதிரங்கள் நேர்த்தி மற்றும் ஸ்டைலான தோற்றத்தைத் தருவதாக இருக்கின்றன. ப்ளெயின் வளையங்கள், பிளாட்டினத்தில் வைரக்கற்கள் பதித்து செய்யப்பட்ட வளையல்கள், ஆண் மற்றும் பெண்கள் ஜோடியாக அணிந்து கொள்வது போல் அதாவது ஆணின் கையில் அணிந்திருக்கும் மோதிரத்தில் பாதி இதய வடிவமும் பெண்ணின் கையில் அணிந்திருக்கும் மோதிரத்தில் பாதி இதய வடிவமும் ஆக மொத்தம் இருவரும் தங்கள் கைகளில் அணிந்து கொண்டு சேர்த்து வைத்துப் பார்த்தால் முழு இதய வடிவம் தெரிவது போலும் அழகழகான டிசைன்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பிளாட்டின மோதிரங்களை விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா?

பெண்களுக்கு மோதிரங்களில் இருக்கும் எண்ணற்ற வகைகளைப் போன்றே ஆண்களுக்கென்று வடிவமைக்கப்பட்டிருக்கும் மோதிரங்களிலும் எண்ணற்ற வகைகள் உள்ளன. பிளாட்டின மோதிரங்களை அணிவதால் கைவிரல்களில் எந்த ஒரு அடையாளமோ அல்லது கோடுகளோ ஏற்படுவதில்லை என்பது மற்றொரு சிறப்பு என்றே சொல்லலாம்.

நெக்லஸ்கள்:- பிளாட்டின நெக்லஸ்கள் பெரும்பாலும் பார்ட்டி மற்றும் சிறப்பான விழாக்கள் போன்ற சந்தர்ப்பங்களில் அணிந்து கொள்ள ஏற்றவை என்று சொல்லலாம். இவ்வகை நெக்லஸ்கள் உறுதி, பளபளப்பு மற்றும் பிரதிபலிப்புடன் பெரும்பாலும் நிறமற்ற வைரங்களைக் கொண்டு கண்களைக் கவரும் விதத்தில் மிகவும் நேர்த்தியான மாடல்களில் செய்யப்படுகின்றன. இவ்வகை நெக்லஸ்களை எந்தவொரு இந்திய மற்றும் மேற்கத்திய ஆடை அலங்காரத்துடனும் அணிந்து கொள்ளலாம்.

காதணிகள்:- மெல்லிய வளைவு வடிவ காதணிகள், செலஸ்டியல் காதணிகள், வைரம் பதித்த இலை போன்ற காதணிகள், ஸ்பைரல் ஸ்டார் காதணிகள், பூ வடிவத்தில் மத்தியில் வைரக்கற்கள் பதித்த காதணிகள், கம்பீரமான ரீகல்ட்ராப் காதணிகள், ஜெரேனியம் காதணிகள், லவ்பேர்ட் காதணிகள், பூங்கொத்து வடிவக் காதணிகள் என்று பிளாட்டினக் காதணி மாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். பிளாட்டினக் காதணிகளை அலுவலகம் செல்லும் பெண்கள் அன்றாடம் அணிந்து செல்வதற்கு மிகவும் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். இவை மயக்கும் விதத்தில் நேர்த்தி மற்றும் ரிச்சான தோற்றத்தைத் தருவதாலேயே பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்று சொல்லலாம்.

ப்ரேஸ்லெட்கள்:- பார்ட்டி, பர்த்டே செலிப்ரேஷன்ஸ் மற்றும் கெட்-டு-கெதர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிளாட்டினக் காதணிகள், மோதிரங்கள் மற்றும் பிரேஸ்லெட்டுகள் அணிந்து வந்தாலே ஒரு முழுமையான, நேர்த்தியான கெளரவமான தோற்றத்தைத் தந்து விடுகின்றது என்று சொல்லலாம். வளையல் போல மெல்லிய பிரேஸ்லெட்டுகள் மற்றும் செயின்கள் போன்ற பிரேஸ்லெட்டுகள் என இவை அனைத்துமே மேற்கத்திய ஆடைகளுக்கு மட்டுமல்லாமல் இந்திய ஆடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

பிளாட்டின மூக்குத்திகளை அணிந்து கொள்வது கல்லூரிப் பெண்களிடையே பெரிதும் பிரபலமாக உள்ளது. பலவித நவரத்தினங்கள் கண்ணுக்கே தெரியாதவாறு மிகச்சிறிய அளவில் பதித்து செய்யப்பட்டிருக்கும் மூக்குத்திகளை கல்லூரிப் பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதுப் பெண்களும் விரும்பத்தான் செய்கிறார்கள். இவை மட்டுமல்லாமல் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட செயின்கள், கால் கொலுசுகள், அழகிய வளையல்கள், பென்டெண்டுகள், ஆண்களுக்கான பிளாட்டின பிரேஸ்லெட்டுகள் மற்றும் கஃப்லிங்க்ஸ் என்று பலவித மாடல் மற்றும் டிசைன்களில் பிளாட்டின நகைகள் ஒவ்வொரு வீட்டிலும் வலம்வர துவங்கி விட்டன.

SHARE