பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மலாலா யூசுப்சாய். இப்பகுதி தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு பெண் குழந்தைகள் கல்வி பயில தீவிரவாதிகள் கட்டுப்பாடு விதித்தனர்.
தனது 12 வயதில் அதை எதிர்த்து அவர் குரல் கொடுத்தார். மேலும் பெண் கல்வி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொண்டார்.
எனவே அவரை தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
தற்போது இங்கிலாந்தின் லண்டனில் உள்ள பர்மிங்காமில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அவரது சேவையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இப்பரிசை அவர் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து பெறுகிறார்.
இதற்கிடையே, சிறுமி மலாலா யூசுப்சாய்க்கு கனடா கவுரவ குடியுரிமை வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
அந்த குடியுரிமை வழங்கும் விழா வருகிற 22–ந்தேதி கனடாவில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க மலாலா கனடா செல்ல இருக்கிறார்.
இந்த தகவலை கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மலாலாவுக்கு கனடா மக்கள் சார்பிலும் தனது சார்பிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.