பெர்முடா முக்கோணத்தில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க கடற்படை விமானம் 19ஐ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கருத்துகளில் விவரங்கள்

பட மூலாதாரம்,NOAA
அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணத்தில் உள்ள சார்லஸ்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகம் நோக்கி, 1812ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி கிளம்பிய ‘பேட்ரியாட்’ எனும் கப்பலின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
அந்தக் கப்பலில் இருந்து காணாமல் போனவர்களில் ஒருவர் தியோடீசியா பர் ஆல்ஸ்டன். இவர் அமெரிக்காவின் மூன்றாவது துணை அதிபராக பொறுப்பு வகித்த ஆரோன் பர்ரின் மகள்.
மேற்கண்ட சம்பவம் நடந்து முடிந்து சுமார் ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் பின்னர் இதேபோல இன்னொரு நிகழ்வு நடக்கிறது. 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் பார்படாஸ் தீவிலிருந்து கிளம்பிய யூஎஸ்எஸ் சைக்லோப்ஸ் எனும் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் அதில் பயணம் செய்த சுமார் 300 பேர் என்ன ஆனார்கள் என்ற தகவல் தெரியவில்லை.
போரில் நேரடியாகப் பங்கேற்காத சமயத்தில் அமெரிக்க கடற்படை அதிகமான படை வீரர்களை இழந்தது இந்த சம்பவத்தில்தான்.
1945 டிசம்பர் 5 அமெரிக்க விமானப்படையின் ஐந்து பயிற்சி விமானங்களின் தொகுப்பான ‘ஃப்ளைட் 19’ ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள அமெரிக்க கப்பல் படை விமானத் தளமான ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து கிளம்பிய இந்த விமானங்கள் திரும்பி வரவில்லை.
அவற்றிலிருந்த 14 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. இவர்களைத் தேடுவதற்காக பனானா ரிவர் எனும் கடற்படை விமானத் தளத்திலிருந்து 13 பேரைக் கொண்ட மெரைனர் ரக சிறு விமானம் ஒன்று அனுப்பப்பட்டது. இந்த விமானமும் திரும்பவில்லை. இந்த 13 பேரும் காணாமல் போனார்கள். இவர்கள் நிலைமையும் என்ன ஆனது என்று தெரியவில்லை.
கடல் பரப்பின் மேல் பறந்த விமானங்கள் மற்றும் இந்த வழியாகச் சென்ற கப்பல்கள் இது போல காணாமல் போன பல சம்பவங்களுக்கும் காரணம் ‘பேயின் முக்கோணம்’ (Devil’s Triangle ) என்று மேற்குலகில் பரவலாக அழைக்கப்படும் பெர்முடா முக்கோணம்தான் என்ற செய்தி ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக உலவி வருகிறது.
ஆரம்ப காலத்தில் அமெரிக்க ஊடகங்களில் மட்டுமே எழுதப்பட்டு வந்த இந்தச் செய்திகள், இணையதளம் பரவலான கடந்த 20 ஆண்டுகளில் உலகெங்கும் பரவியது.
இவற்றின் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணங்கள் பலமுறை பிரதான ஊடகங்களிலும் அரசு அமைப்புகளாலும் தெளிவுபடுத்தப்பட்ட பின்னும், சதித்திட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத மற்றும் போலியான செய்திகளே சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன.
‘பெர்முடா ட்ரையாங்கிள்’ எங்கு உள்ளது?

அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் உள்ள பெர்முடா தீவு, கரீபியக் கடலில் அமைந்துள்ள தீவு கூட்டமான போர்ட்டோ ரிக்கா மற்றும் அமெரிக்காவை ஒட்டி அமைந்துள்ள ஃப்ளோரிடா நீரிணை ஆகிய மூன்றையும் இணைக்கும் முக்கோண வடிவிலான கடல் பரப்பு ‘பெர்முடா ட்ரையாங்கிள்’ என்று பரவலாக அறியப்படுகிறது. பெர்முடா ட்ரையாங்கிளின் எல்லையை வெவ்வேறு இடங்களை வைத்து வரையறுப்பவர்களும் உண்டு.
அந்தப் பகுதி வழியாக கடந்து செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களை இழுத்துக்கொள்ளும் பெர்முடா முக்கோணத்தின் மர்ம சக்தி, வேற்று கிரகவாசிகள் அந்த பகுதியில் கொண்டுள்ள ஆதிக்கம், பேய்கள் நடமாட்டம் என பல சதித்திட்ட கோட்பாடுகள் காரணமாக முன்வைக்கப்பட்டன.
இவற்றில் பல கப்பல்களும் விமானங்களும் திரும்ப கிடைக்கவே இல்லை என்பதால் மேற்கண்ட கூற்றுகள் அனைத்தும் உண்மை எனவும் மக்கள் நம்பத் தொடங்கினர்.
ஆனால் கடல் பயணம், காணாமல் போன கப்பல் மற்றும் விமானங்கள் தேடல் உள்ளிட்டவற்றில் தற்போது இருக்கும் அளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படாத காலகட்டம் அது.
1950களின் தொடக்கத்தில் இருந்தே பெர்முடா ட்ரையாங்கிள் மர்மம் குறித்த செய்திகளை அமெரிக்காவின் முக்கிய ஊடகங்கள் வெளியிட தொடங்கியிருந்தன.
1952இல் ஃபேட் எனும் பத்திரிகையில் ஜார்ஜ் சாண்ட் என்பவர் ‘A Mystery at our back door’ என்று ஒரு சிறு கட்டுரையை எழுதி இருந்தார் அதில் ஃப்ளைட்என்று பெயரிடப்பட்ட ஐந்து விமானங்கள் காணாமல் போனதன் பின்னணியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 1964இல் ‘அர்கோசி’ (Argosy) எனும் பத்திரிகையில் வின்சென்ட் காடிஸ் என்பவர் எழுதிய “The
Deadly Bermuda Triangle” கட்டுரையில்இதேபோல தொடர்ச்சியான பல சம்பவங்கள் அந்தப் பகுதியில் நடப்பதை விவரித்திருந்தார்.
அதன் பின்பு அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்த தகவல்களை வைத்து ‘இன்விசிபிள் ஹாரிஸான்ஸ்’ (Invisible Horizons) எனும் நூல் ஒன்றையும் எழுதினார். இதையடுத்து பெர்முடா முக்கோணத்தை மையப்படுத்தி 1960 மற்றும் 1970களிலும் எழுதப்பட்ட நூல்கள் மிகவும் பிரபலம் ஆகின. அவை அனைத்துமே சதித்திட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.
பெர்முடா முக்கோணத்தின் பக்கம் சென்றாலே மரணம் நிச்சயம் என்று ஊடகங்கள் தீவிரமாக செய்தி பரப்பிய காலகட்டத்தில் ஒருவர் அவற்றை சந்தேகித்தார். அவர் பெயர் லாரன்ஸ் டேவிட் குஷே.
அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் நூலக ஆய்வாளராக இருந்த லாரன்ஸ் டேவிட் குஷே 1975ஆம் ஆண்டு ” The Bermuda Triangle Mystery: Solved” எனும் நூல் ஒன்றை எழுதியிருந்தார்.
கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணாமல் போன காலகட்டத்தில் வெளியான செய்திகள் அப்போது நிலவிய காலநிலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பல உண்மைகளை அவர் கண்டறிந்தார்.
லாரன்ஸ் குஷே கண்டுபிடித்த உண்மைகள் என்ன?

பட மூலாதாரம்,Getty Images
கப்பல்கள் அல்லது படகுகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் காணாமல் போனால் அவை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்படும். ஆனால் அதே கப்பல்கள் அல்லது படகுகள் மீண்டும் திரும்ப வந்தால் அவை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை.
மைய நீரோட்ட ஊடகங்கள் மற்றும் நூல்களில் குறிப்பிட்டுள்ள சில சம்பவங்கள் நடக்கவே இல்லை. அந்த சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ள இடங்களில், அந்த நேரத்தில் உள்ளூர் செய்தித் தாள்களில் அவை குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
பெர்முடா ட்ரையாங்கிள் பகுதியில் காணாமல் போன கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை உலகின் வேறு எந்த பகுதியிலும் உள்ள கடல் பரப்பில் காணாமல் போன கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அளவே உள்ளது. அதாவது இந்த பகுதியில் மட்டும் அதிகமான எண்ணிக்கையில் தொலைதல் சம்பவங்கள் நிகழவில்லை.
இந்தப் பகுதி சூறாவளி காற்று அடிக்கடி உண்டாகும் கடல் பரப்பாகும். ஆனால் பெர்முடா முக்கோணம் குறித்த நூல்கள் பெரும்பாலும் இந்த உண்மையை வெளிப்படுத்தவில்லை.
தவறான நம்பிக்கைகள் மற்றும் பொய்யான காரணங்கள் அடிப்படையிலான போலியான கட்டுக்கதைகள்தான் பெர்முடா முக்கோணம் குறித்த கதைகள் என்று தனது நூலில் நிறுவியிருந்தார் லாரன்ஸ்.
கப்பல்களும் விமானங்களும் தொலைந்தது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images
கப்பல் மற்றும் விமானங்கள் காணாமல்போன சம்பவங்களுக்கு அவற்றின் திசை காட்டிகள் சரியாக இயங்காமல் போனது காரணம் என்று பின்னாளில் தெரியவந்தது. புவியின் உண்மையான வடக்கு திசை மற்றும் புவியின் காந்தப் புலத்தின் வடக்கு ஆகியவை ஒரே நேர்கோட்டில் இல்லாத பகுதிகளில் பெர்முடா முக்கோணமும் ஒன்று என்று கூறுகிறது அமெரிக்க அரசின் கடல் சேவைகள் தொடர்பான அமைப்பான நேஷனல் ஓசியன் சர்வீஸ்.
19 விமானங்கள் காணாமல் போன போது கூட அவற்றை வழிநடத்திச் சென்ற விமானத்தின் திசைகாட்டி சரியாக இயங்கவில்லை என்று அமெரிக்க கடற்படை பின்பு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தேடிச்சென்ற விமானம் வெடித்து சிதறியது தான் விபத்துக்கு காரணம் என்றும் அது மாயம் ஆகவில்லை என்றும் அந்த விசாரணை முடிவு கூறுகிறது.
பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதியில் ‘த கல்ஃப் ஸ்ட்ரீம்’ எனும் பெருங்கடல் நீரோட்டம் ஒன்று அமைந்துள்ளது. பெருங்கடல் நீரோட்டம் என்பது கடலுக்குள்ளேயே ஒரு ஆறு ஓடுவதை போல. எனவே இந்தப் பகுதியில் தொலைந்துபோன கப்பல்கள் அல்லது விமானங்களின் பாகங்கள் இந்த பெருங்கடல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அவை காணாமல் போன இடத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம் என பல சூழல்களில் அறிவியலார்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தி கல்ஃப் ஸ்ட்ரீம் வழியாக ஒரு நொடியில் கடந்து செல்லும் நீரின் அளவு உலகெங்கும் உள்ள ஆறுகள் அனைத்திலும் ஒரு நொடியில் கடந்து செல்லும் நீரின் ஒட்டுமொத்த அளவைவிட அதிகம் என்கிறது நேஷனல் ஓசியன் சர்வீஸ்.
கரீபிய கடல்பகுதி 15ஆம் நூற்றாண்டில் இருந்தே கடற்கொள்ளை சம்பவங்களுக்கு பெயர் பெற்றது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து இந்த பகுதி வாயிலாக இன்றும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடல் கொள்ளையர்களால் இந்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டிருக்கவும் அதிக வாய்ப்புண்டு.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டங்களில் இந்த பகுதியில் காணாமல் போனதற்கு காரணம் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களே என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
2018 யுஎஸ்எஸ் சைக்லோப்ஸ் கப்பலும் இத்தகைய ஒரு தாக்குதல் காரணமாகவே மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது அமெரிக்க அரசு கூறுகிறது.
இந்தப் பகுதியில் சூறாவளியின் தாக்குதல் நிகழ்வது மிகவும் இயல்பானது. 1502 ஆம் ஆண்டு ஸ்பெயினுக்கு சொந்தமான கடற்படைக் கப்பல்கள் இம்மாதிரியான சூறாவளி ஒன்றில் இந்தப் பகுதியில் பேரழிவுக்கு உள்ளானது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதியில் சூறாவளியின் காரணமாக பேரழிவுகள் நிகழ்வதற்கான வரலாற்று ஆவணங்கள் மற்றும் செய்திகள் ஏராளமாக உள்ளன.
கப்பல் அல்லது விமானத்தை இயக்கியவர்கள் செய்த தவறு, சாகசம் செய்வதற்காக சூறாவளியின் அருகே கப்பல் அல்லது விமானத்தை செலுத்தும் போது உண்டான விபத்துகளால் ஏற்பட்ட இழப்புகள் ஆகியவையும் பெர்முடா முக்கோண பகுதியில் நடக்கும் சம்பவங்களுக்கு காரணமாக உள்ளன.
பல ஊடகங்களும், நூல் வெளியிட்டவர்களும் பணம் சம்பாதிக்க உதவிய பெர்முடா முக்கோண பகுதியில் மர்மம் எதுவும் இல்லை. நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட எதாவது ஒரு கப்பலோ, விமானமோ அந்தப் பகுதியை மிகவும் பத்திரமாகக் கடந்துகொண்டுதான் இருக்கும்.