பேட்மிண்டனில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பதக்கம்

704
17-வது ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி கால்இறுதியில் தாய்லாந்தை சந்தித்தது. இதன் ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் 21-15, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான ராட்சனோக்கையும், பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட்டில் போர்ன்டிப்பையும் தோற்கடித்தனர். அடுத்த ஒற்றையரில் இந்திய வீராங்கனை துளசியும், இரட்டையரில் சிக்கி ரெட்டி-பிரதன்யா காத்ரே ஜோடியும் தோற்றதால் போட்டி 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. பரபரப்பான கடைசி இரட்டையரில் அஸ்வினி-சிந்து ஜோடி 21-16, 21-17 என்ற நேர்செட்டில் சப்சிரீ-சராலீ ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தை வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. முன்னதாக முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் மக்காவ் அணியை விரட்டி இருந்தது.

அரை இறுதிக்கு முன்னேறியதால் இந்திய பெண்கள் அணி வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தது. ஆசிய விளையாட்டில் பேட்மிண்டனில் இந்திய அணி பதக்கம் வெல்ல இருப்பது 28 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1986-ம் ஆண்டில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது. இந்திய அணி, இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ஆண்கள் அணிகள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோற்று வெளியேறியது. இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், காஷ்யப் ஆகியோர் தங்கள் ஒற்றையர் ஆட்டத்தில் தோல்வி கண்டனர்.

14 அணிகள் மல்லுக்கட்டும் ஹேண்ட்பால் போட்டியில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய ஆண்கள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 20-39 என்ற கோல் கணக்கில் சீன தைபேயிடம் தோல்வி அடைந்தது. அடுத்து இன்று தென் கொரியாவுடன் மோதுகிறது. 9 அணிகள் இடையிலான பெண்கள் பிரிவில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 11-47 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவிடம் வீழ்ந்தது. அடுத்து இந்திய அணி இன்று தாய்லாந்தை சந்திக்கிறது.

16 அணிகள் கலந்து கொள்ளும் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி தனது முதல் லீக் (சி பிரிவு) ஆட்டத்தில் 23-25, 25-18, 25-16, 25-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கை தோற்கடித்தது. 24-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மாலத்தீவை எதிர்கொள்கிறது.

கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 89-49 என்ற புள்ளி கணக்கில் பாலஸ்தீனத்தை எளிதில் வென்றது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நமது அணி, சவூதி அரேபியாவை சந்திக்கிறது.

டென்னிஸ் போட்டியில் பெண்கள் அணிகள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஓமனை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா விளையாடவில்லை.

பளுதூக்குதலில் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் சாம்பியன் சஞ்சிதா சானு 10-வது இடத்தையும், மிராபாய் சானு 9-வது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். இதே போல் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சுகென் தேய் தனது பிரிவில் 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

SHARE