பேஸ்புக்கின் உயிர் காப்பான் தோழன்

385

புதிய கையடக்கத் தொலைபேசி வாங்குவது முதல் காதலி பிரிந்து போன சோகம் வரை இன்றைய இளசுகள், தன் சுக துக்கங்களை முதலில் தெரிவிப்பது பேஸ்புக்கில்தான். எனவே, ஒரு மனிதனின் மனநிலையை பேஸ்புக்கினால் புரிந்து கொள்ள முடியும்.

 

இந்த வகையில் பயனாளிகளின் தற்கொலை எண்ணத்தை சரியான நேரத்தில் புரிந்து கொண்டு அதை தடுப்பதற்கான ‘உயிர் காப்பான் தோழன்’ என்ற புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம் பேஸ்புக் உபயோகிப்பவர் விரக்தியான மனநிலையில் இருந்தால் அவரது நண்பர்களுக்கு அவசர குறிப்புகள் அனுப்பப்படும். டைம்லைனில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் எச்சரிக்கை அறிவிப்புகளுடன் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்பட்டிருந்தால் நாம் அதை டிராப்டவுன் மெனுவில் கிளிக் செய்து அந்த போஸ்டை பற்றி பேஸ்புக்கில் ரிப்போர்ட் செய்யலாம்.

அதேபோல், அந்த போஸ்டை பார்ப்பவர்களும் தற்கொலை செய்ய முற்படும் நபருக்கு மெசேஜ் அனுப்ப முடியும். அவருக்கு ஆதரவாக மற்றொரு பேஸ்புக் நண்பரை தொடர்பு கொள்ளலாம் அல்லது தற்கொலைக்காக அமைக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனில் கனெக்ட் செய்து ரிப்போர்ட் செய்யலாம். பேஸ்புக் அந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்து தற்கொலை செய்ய முற்படும் எண்ணத்தில் உள்ளவருக்கு ஆறுதல் அறிவுரைகளை வழங்கும்.

அந்த நபர் மற்றொரு முறை பேஸ்புக்கை லாக் இன் செய்யும் போது தானாகவே அவரது பேஸ்புக் பக்கத்தில் ஆலோசனைகள் மற்றும் உதவிகளுக்கான வழிமுறைகள் வந்திருக்கும். இதன் மூலமாக பயனாளிகளின் மனநிலையைக் கணித்து அவருக்கு தற்கொலை எண்ணம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், “நீங்கள் தனி நபர் இல்லை. நாங்கள் (பேஸ்புக்) உங்கள் மீது அக்கறையோடு இருக்கிறோம். உங்களுக்கு எதுவும் உதவி தேவைப்படுகிறதா என்ற குறிப்பின் கீழ் உங்கள் நண்பர்களோடு பேச வேண்டுமா? அல்லது உங்களுக்கு தேவையான தகவல் வேண்டுமா” என்று கேட்டு உதவி தேவைப்படுவோரை மனநல ஆலோசகருடன் தொடர்பு கொள்ள வைக்கும்.

யாராவது “என்ன வாழ்க்கைடா இது. இந்த வாழ்க்கை வாழ்றதுக்கு பேசாம செத்துடலாம்” என்பது போல ஸ்டேட்டஸ் போட்டால் அவர்களை உடனடியாக உள்ளூர் அவசர உதவி மையத்தை அணுகும் படி அறிவுறுத்தும். இதற்காக பல்வேறு தற்கொலை தடுப்பு மையங்களுடன் இணைந்து 24 மணி நேரமும் வேலை செய்யும் குழு ஒன்றை பேஸ்புக் அமைத்துள்ளது.

2011-ம் ஆண்டிலிருந்து மேற்கொண்ட பல ஆராய்ச்சிகளுக்கு பிறகே இந்த புதிய சேவையை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவை பிறகு உலகம் முழுவதிலும் பேஸ்புக் உபயோகிப்பவர்களுக்கு பயன்படும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE