விவாகரத்துக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்கிற சிந்தனையுடன்தான் வாழ தலைப்பட்டிருக்கிறது இந்தத் தலைமுறை. இந்தத் தலைமுறையினர், பார்த்ததும் காதலிக்கிறார்கள். குடும்பம் நடத்த ஆரம்பித்ததும் ஒருவரின் ப்ளஸ், மைனஸ் தெரிய ஆரம்பிக்க, ‘நீயும் சம்பாதிக்கிறாய், நானும் சம்பாதிக்கிறேன்.
உன் தவறுகளை எதற்காக நான் சுமக்க வேண்டும், பொறுத்துக் கொள்ள வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. இதுவே விவாகரத்திற்கு முதல் படி. இன்றைய பெண்ணின் தேவை மாறி வருகிறது என்பதை ஓர் ஆண் புரிந்து கொள்ளாததுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்.
அவன் பார்த்து வளர்ந்த அவன் அம்மாவைப் போல்… வெறும் உணவும், உடையும், நகையும் பெண்ணின் தேவை அல்ல இன்று. அவள் எதிர்பார்ப்பது சமத்துவம், சமமான மரியாதை. காரணம், பெண்ணும் இன்று ஆணுக்கு நிகராக சம்பாதிக்கிறாள், படித்து இருக்கிறாள், உலகம் தெரிந்து இருக்கிறது. அதனால் பெண் அட்வான்ஸ்டாக வளர்ந்துவிட்டாள்.
ஆனால்… ஒரு ஆண், ஒரு பெண்ணை நடத்தும் சிந்தனையில் இன்னும் பத்து வருடங்கள் பின்தங்கிதான் இருக்கிறான். வெறும் மல்லிகைப் பூவுக்கும் சினிமாவுக்கும் சமாதானமாகிப் போகிற பெண்தான் அவனுடைய சிந்தனையில் இருக்கிறாள்.
ஆனால், பெண்ணின் மனதில் இருப்பதோ… இந்தத் துணை, நம்மை சரிசமமாக நடத்துவான் என்கிற நம்பிக்கைதான். இந்த எதிர்பார்ப்புகள் எதிரெதிர் திசையில் செல்லும்போது, விவாகரத்துதான் வழி என்று தீர்மானிக்கிறார்கள்.
இது தவறு, சரி என்று சுட்டிக் காட்டுவதற்கும், வழி காட்டுவதற்கும் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, மாமா, அத்தை என்று உறவுகள் அவர்கள் அருகில் இல்லை. அல்லது அந்த உறவுகளுக்கு இவர்களின் பிரச்சனை போய் சேருவதில்லை. இன்றைய தலைமுறையினர் மனதுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தனித் தீவாகத்தான் வாழ்கிறார்கள்.
மாறும் குடும்பச் சூழ்நிலையை, தம்பதிகள் உணர்ந்து, இந்தத் திருமண உறவை இறுதி வரை எடுத்துச் செல்வதற்கு மனதளவில் முயன்றால்தான் விவாகரத்துகள் குறையும். விவாகரத்து செய்வதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, சம்பந்தப்பட்ட அப்பாவும், அம்மாவும் உணர வேண்டும்!.