ஐ.நா. பொதுக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூயோர்க்கில் வைத்து இன்று உலக நாடுகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்திருக்கிறார்.
ஜனாதிபதி, நேபாள பிரதம அமைச்சர் சுசில் கொய்ரால, கொலம்பியன் ஜனாதிபதி ஜூவான் மனுவெல் சந்தோஷ் கால்டெரன் மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரைச் சந்தித்தார்.
ஜனாதிபதி ராஜபக்ஷவும் நேபாள பிரதம அமைச்சர் கொய்ராலவும் எதிர்வரும் சார்க் உச்சி மகாநாடு உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள்பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
18ஆவது சார்க் உச்சி மகாநாடு இவ்வருடம் நவம்பர் மாதம் காத்மண்டுவில் நடைபெறும். அந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கொலம்பியன் ஜனாதிபதி கால்டெரன் அவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது தென் அமெரிக்க நாடுகளுடனான நல்லுறவைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ கலந்துரையாடினார்.
இம்மாதம் ஆரம்பத்தில் இலங்கைக்கான கொலம்பியன் தூதுவர் திருமதி மொனிக்கா லென்செட்டா மியுட்டிஸ் கொழும்பில் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தனது நியமனக் கடிதத்தை கையளித்தார்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் சர்மாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பொதுநலவாய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி கலந்துரையாடினார். அதில் பொதுநலவாய அரச தலைவர்களின் மகாநாட்டின் சீராக்கம் சம்பந்தமாக இவ்வார இறுதியில் நடைபெறவிருக்கும் கூட்டம் சம்பந்தமாகவும் 2015ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இவ் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீர்ப்பாசன நீர் வளங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தகு வலு அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுகா செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன, ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் திரு.பிரசாத் காரியவசம், பிரதி நிரந்தர பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
– See more at: http://www.newstamilwin.com/show-RUmsyJRYKVjr6.html#sthash.Jd0cBdbA.dpuf