பொது பல சேனா சர்ச்சை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று வெளியிட்ட “விஷேட ஊடக அறிக்கை”

640

902-2
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு,
கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்களை ஏற்று அவதானமாகவும், நிதானமாகவும் நடந்து நாட்டின் அமைதிக்கும், சமாதானத்துக்கும், சகவாழ்விற்கும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
எத்தகைய பிரச்சினையாயினும் முஸ்லிம்களாகிய நாம் அல்-குர்ஆன், அஸ்-ஸூன்னாவின் அடிப்படையிலும், ஸஹாபாக்களினதும், ஸலபுஸ்ஸாலிஹீன்களினதும் முன்மாதிரிகளின் அடிப்படையிலுமே அதற்கான தீர்வைக் காண முயற்சிக்க  வேண்டும் என்பதை ஜம்இய்யதுல் உலமா அனைத்து முஸ்லிம்களுக்கும் நினைவூட்ட விரும்புகின்றது.
பல சமூகங்களுடனும், சமயத்தவர்களுடனும் சேர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் சமூக ஒற்றுமையைக் கடைபிடிக்கும் அதே நேரத்தில் சகோதர இனங்களோடும், பிற சமயத்தவர்களோடும் நல்லுறவு பேணி நடந்து கொள்கின்றனர் என்பது வரலாற்று உண்மையாகும். இதனை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஜம்இய்யா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
எச்சந்தர்பத்திலும் ஒரு முஸ்லிம் மாற்றுமத சகோதரர்களின் தெய்வங்களை இம்சிக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாற்று மதங்கள் விடயத்தில் அல்-குர்ஆன் பின்வரும் அழகிய வழிகாட்டலை எமக்குத் தந்திருக்கிறது,
‘அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படி நீங்கள் திட்டினால்) அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்’ (அன்ஆம்: 108)
எந்தவொரு மதத்தையும் ஏசுவதையோ, தரக்குறைவாகப் பேசுவதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆயினும், இத்தகைய மதச்சகிப்புத்தன்மையையும், மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் போதிக்கின்ற இஸ்லாத்தையும், முஸ்லிம்களின் தூய வேதமான அல்-குர்ஆனையும் அண்மைக் காலமாக ‘பொது பல சேனா’ என்ற அமைப்பும், அதனைச் சார்ந்தவர்களும் கீழ்த்தரமாக சாடியும், அடிப்படையில்லாத போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விமர்சித்தும் வருகின்றமை முஸ்லிம் சமூகத்தை விசனம் கொள்ளச் செய்துள்ளது.
அல்-குர்ஆன் ‘தகீய்யா’ எனும் ஒரு கொள்கையைப் போதிப்பதாகவும் அக்கொள்கை பிற சமயத்தவர்களை ஏமாற்றுவதற்கும், அவர்களின் உடமைகளைக் கைப்பற்றுவதற்கும், அவர்களது சொத்துகளை அபகரிப்பதற்கும் அனுமதிப்பதாகவும் அமைந்திருக்கின்றது என சமீபத்தில் ‘பொது பல சேனா’வின் செயலாளர் அல்-குர்ஆன் மீது மிகப் பெரும் அபாண்டமொன்றை சுமத்தியுள்ளார். இவ்வாறான கூற்று உலக முஸ்லிம்களை பொதுவாகவும், இலங்கை வாழ் முஸ்லிம்களைக் குறிப்பாகவும் மிகவும் மனவேதனையடையச் செய்துள்ளது.
இந்த மத நிந்தனை தொடர்பான விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினதும் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் அவர்களினதும் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உரிய தரப்பினர் காத்திரமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்வர் என ஜம்இய்யா எதிர்பார்க்கிறது. பல முஸ்லிம்கள் பொலிஸ் நிலையங்களில் முறையீடுகளை பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, இலங்கை வாழ் முஸ்லிம்கள் என்றும் போல நிதானமாகவும், பொறுமையுடனும் நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக்கௌ;கிறது. மேலும் எதிர்வரும் ஜூம்ஆத் தொழுகையில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு ஏற்படுவதற்காகவும்; நாட்டின் அமைதிக்காகவும் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.
 அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
SHARE