பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அமைச்சு வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஆகியோரின் பதவிகளில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளது.
அண்மையில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இவர்களின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
தங்களது சொத்துக்களை பாதுகாப்பதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக அண்மையில் பல அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
தகுதியில்லாத பொலிஸ் உத்தியோகத்தர்களை சிபாரிசின் அடிப்படையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாக அரசியல்வாதிகள் நியமித்துக் கொண்டதன் விளைவே இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணம் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்களின் காரணமாக பொலிஸ் மா அதிபருக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது. பொலிஸ் மா அதிபரும், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பிரயோகித்த அழுத்தம் காரணமாக காலி முகத் திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க முடியவில்லை என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.