தெளிவான உளவுத் தகவல் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் ஊடாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நேற்று உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தமது பிள்ளைகள் இருவரை இழந்த தந்தையான சமன் நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் என இருவர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதான பரிசீலனைகளே அந்த திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
நேற்றைய தினம் இந்த மனுக்கள் உயர் நீதிமன்றின் நீதியரசர்களான புவனேக அலுவிகார, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.
இதன்போது முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஷ பிரேமரத்னவும், கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வர்ணசூரியவும் ஆஜராகினர்.
மனுவானது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஷ பிரேமரத்ன, தனது சேவை பெறுநருக்கு உரிய முறையில் அறிவித்தல் கிடைக்கவில்லை எனவும் பத்திரிகை செய்திகளைப் பார்த்தே தான் மன்றில் ஆஜரானதாகவும் கூறினார்.
இந்நிலையில் பொறுப்புக் கூறத்தக்க தரப்பாக மனுவில் பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு உரிய முறையில் அறிவித்தலைக் கையளிக்குமாறு மனுதாரர் தரப்புக்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி ஆராய்வதாக அறிவித்தது.