கடந்த மாதம் 14ஆம் தேதியன்று நைஜீரியாவின் சிபோக் கிராமத்தில் இருந்த உறைவிடப் பள்ளியில் இருந்து இந்த இயக்கத்தினர் 270 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர். இவர்களில் 53 மாணவிகள் தப்பிவிட்ட நிலையில் மற்றவர்களை விடுவிக்க நைஜீரியாவின் சிறையில் உள்ள போராளிகளை விடுதலை செய்யுமாறு இவர்கள் கோரினர். ஆனால், அதிபர் குட்லக் ஜோனாதன் இதற்கு மறுத்துவிட்டார்.
இந்த நெருக்கடியை மிகவும் மெதுவாக அரசு கையாளுவதாக கண்டனம் எழுப்பியுள்ள உலக நாடுகள், தாங்களும் மாணவிகளை மீட்கும் வேட்டையில் இறங்கியுள்ளன. கடந்த வியாழக்கிழமை அன்று கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் நிபந்தனை ஏதுமின்றி அவர்களை விடுவிக்குமாறு போராளிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் போகோ ஹராம் தீவிரவாத இயக்கத்தின் அச்சுறுத்தல் குறித்த பாதுகாப்பு உச்சி மாநாட்டை பிரான்ஸ் இன்று தொடங்கியுள்ளது.
இதில் பங்கு பெறுவதற்காக அதிபர் குட்லக் ஜோனாதன் இன்று பாரிஸ் சென்றுள்ளார். நேற்று பாரிஸ் செல்லும்முன் மாணவிகள் கடத்தப்பட்ட சிபோக் கிராமத்திற்கு சென்று வருவதாக இருந்த அதிபர் ஜோனாதன் பாதுகாப்பு கருதி பின்னர் தனது பயணத்தை ரத்து செய்தார். பிரான்சில் அந்நாட்டு அதிபர் பிரான்க்காய்ஸ் ஹாலன்டே தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் நைஜீரியாவுடன் அதன் அண்டை நாடுகளான பெனின், கேமரூன், நைஜர், சாட் ஆகிய நாடுகள் கலந்துகொள்கின்றன. இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கு பெறுகின்றனர்.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், போகோ ஹராம் உட்பட மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் பயங்கரவாதக் குழுக்கள் ஏற்படுத்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் புதிய வழிமுறைகள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.