இலங்கையின் உத்தியோக முறை ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத் தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவழித் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் பொருட்டே வம்சாவழித் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல் நூற்றாண்டுகளாகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர் இலங்கையின் பிற பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
பொதுப் பொருளில் இலங்கையில் குடியுரிமையுடைய, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருமே இலங்கைத் தமிழர் ஆதல் வேண்டும் எனினும், இலங்கையைப் பொறுத்தவரை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இலங்கை முசுலிம்கள் மொழிவழியே தம்மை அடையாளம் காண்பதில்லை. அவர்களை இலங்கை முசுலிம்கள் என வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் தமிழ் பேசும் முசுலிம்களும், முன்னர் குறிப்பிட்ட அண்மையில் இலங்கையைத் தாயகமாக ஏற்றுக்கொண்ட மலையகத் தமிழர்களும், இலங்கைத் தமிழர் என்னும் வகைப்பாட்டினுள் அடங்குவது இல்லை. பிரதேசம், சாதி, சமயம் முதலியன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், இலங்கைத் தமிழரிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும், மொழியாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையிலும் ஒரே குழுவாக இலங்கையின் பிற இனத்தவரிடம் இருந்து தனித்துவமாகக் காணப்படுகின்றனர்.
1948ல் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்ற காலத்தில் இருந்து, தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அரசியல் உரிமைக்கான அமைதிவழிப் போராட்டங்கள் 1983க்குப் பின்னர் உள்நாட்டுப் போராக மாறியதால், இலங்கைத் தமிழர் பலர் இலங்கையை விட்டு வெளியேறி, இந்தியா அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ இலங்கைத் தமிழரில் மூன்றிலொரு பங்கினர் இலங்கையை விட்டு வெளியேறிப் பிற நாடுகளில் வாழ்கின்றனர். 800,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் இவ்வாறு வெளிநாடுகளில் வாழ்வதாகச் சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. தவிர உள்நாட்டுப் போரில் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழந்தும் உள்ளனர்.[12] 2009 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டப் போர் இலங்கைத் தமிழரின் பாரிய உயிரிழப்புகளுக்கும் உடமை இழப்புகளுக்கும் மத்தியில் இலங்கை அரசாங்கத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துப் போரை நிறுத்திய போதிலும், இலங்கைத் தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளன.
இலங்கைத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு
இலங்கைத் தமிழர்களுடைய தோற்றம் குறித்து அறிஞர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. முறையான சான்றுகள் இல்லாததே இதற்கு முக்கியமான காரணம். இன உணர்வுகளின் பாற்பட்ட அரசியல் பின்னணியில் அறிஞர்கள் நடு நிலை நின்று சிந்திக்கத் தவறுவதும் இன்னொரு குறிப்பிடத்தக்க காரணம். இது தவிர அரசியல் காரணங்களுக்காக இலங்கைத் தமிழர் பகுதிகளில் முறையான அகழ்வாராய்ச்சிகளுக்கு இலங்கை அரசாங்கங்கள் இடந்தருவதில்லை என்ற குற்றச் சாட்டுகளும் உள்ளன. இலங்கையின் வரலாறு கூறும் பண்டைய நூலான மகாவம்சம் இலங்கை வம்சாவழித் தமிழருடைய தோற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் எதையும் தரவில்லை. அடிப்படையில் மகாவம்சம் பௌத்த மதத்தையும், சிங்களவர் பற்றியுமே கவனம் செலுத்தியுள்ளது. அதன் மேற்படி குறிக்கோளுடன் சம்பந்தப்பட்ட அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் மட்டுமே தமிழர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சிங்கள இனத்தின் ஆதிபிதாவாக மகாவம்சம் குறிப்பிடும் விசயன் காலத்தில் கூட திருமணத் தொடர்புகள் காரணமாகப் பாண்டிநாட்டிலிருந்து பெருமளவில் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. எனினும் இவர்கள் சிங்கள இனத் தோற்றத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருப்பார்கள் என்று கருதுவதே பொருத்தம். எனினும் இத்தகைய குறிப்புக்களிருந்து, இலங்கை பற்றித் தமிழ்நாட்டினருக்கு நல்ல பரிச்சயம் இருந்ததென்பதுவும், இலங்கைத் தீவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான தொடர்புகள் மக்கள் இலகுவாகப் போக்குவரத்துச் செய்யக் கூடிய அளவில் இருந்தது என்பதையும் தெளிவாக்குகின்றது.
இது மட்டுமன்றிக் கிறித்துவுக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே அனுராதபுரத்தைக் கைப்பற்றிப் பல தமிழர்கள் ஆண்டிருப்பதும் மகாவம்சம் தரும் குறிப்புக்களிருந்து அறியவருகின்றது. பண்டைக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுகமாக விளங்கிய மாதோட்டத்தில் தமிழ்நாட்டு வணிகர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கக் கூடும் என்பதும் பல ஆராய்ச்சியாளர் கருத்து. கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை இலங்கையின் தலைநகரமாயிருந்த அநுராதபுரத்தில் மிக முற்பட்ட காலங்களிலேயே தமிழ் வணிகர்களும், சிற்பிகளும் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு.
கிறித்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே இன்றைய யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடுமென்பது யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய செ. இராசநாயக முதலியார் அவர்களுடைய கருத்து. எனினும், இதற்கான ஆதாரங்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தமிழர் பரவலாக வாழ்ந்து வந்தபோதிலும், அனுராதபுரம், பொலநறுவை ஆட்சிகளின் வீழ்ச்சியுடன் சிங்களவர் அதிகாரம் தெற்கு நோக்கி நகர்ந்தபோது நாட்டில் புவியியல் ரீதியான தமிழ், சிங்கள முனைவாக்கம் தீவிரப்பட்டிருக்கக் கூடும். இதுவே 12ஆம் நூற்றாண்டளவில் யாழ்ப்பாண அரசின் தோற்றத்துக்கும் வித்திட்டது எனலாம்.
இதன் பின்னரும் பெருமளவில் தமிழர் குடியேற்றம் இடம் பெற்றது பற்றிய செய்திகளைப் பிற்காலத்தில் யாழ்ப்பாண வரலாறு கூற எழுதப்பட்ட வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிற் காணலாம். ஆரம்பத்தில் வன்னியர் குடியேற்றமும், தொடர்ந்து வேளாளர் குடியேற்றங்களும் ஏற்பட்டதாக இந்நூல்கள் மூலம் தெரிய வருகின்றது. இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகளிலும் பெருமளவு தமிழர் குடியேற்றங்கள் இருந்தன. திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற குடியேற்றங்கள் பற்றி வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
வரலாற்றுக்கு முந்திய காலம்
இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள பொம்பரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட அடக்கத் தாழி. இது கிறித்துவுக்கு முன் ஐந்து தொடக்கம் 2 நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்தது. தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அடக்கத் தாழிகளை ஒத்தது.[13]
இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடர்பில் பல அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையின், வடக்கு, வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளும், தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருநெல்வேலிக் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளும் ஒரே தன்மையானவையாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் காணப்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அடக்கக் களங்களை ஒத்த களங்கள் இலங்கையின் வடமேற்குக் கரையோரம் பொம்பரிப்பிலும், கிழக்குக் கரையோரம் கதிரவெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்ககாலப் பாண்டிய இராச்சியப் பகுதியில் காணப்படும் அடக்கக் களங்களோடு குறிப்பிடத் தக்க வகையில் ஒத்துள்ள இக்களங்கள் முறையே கிமு 5ஆம் நூற்றாண்டையும், கிபி 2 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவை. இவற்றோடு பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அம்சங்கள் இலங்கையில் மன்னார், கந்தரோடை, ஆனைக்கோட்டை, வேலணை, காரைதீவு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பூநகரி, முல்லைத்தீவு, வவுனியா, மாமடு, பறங்கியாறு, அனுராதபுரம் ஆகிய இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அரிக்கமேட்டில் காணப்பட்டதை ஒத்த கிமு 1300ஐச் சேர்ந்த மட்பாண்ட வரிசைகள் யாழ்மாவட்டத்தில் கந்தரோடையில் கண்டறியப்பட்டுள்ளன.
இலங்கையின் ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால முத்திரை
வேலணை சாட்டிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பிரிவினால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களும் மனித எலும்புகளும் சாட்டியை அண்டிய பிரதேசத்தில் முதற் சங்ககாலம் தொட்டு நாகரீகமடைந்த மக்கள் வாழ்ந்தாக அறியமுடிகின்றது[மேற்கோள் தேவை].
இவற்றை அடிப்படையாகக் கொண்டு, அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழி பேசிய மக்களின் இனத்தவரே என்னும் கருத்தைச் சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.[17] வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் பரவி வாழ்ந்த இடைக் கற்கால மக்களின் வழித் தோன்றல்களே இன்றைய இலங்கைத் தமிழரும், சிங்களவரும் என்பதும், தமிழ் பேசுவோரோ அல்லது பிராகிருத மொழி பேசுவோரோ பெருமளவில் இலங்கையில் குடியேறி அங்கிருந்த மக்களை அகற்றவில்லை என்பதும் இந்திரபாலாவின் கருத்து.[18] கிறித்தவ ஆண்டுக்கணக்கின் தொடக்கத்தை அண்டிய காலப் பகுதியில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் தெற்குப் பகுதிகள், இலங்கை என்பன ஒரே பண்பாட்டு வலயமாக இருந்தன என்றும், தமிழும், பிராகிருதமும் மக்களின் இடப் பெயர்வினால் அன்றிப் பண்பாட்டுப் பரவலினாலேயே இலங்கைக்கு வந்தன என்றும் அவர் கூறுகிறார்
வரலாற்றுக் காலம்
வடக்கே பூநகரியில் இருந்து தெற்கே திசமகாராமை வரை எழுத்துக்களோடு கூடிய மட்பாண்டத் துண்டுகள் பல கிடைத்துள்ளன. இவற்றுள் குடிப்பெயரான வேள என்பதும் காணப்படுகின்றது. இது பண்டைத் தமிழ் நாட்டில் இருந்த வேளிர் குடியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பண்டைத் தலைநகரமான அனுராதபுரத்திலும், இலங்கையின் பிற பகுதிகளிலும், கிமு 2 ஆம் நூற்றாண்டில் இருந்தே தம்மை தமேலா அல்லது தமேதா (பிராகிருத மொழியில்) என அழைத்துக்கொண்டவர்கள் (தமிழர்) வாழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இவ்வாறான ஐந்து கல்வெட்டுக்களில் இரண்டு வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரிய புளியங்குளத்திலும், ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவிலையிலும், ஒன்று அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்னும் இடத்திலும், இன்னொன்று பண்டைய தலைநகரமான அனுராதபுரத்திலும் கண்டெடுக்கப்பட்டவை. இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திசமகாராமையில் நடந்த அகழ்வாய்வுகளின்போது கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் வெளியிடப்பட்ட உள்ளூர் நாணயங்கள் கிடைத்தன. இவற்றில் சிலவற்றில் தமிழர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் இலங்கைத் தீவின் தெற்குக் கரையோரத்தில் தமிழ் வணிகர்கள் முனைப்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்தமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது. விசாகா என்னும் தமிழ் வணிகனின் பெயரும், உள்ளூரில் வாழ்ந்த சமன என்னும் தமிழன் ஒருவனின் பெயரும், கரவா என்னும் தமிழ் மாலுமி ஒருவனின் பெயரும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. கிமு இரண்டாம் நூற்றாண்டில் தமிழர் தோணிகளில் இலங்கைக்குக் குதிரைகளைக் கொண்டு வருவது குறித்த இலக்கியச் சான்றுகள் உள்ளன. பெரும்பாலும், இக்குதிரைகள் குதிரைமலை என இன்று அழைக்கப்படும் இடத்தில் இறக்கப்பட்டிருக்கலாம். வரலாற்றுப் பதிவுகளின்படி, கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழ் நாட்டில் இருந்த தமிழ் இராச்சியங்கள் இலங்கை விடயங்களில் நெருக்கமான ஈடுபாடு கொண்டிருந்தமை தெரிய வருகின்றது. கிறித்துவுக்கு முந்திய சில நூற்றாண்டுகள் இலங்கையின் வட பகுதியில் இருந்த குதிரைமலை, கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய நகரங்களுக்கும், தமிழ் நாட்டு நகரங்களுக்கும் இடையே தமிழ் வணிகர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலமும், தமிழ்க் காப்பியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டு இருப்பதில் இருந்தும், யாழ்ப்பாணக் குடாநாடு, முத்து, சங்கு போன்ற கடல்படு பொருட்களுக்கான பன்னாட்டுச் சந்தையாக இருந்ததும், தமிழ் வணிகர்கள் இங்கே வணிகத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவருகிறது.
சிங்களவர்களின் வரலாறு கூறும் நூலான மகாவம்சம், கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே பல தமிழர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டமை குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. சேன, குத்தக என்னும் இரு தமிழர்கள் கிமு 177 தொடக்கம் கிமு 155 வரை 22 ஆண்டுகால ஆட்சி புரிந்துள்ளனர். சோழநாட்டைச் சேர்ந்த எல்லாளன் என்பவன் கிமு 145 காலப்பகுதியில் இலங்கையைக் கைப்பற்றி 44 ஆண்டுக்காலம் சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளான். பின்னர் கிமு 104ல் ஏழு தமிழர்கள் அநுராதபுரத்தைக் கைப்பற்றி 14 ஆண்டுகளுக்கும் மேலாக கிமு 87 வரை இலங்கையை ஆட்சி செய்துள்ளனர். கிமு 47ஐ அண்டிய காலத்திலும் இரண்டு தமிழர்கள் ஏறத்தாள இரண்டு ஆண்டுகாலம் இலங்கையை ஆண்டுள்ளனர். இவற்றை விட, கிபி முதலாம் நூற்றாண்டுன் பின்னர், சிங்கள அரச குடும்பங்களில் ஏற்பட்ட வாரிசுப் போட்டிகள் காரணமாக அரசிழந்தவர்கள் தமிழ் நாட்டில் இருந்து படை திரட்டி வந்து ஆட்சியைப் பிடித்தமை பற்றிய குறிப்புக்களும் உண்டு.
மத்திய காலம்
பொலநறுவையில் கண்டெடுக்கப்பட்ட தமிழில் எழுதப்பட்ட “வேளக்காரர் கல்வெட்டு”
.கிபி 10 ஆம் நூற்றாண்டிலும், 11 ஆம் நூற்றாண்டிலும், முதலாம் இராசராச சோழன் காலத்திலும், அவனது மகனான இராசேந்திர சோழன் காலத்திலும் இரண்டு முறை ஏற்பட்ட சோழர் படையெடுப்புக்களின் மூலம், இலங்கை முழுவதும் சோழப் பேரரசின் ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டது. சோழர்கள் 77 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தனர். கிபி 1215ல் தமிழ் நாட்டில் வலுவான நிலையில் இருந்த பாண்டியர்கள் இலங்கை மீது படையெடுத்து அதன் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஆண்டனர். மேற்படி ஆட்சிக் காலங்களில் ஏற்கெனவே இருந்தவர்களுடன் படைவீரர்களாகவும் தமிழர்கள் வந்திருப்பர். சோழ, பாண்டிய ஆட்சிகள் முடிந்த பின்னரும் இவர்களில் ஒரு பகுதியினர் இலங்கையிலேயே தங்கிவிட்டனர். தவிர, இக்காலங்களில் தமிழ் வணிகர்களின் வணிக நடவடிக்கைகளும் அதிகரித்துக் காணப்பட்டன.
பொலநறுவையில் உள்ள சோழர்காலச் சிவன் கோயில் ஒன்றின் அழிபாடு
சோழரின் தலையீடுகளைத் தொடர்ந்து தலைநகரம் அனுராதபுரத்தில் இருந்து தெற்கு நோக்கிப் பொலநறுவைக்கு நகர்ந்தது. 1215 ஆம் ஆண்டில் கலிங்க நாட்டைச் சேர்ந்த மாகன் என்பவன் தென்னிந்தியாவில் இருந்து பெரும் படை திரட்டி வந்து பொலநறுவையைக் கைப்பற்றினான். ஆனாலும், அவனால் அதை நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. சிங்கள அரசனின் தாக்குதல்களைத் தொடர்ந்து மாகன் வடக்கு நோக்கி நகர்ந்து யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டதாகத் தெரிகிறது. அதே வேளை, சிங்கள அரசர்களும் பாதுகாப்புக் கருதி மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து தம்பதெனியா என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினர். அநுராதபுரம், பொலநறுவை ஆகிய பழைய நகரங்களை உள்ளடக்கிய பெரும் பரப்பு கைவிடப்பட்டு வட பகுதிக்கும், தென் பகுதிக்கும் இடையே வலுவான தடுப்பாக அமைந்தது. இது, தீவின் வடக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த தமிழர்களும், தெற்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த சிங்களவர்களும் தனித்தனியாக வளர வாய்ப்பளித்தது. இதனால்,13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தனியானதும், வலுவானதுமான யாழ்ப்பாண இராச்சியம் உருவானது. தனித்துவமான இலங்கைத் தமிழர் சமுதாயத்தின் உருவாக்கத்துக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது எனலாம்.
யாழ்ப்பாண இராச்சியக் காலம்
13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து 1619 ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ 370 ஆண்டுகளுக்கு மேல் யாழ்ப்பாண இராச்சியம் நிலைத்திருந்தது. இடையில் ஒரு குறுகிய காலம் கோட்டே இராச்சியத்தின் சார்பில் சப்புமால் குமாரயா என்பவனால் ஆளப்பட்டு வந்தது. 1590ல் இருந்து 1619 வரை தமிழ் அரசர்களே ஆண்டுவந்த போதும், போர்த்துக்கேயருக்குத் திறை செலுத்தும் ஒரு அரசாகவே இருந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றத்துக்கு முன்னர், தமிழர் இலங்கையில் பரவலாக வாழ்ந்து வந்ததனால் தமக்கெனத் தனியான சமூக நிறுவனங்களை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கவில்லை. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றத்துடன், இலங்கைத் தமிழர் இலங்கையில் ஒரு தனித்துவமான சமூகமாக ஒழுங்கமைக்கப்பட்டது மட்டுமன்றி ஓரளவுக்குப் பொதுவான வழக்கங்களையும், சமூக நடைமுறைகளையும் உருவாக்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது. வன்னிப் பகுதி, திருகோணமலை என்பன யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்தபோதும் சிறுசிறு பகுதிகளாக வன்னியத் தலைவர்களினால் ஆளப்பட்டு வந்தது. மட்டக்களப்பு பல வேளைகளில் கண்டி இராச்சியத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் செயற்படவேண்டி இருந்தது. இதனால், மொழி, மதப் பொதுமைகள் இருந்தபோதும் வழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தன. அதிக தொலைவில் இருந்ததாலும், ஓரளவுக்கு வேறுபாடான புவியியல் நிலைமைகள், சமூகக் கூட்டமைவு என்பவற்றாலும் மட்டக்களப்புப் பகுதியில் பல தனித்துவமான வழக்கங்கள், நடைமுறைகள் என்பன நிலை பெறுவதும் சாத்தியம் ஆயிற்று.
குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான மரபுவழிச் சட்டமாக உருவான தேசவழமை, யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலேயே பல்வேறு வழக்கங்களை உள்வாங்கி உருவானது எனலாம். ஆனாலும் மட்டக்களப்புப் பகுதியில் வேறு வழமைகள் நடைமுறையில் இருந்தன. இவற்றின் தொகுப்பே பிற்காலத்தில் முக்குவர் சட்டம் எனப்பட்டது.
குடியேற்றவாதக் காலம்
1540களில் போர்த்துக்கேயரின் கவனம் யாழ்ப்பாண இராச்சியத்தின் பக்கம் திரும்பியது. 1544லும், பின்னர் 1560இலும் அவர்களுடைய படையெடுப்புகள் முழு வெற்றி பெறவில்லை. ஆனால், 1590ல் நிகழ்ந்த படையெடுப்பின் மூலம் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு இன்னொரு இளவரசனை அரசனாக்கிச் சென்றனர். அது முதல் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின் செல்வாக்கு வட்டத்துக்குள் வந்தது. இறுதியாக 1619ல் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இதன் பின்னர் இலங்கைத் தமிழர் பகுதிகளைப் போர்த்துக்கேயர் 38 ஆண்டுகளும், ஒல்லாந்தரும், பிரித்தானியரும் முறையே 138, 152 ஆண்டுகளும் ஆட்சி செய்தனர்.
பரம்பல்
மொழி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை மக்களின் பரம்பல். 1981 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.
முன்னர் கூறிய வரைவிலக்கணத்துக்கு அமைய இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழித் தமிழர் என்போர் இலங்கையின் வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். தலைநகரமான கொழும்பிலும் சில பகுதிகளில் செறிவாக வாழுகின்றனர். ஏனைய பகுதிகளில் மிகவும் சிறுபான்மையினராக உள்ளனர். வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் பெரும்பான்மையினராக உள்ள இலங்கைத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒன்றில் மட்டுமே தற்போது பெரும்பான்மையினராக உள்ளனர். 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இலங்கைத் தமிழரின் மொத்த மக்கள்தொகை 2,270,924 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையின் 11.2%. இது 1981 ஆம் ஆண்டில் 12.7% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1981க்கும் 2011க்கும் இடையில் நாட்டின் மொத்த மக்கள் தொகை 36.49% கூடியிருக்கும் அதே வேளை இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 20.35% அதிகரிப்பையே காட்டுகிறது. உள்நாட்டுப் போர் காரணமாக ஏராளமான இலங்கைத் தமிழர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதாலும், பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாவட்டம் மக்கள்தொகை நூற்றுவீதம்
1981[20] 2011[21] 1981[22] 2011[21]
யாழ்ப்பாணம் 790,385 577,246 95.2 98.9
மன்னார் 54,474 80,568 51.3 81.3
வவுனியா 54,179 141,269 56.8 82.4
முல்லைத்தீவு 58,209 79,081 75.4 86.0
கிளிநொச்சி -[23] 109,528 -[23] 97.0
மட்டக்களப்பு 233,713 381,285 70.8 72.6
அம்பாறை 77,826 112,750 20.0 17.4
திருகோணமலை 87,760 115,549 34.3 30.6
கொழும்பு 170,590 231,318 10.0 10.0
நுவரெலியா 76,449 31,867 12.7 4.5
1911லும் அதற்குப் பின்னருமே இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என இரண்டு பிரிவாகத் தமிழர் கணக்கெடுக்கப்பட்டனர். இவ்வாண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்புக்களில் இலங்கைத் தமிழரின் எண்ணிக்கையையும், மொத்த மக்கள்தொகையில் அதன் நூற்றுவீத அளவையும் கீழேயுள்ள அட்டவணையிற் காணலாம்.
– 1911 1921 1931 1946 1953 1963 1971 1981 1989 2001 2011
மக்கள்தொகை
(ஆயிரங்களில்) 528.0 517.3 598.9 733.7 884.7 1,164.7 1,424.0 1,886.9 2,124.0 – 2,270.9
நூற்றுவீதம் 12.86 11.50 11.29 11.02 10.93 11.01 11.22 12.71 12.62 – 11.21
துணைப் பண்பாட்டுக் குழுக்கள்
இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் ஒரே கூறாக எடுத்துக்கொள்ளும் போக்கு பல்வேறு மட்டங்களிலும் இருந்து வருகிறது. மொழி அடிப்படையிலும், ஓரளவுக்கு சமய அடிப்படையிலும் பிரதேசங்களை ஊடறுத்த ஒருமைத் தன்மை இருந்த போதிலும், 1948க்குப் பின்னான அரசியல் நெருக்கடிகள் இந்த ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் போக்குக்கு வலுவூட்டின என்று கூறலாம். ஆனாலும், இலங்கைத் தமிழர் சமூகத்தில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையிலும், சமூக, வரலாற்றுப் பின்புலங்களின் அடிப்படையிலும், பல வேறுபாடுகள் இருப்பதைக் காணமுடியும். இந்த வேறுபாடுகளைப் பிரதேச வேறுபாடுகளுடன் ஒத்திசைவாகப் பார்க்கும் போக்கே பெரிதும் காணப்படுகிறது. சிவத்தம்பி, இலங்கைத் தமிழர் துணைப் பண்பாட்டுச் சமூகங்களைப் பகுதிகளின் அடிப்படையில் ஒன்பது பிரிவுகளாக இனங்காண்கிறார். இவற்றுள், தென்மாகாணம், மலையகம் என்பன முறையே முசுலிம்கள், இந்தியத் தமிழர் குழுக்களையே குறித்து நிற்கின்றன. இதனால் இக்கட்டுரையின் வீச்செல்லைக்குள் அடங்குவன பின்வரும் ஏழு பகுதிகளே.
யாழ்ப்பாணம்
வன்னி
மன்னார்
திருகோணமலை
மட்டக்களப்பு
வடமேல் மாகாணம்
கொழும்பு
சமூகப் பண்புகள்
இலங்கைத் தமிழர் எனப்படுவோர் ஒரேதன்மைத்தான சமூகப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இலங்கைத் தமிழரிடையே காணப்படும் பல்வேறு குழுக்கள் வேறுபட்ட சமூகப் பண்புகளை உடையவர்களாக இருப்பதைக் காண முடியும். குடியேற்ற வாதக் காலத்துக்கு முன்னர் நடைமுறையில் இருந்த வழமைகளை ஆராய்வதன் மூலம் வரலாற்று நோக்கில் இவ்வாறான சமூகப் பண்புகள் குறித்து ஆய்வாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இவ்வாறான ஆய்வுகளில் தேசவழமைச் சட்டமும், முக்குவர் சட்டமும் முக்கிய இடம் பெறுகின்றன.
தேசவழமைச் சட்டத்தை இந்தியாவில் உள்ள பிற மரபுவழிச் சட்டங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்த ஆய்வாளர்கள் சிலர் தேசவழமைச் சட்டத்தின் தொடக்கத்தின் அடிப்படைகள் பிராமணியச் செல்வாக்குக்கு முந்திய திராவிட மரபான தாய்வழி மரபை அடிப்படையாகக் கொண்ட மலபார் பகுதியின் மருமக்கட்தாயம் எனப்படும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்கின்றனர். கோரமண்டல் என அழைக்கப்படும், தென்னிந்திந்தியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியில் ஆரிய செல்வாக்குக் காரணமாக தந்தைவழி மரபு நிலைபெற்றது. , யாழ்ப்பாணப் பகுதியில் தமிழ்நாட்டின் தொடர்புகள் அதிகரித்த காலத்தில் தாய்வழி மரபுக் கூறுகளையும் தந்தைவழி மரபுக் கூறுகளையும் ஒருங்கே கொண்டதொரு கலப்பு முறைமை உருவானதாக இந்த ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.[24] யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலேயே, யாழ்ப்பாணச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாகவே இருந்த போதும், நடைமுறையில் இருந்த வழக்கங்களில் தாய்வழி மரபுக் கூறுகளும் இருந்தன. எடுத்துக்காட்டாக, சொத்துரிமை தொடர்பில், அக்காலத்துச் “சீதனம்” தாய்வழிச் சொத்துரிமையின் எச்சமாகக் காணப்பட, “முதுசொம்” தந்தைவழிச் சொத்துரிமையாக உள்ளது. ஆனாலும், பெண்களுடைய வழிவருகின்ற சீதனச் சொத்து தொடர்பில் கணவனின் சம்மதம் இன்றிப் பெண் தீர்மானம் எடுக்கக்கூடிய வழி இல்லாது இருப்பதானது அக்காலத்தியேயே யாழ்ப்பாணச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாக நிலை பெற்றுவிட்டதைக் குறிக்கிறது.
காலப்போக்கில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது கூடிய அளவு சீதனம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது மிகப் பெரும்பாலான குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் முதுசொச் சொத்தின் மீது தமக்கிருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டியவர்கள் ஆனார்கள். போர்த்துக்கேயர் காலத்திலேயே இந்த நிலை ஏற்படத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.[25] இதனால், தற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான வீடுகளும், நிலங்களும் பெண்களின் பெயரிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தற்காலத்துச் சீதன முறையின் விளைவாக ஏற்பட்டதேயொழிய, யாழ்ப்பாணச் சமுதாயம் இன்றும் ஒரு ஆணாதிக்கச் சமுதாயமாகவே இருந்து வருகிறது.
சாதி அமைப்பு
இலங்கையில் சாதி அமைப்பு
இலங்கைத் தமிழர் சமுதாயம் ஒரு சாதியச் சமுதாயம் ஆகும். எனினும், முழுச் சமுதாயமுமே ஒரே மாதிரியான சாதி அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. கிழக்கு மாகாணத் தமிழர் மத்தியில், குறிப்பாக மட்டக்களப்புப் பகுதியில் காணப்படும் சாதி அமைப்பு, யாழ்ப்பாணப் பகுதிச் சாதி அமைப்பினின்றும் பெருமளவுக்கு மாறுபட்டது. மட்டக்களப்பில் சாதி அமைப்பு, யாழ்ப்பாணத்தில் உள்ளதுபோல் மிகவும் இறுக்கமானது அல்ல.
யாழ்ப்பாணச் சாதி முறை இந்தியச் சாதி முறையைப்போல் அடுக்கதிகார அமைப்புக் கொண்டது ஆயினும் அடிப்படையில் பல வேறுபாடுகளையும் கொண்டுள்ளது. சம்பிரதாய அடிப்படையில் பிராமண மேன்மை ஏற்றுக்கொள்ளப்படுகிறது ஆயினும், நடைமுறையில் யாழ்ப்பாணத்தில் பிராமண மேலாண்மை கிடையாது. பெரும்பான்மையாக விளங்கும் வேளாண்மைச் சமூகமான “வெள்ளாளர்” சமூகமே அதிகாரப் படி நிலையில் உயர்வான இடத்தில் உள்ளது. இதன் கீழ் பல்வேறு படிநிலைகளில் பல தரப்பட்ட சாதிகள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் 60க்கும் மேற்பட்ட சாதிகள் இருந்ததாகத் தெரிகிறது, தற்காலத்தில் சாதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சமூக அதிகார நிலையின் அடிப்படையில் யாழ்ப்பாணச் சாதிகளை,
உயர் சாதியினர்,
உயர் சாதி அல்லாதோர்
குடிமக்கள் (குடிமைகள்)
என மூன்றாகப் பிரிக்கலாம் என்கிறார் சிவத்தம்பி.[26] முன்னர் குறிப்பிட்ட வெள்ளாளச் சாதியினர் “உயர் சாதி” வகைப்பாட்டினுள் அடங்குவர். குடியேற்றவாதக் காலத்திலும் அதற்கு முன்னரும் மடப்பளி, அகம்படியர் ஆகிய சாதிகளும் உயர் சாதிகளாகக் கருதப்பட்டன. தற்காலத்தில் இவ்விரு சாதிகளும் இல்லாமல் போய்விட்டன. “உயர் சாதி அல்லாதோர்” என்னும் பிரிவினுள் அடங்கும் சாதிகள், இடைத்தரமான சமூக அதிகார நிலையில் உள்ளவை. கோவியர், தச்சர், கொல்லர் போன்ற சாதிகள் இப்பிரிவினுள் அடங்குபவை. மூன்றாவது பிரிவில் அடங்கும் சாதிகள் மிகவும் குறைவான சமூக அதிகார நிலையை உடையவை. பள்ளர், நளவர், பறையர் போன்ற சாதிகள் இத்தகையவை. சமூகத்தின் ஒரு பிரிவினரைப் பாரபட்சமாக நடத்தி அடக்குமுறைக்கு உள்ளாக்குவதாக இந்தச் சாதி முறை அமைந்துள்ளது. யாழ்ப்பாணச் சமூக உருவாக்கத்தின் தொடக்க காலத்தில் அதன் இயக்கத்தையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்தும் நோக்கில் பொருளாதார முறைமை ஒன்றைக் கட்டியெழுப்பும் வகையில் சமூகத் தொடர்புகள் நிறுவப்பட்டபோது, அதன் விளைவாகவே சாதி அமைப்பும் உருவானது என்பது சில ஆய்வாளர்களது கருத்தாக உள்ளது.[27]
யாழ்ப்பாணச் சாதி வேறுபாடுகளுக்குத் தொழிலே அடிப்படையாக அமைகிறது. தொழில் சார்ந்த பொருளாதாரத் தொடர்புகளே யாழ்ப்பாணச் சாதியத்தில் அதிகாரப் படிநிலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணச் சாதிகளைப் பின்வருமாறு இரு பிரிவுகளாகப் பார்க்கும் வழக்கமும் உண்டு.[28]
கட்டுண்ட சாதிகள்,
கட்டில்லாச் சாதிகள்
கட்டுண்ட சாதிகள், உயர் அதிகாரப் படிநிலையில் உள்ள சாதிகளுடன் பொருளாதார அடிப்படையில் கட்டுண்ட நிலையில் இருப்பவர்கள். எடுத்துக்காட்டாக, வேளாண்மைக் கூலிகளான நிலமற்ற சாதிகள், நில உடைமையாளராக இருக்கும் வெள்ளாளச் சாதியினரில் பொருளாதார அடிப்படையில் தங்கியிருப்பதைக் காணலாம். இதனால், பரம்பரையாகக் கைக்கொண்டுவந்த தொழில்களைக் கைவிடும் வாய்ப்புக்கள் ஏற்பட்டபோதே யாழ்ப்பாணத்தில் சாதியம் வலுவிழக்கத் தொடங்கியது எனலாம். குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் புதிய தொழில்கள் அறிமுகமானமை, கிறித்தவ சமயத்தின் அறிமுகம், வெளிநாடுகளுக்கான புலப்பெயர்வு, உள்நாட்டுப் போர் என்பன இத்தகைய வாய்ப்புக்களை வழங்கின. அத்துடன், 60களில் யாழ்ப்பாணப் பகுதியில் இடதுசாரி இயக்கங்களின் சார்பில் பரவலாக இடம்பெற்ற சாதி எதிர்ப்புப் போராட்டங்களும் சாதியத்துக்கு எதிரான உணர்வுகளை வளர்த்தன. சமூகம் சார்ந்த புலங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டனவாயினும், தனிப்பட்டவர்களின் மன மாற்றங்கள் தேவைப்படக்கூடிய கலப்புத் திருமணம் போன்ற விடயங்களில் சாதி வேறுபாடுகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கவே செய்கின்றன.
மட்டக்களப்புப் பகுதியில் சாதி முறை பல விதங்களில் யாழ்ப்பாணச் சாதி முறையில் இருந்து வேறுபட்டு அமைந்துள்ளது. சில சாதிகள் இவ்விரு பகுதிகளுக்கும் பொதுவானவையாகக் காணப்பட்ட போதிலும், சில சாதிகள் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே தனித்துவமானவையாகக் காணப்படுகின்றன. இது தவிர மட்டக்களப்பில் வெள்ளாளருக்கு அதிகார மேலாண்மை கிடையாது. அப்பகுதியில் முக்குவச் சாதியினரே அதிகார மேலாண்மை கொண்டவர்களாக விளங்குகின்றனர். மக்கள்தொகை அடிப்படையிலும் கூடிய பலம் கொண்டவர்களாக இருப்பவர்கள் இச்சாதியினரே. மட்டக்களப்புச் சாதியமைப்பில் “குடி” முறைமை முக்கியமான ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இக் குடி முறைமை கோயில் ஆதிக்கம் போன்றவற்றினூடாக நிறுவனப்படுத்தப்பட்டு உள்ளது.
சமயம்
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் உள்ள நாயன்மார் பாடல் பெற்ற இந்துத் தலங்களில் ஒன்றான திருக்கோணேசுவரம் கோயில்
இலங்கைத் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆவர். 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களின் மரபுவழிப் பகுதிகளான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் இலங்கைத் தமிழர்களில் 83% இந்துக்கள், 13% கத்தோலிக்கர், மிகுதியானோர் பிற கிறித்தவர்கள். இப் பகுதிக்கு வெளியே வாழும் தமிழர்களில் (இலங்கையின் இந்தியத் தமிழர்களும் உட்பட) ஏறத்தாழ 81.5% இந்துக்களே. இலங்கைத் தமிழ் இந்துக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர்கள். குறிப்பாக வட பகுதியில் சைவசித்தாந்த அடிப்படையிலேயே வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. அதே வேளை சிறு தெய்வ வணக்கங்களும் இடம்பெற்று வருவதைக் காணலாம். தமிழ்நாட்டில் பௌத்தம் வேரூன்றி இருந்த காலத்தில் இலங்கையில் இருந்த தமிழர் பலரும் பௌத்தர்களாக இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், யாழ்ப்பாண அரசுக் காலத்தில் இலங்கைத் தமிழர் அனைவரும் இந்துக்களாகவே இருந்தனர்.
1540களில் யாழ்ப்பாண இராச்சியப் பகுதிகளில் போர்த்துக்கேயப் பாதிரிமார்களின் நடவடிக்கைகள் தொடங்கியபோது கத்தோலிக்க மதம் இலங்கைத் தமிழர் மத்தியில் அறிமுகமானது. 1560ல் போர்த்துக்கேயர் கைப்பற்றிக்கொண்ட பின்னர் அப்பகுதியில் இலங்கைத் தமிழர் பலர் கத்தோலிக்கர் ஆயினர். 1590 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாண மன்னர்கள் போர்த்துக்கேயரின் தயவுடன் அரசாண்ட காலங்களில் யாழ்ப்பாண அரசின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் கத்தோலிக்க மதத்துக்கு மாறினர். 1619க்குப் பின்னர் யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சிக்குள் வந்தது. அதன் பின்னர் மதமாற்ற வேலைகள் அரசாங்க ஆதரவுடன் இடம்பெற்றன. இந்துக் கோயில்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டன. வற்புறுத்தலின் பேரிலும் மதமாற்றம் இடம்பெற்றதாகத் தெரிகிறது.
மன்னார் மாவட்டத்தின் வங்காலைக் கிராமத்தில் அமைந்துள்ள சென். ஆன் தேவாலயம்.
போர்த்துக்கேயரின் 38 ஆண்டு நேரடி ஆட்சிக் காலத்துக்குள்ளேயே யாழ்ப்பாண மக்கள் எல்லோரும் கத்தோலிக்கர் ஆகிவிட்டதாக அக்காலத்துப் போர்த்துக்கேயப் பாதிரிமார்களில் எழுத்துக்களில் இருந்து தெரிய வருகிறது. எனினும், பெரும்பாலான இலங்கைத் தமிழர் இந்து மதத்தை மறைவாகக் கைக்கொண்டிருந்தனர். தொடர்ந்து வந்த ஒல்லாந்தர் ஆட்சியில் இந்து மதத்துடன், கத்தோலிக்க மதமும் அடக்குமுறைக்கு உள்ளானதுடன், புரட்டசுத்தாந்த கிறித்தவம அரச ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 138 ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் இந்து மதமும், கத்தோலிக்க மதமும் மீண்டும் எழுச்சிபெற வாய்ப்புக்கள் கிடைத்தன. இந்துக் கோயில்களும், கத்தோலிக்கத் தேவாலயங்களும் ஆங்காங்கே மீண்டும் எழலாயின.
பின்னர் பிரித்தானியர் ஆட்சி ஏற்பட்டபோது, புரட்டசுத்தாந்த கிறித்தவ மதத்துக்கு முன்னுரிமைகள் இருந்த போதும், பிற மத விடயங்களில் ஓரளவு சுதந்திரம் கிடைத்தது. இந்து மதமும் கத்தோலிக்க மதமும் மீண்டும் வெளிப்படையாகவே வளர்ச்சியுற வாய்ப்புக் கிடைத்தது.
பண்பாடு
மொழி
இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள்
இலங்கைத் தமிழ் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், பேச்சு வழக்கைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழும் பல வட்டார வழக்குகளை உள்ளடக்கிய ஒன்றாகவே காணப்படுகிறது. இலங்கைப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தமிழ்நாட்டுத் தமிழரின் பேச்சு வழக்குகளில் இருந்து ஒலியியல், உருபனியல், சொற்றொடரியல், சொற்பயன்பாடு போன்ற பல அம்சங்களில் வேறுபாடுகளைக் கொண்டதாக அமைந்திருப்பதையும் காண முடியும். ஆனாலும், திரைப்படங்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி போன்றவற்றினூடாக தமிழ் நாட்டின் பொதுவான பேச்சு வழக்குகள் இலங்கைத் தமிழருக்குப் பரிச்சயமாக உள்ளன. அதேவேளை, இவ்வாறான ஊடகத் தொடர்புகள் ஒருவழிப் பாதையாக இருப்பதனால், தமிழக மக்களுக்கு, இலங்கைத் தமிழ் வழக்குகள் அவ்வளவு பழக்கப்பட்டதாக இல்லை. இலங்கைத் தமிழர் வழக்கில் பொதுவாகப் பயன்படும் சில சொற்களைத் தமிழ் நாட்டினர் இலகுவில் புரிந்து கொள்வது இல்லை. எடுத்துக்காட்டாக, பெடியன் (ஆண் பிள்ளை), பெட்டை (பெண் பிள்ளை) (பெண்), கதைத்தல் (பேசுதல்), விளங்குதல் (புரிதல்) போன்ற சொற்களைக் குறிப்பிடலாம்.
தமிழகத்தில் இருந்து பிரிந்து நீண்டகாலம் தனியாக வளர்ந்ததனால், மிகப் பழைய காலத்துக்குரிய அம்சங்களை இன்றும் இலங்கைத் தமிழில் காண முடிகிறது. தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கில் பல சொற்களில் உகரம் ஒகரமாகவும் (உடம்பு > ஒடம்பு), இகரம் எகரமாகவும் (இடம் > எடம்) திரிபடைகிறது. இலங்கைத் தமிழரது பேச்சு வழக்கில் இத்தகைய திரிபு கிடையாது. இது போன்றே மெய்யெழுத்துக்களில் முடியும் சொற்கள் சில தமிழ் நாட்டுப் பேச்சுத் தமிழில் மெய்யெழுத்துக் கெட்டு முதல் எழுத்து மூக்கொலியுடன் உச்சரிக்கப்படுகின்றன (மகன் > மக(ன்), காகம் > காக(ம்)). இலங்கைத் தமிழில் இவ்வகைத் திரிபு இல்லை. எழுத்துக்கள் சிலவற்றின் ஒலிப்பிலும் இலங்கைத் தமிழ் தமிழ்நாட்டுத் தமிழில் இருந்து வேறுபடுகிறது. “ற்ற்”, “ர” ஆகிய எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. இலங்கையில் “ற்ற்” முதல் “ற”கரமும் இரண்டாவது “ற”கரமும் வெடிப்பொலியாகவே ஒலிக்கப்பட, தமிழ்நாட்டில் இரண்டாவது “ற”கரம், உருளொலியாக ஒலிக்கப்பட்டுகிறது. இவற்றின் ஒலிப்பு வேறுபாட்டினால், பிற மொழிப் பெயர்கள், சொற்களை ஒலிபெயர்க்கும் போதும் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இலங்கையில் “Newton” ஒலிபெயர்க்கும்போது “நியூற்றன்” என்று எழுதுகிறார்கள். தமிழ் நாட்டில் “நியூட்டன்” என்று எழுதப்படுகிறது.
இலங்கைத் தமிழ் வழக்குகளில் யாழ்ப்பாணத் தமிழ் வழக்குக் குறிப்பிடத்தக்க ஒன்று, யாழ்ப்பாணத் தமிழ் வழக்கில் பழந்தமிழுக்கு உரிய தனித்துவமான பல அம்சங்களை இன்றும் காண முடியும். எடுத்துக்காட்டாக, பழந்தமிழில் வழக்கில் இருந்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்த இடைநிலைச் சுட்டுப் பெயர்களான உவன், உவள், உது போன்றவை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இன்றும் பயன்படுகின்றன.
மட்டக்களப்புத் தமிழும் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்ட ஒரு பேச்சு வழக்காக உள்ளது. இப்பேச்சு வழக்கிலும், பழந் தமிழுக்குரிய பல அம்சங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளதைக் காண முடியும். இலங்கையில் தமிழ் வட்டார வழக்குகளில், கூடிய பழந்தமிழ் தொடர்பு கொண்டது மட்டக்களப்பு வழக்கே என்ற கருத்தும் உண்டு.
போதிய ஒருங்கிணைப்பு இன்மை காரணமாக மொழி வழக்கின் புதிய அம்சங்களான கலைச்சொல் ஆக்கம் போன்றவற்றிலும் இலங்கைத் தமிழ், தமிழ்நாட்டுத் தமிழில் இருந்து வேறுபடுவதைக் காணலாம். எழுத்து, சொல், அகராதியியல், பொருள் ஆகிய நான்கு நோக்கிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இலக்கியம்
பழந்தமிழ் நூல்களைத் தேடிப் பதிப்பிப்பதில் முன்னோடியாக விளங்கிய ஆறுமுக நாவலர்
இலங்கைத் தமிழரின் இலக்கியம் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பேசுபவர்கள், சங்ககாலத்தில் இருந்து தொடங்குவது வழக்கம். சங்கப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது பொதுவான கருத்து. இதைத் தவிர யாழ்ப்பாண இராச்சியக் காலத்துக்கு முற்பட்ட இலங்கைத் தமிழரின் இலக்கியம் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைத்தில. 13 ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தினர் தமிழ் வளர்ச்சியில் அக்கறை காட்டினர். பரராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயர் கொண்ட மன்னன் ஒருவன் காலத்தில் நல்லூரில் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்ததாகவும், சரசுவதி மகால் என்னும் பெயரில் நூலகம் ஒன்று அமைத்துப் பழைய நூல்களைப் பாதுகாத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்து அரசர்களிற் சிலரும், அரச குடும்பத்தவர் சிலரும் தமிழில் புலமை கொண்டவர்களாக விளங்கினர். சமயம், தமிழ் ஆகியவை தொடர்பில் மட்டுமன்றி சோதிடம், மருத்துவம், ஆகிய துறைசார்ந்த நூல்களும் இக்காலத்தில் எழுதப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்னும் நூல்கள் இத்தகையவை. கைலாயமாலை, வையாபாடல் ஆகிய நூல்களும் யாழ்ப்பாண இரச்சியக் காலத்தில் எழுதப்பட்டவையே. அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசகேசரி என்பவர் காளிதாசர் வடமொழியில் எழுதிய இரகுவம்சம் என்னும் நூலைத் தழுவி, தமிழில் அதே பெயரில் ஒரு நூலை எழுதினார்.
1619 முதல் 1796 வரையிலான போர்த்துக்கேச, ஒல்லாந்த ஆட்சிக் காலங்களிலும், கூழங்கைத் தம்பிரான், இணுவில் சின்னத்தம்பிப் புலவர், முத்துக்குமாரக் கவிராயர், சிலம்புநாதபிள்ளை போன்ற பல புலவர்கள் வாழ்ந்து தமிழ் நூல்களை ஆக்கியுள்ளனர். இக்காலத்தில் போர்த்துக்கேயக் குருமாரும், தமிழ் கிறித்தவரும் கூட சமயப் பரப்புரைக்கான தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான மதப் பரப்புரைகளுக்குச் சார்பாகவும், எதிராகவும் மாறிமாறி ஞானக் கும்மி, யேசுமத பரிகாரம், அஞ்ஞானக் கும்மி, அஞ்ஞானக் கும்மி மறுப்பு எனப் பல நூல்கள் இக்காலத்தில் உருவாயின. பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலும் இந்நிலை தொடர்ந்தது. ஆறுமுக நாவலர் சைவப் பரப்புரைகளுக்காக நூல்களை எழுதியதோடு அமையாது, அழியும் நிலையில் இருந்த பழந்தமிழ் நூல்கள் பலவற்றைத் தேடி பதிப்பித்துப் பாதுகாத்தார். இவரது இந்த முயற்சி உலகத் தமிழரிடையே ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்தது. தமிழில் உடைநடை இலக்கியத்தை வளர்த்து எடுத்ததிலும், ஆறுமுக நாவலரின் பணி முக்கியமானது. இக்காலத்தில் இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த பல தமிழ்ப் புலவர்களும், அறிஞர்களும் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில், உலகம் முழுவதிலும் ஏற்பட்ட இடதுசாரிச் சிந்தனை வளர்ச்சி, இலங்கையில் இலவசக் கல்வியின் அறிமுகம் போன்றவை இலங்கைத் தமிழ் இலக்கியத்தைச் சமூகத்தின் அடி மட்டம் வரை எடுத்துச் சென்றன. கலையும், இலக்கியமும் மக்களுக்காகவே என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், சாதிப் பாகுபாடு, வர்க்கப் போராட்டம், பெண்ணுரிமை போன்ற பல விடயங்கள் இலக்கியத்துக்குக் கருப்பொருள்களாயின. இலக்கியம் படைப்போரும் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் உருவாகினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புக்கள் இந்த மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்தன. டொமினிக் ஜீவா, டானியல், செ. கணேசலிங்கன், செங்கை ஆழியான் போன்றோர் இக் காலம் உருவாக்கிய படைப்பாளிகள். இக்காலப் பகுதியில் சிலர் இனப்பிரச்சினையை மையமாக வைத்தும் இலக்கியம் படைத்தனர் ஆயினும், இவை பொதுவாகப் பிற்போக்கு இலக்கியங்கள் என முத்திரை குத்தப்பட்டன.
1983க்குப் பின்னர் இனப்பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னர் இது இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கான முக்கிய கருப்பொருளானது. இது, உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முன் எப்பொழுதும் கண்டிராத ஒன்று. இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பெரும்பகுதி தமிழ் விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில், இந்த அடிப்படையில் தமிழ் இலக்கியம் கவிதை, கதை, நாடகம் எனப் பல்வேறு முனைகளிலும் வளர்ந்தது. இலங்கையில் இடம் பெற்ற இனப்போரின் விளைவாக ஏற்பட்ட உலகம் தழுவிய புலப் பெயர்வுகளினால், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் உலகின் பல நாடுகளிலும் வாழுகின்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக, தமிழுக்குப் புதிய பல கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள் உருவாகின்றன.
கல்வி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தமிழர் பகுதிகளில் நிறுவப்பட்ட முதல் பாடசாலை. வெசுலியன் மிசனால் நிறுவப்பட்டது.
ஐரோப்பியர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் இலங்கைத் தமிழர் மத்தியில் மரபுவழிக் கல்வி முறை இருந்தது. இது பொதுவாக, தமிழ், வடமொழி, சமயம் சார்ந்த விடயங்கள் என்பவற்றைத் தழுவியதாகவே இருந்தது.[30] தொழில்கள் சாதி அடிப்படையிலேயே அமைந்திருந்ததால், தொழிற்கல்வி குலவித்தையாகவே பயிலப்பட்டு வந்தது.[31] பொதுக் கல்வியிலும் சாதி முக்கிய பங்கு வகித்தது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்பதற்கு மரபுவழிக் கல்வி முறையில் இடம் இருக்கவில்லை. கல்வி உயர் சாதியினருக்கு உரியதாகவே கருதப்பட்டு வந்தது. மாணவர்கள், மொழியையும் சமயத்தையும் கற்றுத்தேர்ந்த ஆசிரியர்களை அணுகிக் குருகுலவாச முறையில் கல்வி பெற்று வந்தனர்..[32]
போர்த்துக்கேயர் தமிழர் பகுதிகளைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பின்னர், தேவாலங்களையும் அவற்றின் அருகே பள்ளிகளையும் உருவாக்கினர். தீவிர மதமாற்றக் கொள்கையைக் கடைப்பிடித்த போர்த்துக்கேயக் குருமார் மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் கிறித்தவத்தைக் கற்பிப்பதற்காகத் தமிழ் கற்று அம்மொழி மூலமே சமயத்தையும் கற்பித்து வந்தனர். இக்காலத்தில், எல்லாச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் கல்வி பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும், நிர்வாகத் தேவைகளை முன்னிட்டு போர்த்துக்கேயர் சாதி முறையை மாற்ற விரும்பாததால், தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தவரை அக்காலக் கல்வியும் சமூக முன்னேற்றத்துக்கான ஒன்றாக இருக்கவில்லை. ஒல்லாந்தர் காலத்திலும் ஏறத்தாழ இதே நிலையே நிலவியது.
யாழ்ப்பாணம் மானிப்பாயில், அமெரிக்க மிசனைச் சேர்ந்த மருத்துவர் கிறீனிடம் தமிழில் மேனாட்டு மருத்துவம் பயின்ற மாணவர்களின் முதல் தொகுதி (1848-1853)
பரந்துபட்ட அளவில் கல்விக்கான வாய்ப்புக்கள் பிரித்தானியர் காலத்திலேயே ஏற்பட்டன. கிறித்தவ மிசன்கள் பள்ளிக்கூடங்களை நிறுவிக் கல்வி புகட்டுவதில் ஆர்வம் காட்டின. இந்த வகையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசனின் நடவடிக்கைகள் குறிப்பிடத் தக்கவை. பட்டப்படிப்புவரை கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தன. அமெரிக்க மிசனைச் சேர்ந்த மருத்துவர் கிறீன் உள்ளூர் மாணவர்களுக்கு மேல்நாட்டு மருத்துவத்தையும் கற்பித்து வந்தார். இவர் பல மருத்துவப் பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் மொழி மூலமே மருத்துவம் கற்பித்தது குறிப்பிடத் தக்கது. இவர்கள் அச்சகம் ஒன்றை நிறுவி நூல்களை வெளியிடுவதிலும் ஈடுபட்டது, தமிழர் கல்வி வளர்ச்சியில் முக்கியமான ஒரு மைல் கல்லாகும்.
ஆனாலும், இத்தகைய கல்வி நடவடிக்கைகள், கிறித்தவ மதம் பரப்பும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், இந்துக்கள் மத்தியில் இது எதிர்ப்புணர்வைத் தோற்றுவித்தது. இது ஒரு தேசிய எழுச்சியின் தொடக்கமாகப் பார்க்கப்பட்டாலும், அடிப்படையில், ஒரு பழமைவாதச் சமூகம் சாதி முறையை அடிப்படையாகக் கொண்ட தனது சமூகக் கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவும் இது இருந்தது எனலாம். இந்த எதிர்ப்பின் முன்னணியில் ஆறுமுக நாவலர் இருந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் சைவப் பாடசாலைகளைத் நிறுவி மாணவர்களுக்குச் சைவ முறையில் கல்வி கற்பிக்க முயற்சி எடுத்தார். இவரது முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், இவரைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பல இந்துப் பாடசாலைகள் நிறுவப்பட்டு வெற்றிகரமாக இயங்கின.
ஆறுமுக நாவலர் சைவத் தமிழ் மாணவர்களுக்காக 1848ல் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் நிறுவிய முதல் பாடசாலையின் இன்றைய முகப்புத் தோற்றம் (2004).
இலங்கைத் தமிழர்களை செறிவாகக் கொண்ட யாழ்ப்பாணக் குடா நாடு வேளாண்மைப் பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்டது எனினும், ஆறுகள் எதுவும் அற்ற வரண்ட நிலத்தில், கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலை இருந்தது இதனால், கல்வி மூலம் கிடைத்த வாய்ப்புக்களை யாழ்ப்பாண மக்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் எனலாம். பிள்ளைகளுக்குச் சிறப்பான கல்வியை அளிப்பதே பெரும்பாலான யாழ்ப்பாணத்துப் பெற்றோர்களின் அடிப்படையான நோக்கம். இதனால், இப்பகுதியின் படிப்பறிவு மட்டம் நீண்டகாலமாக உயர்வாகவே இருந்து வந்துள்ளதுடன், உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் யாழ்ப்பாண மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்து வந்தது. இது சிங்களவர்களுக்குப் பாதகமானது என்ற கருத்து உருவானதன் காரணமாக, அரசாங்கம் மொழிவாரித் தரப்படுத்தல், மாவட்ட அடிப்படையிலான இட ஒதுக்கீடு போன்ற நடைமுறைகளை உருவாக்கிப் பல்கலைக் கழகங்களுக்குச் செல்லும் யாழ்ப்பாண மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தினர். மொழிவாரித் தரப்படுத்தல் இலங்கைத் தமிழ் மாணவர்கள் எல்லோரையும் பாதித்த அதேவேளை, மாவட்ட ஒதுக்கீட்டு முறையின் மூலம், கல்விக்கான வசதிகள் குறைவாக இருந்த தமிழ் மாவட்டங்களான வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் ஓரளவு பயன் பெற்றனர் எனலாம். ஆனாலும் ஒட்டுமொத்தமாகத் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சி கண்டது.
உணவு
முதன்மைக் கட்டுரை: ஈழத்தமிழர் சமையல்
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவுச் சாலையில் காணப்படும் கடல் உணவுடன் கூடிய பிட்டு.
இலங்கைத் தமிழரின் உணவு பெரும்பாலும் தென்னிந்திய செல்வாக்குடன் கூடியது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் உணவுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. அத்துடன், இலங்கையை ஆண்ட ஐரோப்பியர்களின் செல்வாக்கும் உண்டு. மரபு வழியாக இலங்கைத் தமிழரின் முக்கிய உணவுகள் அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. தினை, சாமை, குரக்கன், வரகு போன்ற சிறு தானிய வகைகளும் பயன்படுகின்றன. இலங்கைத் தமிழர் அனைவரும் ஒரு நாளுக்கு ஒரு தடவையாவது, பொதுவாக மதிய உணவுக்குச் சோறும் கறியும் உணவாகக் கொள்கின்றனர். சில பகுதிகளில் இரவிலும் சோறு சாப்பிடுவது உண்டு. பழங்காலத்தில், முதல் நாட் சோற்றைத் தண்ணீரூற்றி வைத்து பழஞ்சோறு என அடுத்தநாட் காலைச் சாப்பாடாக உட்கொள்ளும் வழக்கம் இருந்தது. யாழ்ப்பாணத் தமிழர் பெரும்பாலும், குத்தரிசி எனப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே விரும்பிச் சாப்பிடுவர். உள்ளூரில் கிடைக்கக்கூடிய மரக்கறிகள், இறைச்சி, மீன் முதலிய கடலுணவு வகைகள் கறி சமைப்பதற்குப் பயன்படுகின்றன. கத்தரி, வாழை, வெண்டி, பூசணி, அவரை, முருங்கைக்காய், கிழங்கு வகைகள் போன்ற பாரம்பரியமான மரக்கறிகள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்காலத்தில் மேற்கத்திய மரக்கறி வகைகளான கரட், பீட்ரூட், லீக்சு போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர். தவிர, முளைக்கீரை, பசளி, வல்லாரை, பொன்னாங்காணி, முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளும் சமையலுக்குப் பயன்படுகின்றன. இலங்கையில் தமிழர் பகுதிகள் நீண்ட கடற்கரையைக் கொண்டவை இதனால், மீன், சுறா, நண்டு, கணவாய், இறால், திருக்கை போன்ற பலவகைக் கடலுணவுகள் கிடைக்கின்றன.
இடியப்பம். இலங்கைத் தமிழரிடையே பிரபலமான ஒரு உணவு வகை.
கறிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பொதுவாகப் பயன்படுகின்ற சாம்பார் இலங்கைத் தமிழரிடையே முக்கியமான இடத்தைப் பெறவில்லை. இதற்குப் பதிலாக தேங்காய்ப் பால், மிளகாய்த் தூள் என்பவற்றுடன் மரக்கறி, மீன், இறைச்சி அல்லது பிற கடலுணவு வகை கலந்து சமைக்கப்படும் குழம்பு பயன்படுகிறது. தமிழ் நாட்டில் அதிகம் காணப்படாத இன்னொரு துணைக் கறி வகை சொதி. இது தேங்காய்ப் பாலில் செய்யப்படுகிறது. சோற்றுடன் சாப்பிடும்போது கடைசியாகச் சொதி ஊற்றிச் சாப்பிடுவது வழக்கம். இலங்கையில், கறிகளில் அதிகமான தேங்காய் சேர்ப்பது வழக்கம். இதுவும் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படாத ஒரு வழக்கம் ஆகும்.
சோறு சாப்பிடாத வேளைகளில் இலங்கைத் தமிழர் இடியப்பம், பிட்டு போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவர். இட்டிலி, தோசை, அப்பம் போன்றவற்றையும் அவ்வப்போது சாப்பிடுவது உண்டு. இட்டிலி, தோசை போன்றவற்றுக்கு தமிழ் நாட்டில் இருக்கும் முக்கியத்துவம் இலங்கைத் தமிழர் மத்தியில் இல்லை. மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்குகளை அவித்து மிளகாய்ச் சம்பலுடன் சாப்பிடும் வழக்கமும் உண்டு. பிட்டு, இடியப்பம் போன்ற உணவுகளைப் பெரும்பாலும் அரிசி மாவில் செய்வது வழக்கம். குரக்கன் மாவிலும் பிட்டு அவிப்பது உண்டு. யாழ்ப்பாணத்தில், ஒடியல் மாவைப் பயன்படுத்தியும் பிட்டு அவிப்பர். இரண்டாவது உலகப் போர்க் காலத்தில் இலங்கையில் கோதுமை மாவு அறிமுகமானது. அக்காலத்தி இருந்து பிட்டு, இடியப்பம் முதலியவற்றுக்கு அரிசி மாவுடன், கோதுமை மாவையும் கலந்து, அல்லது தனிக் கோதுமை மாவில் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இக்காலத்திலேயே இலங்கைத் தமிழர் பாணை (ரொட்டி) உணவாகக் கொள்ளும் வழக்கமும் உருவானது. தற்காலத்தில் இலங்கைத் தமிழரிடையே பாணும் ஒரு முக்கிய உணவாக உள்ளது.
முற்காலத்தில், யாழ்ப்பாணப் பகுதியின், குறிப்பாக ஏழை மக்களின், உணவுத் தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்வதில் பனம் பொருட்கள் முக்கிய பங்கு வகித்தன. பனம் பழம், பனாட்டு, பனங் கிழங்கு, ஒடியல், ஒடியல் மாவிலிருந்து செய்யப்படும் உணவு வகைகள் என்பவற்றை மக்கள் உணவாகப் பயன்படுத்தி வந்தனர். தற்காலத்தில் பனம் பொருட்கள் முக்கிய உணவாகப் பயன்படுவது இல்லை. ஒடியல் மாவு, கடலுணவு வகைகள் போன்றவற்றைக் கலந்து செய்யப்படும் ஒரு வகைக் கூழ் யாழ்ப்பாணத்துக்கே உரிய தனித்துவமான ஒரு உணவு ஆகும். பெரிய பானைகளில் இக்கூழைக் காய்ச்சி, உறவினர்கள், அயலவர்கள் எனப் பலரும் ஒன்றாகக் கூடியிருந்து, பிலாவிலையைக் கோலிக்கொண்டு அதில் கூழை ஊற்றிக் குடிப்பர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தவரின் மனத்தில் நீங்காது இடம்பெறக்கூடிய ஒரு விடயம் இது எனலாம்.
உள்ளூரில் விளையும் பல பழவகைகளையும் இலங்கைத் தமிழர் உணவாகக் கொள்ளுகின்றனர். மா, பலா, வாழை போன்றவை இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாகவே செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. தோடை போன்ற பழவகைகள் வன்னிப்பகுதியில் செய்கை பண்ணப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்தப்பட்ட திராட்சையும் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக விளைவிக்கப்பட்டது.
அரசியல்
இலங்கைத் தமிழர் தொடர்பான அண்மைக்கால வரலாறு, குறிப்பாக இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்றதற்குப் பிந்திய காலப்பகுதி, பல்வேறு வடிவங்களில் சிங்களவருக்கும், தமிழருக்குமான போராட்ட வரலாறாகவே இருந்து வந்திருக்கிறது எனலாம். விடுதலைக்கு முந்திய காலத்தில், தமிழ்த் தலைவர்களுக்கும், சிங்களத் தலைவர்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பது போல் காணப்பட்டது ஆயினும், இனப்பிரச்சினைக்கான அடிப்படைகள் விடுதலைக்கு முந்திய ஆண்டுகளிலேயே உருவாகிவிட்டன.
பிரித்தானியாவிடம் இருந்து விடுதலைக்கு முன்
யாழ்ப்பாண இராச்சியம் உருவான காலத்தில் இருந்து பெரும்பாலான தமிழர் பகுதிகள் தொடர்ச்சியாக ஒரு தனியான அரசியல் அலகாகவே இருந்து வந்தன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆண்ட காலங்களிலும் யாழ்ப்பாண இராச்சியம் தனியான ஒன்றாகவே கருதப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1815 ஆம் ஆண்டில் இலங்கையின் கடைசிச் சுதந்திர இராச்சியமான கண்டி பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட பின்னர், 1833 ஆம் ஆண்டில் அமுல் செய்யப்பட்ட அரசியல், நிர்வாகச் சீர்திருத்தத்தின் கீழ் முழுத்தீவும் ஒன்றாக்கப்பட்டு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த ஏற்பாடு இலங்கைத் தமிழரின் பிற்கால அரசியல் போக்கைத் தீர்மானித்த ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். இந்தச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்ட நிரூபண சபையில் உத்தியோக அடிப்படையில் இல்லாத ஆறு உறுப்பினர்களுக்கு இடம் இருந்தது. இதில் தமிழருக்கும், சிங்களவருக்கும் இன அடிப்படையில் ஒவ்வொரு இடம் வழங்கப்பட்டது. 1889ல் இன்னொரு சிங்களவருக்கும், ஒரு முசுலிமுக்கும் இடம் கிடைத்து. இந்தச் சபையில் ஒருவர் பின் ஒருவராகத் தமிழர் பிரதிநிதிகளாக இருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர் பகுதிகளை விட்டுக் கொழும்பில் குடியேறிய பணம்படைத்த உயர்குடியினராக இருந்தனர். இவர்களது, தொழில், முதலீடுகள் என்பன தமிழர் பகுதிகளுக்கு வெளியிலேயே இருந்தன. இதனால், இலங்கைத் தமிழர் பகுதிகளை இலங்கையின் ஒரு பகுதியாக இணைத்தது இவர்களுக்கு வாய்ப்பாகவே இருந்தது. எனவே, இது குறித்து எவருமே அக்கறை காட்டவில்ல. அரசாங்க சபையில் இலங்கையருக்குக் கூடிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதே இவர்களது இலக்காக இருந்தது.
பொன்னம்பலம் அருணாசலம், சிங்களத் தலைவர்களிடம் ஏமாற்றம் அடைந்து, தமிழர் உரிமைகளுக்காகத் தமிழர் மகாசன சபையை உருவாக்கியவர்.
1910 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மக்கலம் சீர்திருத்தம், சட்டநிரூபண சபையில், உத்தியோக அடிப்படையில் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பத்தாக அதிகரித்தது. தமிழரும் சிங்களவரும் அரசின் சம பங்காளிகளாகக் கருதப்பட்டமையால், இதன் பின்னரும் தமிழர் சிங்களவருக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஏறத்தாழச் சம அளவாகவே இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் அதிக எண்ணிக்கையான பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், கூடிய அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகவும் சிங்கள தமிழ்த் தலைவர்கள் முயற்சி எடுத்தனர். சிங்களவர்களுக்குக் கூடிய உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், பிரதேச அடிப்படையிலேயே பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும் எனச் சிங்களத் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், யாழ்ப்பாணச் சங்கம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. நடைமுறையில் இருந்த இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தையே அவர்கள் வேண்டி நின்றனர். ஆனாலும், இலங்கையின் தன்னாட்சிக்காக ஒன்றுபட்ட இயக்கமொன்றைக் கட்டி எழுப்புவதற்காகச் செல்வாக்கு மிக்க கொழும்புத் தமிழ்த் தலைவராக இருந்த பொன்னம்பலம் அருணாசலம் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து இயங்கி வந்தார். சிங்களத் தலைவர்கள் கொழும்பில் தமிழருக்கு ஒரு உறுப்பினரை அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சிங்களவருடன் சேர்ந்து இயங்க யாழ்ப்பாணச் சங்கம் உடன்பட்டது. தொடர்ந்து, சிங்களவரையும் தமிழரையும் உட்படுத்திய இலங்கைத் தேசிய காங்கிரசு என்னும் இயக்கம் உருவானது. 1920 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மனிங் சீர்திருத்தம், கண்டிச் சிங்களவருக்குச் சாதகமாக அமைந்தது, இதனால் கரையோரச் சிங்களவர் தமிழருக்கு அளிந்திருந்த உறுதி மொழியில் இருந்து பின்வாங்கினர். இதனால், ஏமாற்றம் அடைந்த அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து விலகித் தமிழர் மகாசன சபை என்னும் அமைப்பை உருவாக்கினார். இந்தப் பிளவு இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. மனிங் சீர்திருத்தத்தின் அடிப்படையில் உருவான சபையில், தமிழர் சிங்களவருக்கு இடையில் இருந்த உறுப்பினர் சமநிலை இல்லாது போய்த் தமிழருக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஜீ. ஜீ. பொன்னம்பலம், தமிழ்க் காங்கிரசுக் கட்சியை உருவாக்கி, ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முன்வைத்து வாதாடியவர்
பின்னர் 1931ல் டொனமூர் சீர்திருத்தத்தின் அடிப்படையில் இன்னொரு புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இது சிங்களவரின் கோரிக்கையை ஏற்று, அனைத்து மக்கள் வாக்குரிமையுடன், பிரதேச அடிப்படையில், அரசாங்க சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வழி வகுத்தது. இலங்கை 9 மாகாணங்களாகவும், மொத்தம் 50 தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் 7 தொகுதிகளை மட்டுமே இலங்கைத் தமிழர் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய இடதுசாரிச் சிந்தனை கொண்ட இளைஞர் இயக்கமான யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு டொனமூர் அரசியல் சட்டத்துக்கு அமைய இடம்பெற்ற முதல் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் எனப் பரப்புரை செய்தது. தமிழர் பிரச்சினையைக் கருத்தில் கொள்ளாது இலங்கை மக்களுக்குப் போதிய தன்னாட்சி அதிகாரம் வழங்கவில்லை என்ற அடிப்படையிலேயே இந்தப் புறக்கணிப்பை அது கோரியது. அத்துடன் வட மாகாணத்தின் 4 தொகுதிகளில் போட்டியிட இருந்தவர்களையும் போட்டியிடாதிருக்கச் சம்மதிக்க வைத்தது. இதன் அடிப்படையில் அரசாங்க சபையில் சிங்களவரோடு ஒப்பிடுகையில் தமிழருக்கான உறுப்பினர் எண்ணிக்கை 38க்கு 3 என்ற அளவுக்குக் குறைந்து விட்டது. நிலைமையை உணர்ந்துகொண்ட பலர் தேர்தலை நடத்தக் கோரிக்கை வைத்ததனால், பின்னர் இடம்பெற்ற தேர்தலில் இளைஞர் காங்கிரசுக்கு எதிரானவர்கள் வெற்றி பெற்றனர். அரசாங்க சபையில் தமிழர் பலம் 38க்கு 7 என்ற அளவு இருந்தது. அப்போது அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு தமிழர்கூட அமைச்சராக இருக்கவில்லை. ஜீ. ஜீ. பொன்னம்பலம் உட்பட மூன்று தமிழருக்குத் துணை அமைச்சர் பதவியும், டபிள்யூ. துரைச்சாமிக்குச் சபாநாயகர் பதவியும் தரப்பட்டன.
இலங்கையின் அரசியல் யாப்பைத் திருத்துவதற்காக 1934ல் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் ஒரு ஆணைக்குழுவைப் பிரித்தானிய அரசு அமைத்தது. அப்போது, ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஈ. எம். வி. நாகநாதன் போன்ற கொழும்பைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தலைவர்கள் ஐம்பதுக்கு ஐம்பது என அக்காலத்தில் அறியப்பட்ட சமபல பிரதிநிதித்துவ அமைப்பு ஒன்றுக்கான கோரிக்கையை முன்வைத்தனர். அதே வேளை யாழ்ப்பாணத்தில் சிலர் கூட்டாசி முறையொன்றுக்கான கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், இக்கோரிக்கைகள் எதையுமே கவனத்தில் கொள்ளாத சோல்பரி ஆணைக்குழுவும், சிங்களப் பெரும்பான்மையினருக்குச் சாதகமாக அமைந்த அரசியல் யாப்பை உருவாக்கியது. ஆனால், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்த்துச் சில ஒழுங்குகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. குறிப்பாக 29 ஆவது சரத்து எனப் பரவலாக அறியப்பட்ட பிரிவு, சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் உருவாக்கப் படுவதைத் தடுக்கும் எனக் கருதப்பட்டது. சோல்பரி அரசியல் திட்டத்தின் அடிப்படையில் 1947ல் இடம்பெற்ற தேர்தலில் 68 சிங்கள உறுப்பினர்களுக்கு எதிராக 13 இலங்கைத் தமிழ் உறுப்பினர்களே தெரிவாகினர். ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை தோல்வி அடைந்த பின்னர், வேறு மாற்றுத் திட்டம் எதையும் கொண்டிருக்காத ஒரு நிலையில், தமிழ்த் தலைவர்கள் டீ. எஸ். சேனாநாயக்காவின் அரசுடன் ஒத்துழைக்கத் தீர்மானித்தனர். சுயேச்சை உறுப்பினரான சி. சுந்தரலிங்கம், தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டன.
பிரித்தானியாவிடம் இருந்து விடுதலைக்கு பின்
எஸ். ஜே. வி. செல்வநாயகம், தமிழரசுக் கட்சியைத் தொடங்கியவர்.
பிரித்தானியர், 1948 ஆம் ஆண்டில் விடுதலை வழங்கி இலங்கை முழுவதையும் சிங்களப் பெரும்பான்மை அரசின் பொறுப்பில் ஒப்படைத்தனர். இதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாகப் பல பிரச்சினைகள் உருவாகின. இந்தியர் பிரசாவுரிமைச் சட்டம், தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், சிங்களம் மட்டும் சட்டம் போன்றவை தமிழர்களின் உரிமைகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கின. இந்தியர் பிரசாவுரிமைச் சட்டத்தை அமைச்சராக இருந்த பொன்னம்பலம் ஆதரித்ததால், தமிழ்க் காங்கிரசுக் கட்சி இரண்டாக உடைந்தது. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பலர் கட்சியில் இருந்து விலகி இலங்கைக் கூட்டாட்சிக் கட்சியைத் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) தொடங்கினர். இக்கட்சி, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி முறையை முன்வைத்தது. விடுதலைக்கு முன்பிருந்தே பல சிங்களத் தலைவர்கள் சிங்கள மொழியை மட்டுமே அரசாங்க மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 1956ல், பௌத்த, சிங்கள உணர்வுகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, சிங்களத்தை மட்டும் அரச மொழி ஆக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். தமிழரசுக் கட்சியினர் கொழும்பில் இதற்கு எதிராக அமைதிவழிப் போராட்டம் நடத்தினர். இது வன்முறையால் அடக்கப்பட்டது. நாடு முழுவதும் இனக்கலவரம் உருவாகித் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பண்டாரநாயக்கா தமிழ் மொழிக்கும் ஓரளவு உரிமை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை செல்வநாயகத்துடன் செய்துகொண்டார். இது பண்டா-செல்வா ஒப்பந்தம் என அறியப்பட்டது. ஆனால் சிங்களத் தலைவர்களின் கடுமையான எதிப்பின் காரணமாகப் பண்டாரநாயக்கா ஒருதலையாக இவ்வொப்பந்ததைக் கைவிட்டார். பண்டாரநாயக்கா இறந்த பின்னர் பதவிக்கு வந்த அவரது மனைவி சிரிமா பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருந்தார். 1965ல் டட்லி சேனாநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மாவட்ட அடிப்படையிலான ஓரளவு அதிகாரப் பரவலாகத்துக்கான வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, தமிழரசுக் கட்சியினர் அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்காததால், சில ஆண்டுகளுக்குப் பின்னர் அக்கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.
1970ல் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய சிரிமா பண்டாரநாயக்கா, இலங்கையைப் பிரித்தானியாவில் இருந்து முற்றாகத் துண்டித்துக்கொண்டு குடியரசு ஆக்குவதற்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்கினார். நாடு முழுவதும் சிங்களமே அரச மொழியாகவும், பௌத்த மதம் முன்னுரிமை கொண்ட மதமாகவும் இருக்கும் வகையில் யாப்பு உருவாக்கப்பட்டு 1972ல் இலங்கை குடியரசு ஆக்கப்பட்டது. அத்துடன், கல்வித்துறையில் தரப்படுத்தல் போன்றவை தமிழ் மாணவர்களை விரக்திக்கு உள்ளாக்கின. இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதப் போக்குத் தலைதூக்கத் தொடங்கியது. மிதவாதத் தமிழ்த் தலைவர்களுக்கு இளைஞர்களிடம் இருந்து அழுத்தங்கள் ஏற்பட்டன. இதனால், இதுவரை எதிரெதிராக இயங்கிவந்த இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு என்பனவும், தொண்டமான் தலைமையில் இந்தியத் தமிழருக்காக இயங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் அமைப்பை உருவாக்கிச் சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர். இது எவ்வித பயனும் அளிக்காததைத் தொடர்ந்து, 1976ல் இலங்கையில் தமிழருக்குத் தனிநாடு கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் பெயர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனவும் மாற்றப்பட்டது. அமைதிவழியில் தமது இலக்கை அடைவதையே இம்முன்னணி நோக்கமாகக் கொண்டிருந்தது.
70களின் பிற்பகுதியிலும், 80களின் முற்பகுதியிலும் அமைதி வழியில் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் சிலர் சிறுசிறு குழுக்களாக இயங்கிவந்தனர். 1983ல் இடம்பெற்ற இனக் கலவரத்தைத் தொடர்ந்து படிப்படியாக மிதவாத அரசியல் கட்சிகளின் செல்வாக்குத் தளர்ந்து வந்தது. பல ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் வளர்ச்சிபெற்று வந்தன. இவற்றுக்கிடையே உள் முரண்பாடுகளும் அடிக்கடி வெளிப்பட்டன. காலப்போக்கில், விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்குக் கிழக்கின் பெரும் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்தது. 1987ல் இலங்கைத் தமிழரின் பங்களிப்பு எதுவும் இன்றி இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஒன்று உருவானது. இதன் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கத்துக்காக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், தமிழ் தேசிய மொழியாகவும் அறிவிக்கப்பட்டது. அமைதி காப்பதற்காக வடக்குக் கிழக்கில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டது. தொடர்ந்து இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்திய அமைதிப்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி இரு தரப்பினரிடையே போர் ஏற்பட வழிவகுத்தது. 1989ல் ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறாமலேயே இந்திய அமைதிப்படை விலகவேண்டி ஏற்பட்டது. மீண்டும் வடக்குக் கிழக்கின் பல பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வெளிநாட்டு நடுவர்களுடன் பல அமைதிப் பேச்சுக்கள் இடம்பெற்றனவாயினும் எவ்வித பயனும் விளையவில்லை. உலக அரங்கில் இடம்பெற்ற சில நிகழ்வுகளையும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொள்கை மாற்றங்களையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை அரசு, பல நாடுகளின் உதவிகளைப் பெற்று, விடுதலைப் புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. கிழக்கு மாகாணத்தில் தொடங்கி புலிகளிடம் இருந்த பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிய இலங்கை இராணுவம், முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற இறுதிப்போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது.
போர் நிறுத்தப்பட்டாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளது. தமிழரின் அரசியல் தலைமைத்துவம் மீண்டும் மிதவாத அரசியல்வாதிகளின் கைக்கு மாறியுள்ளது.