கடந்த 118 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னாள் வடக்கின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களினால் முடித்துவைக்கப்படாத நிலையிலும் தற்போதைய புதிய சுகாதார அமைச்சர் குணசீலன் அவர்களினாலும், பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்களின் வாக்குறுதிகளினாலும் இந்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 3 ½ வருடங்களில் சாதித்துக்காட்டமுடியாத விடயத்தை ஒரு வருடத்தில் சாதித்துக்காட்டுவதென்பது சாத்தியமற்றதொன்றாகவிருந்தாலும் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் குணசீலன் அவர்களும் ஒரு வைத்தியர் என்ற வகையில், முன்னாள் சுகாதார அமைச்சருக்கு அவரது கடமைகளைச் செய்வதற்கு அல்லது சுகாதாரத் தொண்டர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதையே இப்போராட்டம் எடுத்துக்காட்டுகிறது. வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சாள்ஸ், சாந்தி சிறீஸ்கந்தராஜா, செல்வம் அடைக்கலநாதன், மாகாணசபை உறுப்பினர்களான இந்திரராசா, தியாகராசா, லிங்கநாதன், முன்னாள் உறுப்பினர் மயூரன் போன்ற மாகாணசபை உறுப்பினர்கள் பலர் இருந்தும் இவர்களது போராட்டத்திற்கு உரிய பதில் எதனையும் வழங்கவில்லை. தற்போதைய புதிய சுகாதார அமைச்சர் பதவியேற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களது செயற்பாடுகள் தவறு என்பதை சுட்டிக்காட்டுவதற்காக தற்போது இவர்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக தற்போதைய சுகாதார அமைச்சர் குணசீலன் அவர்களுக்கு கட்சிப் பிரச்சினை பாரிய அளவில் காணப்பட்டபோதிலும் அதனையும் பொருட்படுத்தாது இந்த சுகாதாரத் தொண்டர்களது போராட்டத்தை முடித்துவைத்திருப்பதானது வழமைபோன்ற ஒரு செயலாக இருந்தாலும் தற்போது இப்போராட்டமானது அரசியல்வாதிகள் தங்களது தேவைக்காக மக்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது புலப்படுகிறது. சுகாதார அமைச்சர் குணசீலன் என்பவர் ரெலோவில் இருக்கிறாரா என்பது முதலாவது கேள்வி. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி முதல்வர் விக்னேஸ்வரனின் அறிவுறுத்தலுக்கமைய சுகாதாரப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக கட்சியானது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக அதன் செயலாளர் நாயகம் சிறிகாந்தா தெரிவித்திருந்தார். விந்தன் அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கவேண்டும் என ரெலோவின் மத்திய குழு பரிந்துரைத்தது. அதனைக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் உறுதிசெய்துகொண்டார். அரசியலில் நிரந்தரமாக நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பதைப்போல் ரெலோவானது இவ்விடயம் தொடர்பாக விந்தன் கனகரத்தினத்தின் முதுகில் குத்திவிட்டது என்றே கூறவேண்டும். இது இவ்வாறிருக்க எதிர்வரும் 16ம் திகதியளவில் ரெலோவின் மத்திய குழு கூடி தற்போதைய அமைச்சர் குணசீலன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா அல்லது விடுவதா என்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளது.
இதில் ஒருவிடயம் என்னவெனில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார் என முன்னாள் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் மீது 06 மாத தடையும் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறும் ரெலோவானது சிபாரிசு செய்தது. எம்மைப்பொறுத்தவரை கட்சியின் கட்டுப்பாட்டை இருவரும் அதாவது முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் மீறியிருக்கின்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதில் ஒரு விடயம் என்னவெனில் தொடர்நதும் அமைச்சர் குணசீலன் அவர்களே சுகாதார அமைச்சராக ரெலோவின் சார்பாக இருப்பார். அவரை ரெலோ நிக்குமாகவிருந்தால் தான் ரெலோ கட்சி சார்ந்தவன் அல்ல என ஒரு ஊடகவியலாளர் கூட்டத்தை வைப்பார். இறுதியில் ரெலோவின் மத்திய குழு கூடும். அதன் தலைவரும் செயலாளரும் ஊடகங்களுக்குப் போலியான அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள்.
குறிப்பாக கட்சிகளுக்கிடையே உட்பூசல்கள் பிரச்சினைகள் வருவது சகஜம். அதனை நாம் சரிசெய்துவிட்டோம் எனக்கூறஜ கும்மாளமடிக்கப்போகிறார்கள். பொதுவாக எந்தக் கட்சியாகவிருந்தாலும் அதனது கொள்கை, திட்டமிடல் வியூகம், தலைமைத்துவம், அதன் பிரதிநிதிகள் ஒழுங்கான முறையில் பலமாக இருக்கவேண்டும். அமைச்சுப் பதவி இல்லை என்பதற்காக கட்சி தாவும் இந்த ஆயுதக்கட்சிகள் பதவிக்காக எதனையும் செய்யத் துணிவார்கள் என்பதையே தற்போதைய நிலைமை எடுத்துக்காட்டுகிறது.
திலீபன், அன்னை பூபதி போன்றவர்களின் உண்ணாவிரதப்போராட்டங்கள் இவர்களால் கொச்சைப்படுத்தப்படுகிறது. தேசியம், சுயநிர்ணய உரிமை என்பதற்கப்பால் இவர்களது போராட்டம் பயணிக்கிறது. மானம் எதுவுமே இல்லாதவர்கள் போல தமிழ் அரசியல் கட்சிகள் இன்று ஒன்று நேற்று ஒன்றாகப் பேசுகிறார்கள். போராட்டம் இடம்பெற்றால் அதனை எவ்வாறு தீர்வுக்குக் கொண்டுவருவது என்பதைவிட்டு அதனை மெருகேற்றிப் பற்றவைத்து தமது அரசியல் அராஜகத்தைப் புரிந்து தொடர்ந்தும் தமது நிலையை உயர்த்த இப்போதிருந்தே அத்திவாரம் போடுகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் சாதிக்கமுடியாத விடயத்தை இந்நாள் சுகாதார அமைச்சர் சாதிப்பாராகவிருந்தால் அது உண்மையில் வரவேற்கத்தக்கது. மருத்துவராக இருந்தாலும் அரசியல் அனுபவம் புதிது. அதன் நெளிவு சுழிவுகளை கற்றுக்கொள்ள மூத்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று இவர் செயற்படவேண்டும். கட்சிக்கு அறிவிக்காமல் நேரடியாக முதல்வர் விக்னேஸ்;வரனிடம் சென்று பதவிகளைப் பெற்றுக்கொண்ட குணசீலன் பாரிய தவறு இழைத்திருக்கின்றார். கட்சி என்ற ரீதியில் மன்னிக்கப்படமுடியாத குற்றம். குறிப்பாக செயலாளர் நாயகம், தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மத்திய குழு உறுப்பினர்களையும் அவர் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. முதல்வரை நம்பி தனது அரசியலில் பயணித்திருக்கின்றார் என்பதையே தற்போது கூறமுடியும்.
அரசியலில் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பால் கட்சி கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். அது செயற்பாடுகளுக்கு உதவியாக அமயும். போராட்ட காலத்தில் காட்டிக்கொடுத்த இந்த ஆயுதக்கட்சிகள் அக்காலத்தில் அவர்களுக்கு அடிமையாகிப்போனார்கள். அதன் விளைவையே தற்போது நாம் அனுபவிக்கிறோம். அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், சுகாதாரம், விவசாயம், நில ஆக்கிரமிப்பு இவற்றுக்கெல்லாம் விடைகாணாத இந்த அரசியல் தலைமைகள் பதவிகளுக்காக காட்டிக்கொடுத்து துரோகச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். இத்தகைய சூழ்நிலைகள் மாற்றப்படவேண்டும். இல்லையேல் ஆயுதக்கட்சிகள் இல்லாமல் ஒரே ஒரு கட்சி பலமாகும் நிலை ஏற்படுத்தப்படும். வட மாகாணசபையை ஒழுங்காக நெறிப்படுத்த இயலாத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தவறியேனும் தமிழீழம் என்ற ஒன்றை அமைக்குமாறு அரசு அறிவித்தால் அதனை எவ்வாறு செயற்படுத்தப் போகிறார்கள். இவையெல்லாம் கேள்விக்குறியாகியுள்ள விடயங்கள். ஆகவே புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் இந்த அமைச்சுக் காலத்தில் எவ்வளவு சுருட்டிக்கொண்டு நாமும் ஒதுங்கலாம் என்று நினைப்பார்களே தவிர, மக்கள் நலனில் அக்கறையாகச் செயற்படமாட்டார்கள் என்பதை கடந்த கால அமைச்சர்களின் செயற்பாடுகள் ஊடாக நாம் கற்றுக்கொண்ட பாடங்களாக அமைகின்றன.
புதிய அமைச்சர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட உரிய காலம் போதாது. முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு இந்த அமைச்சர்களின் மண்டையில் குட்டி வேலையும் வாங்கிக்கொள்ள இயலும். அவரின் சட்டத்திட்டத்திற்கமைய அவரிடம் கேள்வி கேட்காதவர்களை அவர் நியமித்துள்ளார். இவ் அமைச்சர்களை தனக்கேற்றாற்போலவும் மாற்றியுள்ளார். இது புரியாத இந்த புதிய அமைச்சர்களும் தாம் ஏதோ பெரிய பதவியை அடைந்துவிட்டோம் என்று ஏப்பம் விட்டு தமது பயணத்தைத் தொடங்கியுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்கள் மாகாண சபையில் இருந்து மட்டுமல்ல, மாகாண கட்சியில் இருந்தும் நீக்கப்படவேண்டும். குற்றமற்றவர்கள் தொடர்ந்தும் தமது பணியைச் செய்திருக்கவேண்டும். ஒரு நீதியரசராக இருந்தவருக்கு சரியான நீதி புரியவில்லை. கட்சிகளின் பிற்போக்கு அரசியல் தனங்களை நம்பி முதலமைச்சர் செயற்படுவது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. கள்ளங்கபடம் தெரியாத முதல்வர் என ஏனைய கட்சிகள் இவரை ஒரு பகடைக்காயாக ஏணியாகப் பயன்படுத்தி இவரை ஓரங்கட்டும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். முன்னர் முதல்வருக்கு இருந்த மரியாதை தற்போது குறைந்திருக்கிறது. ஆயுதக்கட்சிகளை தூக்கியெறிந்த முதல்வர் இன்று அவர்களின் அடிவருடியாகச் செயற்படும் விதம் கவலைக்குரியது. தமிழினத்தை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும். மக்கள் புரட்சி சாதாரணமானதல்ல. இப்புரட்சி அரசுக்கெதிராக செயற்படுத்தப்படவேண்டுமே தவிர எம் தமிழ்க்கட்சிகளுக்கு எதிராக அல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த மரியாதை தற்போது எள்ளளவும் இல்லை என்பது வேதனையளிக்கிறது.
போராட்டங்களை ஆரம்பிப்பவர்களும், குழப்பிவிடுபவர்களும் இந்த அரசியல்வாதிகளே. காலத்தின் தேவை அறிந்து அரசியல் செய்வதன் ஊடாக தமிழ் மக்களுக்கானத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆயுதக்கட்சிகளைப் பொறுத்தவரையில் ஏதேனும் ஒன்று நடந்துவிட்டால் மத்திய குழு கூடி முடிவெடுக்கும். அதன் பின் இவர்களது மத்திய குழுவினது தீர்மானத்தை வடமாகாண முதல்வரோ அல்லது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையோ, சம்பந்தனோ ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக தாம் மூவரும் எடுக்கும் முடிவினை நடைமுறைப்படுத்தி ஏனைய கட்சிகளுக்கு துரோகம் விளைவித்து, பதவிகளை வழங்குகின்றார்கள். அதனையே தற்போது முதல்வரும் செய்திருக்கின்றார். தற்போதிருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சர்கள் எந்தக் கட்சிகளுடாக உங்களது அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட்டதோ அக்கட்சிகளுக்குப் பலம் சேர்த்துக்கொள்ளுங்கள். அதனூடாகத்தான் மக்களுக்கு நன்மை செய்யமுடியும். மக்கள் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவீர்களாயின் மக்கள் சக்தி மாபெரும் சக்தியாகவெடித்து உங்களது உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உருவாகும். மக்களுக்கு ஒரு அன்பார்ந்த வேண்டுகோள். உங்களது போராட்டத்திற்கு முடிவு கிடைக்கும் வரை போராடவேண்டும். அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துபோகக்கூடாது. அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உரிமை, உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
சுகாதாரத் தொண்டர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் (வடமாகாணம்) தமக்கான நிரந்தர நியமனத்தைத் தருமாறு கோரி கடந்த 118 நாட்களாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, வவுனியா முன்பாக போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இவர்கள் யுத்த காலத்திலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுகாதாரத் துறையில் கடமையாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– இரணியன்