பௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு
முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு வைத்துக் கொண்டு பின்னதொடர்ந்து திரிவதாக தோன்றுகின்றது. பொலிஸின் தகவல் வழங்குனரான நாமல் குமார இதுபற்றி பகிரங்கமாகச் சொன்ன பின்னரும் முஸ்லிம் சமூகம் இதுவிடயத்தில் அசட்டையாக இருக்க முடியாது.
அண்மைக்காலமாக பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு தேசிய அரசியல், பாதுகாப்பு அரங்கை அதிர வைத்துக் கொண்டிருக்கின்ற தகவல் வழங்குனரான நாமல் குமார ஒவ்வொரு மர்மமாக முடிச்;சவிழ்த்துக் கொண்டிருக்கின்றார். இலங்கையின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக ஒரு துணுக்குறச் செய்யும் தகவலை வெளியிட்டிருந்த நாமல் குமார, கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இன்னுமொரு உளவுத் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
மட்டக்களப்பில் முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் பெயர் குறிப்பிடத்தக்க முஸ்லிம் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தாக்குவதற்குமான உத்தேச திட்டம் தொடர்பில் பிரான்ஸில் வாழும் துஷார பீரிஸ் என்பவருடன் தான் மேற்கொண்ட உரையாடலை நாமல் குமார ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கின்றார். கூட்டிணைந்த சக்திகள் தமிழர்களை ஏதோ ஒரு அடிப்படையில் அடக்கியதாக பெருந்தேசிய சக்திகள் நினைக்கின்றன. அத்துடன் வெளிநாட்டுச் சக்திகளால் அவர்கள் மீது இன்னுமொரு நெருக்குவாரத்தை பிரயோகிக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது. இந்நிலையில் அடுத்த இலக்காக முஸ்லிம்கள் இருக்கின்றனர். முஸ்லிம்களிடையே உள்ளக முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காக பல அமைப்புக்கள், முஸ்லிம்களுக்கு உள்ளும் புறமும் இருந்து செயற்படுகின்றது பழைய கதை.ஆனால் இதற்கு மேலதிகமாக இப்போது இலங்கை முஸ்லிம்களை சிங்கள மற்றும் தமிழ் மக்களோடு முரண்பட வைப்பதற்காகவும், முஸ்லிம்களிடையே தீவிரவாதம் இருக்கின்றது என்று சொல்லி சர்வதேச தலையீட்டைப் பெறுவதற்காகவும், இனங்களுக்கு இடையில் வன்முறைகளை தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வதற்காகவும், முஸ்லிம் தலைவர்;களை ஏதாவது அடிப்படையில் இலக்கு வைப்பதற்காகவும் திட்டமிட்ட அடிப்படையில் பல சக்திகள் கூட்டிணைந்து பணியாற்றுகின்றன. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் இப்போது சியோனிசமும், இந்துத்துவா அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அத்துடன் பௌத்த கடும்போக்குவாத இயக்கங்களும் ஒரு கூட்டு அஜந்தாவின் அடிப்படையில் திரைக்குப் பின்னால் இணைந்து செயற்படுகின்றன. அதேநேரம், இலங்கையில் தொடராக முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற சம்பவங்களை ஒரு கோர்வையாக நோக்குகின்ற போதும், நாமல் குமார வெளியிடும் குரல் பதிவுகளை நோக்கும் போதும், மேற்சொன்ன களச்சூழலைப் பயன்படுத்தி உள்நாட்டில் உள்ள அரசியல் மற்றும் இதர சக்திகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க அல்லது எரிகின்ற வீட்டில் கொள்ளி பிடுங்க மனக் கணக்குப் போடுகின்றனவா என்ற சந்தேகமும் எழாமலிருக்க முடியாது. பொலிஸாருக்கு ரகசிய தகவல் வழங்கும் நபர் எனவும் ஊழலுக்கு எதிரான செயலணியின் தலைவர் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்ற நாமல் குமார அண்மைக்காலமாக வெளியிடும் இரகசியங்கள் எல்லாம் உண்மையாக இருக்குமென்று எடுத்துக் கொண்டால், சில தீர்மானங்களுக்கு வர முடியும். அதாவது இதற்குப் பின்னால் ஒரு வலைப்பின்னல் செயற்பட்டிருக்கின்றது. அதாவது, இதில் உள்நாட்டு, புலம்பெயர் சக்திகள், இனவாத அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். அரசியல் சக்திகளும் தொடர்பில் இருந்திருக்க வாய்ப்புண்டு. இப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட ஏதோவொரு முரண்பாட்டின் காரணமாக அல்லது நாடக பாங்கில் செயற்பட்டு எதையோ சாதிப்பதற்காக இன்று இத்தகவல்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றே கருத வேண்டியிருக்கின்றது. ஆரம்பத்தில் திகண கலலரங்களின் போது பொறுப்புவாய்ந்த பணியில் ஈடுபட்ட முஸ்லிமான பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு எதிரான காய்நகர்த்தலை மேற்கொள்ளுமாறு தொடர்பாக இன்னுமொரு உயரதிகாரியான (பிரதி பொலிஸ் மா அதிபர்) நாலக்க சில்வா தன்னுடன் பேசிய குரல்பதிவை நாமல் குமார வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் படுகொலைத் திட்டம் தொடர்பில் தகவல் வெளியிட்டார். இந்நிலையில் நாலக்க சில்வா தலைமறைவாகியுள்ளதுடன் வேறு ஒரு சிலர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு உயரதிகாரிகள் ஓரிருவர், புலம்பெயர் இலங்கையர், வெளிநாட்டு இனவாத சக்திகள் எல்லாவற்றுக்கும் இவ்விவகாரங்களில் ஒரு பெரிய மர்மமான தொடர்பு இருந்துள்ளமை மெல்ல மெல்ல புலனாகின்றது. சில சதித்திட்டங்களுக்காக தனக்கு வெளிநாட்டில் இருந்து புலம்பெயர் சிங்கள, தமிழ் சக்திகள் பணம் அனுப்பியதாக நாமல் குமார ஊடகங்களுக்குச் சொல்லி வருகின்றார். நாமல் குமாரவும் இந்த சதித்திட்ட நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்திய, இனவாதிகளுடன் தொடர்பை பேணிய ஒரு நபரே என்றபோதும் அவர் வெளியிட்டு வருகின்ற ரகசியங்கள் புறக்கணிக்க முடியாதவை ஆகும். கிழக்கில் திட்டம் அந்த வகையில் நாமல் குமார அண்மையில் முஸ்லிம்கள் தொடர்பான முக்கிய திட்டமொன்றை அம்பலப்படுத்தியிருக்கின்றார். அதாவது, பிரான்ஸில் இருந்து கொண்டு இந்த நாட்டில் குழம்பங்களை ஏற்படுத்த திட்டம் தீட்டிய துஷார பீரிஸ் தொடர்பிலான உரையாடல் ஒலிப்பதிவை நாமல் அண்மையில் வெளியிட்டிருக்கின்றார். மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு கைங்கரியத்தை மேற்கொள்வது தொடர்பாக இவ் உரையாடல் அமைந்துள்ளது.;அம்பாறையிலா அல்லது மட்டக்களப்பிலா இதைச் செய்ய வேண்டும்? என்று நாமல் குமார கேட்க, மட்டக்களப்பி;ல் என்று துஷார சொல்கின்றார். இதற்கான திட்டத்தை வகுக்குமாறு துஷார கூறுகின்றார். திட்டத்தை தீட்டி, மூன்றுபேரை தன்னால் ஏற்பாடு செய்ய முடியும் என்று நாமல் குமார குறிப்பிடுகின்றார். பிஸ்டல் குழு பற்றி பேசிக் கொள்கின்றனர். அத்துடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் நிகழ்வில் தாக்குதல் மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பிலான உரையாடலையும் நாமல் குமார வெளியிட்டுள்ளார். இதன்படி குறிப்பிட்ட திட்டத்தின் படி றிமோட் கொண்ரோல் மூலம் இயங்கும் கருவியைப் பயன்படுத்தி அந்தஅரசியல்வாதியின் கூட்டத்தை தாக்குதல் மேற்கொள்வது தொடர்பாக தொலைபேசியில் உரையாடியுள்ளனர். ஆனால் பின்னர், முஸ்லிம் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை துஷார பீரிஸ் தீட்டியதாகவும் அதற்காக ரி56 துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய அவர் பணம் அனுப்பியதாகவும் நாமல் குமார கூறியுள்ளார். அத்துடன் ‘பிரான்ஸில் உள்ள புலிகளுடன் தொடர்புபட்ட துஷார பீரிஸ் இலங்கையில் பயங்கரவாதத்தை உருவாக்க திட்டமிடுகின்றார் என்று நாமல் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் பாரதூரமான விடயமாகும். எனவே இது விடயத்தில் இலங்கையில் இருக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது மட்டக்களப்பில்தானே இடம்பெற திட்டமிடப்படுகின்றது என்றோ, அந்த அமைச்சர் அல்லது அரசியல்வாதி நமது அரசியல் எதிரிதானே என்று அற்பத்தனமாக நினைத்தோ எந்த முஸ்லிம் அரசியல்வாதியோ செயற்பாட்டாளரோ இவ்விடயத்தை அலட்டிக் கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம். யார் இலக்கு இங்கு இலக்கு வைக்கப்படும் முஸ்;லிம் அரசியல்வாதி அல்லது அரசியல்வாதிகளின் பெயர்களை கமராவின் முன் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார். ஆனால் பாதுகாப்பு தரப்பினர் அந்தப் பெயர்களை தணிக்கை செய்தே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியுள்ளனர். இருப்பினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனின் பெயரும் இவரால் சொல்லப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் அனுமானிக்கப்படுகின்றது. அனுமானத்தை ஊர்ஜிதத்தை நோக்கி நகர்த்தும் பிந்திய தகவல்களும் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் மட்டுமே இலக்காக இருப்பார் என்று சொல்வதற்கில்லை. இலங்கையில் முஸ்லிம்களுக்காக பேசுகின்ற, உரத்து குரல் கொடுகின்ற, கடும்போக்காளர்களுக்கு சவாலாக இருக்கின்ற, அல்லது தமக்கு ‘சவாலான அரசியல்வாதி என்று இந்த சதித்திட்டம் தீட்டும் தரப்பினரால் கருதப்படுகின்ற எந்த முஸ்லிம் கட்சித் தலைவரும், அமைச்சரும், அரசியல் தலைமையும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், கிழக்கில் முஸ்லிம்களுக்கு பெரும் சேவையாற்றுகின்ற குறிப்பிட்ட ஒரிரு அரசியல்வாதிகள் மற்றுமுள்ள முஸ்லிம் கட்சித் தலைமைகளும் ஏதாவது ஒரு அடிப்படையில் இலக்கு வைக்கப்படக் கூடிய அபாயம் உள்ளுறைந்திருக்கின்றது. ஹரீஸின் முயற்சி எனவே, உடனடியாக விரைந்து செயற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பாக பிரதியமைச்சர் ஹரீஸ் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக நாமல் குமார இரகசிய திட்டம் ஒன்றை அம்பலப்படுத்தியிருக்கின்றார். இது சீரியஸான ஒரு பிரச்சினையாகும். இந்த நாட்டின் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அச்சுறுத்துகின்ற செயற்பாடாகும்.எனவே நாமல் குமாரவை கைது செய்து, இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி இதற்குப் பின்னால் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், புலம்பெயர் சக்திகள் இருக்கின்றனரா என்பதை அறிய வேண்டியுள்ளது. எனவேதான் இது தொடர்பாக விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன்என்றார் உண்மையில், யார் இலக்கு வைக்கப்படுகின்றார்கள், அவர் எந்தக் கட்சிக்காரர் என்ற வேறுபாடுகளைக் கடந்து, பிரதியமைச்சர் ஹரீஸ் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பாராட்டத் தக்கது, சமூகத்தால் நன்றியுடன் நோக்கப்படுவதும் ஆகும். அதேபோன்று, ஒரு சில அமைப்புக்கள் மற்றும் உலமா கட்சி ஆகியன முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை கோரியுள்ளன. இதற்கிடையில், மேற்குறிப்பிட்ட அமைச்சர் அண்மையில் கிழக்கிற்கு விஜயம் செய்திருந் வேளையில் அவருக்கு மட்டக்களப்பில் வைத்து பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கிழக்கை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அறியக் கிடைக்கின்றது. ஆனால் அரசாங்கம் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பை அதிகரித்ததாக தகவல் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை, இந்தப் பின்னணியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்திருக்கின்றார். இந்தப் பின்னணியில், குறித்த அரசியல்வாதி மீதான கொலை அச்சுறுத்தல் தொடர்பில் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமும் ஒழுங்கும் அமைச்சரான ரஞ்சித் மதுமபண்டார ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கிழக்கில் முஸ்லிம் தலைவர்களை தாக்கி, அதன்மூலம் தமிழ் முஸ்லிம் மோதலை தூண்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எவ்வாறிருப்பினும், இது மிகவும் பாரதூரமான விடயமும் ஆபத்தான சமிக்கையும் ஆகும். முஸ்லிம் தலைவர்களை தாக்குதல் என்பது அல்லது கிழக்கிலோ வேறு எங்கோ முஸ்லிம் பிரதேசங்களில் கலவரங்களை உண்டுபண்ணுதல் என்பது லேசுபட்ட விடயமல்ல. இதற்குப் பின்னால் பாதுகாப்பு அதிகாரிகளும் வெளிநாட்டு சக்திகளும் கூட்டாக செயற்பட்டிருக்கின்றார்கள் என்பது உண்மையென்றால், முஸ்லிம்கள் எந்தளவுக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை உயத்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. பழைய இலக்குகள் முஸ்லிம் தலைவர்கள், அமைச்சர்கள் இலக்கு வைக்கப்படுவதும் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்படுவதும் நமக்குப் புதிதல்ல. மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் வளர்ச்சியும் அரசாங்கத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட இடமும் பெருந்தேசியத்தை மட்டுமல்ல தென்னிலங்கை சிறுபான்மை தலைவர்களுக்கே வயிற்றில் புளியைக் கரைத்தது. அஷ்ரபை அடக்கி விட வேண்டுமென்ற எண்ணம் பல புல்லுருவிகளுக்கு இருந்தது. சமகாலத்தில் புலிகளாலும் அஷ்ரப் கோபக் கண்கொண்டு பார்க்கப்பட்டார். எனவேதான் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக முஸ்லிம்கள் இன்றும் சந்தேகிக்கின்றனர்.
மாவனல்லை கலவரங்களை அடுத்து மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமை கடும்போக்கு சக்திகள் இனவாத கண்கொண்டு பார்த்ததுடன் இப்போது றிசாட் பதியுதீனை விமர்சிப்பது போல அப்போது ஹக்கீமை சில சிங்கள ஊடகங்கள் விமர்சித்தன. அதன்பிறகு அவர் சுகாதகரித்துக் கொண்டு, சிங்கள கடும்போக்கு சக்திகளுக்கு நோகாமல் செயற்படும் போக்கை இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றார்.அதன்பின்னர், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா யுத்தம் மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக புலிகளின் கொலைப்பட்டியலில் அவர் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதேபோல், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் சார்ந்த பாதுகாப்பு நெருக்கடிகள் எழுந்தன. இப்போது அதை வேறு கோணத்தில் பிரயோகிக்க பிரயத்தனங்கள் எடுக்கப்படுகின்றது. எல்லோரினதும் பொறுப்புஎனவே முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் எம்.பி.க்களும் இது தொடர்பில் உரிய கவனம் எடுக்க வேண்டும். ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முக்கியத்துவமற்ற விவகாரங்களுக்காக போர்;க்கொடி தூக்கும் முஸ்லிம் அமைப்புக்களும் தம்மாலான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இன்று அவர் என்றால் நாளை நீங்கள் என்ற அடிப்படையில் கட்சி, பிரதேச பேதங்களை மறந்து இதற்காக குரல்கொடுக்க வேண்டியது தார்மீகமாகும். இந்நிலையில், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்ற பொறுப்புமிக்க தமிழ் அரசியல்வாதிகள் மீது இவ்விடயத்தில் ஒரு கடப்பாடு இருக்கின்றது. அதாவது, நாம் இங்கு நல்லிணக்கம் பற்றிப் பேசிக் கொண்டிருக்க முஸ்லிம் அரசியல்வாதிககளை தாக்கி, அதன் ஊடாக இரு இனங்களையும் மோதவிடும் சதித்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து, உரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என முஸ்லிம்கள் கோருகின்றனர். மிகக் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு தரப்பினரும் முஸ்லிம்களின் ஆணையைப் பெற்று, முஸ்லிம் அரசியல்வாதிகளால் முட்டுக் கொடுக்கப்படுகின்ற அரசாங்கமும் இது தொடர்பில் கூடிய கரிசனையுடன் செயற்பட வேண்டிய தேவையுள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள் தவறு செய்திருந்தால் அதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அவர்களை நோக்கி கூலிப்படைகளின் துப்பாக்கிகள் நீட்டப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது. இதைத்தவிர, இன்னும் சொல்வதற்கு வேறொன்றுமில்லை