பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்படும் இந்துக்களின் வழிபாட்டு தலங்கள் – துணை போகும் தொல் பொருள் திணைக்களம்

449
இலங்கையில் இந்து ஆலயங்கள் மற்றும் இந்து மக்களின் வழிபாட்டுத்தலங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்திற்கு முன் இலங்கை கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம், யாழ்ப்பாணம் இராச்சியம் என மூன்று இராசதானிகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

இலங்கை மீது வர்த்தக நோக்கத்துடன் படை எடுத்த ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தவும் அரசியல் காரணங்களுக்காவும் மூன்று இராசதானிகளையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்ததுடன் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய 1948 ஆம் ஆண்டு சிங்களவரிடம் இலங்கை தேசத்தை கையளித்து சென்றதன் விளைவு இலங்கையில் சிறுபான்மையினராகவும், வடக்கு கிழக்கில் பெரும்பான்மையினராகவும் இருந்த தமிழர்கள் ஒடுக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக அரசியல் ரீதியாகவும், வன்முறையாலும் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் இருப்பையும் இருக்கும்  தமிழரின் அடையாளங்களையும் காப்பாற்ற போராடி வருகின்றனர்.
கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் நடந்து வந்த உள்நாட்டு போரானது கொடுமையான வலிகளை தமிழருக்கு விட்டுச் சென்றது. தமிழர்களின் நிலங்கள், அடையாளங்கள் இருந்தால்தானே அவர்கள் தங்கள் இருப்பை நிலைநிறுத்த போராடுவார்கள். அவைகளை இல்லாமல் செய்தால் போராட்டமே செய்ய மாட்டார்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மக்களின் வழிபாட்டு தலங்கள், வாழ்விடங்கள் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டவர்களினால், புத்தர் சிலை நிறுவுவதன் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது.
அந்த வகையில் அண்மையில் திருகோணமலையில் கண்ணியா வெந்நீரூற்று சிங்கள பௌத்த பிக்கு ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு புத்தர் சிலை நிறுவுவதற்காக, கண்ணியா வெந்நீரூற்றுக்கு அருகே அமைந்துள்ள இந்துக்களின் கடவுளான பிள்ளையார் ஆலயத்தின் அஸ்திவாரம் உடைக்கப்பட்டு புத்தர் சிலை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச் செயல்பாட்டுக்கு ஆதரவாக தொல்பொருள் திணைக்களம் சட்டத்திற்கு முரணான வகையில் ஆதரவு வழங்கி வருகின்றது.
திருகோணமலையில் கண்ணியா பிரதேசத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஏழு வெந்நீரூற்று கிணறுகள் இந்துக்களின் புனித தலமாக பேணப்பட்டு வந்தது. தமிழரின் வரலாற்றின்படி இராவணன் தனது தாயாருக்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடை வாளை உருவி ஏழு இடங்களில் குத்தி இக்கிணறுகளை உருவாக்கியதாக ஐதீகம் உண்டு.
கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக களையிழந்து காணப்பட்ட கண்ணியா வெந்நீரூற்று யுத்தத்தின் பின்னரான காலத்தில் அதிகளவான உல்லாசப் பயணிகள் வந்து செல்லும் தலமாக காணப்பட்டது. அதனை அவதானித்த திருகோணமலை வெல்கம் விகாரையின் விகாராதிபதியான பிக்கு ஒருவர் அப்பிரதேசத்தை பௌத்தர்களின் பூமி என கதை கட்டி வந்ததுடன் இந்துக்களின் பிரதேசத்தை பௌத்த மயமாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தார். அப்பிரதேசத்தில் தமிழ் மொழியில் அமைந்திருந்த பெயர்ப்பலகை நீக்கப்பட்டு சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் உல்லாசப் பயணிகளுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் இது ஒரு பௌத்த பிரதேசம் என எழுதப்பட்டுள்ளது.
கண்ணியா வெந்நீரூற்று பகுதியை 2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தி பராமரித்துவரும் நிலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கான பணிகளை பிக்கு ஒருவர் முன்னெடுக்க தொல்பொருள் திணைக்களம் தனது சட்ட திட்டங்களை மீறி ஒரு புராதன பிள்ளையார் ஆலயத்தின் அஸ்திவாரம் இடிக்க அனுமதி வழங்கியதுடன் அதில் பௌத்த விகாரை அமைக்க ஒத்துழைப்பும் வழங்கியுள்ளது.
குறித்த விகாரை அமைக்க அனுமதிக்கப்பட்ட நிலமானது அப்பிரதேசத்தை சேர்ந்த கோகுலரமணி என்பவருக்கு சொந்தமானது. அந்நிலத்தை தொல்பொருள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பறித்தெடுத்துள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், சிங்கள குடியேற்றங்களுக்கு ஆதரவாக அரச திணைக்களங்கள் செயல்படுகின்றன. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை விட அப்பிரதேசங்களில் புத்தர் சிலைகளை அமைத்து நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்திற்கும், அப்பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளவதற்கும் பாரிய நிதி செலவழிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் பிரதேங்களில் புத்தர்சிலை அமைப்பதற்கோ, விகாரைகளை கட்டுவதற்கோ இடம் தேவைப்படின் அவை முதலில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக பறித்தெடுக்கப்படுகின்றது. அதையும் மீறி நீதி மன்றம் சென்றால் நீதிமன்றங்கள் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கினாலும் ஆக்கிரமிப்பாளர்களால் நீதிமன்ற தீர்ப்புக்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
திருகோணமலை மாவட்டத்தின் தற்போது அரசாங்க அதிபராக கடமையாற்றிவரும் றோகண புஸ்பகுமார கொழும்பில் சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றியவர். திருகோணமலை மாவட்டத்தின் பாரம்பரியம் தமிழரின் வரலாறு பற்றி அறியாதவர். ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டவர். தமிழில் சரளமாக உரையாடக்கூடிய அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார கண்ணியா வெந்நீரூற்று விவகாரத்தில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கும், தொல்பொருள் திணைக்களத்திற்கும் ஆதரவாக செயற்பட்டவர்.
தமிழரின் பிரதேசங்களுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் மாத்திரமே உள்ளனர். வடக்கு கிழக்கை எடுத்துக்கொண்டால் போரின் காரணமாக சீரழிந்த மக்களின் மீள்குடியேற்றம் இன்னும் முழுமை பெறவில்லை, ஆனால் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகளை வேகமாக அமைக்க இலங்கை அரசு முனைப்பு காட்டி வருகின்றது.
புத்தர் சிலை மற்றும் விகாரைகளை வடக்கு கிழக்கில் அமைக்க முனைப்பு காட்டிவரும் அரச திணைக்களமான தொல்பொருள் திணைக்களம் இந்து ஆலயங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் புத்தர் சிலைகளை நிறுவ ஆதரவு தெரிவிப்பதுடன், புத்தர் சிலைகளை நிறுவுவதற்கான முழு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தால் குறி வைக்கப்படும் இந்துக்களின் வழிபாட்டு தலங்கள் சட்ட ரீதியில் அடக்கு முறைக்குள் கொண்டு வரப்பட்டு அவர்களின் சுதந்திரமான மத வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. அதற்கு தொல்பொருள் திணைக்களம் பொலிஸ் திணைக்களத்தை குறித்த மதவழிபாட்டு தலங்களின் சுதந்திரமான வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்த பயன்படுத்துகிறது. புத்தர் சிலை வைக்க தொல்பொருள் திணைக்களத்தால் குறி வைக்கப்படும் இடங்களின் நிர்வாகத்தினரிடம் புத்தர் சிலை நிறுவ அனுமதிக்குமாறு நேரடியாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது. அவ்வாறு மறுக்கும் இந்து ஆலயங்கள் அல்லது புனித தலங்கள் கடும் கெடுபிடிக்குள் உள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆய்வுத்திணைக்களத்திற்கு சட்ட ரீதியாக துணைபோகும் பொலிஸ் திணைக்களம் மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டிய நிலையிலிருந்து தவறி சட்டத்தை காட்டி அடக்குமுறைக்கு உட்படுத்துகின்றது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்படும் பட்சத்தில் மத நல்லிணக்கம் என்பது கேள்விக் குறியாக்கப்படுகின்றது. அந்த வகையில் அறுவது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை தேசத்தில் நடைபெற்றுவந்த இன முறுகல் போரானது கடந்த 2009 ஆம் ஆண்டு பெரும் அழிவுகளுக்கு மத்தியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அரசியல்வாதிகளாலும், ஆன்மீகவாதிகளாலும் பேசப்பட்ட மத மற்றும் இன நல்லிணக்கம் என்பது தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கை காரணமாக கேள்விக்குறியாகியுள்ளதுடன் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் அபாயம் கருக்கட்டுவதையே அவதானிக்க கூடியதாக உள்ளது.
– வன்னியத் தேவன் –
SHARE