இலங்கைத் தமிழர் பிரச்சினையை அறிந்த எவரும்,அவர்களுக்குக் குறைந்தபட்ச மனசாட்சி இருக்குமெனில்,இலங்கை அரசு பவுத்த சிங்கள இனவாத அரசு என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளமாட்டார்கள்.
பின்நவீனத்துவரான அ.மார்க்சும் அவர் வழியில் புகலிட தலித்தியரும் உயர்த்திப் பிடிக்கும் ‘தேசியம் ஒரு கற்பிதம்’ ( nation as imaginary community) எனும் கருத்தாக்கத்தினை எடுத்துக் கொண்டாலும் சரி,அமைப்பியலாளர்கள் பேசும் ‘கருத்துருவ அரசு இயந்திரம்’ (ideological state apparatus) எனும் கருத்தாக்கத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டின் வழியிலும் இலங்கை அரசின் குணரூபம் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஒரே நிலைப்பாட்டுக்குத் தான் வந்து சேருதல் முடியும்.
செவ்வியல் மார்க்சியத்தின் அரிச்சுவடி ஒரு குறிப்பிட்ட அரசு குறித்த ஒரு தெளிவான நிலைப்பாட்டினை அச்சூழலில் இயங்க நேர்ந்திருப்பவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். எந்தவிதமான அரசியல் திட்டங்களும் செயல்பாடுகளும் இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இருத்தல் முடியும்.
பௌத்த மதம் – சிங்கள இனம் – அதனது அடையாளத்துடன், வரலாற்றுடன் பிணைந்த நிலம் என்பதாகவே இலங்கைத் தீவை சிங்கள அரசியல்வாதிகள் முன்வைத்து வருகிறார்கள். சிறுபான்மை இனங்களோ மொழிகளோ அவர்தம் தனித்துவங்களோ இலங்கைத் தீவில் இல்லை என்கிறார்கள்.மகிந்த ராஜபக்சே இதனைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் சொல்கிறார்.தேசபக்தர்கள் தேசத்தின் எதிரிகள் என இரு பிரிவினர் மாத்திரமே உள்ளனர் என்கிறார். இந்தக் கலாச்சார-அரசியல் ஒருமையைக் காப்பதற்கான ஆயுத அமைப்பு, அந்த ஆயுத அமைப்பை மதப்புனிதத்திற்குள் சாசுவதப்படுத்த புத்தமத நிறுவனங்கள் என்பதாகவே அந்த நாட்டின் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. இதுவே இலங்கைத் தீவில் நிலவும் ‘கருத்துருவ அரசு இயந்திரம்’.
அரசு என்பது ஒரு ஐதீக(mythical) அமைப்பாக இருக்க முடியாது. அது நவீனத்துவத்தின் விளைவு. அரசு தனது நடவடிக்கைகளை அடிப்படை யாப்பு,சட்டங்கள், விதிமுறைகள், குடிமைச் சமூகம் என்பதன் அடிப்படையில்தான் மேலெடுத்துச் செல்ல முடியும். ஓரு அரசு ஜனநாயகமாகச் செயல்படுவதற்கு பல்வகை மக்களுக்கான பிரதிநிதித்துவமும், அந்தப் பிரதிநிதித்துவம் நடைமுறையாகாதபோது யாப்பிலும் சட்டத்திலும் மாற்றங்கள் கொணரவே ஒரு அறம்சார் அமைப்பு முயலும். பாரிஸ் கம்யூன் முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரகடனம் வரை, தேசத்திலும் உலகிலும் இவ்வாறுதான் அடிப்படை மனித விழுமியங்களை உத்தரவாதப் படுத்த முடியும்.
பௌத்த-சிங்கள இனக் கருத்தியல் மேலாதிக்கத்தின் உளவியலால் தகவமைக்கப்பட்டிருக்கிற இலங்கைத் தீவில் இரண்டுக்கும் மேலான பகுதி ஜனத்தொகையைக் கொண்டிருக்கிற பெரும்பான்மைச் சிங்களமக்களின் முழுமையான ஒப்புதலுடன், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுமடங்குப் பெரும்பான்மை என்பதற்கான சாத்தியம் என்றுமே இல்லாத சூழலில்,இலங்கை ஜனாதிபதியின் கைகளில் சகல அதிகாரங்களும் குவிந்திருக்கிற ஒரு சூழலில், அந்தத் தீவின் சிறுபான்மையின மக்கள் தமது அடையாளத்தைப் பேணுவது எங்ஙனம் சாத்தியமாகும்?
அரசு என்கிற நவீனத்துவ யுகத்தின் நிர்வாக வடிவம் இலங்கையைப் பொறுத்து சிங்கள-பவுத்த கருத்தியலின் மேலாதிக்கத்தின் கீழ்,அதற்கியைந்ததான யாப்பின் அடிப்படையில் தகவமைக்கப்பட்டிருக்கிறது.
2
‘தேசியம் ஒரு கற்பிதம்’ எனும் கருத்தாக்கத்தினை அ.மார்க்ஸ் வகை புகலிட தலித்தியர்கள் ஈழத் தேசியம் புகைமூட்டம்போன்ற பொய்யான தர்க்கங்களில் கட்டப்பட்டது என ஸ்தாபிக்கப் பயன்படுத்துகிறார்கள். ஈழத் தமிழ் தேசியத்திற்குப் பாவிக்கிற இதே ‘தேசியம் கற்பிதம்’ எனும் கருத்தாக்கத்தை சிங்களப் பெருந்தேசியத்திற்கு அவர்கள் பாவிப்பார்களானால் அவர்களது தர்க்கம் சரிந்து விழுவதை அவர்கள் பார்ப்பார்கள். என்ன ஆச்சரியம், ஈழத் தமிழ் தேசியத்திற்கு அதனைப் பாவிக்கிற இவர்கள் சிங்கள தேசியத்தை மதிப்பிட இக்கருத்தாக்கத்தைப் பாவிப்பதில்லை.
அ.மார்க்ஸை அடியொற்றிய புகலிட தேசியர்களின் ‘தேசியம் ஒரு கற்பிதம்’எனும் கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் அ.மார்க்சின் எழுத்துகளை விடவும் பெனடிக்ட் ஆண்டர்சனை நோக்கிச் செல்வதுதான் பொருத்தமான செயல்பாடாக இருக்கும்.
பின்நவீனத்துவம் ஒரு அரசியலாக உருவாகும் முன்பாகவே, தேசியம் பற்றிய ‘பின்நவீனத்துவக் கதையாடலை’த் துவக்கி வைத்தவர் என பெனடிக்ட் ஆண்டர்சனைச் சொல்ல வேண்டும்.
திட்டவட்டமான ஒரு அரசியல் நிலைப்பாடு என்பதல்லாமல்,தேசியம் பற்றி இவ்வாறான‘கருத்துகள்’ அல்லது‘கற்பிதங்கள்’ எல்லாம் இருக்கின்றன என, ‘பல்வேறு தேசியங்கள்’ குறித்த தனது‘அவதானங்களை’ மட்டும் முன்வைத்துவிட்டு நகர்ந்துவிடுவதை‘கதையாடல்’ என்று சொல்லலாம். இதுவரை தேசியம் பற்றிய விவாதங்களில் இடம் பெற்ற ‘வர்க்கம்’ மற்றும் ‘மனிதவிமோசனம்’ போன்ற விடயங்களை முன்வைத்துப் பேசாமல், தேசியம் பற்றி, வரலாறு நெடுகவும்,‘இவ்வாறெல்லாம் இருக்கிறது’ மற்றும் ‘கருதப்படுகிறது’ என்கிற பார்வையை முன்வைத்தவர் பெனடிக்ட் ஆண்டர்சன்.
கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாகத் தேசியம் பற்றிய உரையாடல்களில் அதிகம் மேற்கோளாகக் காட்டப்பட்டது அவரது ‘தேசியம் : ‘கற்பிதமான சமூகங்கள்’ எனும் புத்தகம்தான். ‘கற்பிதம்’ எனும் சொல் ஒரு வகையில்‘கதையாடல்’ எனத் தமிழ் பின்நவீனத்துவாதிகள் குறிப்பிடும் சொல்லுக்கு மிக அருகிலான அர்த்தத்தைக் கொண்டதாகும். ஆகவேதான், தேசியத்தை ஒரு‘வரலாற்று நிலை’ அல்லது ‘கூட்டு மனநிலை’ என்பதை மறுப்பதற்காகவே‘கற்பிதம்’ என்பதற்கு தமிழ் பின்நவீனத்துவவாதிகள் ‘அதி அழுத்தம்’கொடுத்துப் பேசி வருகிறார்கள்.
தேசியம் என்பதனை ஏன் பெனக்டிக்ட் ஆண்டர்ஸன் ‘கற்பிதம்’ என்கிறார்?ஒரு சின்னஞ்சிறு தேசத்தில் கூட ஒருவர் அந்தத் தேசத்தின் பிற மனிதர்களை‘நேரடியாக’ அறிவது என்பது சாத்தியமேயில்லை. ஒரு மக்கள் கூட்டத்தின் வாசிப்பு, தகவல் தொழில்நுட்பம், இன்றைய நிலையில் இணையம் போன்ற தொடர்பாடல்களின் வழிதான் இந்த தேசியப் பிரக்ஞை என்பது கட்டமைகிறது.ஒரு ‘தேசத்தின்’ பகுதியாகத் தம்மைக் காணும் தனிமனிதர்களது ‘மனநிலை’என்பது இவ்வகையில் ‘கற்பிதமானது’ தான். இந்தக் ‘கற்பிதம்’ என்பது‘இல்லாத’ ஒன்றைக் கற்பனை செய்வது அல்ல. மாறாக வரலாற்று ரீதியில்,மொழி, கலாச்சாரம், இயற்கை, நிலம், போன்ற இயல்பாக அமைகிற ஒருமைகளாலும், பொருளியல், அரசியல், அரசதிகாரம் போன்ற சமூகக் காரணிகளின் தாக்கத்தினாலும், இந்தத் ‘தேசியம் என்கிற உணர்வும்,வரையறையும்’ காலம் தோறும் மாறிக் கொண்டேயிருக்கிறது.
முதலளித்துவப் பொருளியல் நிகழ்வின் போக்கில் ‘தேசியம் என்பது ஒரு வரலாற்று நிலை’ என்பதனை ஆண்டர்சன் ஏற்பதையும், வியட்நாம் பிரச்சினையில், ஒரு தேசம் எனும் அளவில் ‘அமெரிக்க வெகுஜனம்’அவமானமுற்றுத் தமது தேசத்தின் தன்மையை மாற்ற அவர்கள் போராடியதையும் ஆண்டர்ஸன் ‘ஆக்கபூர்வமாகப்’ பார்க்கிறார் என்பதனையும் இங்கு நாம் ஞாபகம் கொள்வது நல்லது.
தேசியக் கருத்தியலில் ‘தூர தேசியம்’ (distant nationalism) என்பது குறித்து ஆன்டர்சன் பேசுகிறார். மேற்கில் பற்வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்தாலும் யூதர்களிடம் செயல்பட்ட கற்பித தேசியம் இத்தகையதுதான். இன்று மேற்கிலும் அமெரிக்காவிலும் வெளிப்படும் ஈழத்தமிழர்களின் ஈழத்தேசிய உணர்வும், சிங்களவர்களுக்குள் வெளிப்படும் சிங்கள-பௌத்த தேசிய உணர்வும் இத்தகைய தூரதேசக் கற்பித தேசிய உணர்வுதான் எனினும்,சிங்களதேசியக் கற்பிதம் ஒரு யதார்த்தமாகவும், வரலாற்று நிலையாகவும் கருத்துருவ அரசு இயந்திரமாகவும், நவீன யுகத்தில் ஒரு அரசு இயந்திரமாகவும் இருக்கிறது. இதனைக் காத்துக்கொள்ள சிங்கள பௌத்த இனத்திற்கு ஆறு இலட்சம் ஆயுதப் படையினரும் தேவைப் படுகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் பாவிக்கிற இன்னொரு கருத்தாக்கம் புலிகளின் தேசியம் ‘எதிரொலிப்பு தேசியம்’ (reflexive nationalism) என்பதாகும்.புலிகளின் தேசியம் எதிரொலிப்பு தேசியம் என்கிறபோது, இனம்-மதம்-ஐதீகம்-ஆயுத அமைப்பு-இனவெறுப்பு-அழிப்பு என்பதான சிங்கள இனத்தேசியத்தின் பிரதிபலிப்பாகவே புலிகளின் தேசியமும் தமிழ் இனம்-இந்துமதம்-ஆண்டபரம்பரை-சிங்களஇனம் பாலான துவேசம்- சிங்கள வெகுமக்களைக் கொல்தல்-தமிழ் ராணுவம் என்பதாக இருக்கிறது எனப் பொருள் கொள்ள முடியும்.
சிங்கள தேசியம் தமிழ் வெகுமக்களைக் கொன்றது போலவே சிங்கள வெகுமக்களையும் புலிகள் கொன்றார்கள். புலிகளின் கலாச்சாரக் குரல் ஆண்ட பரம்பரையின் குரலாகவே ஒலித்தது. சிங்கள ராணுவத்திற்கு எதிரொலிப்பாகவே தமிழ் ராணுவமாக புலிப்படை முன்னிறுத்தப்பட்டது.
எனினும், சிங்கள தேசியத்திற்கும் விடுதலைப் புலிகள் முன்வைத்த தமிழ் தேசியத்திற்கும் பாரிய வித்தியாசம் ஒன்று உண்டு. சிங்கள பௌத்த தேசியம் கருத்துருவ அளவிலும் அரசியல் அளவிலும் இறையாண்மை கொண்ட ஒரு அரசாகத் தன்னைத் திரட்டிக் கொண்டிருந்தது என்பதுதான் அது. அதற்கு உலக அளவிலான அங்கீகாரமும் இருந்தது. அதனது கொலைகளையும் கூட அது நியாயப்படுத்த முடிந்தது. இதுவே நிரந்தரமான பயங்கரத்தை அந்தத் தீவு மக்களுக்குக் கொண்டிருந்தது.
இதற்கு எதிர்வினையாகத் தோன்றுகிற ஒரு எதிரொலிப்பு தேசிய இயக்கம்,பெரும்பான்மைத் தேசியத்தின் பண்புகளைக் கொண்டிருப்பதும் தவிர்க்கவியலாமல் நிகழும். சிங்கள தேசியம் இனக்கொலைத் தேசியமாக இருக்குமானால், எதிரொலிப்பு தேசியமும் இனக்கொலைகளைச் செய்வது தவிர்க்கவியலாததாக ஆகிறது. விடுதலைப் புலிகள் இந்த இடறுகுழியில் தாமாகவே பிரக்ஞைபூர்வமாக வீழ்ந்தார்கள். எந்த இனக்கொலைக்கு எதிராகத் தம்மைத் தார்மீகப்படையாக நிறுவ முடியுமோ, அந்த வாய்ப்பை அவர்கள் தாமும் இனப்படுகொலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டதன் மூலம் இழந்தார்கள்.
புலிகளின் தேசியம் ஒரு பிரதிபலிப்புத் தேசியமாக இருந்தது என எதிர்மறையாக நாம் விமர்சித்தாலும் கூட, அது ஒரு இனக்கொலை தேசியத்திற்கு எதிர்வினையாக அமைந்தது என்பதையும், அந்த இனக்கொலைத் தேசியமே பிரச்சினையின் ஊற்றுக்கண் என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது. பிரதிபலிப்புத் தேசியம் அழிக்கப்பட்டதன் பின்னால்,மூலத்தீவினையாக நிற்கிற இனக்கொலைத் தேசியம் தானாகவே தனது இனக்கொலைத் தன்மையை உதிர்த்துவிடும் என்பதற்கான எந்தவிதமான முகாந்தரமும் இல்லை.
இலங்கை அரசு குறித்த இந்த நிலைப்பாட்டில் எவருக்கும் மாற்றமில்லாத வரையில், இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் என்பதல்லாமல்,அதனுடன் இயைந்துபோவதன் மூலம் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்புவதில் அர்த்தமேதும் இருப்பதாகத் தெரியவில்லை.
3
இலங்கையில் நடப்பது இனக்கொலையா (genocide)அல்லது இனக்கொலை இல்லையா எனத் தீர்மானிப்பதில் தீவிரமானதொரு சிக்கல் நிலவுவதான ஒரு பாவனையை விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கிறார்கள்.இனக்கொலை தொடர்பான இதே விதமான கேள்வியை‘தீபம்‘ தொலைக் காட்சி உரையாடலில் சேரனும் எதிர்கொள்கிறார்.இனக்கொலை தொடர்பான வரையறைகளும் கருத்தாக்கங்களும் இரண்டாம் உலகப்போரின் பின் நாசிகளின் யூத இனப்படுகொலைகளை முன்வைத்து வரையறை செய்யப்பட்டன.
முன்னாள் கம்யூனிச நாடான யுகோஸ்லாவியா சிதறுண்டபோது பொஸ்னிய யுத்தத்திலும் கொசவா பிரச்சினையிலும், பிற்பாடு இனக்கொலை தொடர்பான கருத்தாக்கங்கள் பேசப்பட்டன. ஆப்பிரிக்கச் சூழலில் ருவாண்டா அனுபவங்களை முன்வைத்து இனக்கொலைப் பிரச்சினை பேசப்பட்டது.
மேற்கத்திய அரசுகளின் அதிகார மையங்களில் மட்டுமே இனக்கொலை எனும் அரசியல் பிரச்சாரம் தமக்கு அரசியல் சாதகமாகப் பேசப்பட்டது.குர்திஸ் மக்களது பிரச்சினையிலோ, பாலஸ்தீன மக்களது பிரச்சினையிலோ,ஈழத் தமிழ் மக்களது பிரச்சினையிலோ இனக்கொலை எனும் கருத்தாக்கத்தினை மேற்குலக அரசுகளோ அமெரிக்காவோ பாவிப்பதில்லை.
இலங்கைப் பிரச்சினையை மேற்கத்திய அமெரிக்க அரசுகள் ஒரு மனித உரிமை மீறல்(human rights violations) பிரச்சினையாகத்தான் பார்க்கின்றனவே ஒழிய, இனக்கொலைப் பிரச்சினையாகப் பார்க்கவில்லை.
இலங்கை அரசு மனித உரிமை மீறல் பிரச்சினையை அணுகியது போலவே,இனக் கொலை எனும் குற்றச்சாட்டையும் சர்வதேசிய அரசியல் சூழலுக்கு ஏற்றபடி மிகவும் சாதுரியமாகக் கையாள்கிறது.
1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்கப்பட்ட இனக்கொலை குறித்த வரையறை இவ்வாறாக இருக்கிறது :
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, ஒரு தேசத்தைச் சார்ந்த, ஒரு இனக்குழுவைச் சார்ந்த, ஒரு நிறக்குழுவைச் சார்ந்த, ஒரு மதக்குழுவைச் சார்ந்த மக்களைக் கொல்வதோ, அந்த மக்களுக்கு உடல்சார்ந்த மற்றும் மனம்சார்ந்த காயங்களை ஏற்படுத்துவதோ, அம்மக்களை பௌதீகரீதியாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் திட்டமிட்ட வகையில் அம்மக்களை ஒருவாழ்நிலைக்குத் தள்ளுவதோ, அம்மக்கள் கூட்டத்தினுள் பிறப்பைத் தடுப்பதோ, அதனோடு பலவந்தமாக ஒரு குழுசார்ந்த குழந்தைகளை பிறகுழுவுக்கு மாற்றுவதோ இனக்கொலை என வரையறை செய்யப்படும்.
ஈழம் தொடர்பில், இந்த வரையறையில் கவனிக்க வேண்டிய முக்கியமான இரு பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவதாக, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒரு மக்கள் கூட்டத்திற்கு இழைக்கப்படும் தீங்கு எனும் பிரச்சினை. இரண்டாவதாக, பிறப்பு சார்ந்து குழந்தைகளின் மீது திணிக்கப்படும் தீங்கு எனும் பிரச்சினை. இரண்டாவதான பிரச்சினையை ஈழத் தமிழர் சார்ந்து பொருத்திப் பார்க்க முடியாது. ஆயின், முதலாவதான முழுமையாக அல்லது பகுதியாகக் காயப்படுத்துதல், ஒரு குறிப்பிட்ட வாழ்நிலைக்குத் தள்ளுதல், முழுமையாக அல்லது பகுதியாகக் கொலை செய்தல் என்பன ஈழத் தமிழரைப் பொறுத்து பொருத்தமான இனக்கொலை வரையறைகளாகும்.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை எனும் கூற்றுக்கு வாதாடுபவர்கள் வைக்கும் ஆதாரம், இலங்கை யுத்தம் வன்னியில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வாழும் தமிழ் மக்களது ஜனத்தொகையுடன் – மூன்று இலட்சம்- ஒப்பிடும்போது, தலைநகர் கொழும்பில் வாழும் தமிழர்கள் – மூன்றரை இலட்சம் – கொல்லப்படாமல் பாதுகாப்பாகவே இருந்தார்கள் என்பதும், வன்னியில் இருந்த, விடுதலைப் புலிகளின் பிணைக் கைதிகளான மூன்று இலட்சம் மக்களும், இராணுவத்தின் மீட்பு நடவடிக்கைகளின் போதான மோதலில் தவிர்க்கவியலாமல் மரணமுறுகிறார்கள் என்பதும்தான். ஆகவே இலங்கை அரசு இனப் படுகொலையில் ஈடுபடுகிறது எனச் சொல்ல முடியாது என அவர்கள் வாதிடுகிறார்கள்.
இட்லரைப் போல, இலங்கை அரசோ அல்லது செர்பிய அரசோ முன்கூட்டிய திட்டங்களைத் தீட்டி முழுமையாக இனக்கொலையை ‘நிர்வாணமாக’நடத்தவில்லை. ஐம்பது ஆண்டுகளின் அனுபவம் அவர்களுக்கு முன்பு இருந்தது. அரசு எனும் (அரசு மத இன மொழி மாச்சரியங்களைக் கடந்தது)நவீன நிர்வாக வடிவத்திற்கும், சிங்கள-பௌத்த கருத்துருவ அரசு இயந்திரத்திற்கும் இடையிலான ஒரு மத்திம நிலையையே இலங்கை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்கள் இதனைச் சாதுரியமாக நடத்துவதற்கும் பயின்றிருக்கிறார்கள்.
1983 இல் கொழும்பில் நடந்தது இனக்கொலைதான். அதனைத் தொடர்ந்து பாடசாலைகளின் மீதும் தேவாலயங்களின் மீதும் குண்டுபோட்டு குழந்தைகளையும் வெகுமக்களையும் கொலை செய்ததும் இனப்படுகொலைதான். இப்போது தமிழ் இனக்குழு சார்ந்த பகுதி மக்களை,மூன்று இலட்சம் மக்களை முள்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்திருப்பதும் இனக்கொலை நடவடிக்கையின் பகுதிதான். முல்லைத் தீவு நகரின் மக்கள் இனி என்றென்றும் அங்கு குடியேற முடியாது என்று சொல்வதும், அங்கு சிங்கள ராணுவமும் அவர்தம் குடும்பத்தினரும் குடியமரப் போகிறார்கள் என்பதும் அந்த நடவடிக்கையின் ஒரு பகுதிதான்.இலங்கைத் தீவில் சிறுபான்மை இனம் என இல்லை என்பதும் இனக்கொலை அரசியலின் பகுதிதான்.
இதனை இனக்கொலைதான் என்று சொல்வதற்கான மிக முக்கியமான ஆதாரம் இதுதான் : யுத்தத்தின்போது, ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளையோ, மனித உரிமை அமைப்புகளையோ, சேவை அமைப்புகளையோ, சுயாதீன ஊடகங்களையோ அனுமதிக்காமல் இருந்ததற்கு இலங்கை அரசு சொல்லும் நியாயங்கள் முற்றிலும் அர்த்தமற்றவை. திட்டமிட்ட படுகொலைகளை அது உலகின் கண்களை மூடிவிட்டு நடத்தியிருக்கிறது. ஜான் பில்ஜர் இதனைத்தான் சொல்கிறார்.இஸ்ரேல் காஸாவில் செய்ததைத்தான் இலங்கை முள்ளி வாய்க்காலில் செய்து முடித்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறலாளர்கள் ஆயினும், விடுதலைப் புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கொல்லப்பட்ட முறை மிகக் குரூரமானது. முன்னுக்குப் பின்முரணான அறிக்கைகளினால் பொறுப்பற்ற முறையில் இலங்கை அரசு இந்த மரணங்களை அணுகியது. இலங்கை அரசு இந்த நடவடிக்கைகளின் வழியிலாக ஒரு முக்கியமான செய்தியை முழுத் தமிழர்களுக்கும் சொல்லியிருக்கிறது : இனி எந்தவிதமான எதிர்ப்பையும் வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் குரூரமாக அழிப்போம் என்பதுதான் அந்தச் செய்தி.இனி ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இந்த நிஜத்தை எதிர்கொண்டே தீரவேண்டும்.
விடுதலைப் புலிகள் மீதான அனைத்து விமர்சனங்களையும் தாண்டி,புலிஎதிர்ப்பாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது.விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது, மிகக் குரூரமான சாதுரியமான வக்கரித்த ஒரு இனவெறி அரசுக்கானதொரு வக்கரித்த ராணுவ எதிர்ப்பு இயக்கமாக ஆகிப்போயிருந்தது என்பதுதான் அந்த உண்மை. இந்த உண்மையில் பொதிந்திருக்கும் முக்கியமான செய்தி இது : இலங்கை அரசு ஒரு சாதுரியமான இனக்கொலை அரசு.
4
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஈழவிடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றதற்கான காரணங்கள் இன்னும் இருக்கிறதா?இலங்கை அரசின் தன்மை இந்த ஆண்டுகளின் யுத்தத்தின் போக்கில் மாற்றம் பெற்றிருக்கிறதா? மகிந்த ராஜபக்சேவின் காலத்தில் இலங்கையின் கருத்துருவ அரசு இயந்திரத்திலும், அரசின் யாப்பிலும் மாற்றங்கள் ஏதேனும் நிகழ்வதற்கான மாற்றங்கள் தெரிகிறதா?
புலிகளின் எதிர்ப்பாளர்கள், புலிகளால்தான் போராட்டம் பின்தள்ளப்பட்டதாகக் கருதுகிறார்களா? அல்லது புலிகள் அழிந்த பின்னால் இலங்கை அரசின் தன்மைகள் மாறவில்லை எனக் கருதி புதிய வடிவிலான போராட்டங்களை மேற்கொள்ளப் போகிறார்களா? அல்லது மகிந்த ராஜபக்சேவின் அரசின் கீழ் தமிழ் மக்களின் அடிப்படையான பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனக் கருதுகிறார்களா?
தமிழ்மக்களுக்கு ஏதும் அரசியல் பிரச்சினைகள் இல்லை என ஜனதா விமுக்தி பெரமுனா சொல்கிறது. ஹெலய உறுமியவும் சொல்கிறது.பிரச்சினைக்கான தீர்வில் அவசரம் காட்ட வேண்டாம், அதனை இழுத்துக் கொண்டிருங்கள் எனத் தன்வசம் மகிந்த ராஜபக்சே சொன்னதாக மார்க்சிய நவ சமாஜக் கட்சியின் திஸ்ஸ விதாரண சொல்கிறார். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்தான் திர்வு, தீர்வு தனது மனதில் இருப்பதாக ஜனாதிபதி ராஜபக்சே சொல்கிறார்.
அதிதீவிர வலதுசாரி சிங்கள இனவாதிகளையும், மத்திமமான இடதுசாரிகளையும் தனது அமைச்சரவைக்குள் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்சே. மீளவும் ஈழத் தமிழர்கள் முப்பதாண்டுகளுக்கு முன்பாகப் போராடத் துவங்கிய அதே அரசியல் புள்ளியில்தான் ஈழத்தமிழர்கள் இன்றும் விட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசு இன்னும் இறுக்கிக் கொண்டிருக்கிறது. நோர்வே இன்று மத்தியஸ்த நிலையில் இல்லை. இந்தியாவும் இலங்கையை வற்புறுத்துகிற நிலையில் இல்லை.
ஈழத்தமிழ் மக்கள் வெறுமனே உண்ணவும் உடுக்கவும் உறங்கவும் மட்டுமே துயரப்பட்டுக் கொண்டிருப்பதான ஒரு அவலச் சித்திரத்தை இலங்கை அரசு உருவாக்கிவிட்டது. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் அனைத்தும் பின்தள்ளப்பட்டுவிட்டது. பாலஸ்தீனத்தில் காஸா முகாம்களில் அகதிகளாக வாழும் மக்களுக்கும், ஈழத்தின் வடக்கில் அகதிகளாக வதியுறும் ஈழத்தமிழ் மக்களுக்கும் பாரிய ஒற்றுமை இருக்கிறது. இருவருமே அடிப்படை வாழ்வுக்காக அல்லலுறுகிற மக்களாக, தமது உயிர் இருத்தலுக்காக அலையும் மக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாலஸ்தீன மக்களுக்கு அரசியல் கோரிக்கைகள் இருப்பதாக இஸ்ரேல் ஒரு போதும் ஒப்புக் கொண்டதில்லை. ஈழத்தமிழ் மக்களுக்கும் அரசியல் கோரிக்கைகள் இருப்பதாக ஐம்பது ஆண்டுகளிலான எந்த இலங்கை அரசும் ஒப்புக் கொண்டதில்லை. மகிந்த ராஜபக்சேவும் ஒப்புக் கொள்ளவில்லை.இச்சூழலில் இலங்கையின் அனைத்துப் பேரழிவுகளுக்குமான தோற்றுவாய்களை விடுதலைப் புலிகளில் இருந்து துவங்குகிறார்கள் புலிஎதிர்ப்பாளர்கள்.
வரலாறு ஒடுக்குமுறையின் வேர்களை ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட இயக்கத்தின் அழிவிலிருந்தல்ல, மாறாக ஒடுக்குமுறையின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற அரசு இயந்திரத்தின் நடவடிக்கையில் இருந்துதான் துவங்குகிறது. ஈழத்தமிழரது பிரச்சினையின், அவர்களது பேரழிவின் ஊற்றுக் கண்ணாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்போலவே இன்றும் இலங்கை சிங்கள-பௌத்த பேரினவாத அரசுதான் இருக்கிறது.