
இலங்கைக்குள் கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையைப் பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (COPE) நேற்று முன்தினம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
இச்செய்தி இந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனெனில் மருந்துப் பொருட்கள் சாதாரணமானவை அல்ல. அவை இரசாயனப் பதார்த்தங்களைக் கொண்டிருப்பவை.
அதனால் அவற்றைத் தவறான முறையில் பயன்படுத்தினால் அதன் விளைவுகள் பாரதூரமானதாகவே இருக்கும். கடந்த காலத்தில் இதற்கு நிறைய அனுபவங்கள் இருக்கின்றன.
மருந்துப் பொருட்கள் மனிதனின் வாழ்வுடனும், உயிருடனும் சம்பந்தப்பட்டவையாக இருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். அதிலும் இம்மருந்துப் பொருட்கள் அண்மைக் காலமாக மனித வாழ்வுடன் இரண்டறக் கலந்த ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு தொற்றா நோய்களும் முக்கிய பங்காற்றியுள்ளன.
இவ்வாறான சூழலில் பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி வெளியிட்டுள்ள செய்தி மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தையே உருவாக்கியுள்ளது.
அதாவது ‘வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து சுங்கத் திணைக்களத்தை வந்தடையும் மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் அவற்றின் காலாவதியாகும் திகதி உள்ளிட்ட விடயங்களைப் பரீட்சிப்பதற்கான எந்தவித விஷேட பொறிமுறையையும் அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் கொண்டதாக இல்லை’ என்று நேற்றுமுன்தினம் சுட்டிக்காட்டினார்.
அப்படியென்றால் தரமற்ற மருந்துப் பொருட்களும், காலாவதியாகும் தினம் குறித்து கவனம் செலுத்தப்படாத மருந்துப் பொருட்களும் நாட்டுக்குள் தருவிக்கப்பட்டுள்ளனவா? என்றும் அவ்வாறான மருந்துப் பொருட்களை நாமும் பாவித்துள்ளோமா? என்றும் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
ஏனெனில் வளர்முக நாடான இலங்கை பல தசாப்தங்களாக இலவச சுகாதார சேவையை முன்னெடுத்து வருகின்றது. இச்சேவையை முன்னெடுப்பதில் இந்நாட்டிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
இவ்வைத்தியசாலைகள் இச்சேவையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மருந்துப் பொருட்கள் இன்றியமையாதவை.
ஆகவே அரசாங்க வைத்தியசாலைகளின் மருந்துப் பொருள் தேவையை நிறைேவற்றும் முக்கிய அரச நிறுவனமாகவே அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் விளங்குகின்றது.
இக்கூட்டுத்தாபனம் இந்நாட்டு அரசாங்க வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்களில் ஒரு குறிப்பிட்ட தொகுதியை உள்நாட்டில் உற்பத்தி செய்து வழங்குகின்ற போதிலும் ஒரு பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தும் வழங்குகின்றது.
இதற்கு மேலதிகமாக அரசாங்க வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்களில் ஒரு பகுதியை மருந்துப் பொருள் விநியோகப் பிரிவு தனியார் துறையினரிடமிருந்தும் கொள்வனவு செய்துதான் வைத்தியசாலைகளுக்கு வழங்குகின்றது.
எவ்வாறிருந்த போதிலும் தாம் இறக்குமதி செய்யும் மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் கலாவதியாகும் திகதி குறித்து பரீட்சிப்பதற்கான விஷேட கட்டமைப்பை இக்கூட்டுத்தாபனம் கொண்டிராதது பொறுப்பற்ற செயல்.
இதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதனால் இது பாரதூரமான குற்றச் செயலாகக் கருதப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் மருந்துப் பொருட்களிலும், சேலைன் போத்தல்களிலும் கண்ணாடித் துண்டுகள், தூசித் துகள்கள், பூஞ்சணம் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டது.
அத்தோடு இரண்டொரு மருந்துப் பொருட்களைப் பாவித்த ஒரிருவர் உயிரிழந்துமுள்ளனர். இதற்கு மருந்துப் பொருள் ஒவ்வாமையே காரணம் என்று அப்போது கூறப்பட்டது.
என்றாலும் அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும் மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் காலாவதியாகும் திகதி குறித்து பரீட்சிப்பதற்குத் தேவையான கட்டமைப்பைக் கொண்டிராததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்ற ஐயமும் இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கு பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் தெரிவித்திருக்கும் விடயங்கள் வழிவகுத்திருக்கின்றன.
இந்நாட்டின் இலவச சுகாதார சேவையை மேம்படுத்தவும், பாதுகாக்கவுமென அரசாங்கம் பொதுமக்களின் பணத்தை வருடா வருடம் கோடிக்கணக்கில் செலவிடுகின்றது.
அவ்வாறான நிலையில் அரசாங்க நிறுவனமான இக்கூட்டுத்தாபனம் தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ததும் அவற்றை இலவச சுகாதார சேவையின் ஊடாக விநியோகம் செய்ததும் பாரதூரமான குற்றம்.
அது அப்பாவி மக்களின் வாழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் விளையாடும் செயல். இது முற்றிலுமே ஏற்றுக் கொள்ள முடியாத பொறுப்பற்ற விடயம்.
அதன் காரணத்தினால் இவ்விடயம் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
இதன் பின்னர் இவ்வாறான செயல் இடம்பெறாதிருப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் இந்த எதிர்பார்ப்பு நியாயமானதே.
அதனால் அரசாங்கம் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.