மக்களை அதேநிலையில் வைத்திருக்க சில தரப்பினர் விரும்புகின்றனர்!

76

 

இது வரை இந்நாட்டின் கொள்கைகள் அமைச்சர்கள், அமைப்பாளர்கள், உயரதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனையிலயே ஒழுங்கமைக்கப்பட்டன. தலைநகரின் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கிராமங்களின் கொள்கைகளை திட்டமிட்டனர்.

அந்தக் கொள்கைகள் மேலிருந்து கீழாக நோக்கப்பட்டன.ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தனது கொள்கைகளை கீழ் மட்டம், கிராம மட்டம்,நகர மட்டத்தில் இருந்து சாதாரண மக்களின் கருத்துக்களை உள்வாங்கி ஒழுங்கமைக்கும் என நடைமுறையைப் பின்பற்றும் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தெதிகம மக்கள் அரண் கூட்டம் நேற்று (10) வறகாபொல நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் உயிர்நாடியாக பெண்களை மாற்றுவோம்!

நாடு வங்குரோத்தாகி கிடக்கும் வேளையில், மக்களின் வாழ்வாதாரம் அழிந்துபோயுள்ள வேளையில், வீட்டு வருமானம் குறைந்து வரும் நிலையில், ​​வருமான மூலங்களை மேம்படுத்தக் கூடிய சிறந்த திட்டங்கள் குறித்த கேள்வி எழுகிறது.

வீட்டில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வீட்டில் உள்ள பெண்களுக்கு உரிய பயிற்சி மற்றும் திறன்களை வழங்க முடியும். இதன் மூலம் வருமானத்தை ஈட்டி, உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பெண்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவையும் மையமாகக் கொண்டு பெண்கள் அபிவிருத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்யவும், குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தவும் தேவையான அறிவையும் தொழில்நுட்பத்தையும் இல்லத்தரசிகளுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அவதானம் செலுத்தியுள்ளது. 33% ஆக இருக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பை இதன் மூலம் 45% ஆக அதிகரிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு நாடு அபிவிருத்தி அடைகிறது என்றால் அதில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அறிவு மற்றும் திறன்களை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் முன்னோடியாக மாற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் புதிய தலைமுறைகள் உருவாகி, அறிவும் புத்திசாலித்தனமும் கொண்ட இளம் நடுத்தர வர்க்கம் உருவாகி வருகிறது, அரசியல்வாதிகளின் பின்னால் இவர்கள் வேலை தேடுவதில்லை. சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் உச்சத்தை அடைவதே அவர்களின் ஒரே நம்பிக்கை.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களால் பங்களிக்கப்படுவதால், புதிய தொழில்களை ஆரம்பிக்கும் திட்டத்தை வகுத்துள்ளோம். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் பணப்புழக்கமும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, ​​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் அங்கத்துவம் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொண்டனர்.

SHARE