“மக்கள் மீது சிறிதளவும் அக்கறையற்ற , மக்களுக்கு பொறுப்பு கூறாத பிரதமர் ” – பேராசிரியர் சரத் விஜேசூரிய

339

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பல சந்தர்ப்பங்களில் அரசியல் அநாதையாக்கிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை தஞ்சமடைய வைத்து அரசியல் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய விசனம் தெரிவித்தார்.

கோட்டை ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலவாபே சோபித தேரரின் 77 ஆவது ஜனன தினம் புதன்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவு கூறப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஜனவரி 8 ஆம் திகதி பிரார்த்தனை நிறைவேறாமல் அரச நிர்வாகம் சிதைவடைவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

புத்தி சாதூர்யமற்ற தற்பெருமையால் தலைக்கணம் கொண்ட அதேவேளை, மக்கள் மீது சிறிதளவும் அக்கறையற்ற , மக்களுக்கு பொறுப்பு கூறாத பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிற்போக்கு அரசியலே முதலாவது காரணமாகும். அடிவருடி ஒருவரிடம் நெல்சன் மண்டேலாவைப் போன்ற தலைமைத்துவத்தை எதிர்பார்க்கும் முட்டாள் தனம் இரண்டாவது காரணமாகும்.

ஜனநாயகத்தை மதிப்பவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு , அதற்கு எதிராக செயற்படும் ஒருவரிடத்தில் ஜனநாயக ரீதியிலான நிர்வாகத்தை எதிர்பார்த்தமையே இன்று ஐக்கிய தேசிய கட்சி தவறான வழியில் செல்வதற்கான காரணமாகும். தற்போதைய பிரதமரே இதன் பின்புலத்தில் உள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்துக்கு உரிமை கோரி வருகின்றார். ஏகாபத்தியவாதியாகவே அவர் கட்சி தலைமைத்துவத்தை வகிக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சியை தனக்கு தேவையானவர்களுக்கு மாத்திரம் உகந்த வகையில் வைத்திருப்பதாக வேறு எவருக்கும் வாய்ப்புக்களை வழங்காது இருப்பதே அவரது அரசியல் நோக்கமாகும்.

தொடர்ச்சியாக பாரிய தோல்விகளுக்கு முகங்கொடுத்து எதிர்கட்சி தலைவர் பதவி மீது மோகம் கொண்ட ஒருவரை கட்சி தலைவராக ஏற்றுக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஏகாதிபத்தியத்தின் கை பொம்மைகளாவர்.

இவர்களே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். நாட்டில் பிரதான கட்சியொன்றின் தலைவராக இருந்து கொண்டு, இரு தடவைகளில் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரை கடன் வாங்கிய இவர் தலைமைத்துவம் வகிக்க தகுதியற்றவர் என்பதை வெளிப்படுத்துகின்றது.

அவரை பல தடவைகள் அரசியல் அநாதையாக்கி அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்கு முயற்சித்த தற்போதைய எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷவை தஞ்சமடைய தற்போது ரணில் முயற்சிக்கின்றார். அவரது பாதங்களை பற்றி அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிக்கின்றார்.

மெதமுலனவிற்கு செல்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரண்டு ஹெலிகொப்டர்களை வழங்கியதோடு, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி காலை மஹிந்தவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதாக வழங்கிய வாக்குறுதிகளை இன்றும் நிறைவேற்றி வருகின்றார்.

பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது மாத்திரமின்றி தனது தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிப்பதே அவரது தேவையாகும். இவ்வாறு சிந்திப்பது துரதிஷ்டமானது. இந்த சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்ட சோபித தேரர் இரண்டு தடவைகள் பிரதமரை சந்தித்து ஜனாதிபதியுடன் முரண்படாமல் இருவரும் இணங்கி செயற்படுவதே முறையானது என்பதை வலியுறுத்தி வந்தார். அதனை கேட்டு;க் கொண்ட போதும் அவர் அதனை பின்பற்றவில்லை.

ரணில் விக்ரமசிங்க அனுபவம் மிக்க அரசியல்வாதியாக இருந்த போதும் கண்ணாடிக் கூண்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எமது நாட்டின் அரசியல் அவருக்கு பொறுந்தாது. அரசியல் அரங்கில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற போதிலும், அதில் வெற்றி பெற முடியாதவர்.

ரணிலுடன் ஒப்பிடுகையில் மஹிந்த ராஜபக்ஷ கற்தரையிலும், கரடு முரடான தரையிலும் நீந்தக் கூடியவர். ரணில் எந்த விதத்திலும் அரச நிர்வாகத்திற்கு பொறுத்தமற்றவர். அது பொன் எழுத்துக்களால் எழுத்தப்பட்டுள்ளது. அவர் கட்சியிலிருந்து நீங்க வேண்டும். இல்லையென்றால் நாட்டை நேசிப்பவர்கள் அவரை நீக்க வேண்டும்.

அவரிடம் குழுவொன்றும், கூட்டமொன்றும், கட்சியொன்றும் உள்ளது. இந்நிலையில் தான் தனித்து விடப்பட்டு;ள்ளமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்துள்ளார். எனினும் அதன் அபாய நிலையை ரணில் விக்ரமசிங்க புரிந்துகொள்ளாமல் அதே மமதையுடனேயே உள்ளார். இந்த நிலைமையைப் பயன்படுத்தி மஹிந்த அமரவீர ஜனாதிபதியை தன்பக்கம் இழுக்க முயற்சிக்கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரபல உறுப்பினர்கள் பலரும் நீதியின் பிடியில் சிக்கவிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான தொடர்புகளை அவர்கள் வலுப்படுத்திக் கொள்கின்றனர். உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களின் போது மத்திய வங்கி ஊழல் தொடர்பிலும், அர்ஜூன மகேந்திரனின் செயற்பாடு தொடர்பிலும் கடும் ஊழல்வாதிகளான எதிரிணயினர் விமர்சிக்க தொடங்கினர்.

இதனால் ஐ.தே.க மற்றும் சு.க என்பன சீரழிகின்றன. பிணைமுறி தொடர்பாக விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்தார். இதன் போது கூட மஹிந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிக்குமாறு ரணில் கோரவில்லை.

இதனால் தான் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிற்கு அதிகாரங்களை வழங்கினார். அதிலிருந்தும் பிரதமர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒரு புதுமையான மனிதர். விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன உள்ளிட்டோரைப் பாதுகாத்து எதிர்கட்சி தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அவர் முயற்சிக்கின்றார்.

எவ்வாறிருப்பினும் எதிர்வரும் ஜானதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி வெற்றிபெறச் செய்து தற்போதைய நிலைiயிலிருந்த விடுபட வேண்டும். எனவே நியமிக்கப்படும் பொது வேட்பாளர் வேட்புமனு தாக்குதல் செய்வதற்கு முன்னரே தனது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கிய போது அதற்கு ஒத்துழைப்பு நல்கியமை நாம் செய்த தவறாகும். எனவே மக்களுக்கு சேவையாற்றக் கூடிய ஒரு தலைவரை தெரிவு செய்வதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

SHARE