ஆறு நாட்களாக மருத்துவமனையில் இருந்ததால், வெளித் தொடர்புகளில்லாமல், ஒருவாரம் கழிந்து விட்டது. தற்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவதற்காகத் தொலைக்காட்சியை இயக்கியபோது, சிவாஜிலிங்கம் பேசிக் கொண்டிருந்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்தச் சக்திகளாலும் உடைத்து விடவோ சிதைத்து விடவோ முடியாது. மக்கள் எப்போதும் எங்களோடுதான் நிற்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள். இதைத் தேர்தல் முடிவுகள் சொல்லும். அப்பொழுது எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் விளங்கும்” என்று ஏதொவெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.
மீண்டும் மருத்துவமனைக்கே போகவேண்டும் போலிருந்தது. அதை விடச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இந்தாள் என்ன பேசுகிறார் என்று உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
ஏனென்றால், ஒரு வாரத்துக்கு முன்பு “கூட்டமைப்பை விட்டு விலகுகிறோம்” என்று ஊடகங்களில் சொல்லிக் கொண்டு திரிந்தது இதே சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தவுமே.
இருவரும் ஏதோ தெருவில் நின்று மாபிள் விளையாடிக் கொண்டிருக்கும் சின்னப்பெடியள் அல்ல. ரெலோவின் உயர் மட்டத்தலைவர்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியொன்றின் முக்கியஸ்தர்கள். சிவாஜிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர். ஸ்ரீகாந்தா ரெலோவின் செயலாளர்.
இவர்களே, உள்ளுராட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு – ஆசனப்பகிர்வு – சம்மந்தமாக கூட்டமைப்பிற்குள் நடந்த முரண்பாடுகளினால், கூட்டமைப்பை விட்டு வெளியேறுகிறோம் என்று அறிவித்தவர்கள்.
இது தொடர்பாக பகிரங்க வெளியில் ஆக்ரோஷமாக முஸ்டியைக் குத்தியவர்களும் இவர்களே! கூட்டமைப்பின் ஒற்றுமையை யாராலும் உடைக்க முடியாது என்று இப்பொழுது மாறிக் கத்தியைப் போடுகிறார்கள். இதைக் கேட்கும்போது சிரிப்பு வராமல் வேறு என்னதான் வரும்?
சிவாஜிலிங்கம் சொல்வதைப்போல, வெளியே இருந்த யாரும் கூட்டமைப்பை உடைக்க முற்படவில்லையே. தாங்களாகவே உடைக்கப்போகிறோம், வெளியேறப்போகிறோம் என்றெல்லாம் சொல்லி விட்டு, யாராவது உடைத்துப் பாருங்கள் என்று சொல்கிறார்கள் என்றால், இதை விட ஏமாற்று வேறு என்ன?
வேண்டுமானால், கூட்டமைப்பை உடைப்பதற்கு ரணில்தான் முயற்சிப்பார். அவருக்கு இப்ப அந்தத் தேவையில்லை. இப்ப அவருடைய தேவை கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேணும்.
ஒற்றுமையாக இருந்து தனக்கான ஆதரவைத் தரவேணும் என்பதுவே. அதற்கேற்ற மாதிரியே அவர் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். தன்னுடைய தேவை முடிந்த பிறகு உடைக்கும் முயற்சியிலீடுபடுவார்.
இந்த அடிப்படையில் கடந்த வாரம் “கொழும்பு (ரணில்)” மேற்கொண்ட சமரச முயற்சிகளை (கட்டளைகளை) அடுத்து, மீண்டும் கூட்டமைப்பிற்குள் – தமிழரசுக் கட்சியுடன் சங்கமித்துக் கொண்டனர் ரெலோவினர்.
அதற்குப் பிறகு ஊடகங்களைச் சந்திக்கும்போது சிவாஜிலிங்கம் மேற்படி கூட்டமைப்பின் ஒற்றுமைச் சிறப்பைப் பற்றிப் பேசுகிறார்.
இதனால்தான், இதைக் கேட்பதை விட பேசாமல் மறுபடியும் மருத்துவமனைக்குச் சென்று காதைப் பொத்திக் கொண்டு படுத்து விடலாம் என்றேன்.
கூட்டமைப்பை இப்பொழுது வெளிச்சக்திகள் யாரும் உடைக்க முயற்சிக்கவில்லை. அதற்குள்ளிருக்கும் முரண்பாடுகளே அதனை உடைக்கின்றன.
குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் ஏகபோக மனநிலையே ஒற்றுமைக்கு எதிராக எப்பொழுதும் உள்ளது. இதனால், தேர்தல் காலங்களில் மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்திப் பிரகடனம் செய்யும் கூட்டமைப்பு, தேர்தலுக்குப் பிந்திய காலத்தில் ஒற்றுமைக்கு எதிராக, உள் முரண்பாடுகளால் தவித்துக் கொண்டிருக்கிறது.
அதன் விளைவுகளே இப்பொழுது இன்னொரு தேர்தலை எதிர்கொள்வதில் ஏற்பட்ட நெருக்கடியாகும். இது மேலும் மேலும் விரிவடையும். கொதிப்படையும்.
இதற்குப் பிரதான காரணம், தமிழரசுக் கட்சியிடம் மட்டுமல்ல, அதன் பங்காளிக்கட்சிகள் எதனிடத்திலும் மக்களைக் குறித்த சிந்தனை இல்லை என்பதுவே.
சனங்களைப் பற்றிய கரிசனை இருந்தால், பதவி ஆசை எளிதில் வராது. அப்படி இந்தக் கட்சிகளுக்கு மக்களிடத்திலே அக்கறை இருந்திருக்குமாக இருந்தால், அதை அவை நிரூபிக்கட்டும் பார்க்கலாம்.
இதுவரையில் மக்கள் மீதான கரிசனையோடு செயற்பட்டு இவை சாதித்தவை என்னென்ன? என்பதை. அதை எங்காவது, யாராவது பட்டியலிடட்டும் பார்ப்போம்.
இதைச் சிவாஜிலிங்கமே ஒப்புக்கொள்கிறார். “மக்கள் எப்போதும் எங்களோடுதான் நிற்பார்கள். இதைத் தேர்தல் முடிவுகள் சொல்லும்” என. கவனியுங்கள், மக்கள்தான் இவர்களோடு நிற்க வேணுமே தவிர, மக்களோடு இவர்கள் ஒரு போதுமே நிற்கப்போவதில்லை.
சிவாஜிலிங்கம் இதைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்கிறார். உண்மையில் சிவாஜிலிங்கம் எப்படிச் சொல்லியிருக்க வேண்டும் தெரியுமா? “நாம் என்றும் மக்களோடுதான் நிற்போம்” என. ஆனால், அப்படிச் சொல்லவில்லை. அப்படிச் சொல்ல மாட்டார்.
அவர் மட்டுமல்ல, கூட்டமைப்பிலுள்ள எவருமே அப்படிச் சொல்லும் பழக்கத்தையோ வழக்கத்தையோ கொண்டவர்களல்ல. அவர்களுடைய இதயம் அப்படியாக இயங்குவதுமில்லை.
மக்கள்தான் அவர்களோடு அடியாட்களைப் போல அணி திரண்டு நிற்க வேணும். இது பிரபுத்துவ மனநிலை. ஜமீன்தாரியச் சிந்தனை. முதலியார், பண்ணையார் முறைமையிலான அரசியல்.
ஏறக்குறைய இதே தொனியில்தான் பேசியிருக்கிறார், தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைரட்ணசிங்கமும். “தமிழ் மக்களுடைய பிரச்சினையை எப்போதும் வெளிப்படுத்தி வந்திருக்கிறது தமிழரசுக் கட்சி. ஆகவே தொடர்ந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அந்தப் பணியைச் செய்யும்” என.
ஒரு கட்சியின் பணி என்பது என்ன? பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது மட்டும்தானா? அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இல்லையா? மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுடைய தேவைகளைப் புர்த்தி செய்வதில் இல்லையா?
ஆனால், தமிழரசுக் கட்சியோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள பிற கட்சிகளோ அப்படித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. பிரச்சினைகளைப் பேசிக் கொண்டிருந்தால் சரி. அவற்றுக்கான தீர்வைக் காணவே வேண்டியதில்லை என. இதனால்தான் இந்தத் தரப்பை, பிச்சைக்காரன் புண்ணைக் காட்டிப் பிழைப்பதைப்போன்றது என பலரும் நகைக்க வேண்டியுள்ளது.
இவற்றின் உயிரே பிரச்சினைகளில்தான் தங்கியுள்ளது. அது தீர்வதில் அல்ல. இது உலக வழமைக்கு மாறானது. உலகம் முழுவதிலும் உள்ள அரசியற் கட்சிகள் தாம் பிரதிநிதித்துப்படுத்துகின்ற மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தே சாதனை படைக்கின்றன. மக்களின் தேவைகளை நிறைவேற்றியே தமது கட்சியின் வரலாற்றை உருவாக்குகின்றன.
இங்கோ பிரச்சினைகளைப் பேசியும் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கியுமே அரசியல் நடத்தப்படுகிறது. இது உலக வழமைக்கும் ஒழுங்குக்கும் எதிரானது. மாறானது. இதனால்தான் தமிழர்களின் அரசியல் படுகுழிக்குள்ளே கிடந்து நாறிக் கொண்டிருக்கிறது.
ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை தாங்குவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு. போரினால் அழிவைச் சந்தித்த ஒரு சமூகத்துக்கு. அந்த மக்கள் தங்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும் என்று கருதியே கூட்டமைப்பை ஆதரித்தனர். அதைக் கூட்டமைப்பு நிறைவேற்றியதா?
இல்லை என்பதே தெளிவான பதில். என்பதால்தான், 300 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் மருதங்கேணியிலும் போராட வேண்டியிருக்கிறது.
அரசியற் கைதிகள் தங்களுடைய விடுதலைக்காகத் தாங்களே போராடுகிறார்கள். வேலை தேடும் பட்டதாரிகள் தங்களுக்கான போராட்டத்தை தாங்களே முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. மீனவர்கள் தங்களுடைய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குத் தாங்களே முயற்சிக்கிறார்கள்……
இப்படிச் சமூகத்தில் உள்ள எந்தப் பிரச்சினைக்கும் இவர்கள் – கூட்டமைப்பினர் தீர்வு கண்டதுமில்லை. மெய்யாகவே நின்று போராடியதுமில்லை.
ஆனால், மக்கள் எப்போதும் தங்களுடனே நிற்பர் என்று மட்டும் உரத்துக் கூவுகின்றனர். இதற்கு அரசியல் அறிவற்ற மக்களின் தெரிவுத் தன்மையே காரணம். இதுவே இவர்களை இப்படித் திமிர்த்தனமாகக் கூற வைக்கிறது.
தற்போது இட ஒதுக்கீட்டுக்காக – ஆசனப்பங்கீட்டுக்காக அடிபடுகின்ற இந்தக் கட்சிகள் எப்போதாவது, வேலைப் பங்கீட்டுக்காக போராடினவா? வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கை, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுடைய விவகாரம், போரிலே பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எதிர்காலப் பாதுகாப்பு, மீனவர்களின் பிரச்சினை, மாற்றுவலுவுடையோரின் வாழ்க்கை… இப்படி நம்மைச் சுற்றியுள்ள மிகமிக நெருக்கடிக்குள்ளானவர்களின் எந்தப் பிரச்சினையிலாவது இவர்கள் துணை நின்றனரா? ஆக, வேலை செய்வதற்காக முன்வந்து அதற்காக அடிபடுவதை விட இட ஒதுக்கீட்டுக்காக அடிபடுவதையே இன்று காண முடிகிறது. இது பதவிக்காக அடிபடுவதன்றி வேறென்ன? இதைவிடக் கேவலம் வேறென்ன?
நாளை இந்த வரலாற்றை – இப்படிப் பதவிக்காக அடிபடும் நிலையை இவர்கள் மாற்றி எழுதுவார்கள். அதற்கு அழகாக நியாயமும் சொல்வார்கள்.
நிச்சயமாக இது நடக்கும். வரலாற்றைத் தமக்குச் சார்ப்பாக எழுதுவது ஒன்றும் புரட்டுப் பேர்வழிகளுக்குக் கடினமான காரியமில்லை. ஆகவே, நாளை இன்றைய பதவிச் சண்டையை வேறு விதமாகவே சொல்வார்கள். இது இப்படியிருக்கக் கூடும்.
“மாற்று வலுவுடையோரின் விவகாரத்தைக் கவனிக்கிறோம். அந்தப் பொறுப்பை எமக்குத் தாருங்கள். மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய விவரங்களைத் திரட்டுவது தொடக்கம், அவர்களுடைய மறுவாழ்வு, சுபீட்சமான எதிர்காலம், அந்தக் குடும்பங்களின் தேவைகள் வரை எல்லாக் கருமங்களையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என்று கடந்த எட்டு ஆண்டுகளாக ரெலோ விடாப்பிடியாகக் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக் கொண்டேயிருந்தது.
இதைக் கொடுக்காமல் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தொடர்ந்து தட்டிக் கழித்து வந்தது. இதனால் மனமுடைந்த ரெலோ TELO கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்தது.
இதுவே நடந்த சங்கதி. இதை ஊடகங்கள் தவறுதலாகப் புரிந்து கொண்டு, ஏதோ தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையால்தான் சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டன.
இது எவ்வளவு அநீதியான விசயம்?
ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்திலிருந்து உருவாகிய கட்சியின் மானத்தை இப்படிக் காற்றிலே பறக்க விட்டது படு அநியாயம்.
அட, ரெலோவுக்குத்தான் இப்பிடி ஒரு அநீதி இழைக்கப்பட்டதென்றால்….
புளொட்டுக்கும் இப்படித்தான் அநியாயம் இழைக்கப்பட்டது.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வை மீளமைக்கும் பொறுப்பை கூட்டமைப்பினுள்ளே நுழைந்த காலத்திலிருந்தே புளொட் PLOT வலியுறுத்தி வந்தது.
இந்தக் கோரிக்கையைக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் செவிமடுக்கவில்லை என்றால், உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாகக் கூடப் பல தடவை எச்சரித்தது.
ஆனால், கல் மனம் கொண்ட தலைமை இதைக் கவனிக்கவேயில்லை. இதனால், சீற்றமடைந்த புளொட் பல ஆர்ப்பாட்டப் பேரணிகளையே பெண் தலைமைத்துவக் குடும்பங்களைக் கொண்டு, கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக நடத்துவதற்குத் திட்டமிட்டது.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைக் குறித்த 10, 467 அம்சத் திட்டத்தையும் அது வரைந்து வைத்திருந்தது. இதற்காக அது பல நிபுணர்களையும் துறைசார் அறிஞர்களின் பங்களிப்பையும் பெற்றிருந்தது.
கூட்டமைப்பின் தலைமை மட்டும் இதற்கான அங்கீகாரத்தை அளித்திருந்தால், வேலை ஒதுக்கீட்டை வழங்கியிருந்தால், இன்று தமிழீழத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கை உலக முன்மாதிரியாக மாறியிருக்கும்.
ஆகவே இதற்கான கோரிக்கையை முன்வைத்துப் போராடிய புளொட்டை ஏதோ பதவிக்கான இட ஒதுக்கீட்டுக்காக அடிபடுவதாகச் சொல்வதெல்லாம் சுத்த அநியாயம்.
வீரப் போராட்டத்தின் வழி வந்த ஒரு மகத்தான இயக்கத்தின் – அரசியற் கட்சியின் மானத்தை இப்படிக் கப்பலேற்ற எண்ணியது தவறு. தவறு. மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இதைப்போலத்தான், ஈ.பி.ஆர்.எல்.எவ் வுக்கும் நடந்திருக்கு.
காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்தை எங்களின் கைகளில் ஒப்படையுங்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கிறோம். ரகசிய முகாம்களை அடையாளம் கண்டு, அதற்குள் புகுந்து, மறைத்தோ தடுத்தோ வைத்திருக்கும் கைதிகளையும் காணாமலாக்கப்பட்டோரையும் மீட்டு வருகிறோம்.
இல்லையென்றால், பிரதமரையும் ஜனாதிபதியையும் காணாமலாக்கிக் காட்டுகிறோம் என்று பிடிவாதமாகவே நின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் வேண்டுகோளை கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தொடர்ச்சியாகவே உதாசீனம் செய்து வந்துது.
இதனால் மனமுடைந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இதற்கு மேலும் பொறுத்திருப்பதற்குத் தயாரில்லை என்றே வெளியேறியது.
பின்னே, எட்டு ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டிருந்த இந்த ஒரு கோரிக்கையை – இந்த ஒரேயொரு வேலையைக் கூடச் செய்வதற்கு இடமளிக்காத தலைமையோடு ஒரு புரட்சிகர இயக்கத்தின் வழியாக வந்த கட்சியினால் இனியும் தொடர்ந்து எப்படி அமைதி காக்க முடியும்?
இத்தகைய நியாயத்தின் அடிப்படையில் வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எவ்வை ஏதோ பதவிப் பகிர்வுக்காக வெளியேறியதாக சொல்வது மனச்சாட்சியே இல்லாதவர்களின் கதையாகும்.
இதை எவராலுமே ஏற்றுக் கொள்ளவே முடியாது.
கடந்த 60 ஆண்டுகால தமிழர் அரசியல் வரலாற்றில், செவ்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், பாலகுமாரன், பத்மநாபா, விசுவானந்ததேவன், சிறிசபாரத்தினம், உமா மகேஸ்வரன், பிரபாகரன், ரெலிஜெகன், தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என எவராலுமே தொட முடியாத – பெற முடியாத அரசியல் அதிகாரத்தை – இனப்பிரச்சினைக்கான தீர்வை சுமந்திரனும் சம்மந்தனும் சேர்ந்த “இணக்கியதை” யே விளங்கிக் கொள்ள முடியாமல், தெருவில போறவன், வாறவன் எல்லாம் வாயில வந்த படி கதைக்கிறதும், மனதில தோன்றுகிறபடி அளக்கிறதும் எவ்வளவு பெரீய்ய அநியாயம்!!!
இதை விளங்காமல், தமிழரசுக் கட்சி ஏதோ பதவிக்காகத்தான் வில்லங்கப்படுகிது எண்டால், இதை விட வேறு என்ன அநீதியிருக்கு?
அப்பப்பா…
மெய்யாகவே சனங்களுக்காக வேலை செய்வதற்காகவே அடிபடுகிறார்களே தவிர, இட ஒதுக்கீட்டுக்காக ஒரு நாளும் ஒரு சிறிய சண்டையைக் கூட இந்தக் கட்சிகள் பிடிக்கவேயில்லை. ஒற்றுமைக்கு எதிராக இந்தக் கட்சிகள் ஒன்றும் ஒரு நாளும் சிந்தித்ததேயில்லை. அப்பிடி வந்த கதையெல்லாம் அபாண்டக் கதைகளே….
சத்தியமாக நம்புங்கோ… நம்புங்கோ.. நம்புங்கோ… என்று.
“கேட்கிறவன் கேணையனாக இருந்தால் சொல்கிறன் மூஞ்சிலேயே அப்பளம் பொரிப்பானாம்” என்பது உண்மைதான்.
– கருணாகரன்